(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் 12வது  மாநில மாநாட்டுத் தலைமை உரை)

                படைப்பாளர்களையும் படைப்பது மொழி.பிறருக்கு இது வெறும் ஊடகம் என்றால், படைப்பாளர்களாகிய நமக்கோ இது சிருஷ்டி ஆதாரம். ஆனால், மொழியைக் கையாளுவது என்பது சொற்களின் மீதான ஆளுமை மட்டுமல்ல, அவற்றை உருவாக்கிய, இப்போதும் பயன்படுத்துகிற மனிதர்கள் மீதான ஆளுமை. மொழிவழி வரும் காட்சிகளும் சிந்தனைகளும் மனித வாழ்வின் பிரதிபிம்பங்களே. அதனால்தான் மொழி நமது படைப்புக் கருவி.

                கலையும் இலக்கியமும் கற்பிதமே, புனைவே. ஆனால், மனிதக் கற்பனைக்கு மனித வாழ்வே அடிப்படை. கனவுகள்கூட நனவுகளின் தாறுமாறான பிரதிபலிப்புகளே. நிழலுக்கும் நிஜம் வேண்டும். நமது படைப்புகளின் ஆதார சுருதி யதார்த்த வாழ்வில் இருக்கிறது. அதனால்தான் இத்தகைய மாநாடுகளில் கூடுகிற எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுக்கென உள்ள தனித்த அழகியல் பிரச்சனைகளை மட்டுமல்லாது, தற்போதைய மனித வாழ்வின் சிக்கல்களையும் விவாதிக்க வேண்டியுள்ளது.

நமது பதினோராவது மாநில மாநாட்டிற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக கறுப்பினத்தை சேர்ந்த ஒரு பழுப்பு நிற மனிதர் வந்ததும் சில புதிய எதிர்பார்ப்புகள் எழுந்தன. வந்த சில மாதங்களிலேயே அவருக்கு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நடப்பு என்ன சொன்னது? ஏகாதிபத்தியத்திக்கு வெளுப்பு, கருப்பு, பழுப்பு இல்லை என்றது. அதுவொரு ஆதிக்க சுரண்டல் முறை. அது எந்த நிற மனிதர் மூலமாகவும் இயங்கும் என்பது நிச்சயமானது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா “உலக சமதானத்திற்குச்” செய்த பங்களிப்பு என்னவென்றால் பாகிஸ்தான் என்கிற ஒரு சுயாதிபத்தியமுள்ள நாட்டுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்று கடலில் எறிந்தது, அதைத் தனது மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ரசித்துப் பார்த்தது! நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எனும் கொடூரம் வன்மையான கண்டனத்திற்குரியது. ஆனால், இதுபற்றி முறையான விசாரணை நடந்ததா? பின்லேடனே காரணம் என்று அமெரிக்க அரசே குற்றஞ்சாட்டி, அதுவே வாதிட்டு, அதுவே தீர்ப்புச் சொல்லிக் கொண்டது. பிறகு அதுவே இன்னொரு நாட்டுக்குள் தனது அதிரடிப் படையை அனுப்பிச் சுட்டுக் கொன்றது. இதே போல இன்னொரு நாடு தான் குற்றவாளி எனத் தீர்மானித்த ஒருவர் அமெரிக்காவில் இருந்தால் அங்கே புகுந்து சுட்டுக் கொல்லலாமா? அதை அமெரிக்க அரசு அனுமதிக்குமா? இந்தக் கேள்வி வெறும் முணுமுணுப்பாகவே பிறந்து செத்தது. இந்த அளவுக்கு அடாவடித்தனம் செய்யவும், அது பற்றிய விமர்சனத்தை அடக்கி ஒடுக்கவும், அமெரிக்காவால் முடிந்தது. இதுதான் ஏகாதிபத்தியம்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பைக் காட்டி முஸ்லிம் நாடுகளை எல்லாம் மிரட்டுகிற வேலையில் இறங்கியுள்ளது ஏகாதிபத்தியம். அரபு நாடுகள் பலவற்றில் நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லாது அரசகுடும்பத்தாரின், சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது உண்மைதான். அவற்றை எதிர்த்து மக்கள் எழுச்சி ஒரு நாள் கிளம்பத்தான் செய்யும் என்பதும் எதிர்பார்க்கபட்டதுதான். ஆனால், தற்போதைய எழுச்சிகளை அமெரிக்க அரசு ஆதரிப்பது என்பது ஜனநாயகத்தின் மீது கொண்ட காதலால் அல்ல. முப்பது ஆண்டுகள் நாற்பது ஆண்டுகள் என ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி நடந்தபோதெல்லாம் அதை ஆதரித்து நின்றதுதான் அமெரிக்க அரசு என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போது அது மக்கள் எழுச்சிகளை ஆதரிப்பதன் நோக்கம் அந்த சர்வாதிகாரிகளின் பயன்பாடு அதற்கு முடிந்து போனது, ஆகவே, தொடர்ந்து அந்த நாடுகளின் எண்ணெய் வளத்தை தனது பிடியில் வைத்திருப்பதற்கு ஏற்ற மாற்று அரசுகளை அங்கே உருவாக்குவது . சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்படுகிறார்கள். நல்லது. ஆனால் அதற்குப் பின்பு வந்தவர்கள் தத்தம் நாட்டின் சுயசார்ப்பைக் காத்து நிற்பவர்களா என்பது தெளிவாகவில்லை என்பதை நோக்குங்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது உலக நாடுகள் அனைத்தும் தனக்குச் சேவை செய்யப் பிறந்தவை என நினைப்பது, தங்களைத் தவிர மற்ற நாட்டு மாந்தர்கள் எல்லாம் மட்டமானவர்கள் என நினைப்பது. அதனால்தானே அமெரிக்கத் தூதரகத்தின் அந்த அதிகாரி தமிழர்களைப் பற்றி அப்படியொரு கேவலமான வார்த்தைகளைச் சொன்னார். நாமெல்லாம் கருப்பாம் அழுக்காம்!

