தூரத்தை காரணமாக காட்டி கல்வி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 3 கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி 5 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி அமைத்தது தமிழ்நாடு அரசு. அந்த தூரங்களையும் பயண வசதி இல்லை என்கிற காரணத்திற்காக மிதிவண்டியும் பேருந்தில் பயணம் செய்ய இலவச பாஸ்-யும் வழங்கியது தமிழ்நாடு அரசு. பசியினை காட்டி கல்வி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கல்விக்கூடங்களில் மதிய உணவு திட்டங் களை அமுல்படுத்தியது தமிழ்நாடு அரசு. புத்தங்கள் வாங்க பணம் இல்லை என்கிற காரணத்திற்காக கல்வி மறுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக புத்தகங்களை தானே அச்சடித்து விநியோகித்தது தமிழ்நாடு அரசு.

கல்விதான் ஒருவரை தன் வாழ்வில் முன்னேற்றும் கருவி. அந்த கல்வி இப்படி எந்த சூழலிலும் எந்த காரணம் கொண்டும் ஒருவருக்கு மறுக்கப்பட்டு விடக்கூடாது என்கிற நோக்கில் பார்த்து பார்த்து கட்ட மைத்தது தான் தமிழ்நாட்டின் இன்றைய கல்வி வளர்ச்சி. 37,431 அரசு பள்ளிகள்,

neet834 உதவி பெறும் பள்ளிகள், 146 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 14 அரசு சட்ட கல்லூரிகள், 21 பல்கலை கழகங்கள், 39 அரசு மருத்துவ கல்லூரிகள், 7 மாற்று மருத்துவ கல்லூரிகள் என இது விரிவடைகிறது. தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 86.81. இது மொத்த இந்தியாவின் கல்வியறிவு விகிதத்தை விட அதிகம். இப்படி பார்த்து பார்த்து உருவாக்கிய கட்டமைப்பை தான் இன்று புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு, பல்கலை கழகங்களை இந்திய அரசதிகாரத் திற்கு எடுத்து செல்லுதல், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தல் என்று ஒரே நாடு ஒரே தேர்வு என்கிற நோக்கில் கல்வி மீதான நமது உரிமைகளையும் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளது இந்திய அரசு.

காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்த அனைத்து தரப்பினருக்குமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க ஆரம்ப நிலையிலிருந்து கட்டமைத்த கட்டமைப்பை தகர்த்து இன்று அவர்களுக்கெல்லாம் வாய்ப் பினை மறுக்கும் வகையில் கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல நமது கல்வி கூடங்களில் இந்தியத்தின் அதிகாரம் தலை விரித்தாட தொடங்கியிருக்கிறது.

‘நீட்’ தேர்வானது வெறுமனே கல்வி சிக்கலாக மட்டுமே இல்லை. அது தமிழ் நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் சீர்க் குலைப்பதாகவே இருக்கிறது. மேலும் கல்வி குறித்தான தமிழ்நாட்டு அரசின் அதிகாரத்தையும் உரிமையையும் பறிப்பதாகவும் அமைகிறது. ஏற்கெனவே IIT, IIM, AIMS போன்ற கல்வி நிலைய சேர்க்கைக்கும் ARCHITECT போன்ற படிப்புகளுக்கு தனியே நடத்தப்படும் NATA போன்ற நுழைவுத் தேர்வுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மாணவர்களின் நிலையை இன்று மருத்துவ கனவு காணும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது நீட் நுழைவு தேர்வு. அதனை மேலும் விரிவுப்படுத்தி நர்சிங் மற்றும் உயிரியல் அறிவியல் (LIFE SCIENCE) படிப்புகளுக்கும் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருக் கிறது. நீட் நுழைவு தேர்வினை தனியார் கோச்சிங்கில் சேர்ந்து தான் தேர்ச்சி பெற முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி நம் மாணவர்களின் 12 ஆண்டு கால பள்ளி வாழ்க்கையை பாழ்படுத்தி யுள்ளது இந்திய அரசு.

அனிதா (அரியலூர்), பிரதீபா (விழுப்புரம்), சுபஸ்ரீ (திருச்சி), ஏஞ்சலின் (சென்னை). அருண் பிரசாத் (கடலூர்), சிவசங்கரி (புதுச்சேரி), மோனிஷா (விழுப்புரம்), ரிதுஸ்ரீ (திருப்பூர்), வைசியா (தஞ்சாவூர்), கீர்த்தனா (பெரம்பலூர்), தனலட்சுமி (நெல்லை), ஹரிஷிமா (புதுக்கோட்டை), சுபஸ்ரீ (கோவை), விக்னேஷ் (அரியலூர்), ஜோதி துர்கா (மதுரை), ஆதித்யா (தருமபுரி), மோதிலால் நாமக் கல்), தனுஷ் (மேட்டூர்), கீர்த்திவாசன் (கோவை), சௌந்தர்யா (வேலூர்), கனி மொழி (அரியலூர்), சுபாஷ் (சேலம்) மற்றும் ஜெயா (நீலகிரி) ஆகிய 23 மாண வர்கள் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப் பெண்கள் பெற்றும் நீட் நுழைவுத் தேர்வினால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டவர் களின் பட்டியல். மேலும் மாணவன் கஸ்தூரி மாகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி அவர்களும் மரணமடைந்திருக்கிறார்.

