தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித் தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு.

  • 2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம்.
  • 'ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தபோது ‘நீட்’ தேர்வு எனும் பேரிடியை மத்திய மோடி ஆட்சி நம் மீது திணித்தது. “ப்ளஸ் டூ மதிப்பெண்களை குப்பையில் போடு; நாங்கள் ஒரு தகுதித் தேர்வு நடத்துவோம்; இதில் தேர்ச்சிப் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரிக்கு போகலாம்” என்கிறது மத்திய மோடி ஆட்சி.

சி.பி.எஸ்.ஈ. என்ற மத்திய அரசு பாடத் திட்டத்தில் நடத்தப்படுவது இந்தத் தேர்வு, அந்தப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் 15 சதவீதம் பேர். அதுவும் பார்ப்பனர், பணக்காரர், உயர்சாதி, மேட்டுக்குடி வர்க்கத்தினர். 85 சதவீதம் நமது மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்கள், நமது மாணவர்கள் ‘நீட்’ தேர்வு முறைக்கு பழக்கப்படா தவர்கள். எனவே ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியவில்லை.

  • 2016 மார்ச்சில் தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் நமது மாநில பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர் 8,33,682. மத்திய பாடத் திட்டமான சி.பி.எஸ்.ஈ.யின் கீழ்த் தேர்வு எழுதியோர் 13,265. தமிழகத்தில் 2 சதவீதம் கூட மத்திய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதவில்லை. ஆனால், நீட் தேர்வினால் மாநில பாடத் திட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட் டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலே இங்குதான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படும் நமது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ மாணவிகளின், ஓர் ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.20,000 தான். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுத ஒவ்வொரு மாணவரும் தனிப் பயிற்சி மய்யத்துக்கு செல்ல வேண்டும். அங்கு ரூ.50 ஆயிரம், ஒரு இலட்சம் என்று கட்டணம். கிராமப்புற மாணவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது எவ்வளவு பெரிய சுமை? ‘பிளஸ் டூ’ தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து முடித்த களைப்பு நீங்கும் முன்பே நீட் தேர்வுக்கு பயிற்சி என்றால், அவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம்?
  • தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பு களுக்கான இடங்களில் 15 சதவீத இடங்களையும் மேல்பட்டப் படிப்பான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் மத்திய அரசு கோட்டா என்ற பெயரில் இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மேல் பட்டப்படிப்புக்கு மேலே படிக்கும் உயர் சிறப்புப் படிப்பு களும் உண்டு. டி.எம்., எம்.சி.ஏ.எச். போன்ற இத்தகைய உயர் சிறப்புப் படிப்புக்கான இடங்கள் இந்தியாவிலேயே நமது தமிழ்நாட்டில் தான் மிக அதிகம். (192 இடங்கள்) மற்ற மாநிலங் களில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தையும் ‘பகிரங்கப் போட்டி’க்கு உள்ளாக்கி பிற மாநிலத்துக்காரர்களை நம்முடைய அரசு செலவின் கீழ் படிக்க கதவு திறந்துவிட்டு விட்டார்கள். உதாரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உயர் சிறப்புக்கான மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 8இல் 6 இடங்களை வட மாநிலத்தவர் பிடித்துக் கொண்டுள்ளனர். கல்லீரல் மருத்துவத்துக்கு அதி உயர் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரண்டு. இரண்டுமே நமது மக்களுக்குக் கிடைக்கவில்லை. பிற மாநிலத்தவருக்கு போய் விட்டது. நமது செலவில் நாம் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்காமல் ‘அகில இந்திய கோட்டா’ என்று வெளி மாநிலத்துக்காரர்கள் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். எனவேதான் அகில இந்திய கோட்டாக்களே வேண்டாம்; எங்கள் மாநிலத்தில் நாங்கள் உருவாக்கும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் எங்கள் மாணவர்கள் படிக்க வேண்டும்; அவர்கள் சேவை எங்கள் தமிழ் நாட்டுக்கே வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.

எங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நாங்களே நடத்திக் கொள்ள வேண்டும். டெல்லி ஆட்சி திணிக்கும் நீட் தேர்வு வேண்டாம்; இதனால் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வரும் எங்கள் நாட்டு மாணவர்கள் இடங்களைப் பெற முடியவில்லை.

இப்போது நீட் தேர்வில் வெளிநாடுகளில் வாழும் பார்ப்பன உயர்ஜாதி மற்றும் தொழிலதிபர் வீட்டுப் பிள்ளைகள், வெளி நாட்டுக்காரர்களாக குடியுரிமைப் பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தியர்கள். (இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்) இந்தியாவிலேயே பிறக்காத வெளிநாட்டுக்காரர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வழி திறந்து விட்டார்கள். நீட் தேர்வை உலகத் தேர்வாக்கிவிட்டோம் என்கிறது, மோடி ஆட்சி! என்னடா கொடுமை!

அரியலூரிலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வரும் மாணவர் களோடும், ஆடுதுறையிலிருந்து மருத்துவம் படிக்க வரும் நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண், ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களோடும் போட்டி யிட்டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இப்போது நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ‘நீட்’ தேர்வை இரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளதோடு மாநில அரசுகளே அதற்கான தகுதி தேர்வுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் உரிமை கோரிக்கையை பாதியளவு ஏற்றுக் கொண்டுவிட்டது காங்கிரஸ். உயர் கல்வி மட்டும் பொதுப் பட்டியலில் இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்றம் வழியாக அமுல்படுத்தப்படுவதால் அதை மாற்றவே முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாகத் தாக்குகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி விதி விலக்குக் கோர நாடாளுமன்றங்களும் சட்டத் திருத்தங்களும் இருக்கின்றன என்பதை பா.ஜ.க. மறைக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கவே மறுக்கும் பா.ஜ.க. ஆட்சியோடு கூட்டணி வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. ‘நீட்’டை இரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் கூறுவது கண்துடைப்பு தான்!

நீட் தேர்வில் நடந்த ஊழல்

2017 நவம்பரில் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.

சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங்களிட மிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டது.

கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இக்கணினிகளில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

நீட் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே அவற்றில் உள்ள ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர்.

சில மையங்களில் நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வை எழுத அனுமதிப்பதற்கு இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இலஞ்சம் கொடுத்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.

Pin It