நமது சுதந்திரப் போராட்டகாலச் செய்தி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. “நாங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக வெள்ளையாக இருக்கிறோம். இந்தியர்களோ விதவிதமான நிறத்தில் இருக்கிறார்கள்”என்று ஓர் ஆங்கிலேயர் அகந்தையோடு சொன்னார். அதற்கு இந்திய தேச பக்தர் ஒருவர் பதில் சொன்னார்.”ஆமாம், கழுதை ஒரே நிறத்தில் இருக்கும், குதிரைதான் பல நிறத்தில் இருக்கும்”.

அந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு சொல்லிக் கொள்வோம் - “தமிழர்களாகிய நாங்கள் வெப்பத்தால் கருத்தவர்கள்தாம், உழைப்பால் உடம்பில் அழுக்குப் பட்டவர்கள்தாம். ஆனால் உங்களைப் போல அடுத்த நாட்டுக்காரர்களை அடக்கி ஆள வேண்டும், அவர்களது செல்வத்தை சுரண்டி வாழ வேண்டும் எனும் அசிங்க அரசியல் அழுக்கு கொண்டவர்கள் அல்ல”.

இதிலிருந்தெல்லாம் உள்ளுர் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழுர்களும் ஒரு விஃயத்தை தெளிவாக மனதில் கொள்ள வேண்டும். தமிழர்களின் எந்தப் பிரச்சனையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பி தீர்க்க முடியாது என்பதுதான் அது. தமிழ் மக்களின் தேசியஇனப் பிரச்சனைகளைத் தீர்ப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தோடு இணைந்ததே என்பதுதான் அது.