நீட் தேர்வினால் தமிழ்நாட்டு கிராமப்புற ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்து கொண்டிருப்பதை அறிந்த தமிழ்நாடு அரசு 7.5% இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்து ஓரளவுக்கு நம்பிக்கையளித்தது. ஆனால் அந்த 7.5% இட ஒதுக்கீட்டுக்கான தமிழ்நாட்டு அரசின் தீர்மானத்தையும் ஆளுநர் உடனே ஏற்காமல் காலம் தாழ்த்தியதையும், தமிழ்நாடு அரசு அத்தீர்மானத்தை அரசிதழில் வெளியிட்ட பின்பு ஆளுநர் அதனை ஏற்றதையும் பார்க்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை தடுப்பதற்கான வழி முறைகளை தான் இந்திய அரசு கொண்டிருந்ததை அறியலாம். தற்பொழுது இந்த 7.5% சதவீத இடஒதுக்கீட்டையும் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 69 இட ஒதுக்கீட்டினை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து சண்டையிட்டு வரும் இந்திய அரசு இந்த இடஒதுக்கீட்டையும் எப்பொழுது தடை செய்யும் என்கிற நிலையற்ற தன்மையே நிலவுகிறது.

மருத்துவம் படிப்பதற்கு 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பு உதவாமல் நுழைவுத்தேர்வு தான் தீர்மானிக்கும் என்றால் பள்ளிக் கல்வியின் நிலையை கேள்விக்குறியாக்கும் இந்திய அரசின் போக்கு மொழிவழி தேசிய இனங்களின் கல்வி உரிமை மீதான நேரடி போராகத் தான் தமிழ்நாட்டு மக்கள் அணுக வேண்டும்.

நீட் எனும் அயோக்கியத்தன தேர்வினை துவக்கம் முதல் எதிர்த்து வந்த தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டையும், விலக்கு கேட்டு போடப்பட்ட தீர்மானத்திற்கு பாசிச இந்திய அரசு, "நாடு முழுவதும் தகுதியான மருத்து வர்களை உருவாக்க நீட் தேர்வு அவசியம்" என்று கூறி எட்டுக்கோடி மக்கள் பிரதிநிதிகளின் முடிவை குப்பையில் எறிந்தது. மீண்டும் இரண்டாம் முறையாக தமிழ்நாடு சட்டமன்றம் நீட் விலக்கு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் கையொப்பத்திற்காக அனுப்பி கையெழுத்து போடும்படி இருந்துக் கொண்டிருக்கிறோம்.

இலட்சக்கணக்கான ரூபாய்கள் செல வழித்து கோச்சிங் சென்டர்களில் படித்து எழுதும் நீட் தேர்வு தான் தகுதியான மருத் துவர்களை உருவாக்கும் என்றால், இத்தனை வருடங்களாக எங்களது அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தானே தமிழ்நாட்டினை மருத்துவ வசதியில் இந்திய ஒன்றியதிலேயே முதலிடத்தில் நிறுத்தி இருக்கிறது. மேலும். தமிழ்நாடு தானே 2600 ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனும் கட்டமைப்பை ஏற்படுத்தி அனைவருக்குமான சுகாதாரத்தை உறுதி செய்துள்ளது. இவர்கள் உயர்வாக பேசக் கூடிய இந்தி மொழி மாநிலங்கள் இதில் பின்தங்கி தானே இருக்கிறது.

பன்னாட்டு, இந்திய பெரு நிறுவனங்களின் கோச்சிங் சென்டர்களின் வளர்ச்சியை வைத்து நீட் பின்னால் உள்ள மருத்துவக்கல்வி மாபியாவை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் முளைத்து வந்த இந்த நிறுவனங்கள் இன்று கிராமங்கள் வரை தனது கிளைகளைப் பரப்பி தமிழ்நாட்டு பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் மாணவர்களின் மருத்துவ கனவினையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது. நீட் என்னும் தேர்வை பணக்காரர்களுக்கானதாக மாற்றிவிட்டு அன் றாடம் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவக் கனவுகூட காணமுடியாத கொடூரத்தை செய்து வருகிறது.

கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும் காலத்தில் இவர்கள் கூடுதல் தொகைக் கொடுத்து கோச்சிங் சென்டர் களுக்கு சென்றால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திட்டமிட்டு உரு வாக்கியுள்ளது. மேலும், அத்தகைய மாண வர்களில் சிலர் குடும்ப உழைப்பை கோச்சிங் சென்டர்களுக்கு செலவிட்டு தேர்வினை முறையாக எதிர் கொண்டும் போதிய மதிப்பெண் பெறாதது மாணவர்களின் தற் கொலைகளை நிறுவனப்படுத்தி வருவதும் நீட் தேர்வு தான். இது தேசிய இனங்களின் உயர்கல்வி உரிமைகளுக்கு விழுந்த சம்மட்டி அடி மட்டுமில்லாது, மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் பெறும் மதிப்பெண்ணும் நுழை வுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண் வித்தியாசம் இவர்களை ஒருவித உளவியல் பாதிப்பிற்கு ஆளாக்கியும் வருகிறது.

டெல்லி அரசின் அறிவுரை கேட்டுதான் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்ற அறியாமை மனநிலையில் தமிழர்கள் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதுவே நமது சட்டமாக இருக்கவேண்டும். அதனை யார் ஒருவரும் ஏற்றாக வேண்டும். எட்டுக்கோடி மக்களின் கூட்டு மனசாட்சியாக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதனை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி அவர் ஏற்கும் வரை தமிழ்நாட்டு மாணவர்கள் காத்துக்கிடக்க வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களின் மீது உரிமை சார்ந்த பலியிடமாக ஆளுநர் மாளிகை தொடர் வதை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாட்டு கல்வி நிலையங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆளு நரை பல்கலைகழக வேந்தராக நியமிப் பதையும் தடை செய்ய வேண்டும்.

கல்வி குறித்தான அனைத்து உரிமை களையும் அதிகாரங்களையும் பிடுங்கி தன்னிடத்திலே வைத்துக் கொண்டு கல்வியில் அயல்நாட்டு முதலீட்டையும், பெருமளவிலான தனியார் தலையீட்டையும் அனுமதிக் கிறது. நீட் நுழைவுத் தேர்வினை நடத்தும் நிறுவனம் கூட ஒரு தனியார் நிறுவனம் தான். மேலும், தமிழ்நாடு காலங்காலமாக கட்டமைத்த கல் லூரிகள், பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை இந்தியாவின் அதிகாரத்திற்கு கொண்டு சென்று அதிலே இந்திய அளவிலான சேர்க்கைகளை நடத்த தீர்மானிக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி கனவானது களவாடப்படுகிறது.

நீட் நுழைவுத் தேர்விற்கு எதிராக தமிழ் நாடு அரசின் தீர்மானத்தை தமிழ்நாட்டு அரசின் கொள்கை முடிவாக ஏற்கமறுக்கும் ஆளுநரிடம் எத்தனை முறை தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டாலும் அதனை ஆளுநரோ, இந்திய அரசோ ஏற்பதற்கு தயாராக இல்லை. ஆகவே, மொழிப்போரின் எழுச்சி இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்தது போல, மண்டல் கமிசன் எழுச்சி 69 இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது போல, தை எழுச்சி தமிழ்நாட்டு பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை உடைத்தது போல மீண்டும் ஒரு மாணவர் எழுச்சியே நீட் படுகொலைகளை தடுத்து நிறுத்தி கல்வி மீதான தமிழ்நாடு உள்ளிட்ட தேசிய இனங்களின் இறையாண்மையை நிலை நிறுத்தும்.

மாணவர்களே, இளைஞர்களே......

             மறுக்கப்படும் கல்வி உரிமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்களாய். இளை ஞர்களாய் ஒன்று திரள்வோம்!

             நீட் விலக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரி மையில் இந்தியாவின் ஆதிக்கப் போக்கை வேரறுப்போம்! தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் மக்களின் உரிமைகளில் தமிழ் நாட்டு அரசை அதிகாரப்படுத்துவோம்!

             மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டு அரசின் செயல்பாடுகளை முடக்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் அலுவலகம் உள் ளிட்ட இந்திய நிறுவனங்களை முற்றுகை யிடுவோம்!

             தமிழ்நாட்டின் கல்வி வளங்களை புதிய கல்வி கொள்கை மூலம் கபளீகரம் செய்ய துடிக்கும் இந்துத்துவ இந்திய அரசின் அடாவடித்தனத்தை விரட்டியடிப்போம்!

- 'நீட்' தேர்விற்கு எதிரான தமிழ்நாடு மாணவர்கள்

Pin It