நண்பர்களே! நமது சொந்த பந்தங்களாகிய இலங்கைத் தமிழர்களின் துயரம் கண்டு நமது நெஞ்சம் துடிக்கிறது. இறுதிக்கட்டப் போரில் அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் பேர் மாண்டு போனார்கள். ஐ.நா. சபை அமைத்த குழுவின் அறிக்கைப்படியே, குறைந்தபட்சம் நாற்பதாயிரம் பேர் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையானார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்காவின் அனுகுண்டு வீச்சுக்கு பல்லாயிரம் அப்பாவி ஜப்பானியர்கள் பலியானார்கள். அதற்குப் பிறகு இவ்வளவு அதிகமாகப் பொதுமக்கள் மாண்டது இலங்கையில்தான் நடந்தது. பதுங்குகுழி வெட்டிய உழைப்பாளர்கள் அதிலேயே புதைந்ததையும், அவர்களது பச்சிளங் குழந்தைகளின் உடல்கள் சிதறிச் சின்னா பின்னமாகிக் மரக்கிளைகளில் தொங்கியதையும் அந்த அறிக்கை விவரித்திருக்கிறது.

அதைப் படிக்கபடிக்க நமக்குள் நியாயமான ஆத்திரம் பிறக்கிறது. எந்தக் காலத்து யுத்தத்திலும் இருதரப்பும் சில வரைமுறைகளை நிர்ணயித்துக் கொண்டிருந்தன. மதுரையை எரிக்க அக்னியை ஏவிய கண்ணகியும் “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்தரத்தார் பக்கமே சேர்க” என்றாளே! இந்த நவீன காலத்திலொ அத்தகைய போர் நெறிமுறை ஏதுமின்றி பெண்களையும் குழந்தைகளையும்கூடக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இது போர்க்குற்றம், மனிதகுலம் மீதான குற்றம், தமிழினப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் நடத்திய சகல போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம் சிங்களர்களுக்கு இணையான வாழ்வுரிமை அவர்களுக்கு இல்லாததுதான். மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் என சகலத்திலும் இல்லாததுதான். இப்போதோ சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவலம் வேறு. தமிழர்களின் வாழ்வு அவர்களது சொந்த மண்ணில் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கு உரிய இடம் கொடுத்தாக வேண்டும். அவர்களது மொழிக்கும் பண்பாட்டுக்கும் சமமான இடம் கிடைத்தாக வேண்டும்.

இலங்கைப் பிரச்சனை தீவிரமான அந்த 1980களிலிருந்தே அந்நாட்டுத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்திருக்கிறது த.மு.எ.க.ச. அதேநேரத்தில், அவர்களது துயரங்களுக்கான நிலையான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பகுதிகளுக்கு மாநில சுயாட்சி தருவதே என்பதையும் விடாது சொல்லி வந்திருக்கிறது. அண்மையில் சென்னை வந்த இலங்கையின் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின்” நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அவர்களும் தாங்கள் கேட்பது மாநில சுயாட்சியே என்று அழுத்தமாகப் பேசியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதுவே காரிய சாத்தியமானது. இதை விடுத்து “தனி ஈழம் ஒன்றே தீர்வு” என்று இங்கிருந்து பேசுவது ஒரு திரைப்படத்தில் வந்த வசனம்போல “இப்படியே உசுப்பேத்திவிட்டு உடம்பைப் புண்ணாக்கி விட்டாங்களே” எனும் வேலை. ஏற்கனவே, நொந்து போயிருக்கிற இலங்கைத் தமிழர்களை மேலும் சிரமத்தில் மாட்டிவிட வேண்டாம் என்று இங்குள்ள தமிழ் ஆர்வலர்களைக் கேட்டுக் கொள்வோம்.

இந்தியாவிலுள்ள தமிழர்களின் முக்கியமான பணி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இந்திய அரசை உறுதிபட செயல்படவைப்பது. பக்கத்து நாடு என்ற வகையில் இலங்கை அரசுக்கு எத்தனையோ விதங்களில் துணைபோகிற இந்திய அரசு அங்குள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க மாட்டேன் என்பது மிகப் பெரிய அநீதி. மனிதாபிமானத்தில் பார்த்தால் கூட உதவ வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பதால், இந்தியாவிலும் அது பிரச்சனையை உருவாக்குகிறது என்பதால் இன்னும் தீவிரமாக உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள காங்கிரஸ் அரசோ சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவும் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை. காஷ்மீரப் பண்டிதர்கள் மீது சிறு துரும்பு பட்டாலும் கொதித்தெழுகிற அந்தக் கட்சி இலங்கைத் தமிழர்கள் காக்கை குருவிகளாய் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டும் அசையவில்லை. அகில இந்திய அளவில் பார்த்தால் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளே இலங்கைத் தமிழர்களுக்காக விடாது ஆவேசக் குரல் எழுப்பி வருகின்றன. செப்டம்பர்7 அன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டில்லியல் நடத்தப்பட்ட பேரணி மிகுந்த முக்கியத்துவமுடையது, அது மத்திய ஆட்சியாளர்களின் கும்பகர்ணத் தூக்கத்தைக் கலைக்கும் என நம்புவோம்.

அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் கலை இலக்கியவாதிகளின் கவனத்தில் பதிய வேண்டிய விஃயம். பல அறிவுஜீவிகள் மத்தியில் சாதாரணமக்கள் பற்றி ஒரு மோசமான பிம்பமே உள்ளது. இலவசங்களுக்கு ஏங்கியும், பணத்துக்கு ஆசைப்பட்டும் அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கேலிவார்த்தை பேசினார்கள். ஆனால், என்னாயிற்று? ஊழலும் குடும்ப ஆட்சியும் மலிந்திருந்த, இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் புரிந்திருந்த அன்றைய ஆளும்கட்சி கூட்டணியை மக்கள் சர்வசாதாரணமாகத் தூக்கி எறிந்தார்கள்; எதிர்க்கட்சி அந்தஸ்துகூடத் தரவில்லை. உண்மைகள் வெகுமக்கள் நெஞ்சில் பதிந்தால் அவர்கள் எவ்வளவு அழுத்தமாக எதிர்வினை செய்வார்கள் என்பதற்கு இதுவொரு உதாரணம். மக்களிடம் செல்வோம், அவர்களிடம் நம்பிக்கை வைப்போம் என்பதே இதிலிந்து முற்போக்காளர்கள் பெறக்கூடிய பாடம்.

நண்பர்களே! சிவில் சொசைட்டி – குடிமைச் சமூகம் - என்பது பற்றி இன்று அதிகம் பேசப்படுகிறது. அரசமைப்பைச் சாராத சமூகப்பகுதியை அது குறிப்பதாகப் படுகிறது. பெனடெட்டோ குரோச்சி எனும் தத்துவஞானியின் சிந்தனைகள் பற்றி விவாதிக்கும் போது, அவர் இப்படியாகவே பேசியதாக கிராம்சி எழுதிச் செல்கிறார். “அரசும், குடிமைச்சமூகமும்” என்று குறிப்பிடுகிறார். இந்தச் சமூகத்தை தனக்கேற்ற பாலமாக ஆக்கியே ஆளும் வர்க்கம் தனது ஆளுகையை நிலைநிறுத்திக் கொள்கிறது. அரசதிகாரத்தைப் பயன்படுத்துவதோடு இதையும் செய்து கொள்கிறது. இதற்கு எதிராக அந்தக் குடிமைச் சமூகத்தை தன் பக்கம் வென்றெடுக்க வேண்டும் பாட்டாளி வர்க்கம். அது அவ்வளவு எளிதில்லை என்ற போதிலும் அதை எட்டுவதே அதற்கு இலக்காக இருக்க வேண்டும்.

இன்று என்னவோ சிலர் கிளம்பி தாங்களே குடிமைச் சமூகத்தின் ஏகப் பிரதிநிதிகள் என்கிறார்கள், அப்படியாகவே சில ஊடகங்களும் எதிரொலிக்கின்றன. ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு இருப்பதாக அன்னா ஹசாரேயும் அவரது குழுவினரும் கூறுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரப் போராடப் போவதாகக் கூறுகிறார் பாபா ராம்தேவ். நல்ல விஃயங்கள்தாம். ஹசாரேயின் உண்ணாவிரதம் நாட்டில் ஊழல் எதிர்ப்புணர்வைக் கிளறிவிட்டிருக்கிறது என்பது உண்மைதான். வலுவான லொக்பால் வருவது நல்லதுதான்.

ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, குஜராத்தில் முஸ்லிம்கள் நரவேட்டையாடப்பட்ட போது, மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, பெண்களும் தலித் மக்களும் கொடூரமாக ஒடுக்கப்பட்டபோது இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இவையெல்லாம் குடிமைச் சமூகத்தின் இந்த “ஏகப் பிரதிநிதிகளை” கவலையில் ஆழ்த்தவில்லையா? ஊழலைப் போல இவையும் சமூகக் கேடுகள் இல்லையா? ஏன் இவற்றை எதிர்த்து இவர்கள் கச்சைக் கட்டிக் களத்தில் இறங்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் இவர்கள் குடிமைச் சமூகத்தின் ஒரு பகுதி பிரதிநிதிகளே என்பது தெளிவாகும்.

குடிமைச் சமூகத்தின் இந்தப் பகுதியானது இந்திய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளாகிய வறுமை, விலைவாசி உயர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பவை பற்றி இதுவரைக் கவலைப்படவில்லை. ஊழலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அந்த ஊழல் தற்போது பெருகியதற்கு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் முப்பெருங்கேடுகளே பிரதான காரணம் என்பதையும் சொல்ல மறுக்கிறது.

முழு குடிமைச் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டிய முக்கியமான கடமை, அதைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பொறுப்பு முற்போக்காளர்கள் உள்ளிட்ட சகல இடதுசாரிகளுக்கும் இருக்கிறது. ஊழலையும் எதிர்ப்போம், அதற்கு ஆதாரமான இந்தச் சமூக- பொருளாதாரக் கட்டமைப்பையும் எதிர்ப்போம் எனக் கிளம்ப வேண்டும். அதற்கான தார்மீக உரிமை நமக்கு மட்டுமே உண்டு. முதல்வர்களாக இருந்த இடதுசாரிகள் மீது அவர்களது எதிராளிகளாலும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. இ.எம்.எஸ்,n

ஜாதிபாசு,இ.கே.நாயனார், அச்சுதானந்தன், புத்ததேவ், மாணிக்சர்க்கார் ஆகியோரை நோக்கி ஊழல் என்று எந்தவொரு நபரும் தனது சுட்டுவிரலை என்ன, சுண்டுவிரலைக்கூட உயர்த்தியதில்லை என்பதை உலகுக்கு நினைவுபடுத்த வேண்டும். மறுபுறம், ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது சாமியார் ராம்தேவுக்கு. துறவுக்கும் ஆயிரம் கோடிக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை. இத்தகையவர்களால் ஊழலை ஒழிக்க ஒரு நாளும் முடியாது என்பதையும் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் “ஊழல் ஒழிப்பு யாத்திரை” போகப்போவதாக பா.ஜ.கவின் அத்வானி அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் அவர் முதலில் போகவேண்டிய மாநிலம் அவரது கட்சி ஆளுகிற கர்நாடகா. அங்கே ஊழல் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது. சுரங்கத்தொழிலில் பல்லாயிரம் கோடி ரூபாய் கையாடல் நடந்திருக்கிறது. இதுவிஃயத்தில் யாத்திரை போக அவருக்கு ஏது அருகதை?

மதவெறி வன்முறை தடுப்பு மசோதா ஒன்றை கொண்டுவரும் ஆலொசனையை மத்தியஅரசு முன்மொழிந்திருக்கிறது. இதுபற்றி தீவிரமான விவாதம் நடத்தப்படவேண்டும். மாநில அரசு அதிகாரத்தைப் பறிக்காத வகையில் இதை எப்படி கொண்டுவருவது என்பது பற்றி ஆலொசனைகள் தரப்படவேண்டும். அப்படி விவாதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி யாத்திரை புறப்படுகிறாரோ அத்வானி என்று தோன்றுகிறது. திசைதிருப்பல்வேலை அவருக்கு கைவந்த கலையாயிற்றே. மண்டல்குழு பரிந்துரையை முடக்கத்தானே அயோத்தி நோக்கிப்போனார்.

இந்தியாவில் இந்துமதவெறிச் சக்திகள் தலையெடுத்த பிறகு சமூக நல்லிணக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாது மதமவுடீகத்தின் மூடநம்பிக்கைகளும் காடாய் மண்டிவிட்டன. பில்லி - சூன்யம் - ஏவல் என்பவை உண்மைதான் என்றும், அதனால்தான் குடும்பங்களில் பிரச்சனைகள் என்றும், அவற்றைத் தீர்க்க மந்திரித்த யந்திரம் உள்ளது என்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வருகிறது. பாட்டா செருப்புக் கம்பெனி பாணியில் அதன் விலை ரூ.2999 என்கிறார்கள். விஞ்ஞானச் சாதனத்தின் மூலம் அஞ்ஞானங்களும் அபத்தங்களும் பரப்பப்படுகின்றன. மனிதர்களின் சுயபுத்தியையும், சுயமரியாதையையும், சுய முயற்சியையும் ஒருசேரக் கொன்று குவிக்ககூடிய இந்த அநியாயத்தை எதிர்த்துப் பேசுவார் இல்லை. திரைப்படச் சாதனமும் இதற்கு வசமாகப் பயன்படுத்தப்படுகிறது.”சந்திரமுகியில்” அப்படியும் இப்படியுமாகச் சொன்னவர்கள் “காஞ்சனா”வில் பச்சையாகப் பேய் இருக்கிறது என்று கூறிவிட்டார்கள். இதுவரை பொய்ப் பிரச்சாரம் இருந்தது. இப்போது பேய்ப் பிரச்சாரம் நடக்கிறது!

குறி சொல்லுதல், மாந்த்ரீகம் என்ற பெயரில் மோசடிகள் மலிந்து போய்விட்டன. திருமணத்திறகு ஜாதகம் பார்ப்பது என்பது மண்டபம் பிடிப்பது போல ஒரு கட்டாய முன்னேற்பாடாகப் போய்விட்டது. இதனால் எத்தனையோ நல்ல திருமணங்கள் நடக்காமலும், பொருந்தாத் திருமணங்கள் நடந்தும் போயுள்ளன. மொத்தத்தில் இளைஞர்கள் யுவதிகளின் வாழ்வு அர்த்தமற்ற காரணத்தால் சீரழிந்து வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல, கம்பெனி பங்குகளுக்கும் ஜாதகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “ பங்குகளின் பகீர் ஜாதகம்” என்பது ஒரு பத்திரிக்கையின் சுவரொட்டிச் செய்தி! “வாஸ்துபார்த்தால் சகல கஷ்டங்களும் தீரும், பத்து ரூபாய்தான்” என்று குறுஞ்செய்தி வருகிறது!

இவ்வளவுக்கும் மத்தியில் சமூக – பண்பாட்டுத் துறையில் நம்பிக்கை தரும் விஃயம் தலித்துகள் மற்றும் மாதர்களின் புத்தெழுச்சி. தீண்டாமை ஒழிந்து விட்டதாக அரசியல் சாசனத்தில் எழுதி வைத்தார்கள். அது ஒழிந்துவிடவில்லை, ஒளிந்து கிடக்கிறது என்பது தெரிந்துபோனது. மனிதர்களிடையே மனச்சுவர்கள் உண்டு என்பதை அறிவோம், தடைச்சுவர்களும் உண்டு என்பது புலப்பட்டது. உத்தபுரத்தில் மட்டுமல்ல எத்தனையோ ஊர்களில் அது ஓங்கி நின்றிருந்தது. அதை உடைத்து நொறுக்கியதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆற்றிய பணியை நாம் உற்சாகமாக வரவேற்கிறோம். தீண்டாமைச் சுவர் உடைந்தால்தான் சமூகநீதிச் சித்திரத்தை வரைய முடியும் என்கிறது த.மு.எ.க.ச. சுவர் என்றால் மனச் சுவரையும் சேர்த்தே சொல்கிறோம்.

“பிறருடைய பாவங்களைத்; தம் சிரசுகளில் சுமந்து

 மனிதர்கள் பயணம் செய்கிறார்கள்.

 தங்களது சொந்த பாவங்களைச்

 சுமந்து செல்ல பயப்படுகிறார்கள்.

காரணம் அந்தப் பாதைக் கடக்கச் சிரமமானது”

என்றார் கபீர்தாஸ். அந்த நாளில் உயர்சாதிப் புரோகிதர்கள் பிறரது பாவங்களை தாங்கள் வாங்கி, அதைக் காசியில் கரைக்கிறோம் என்று இறந்தவர்களின் அஸ்தியைத் தலையில் சுமந்து செல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களது சொந்த பாவத்தை சுமந்து சென்று கரைக்கவில்லையே என்றார் கபீர்தாஸ். தீண்டாமை எனும் கொடிய பாவத்தை எப்படியும் கரைத்தே ஆகவேண்டும் சாதியவாதிகள். அதுவரை வாழ்க்கை ஒயப்போவதில்லை.

                சென்ற வாரம் கூட பரமக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிசூட்டில் தலித்துகள் பலியாகியிருக்கிறார்கள். தனக்கென வரித்துக்கொண்ட ஒரு தலைவரின் நினைவைப் போற்றுவதற்கு ஒரு தலித் மாணவர் கிளம்பியதால் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரவர் தலைவரைக் கொண்டாட பிறருக்கு உரிமையுண்டு, தலித்துகளுக்கு மட்டும் அந்த உரிமையில்லை என்று இன்னும் எவ்வளவு நாளைக்குச் சொல்லப் போகிறீர்கள். கருமேகங்களாலும் விடியலை வெகு நேரம் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பதை சாதியவாதிகள் உணர்ந்திருக்கட்டும்.

இன்றைக்கு கல்வியில் பெண்கள் சாதனை படைக்கிறார்கள். ஒரு காலத்தில் கனவாக இருந்த காவல்துறைப் பணிகூட அவர்களுக்குச் சர்வசாதாரணமாகிப் போனது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் போட்டிபோட்டு வேலை செய்கிறார்கள். மருத்துவத்துறையில், அதிலும் மகப்பேறைப் பொறுத்தவரை கிட்டதட்ட பிரம்மாக்கள் ஆகிவிட்டார்கள். “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” எனும் பாரதியின் பாட்டை மெய்யாக்கி விட்டார்கள். பெண்களுக்கு கல்விகேள்விகளை மறுத்து அவர்களை மூலையில் முடக்கிவைக்கப் பார்த்த பிராமணிய சாஸ்திரங்கள் பலவற்றை சத்தமின்றி புதைத்துவிட்டார்கள்.

ஆனால், புறநிலை மாற்றங்கள் உடனடியாக அக வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மாதர்நிலை. என்ன படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய வேலைக்குப் போனாலும் வீட்டில் அவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. கணவனும் மனைவியும் வேலைக்குப் போனாலும் சமையல் வேலையை மனைவிதான் பார்க்க வேண்டும் என்பதே எழுதாத சாஸ்திரமாக உள்ளது. பெண்ணுக்குச் சமமான சொத்துரிமை உண்டு என்று சட்டத்தில் வந்து விட்டாலும் நடப்பில் இன்னும் வரவில்லை. பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட எத்தனையோ கட்டுப்பாடுகளும் மூடநம்பிக்கைகளும் இப்பொழுதும் தொடருகின்றன. திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியுமா – வாழ அனுமதிக்குமா - இந்தச் சமுதாயம் - என்பது இப்போதும் பெரிய கேள்விக்குறியே. “ சுயேச்சையான வாழ்வுக்குப் பெண் தகுதியானவள் அல்ல” எனும் மனுதர்மசாஸ்திரம்; இப்போதும் வேலை செய்வதாகவே தெரிகிறது. நிலப்பிரபுத்துவத்தின் இந்த மிச்சசொச்சத்தையும் குழிதோண்டிப் புதைக்க மாதர்கள் கிளர்ந்தெழுந்திருப்பது அரிய காட்சி. மாதர் தமை இழிவு செய்யும் மடமையை மாதர்களேத் திரண்டு முறியடிப்பது இன்னும் புதுமை. ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் களத்தில் போரளிகளாக நிற்பது சமூகத்தின் முகபடாமையே மாற்றி வருகிறது.

நண்பர்களே! இத்தகைய வாழ்நிலையிலிருந்துதான் தமிழ்க் கலை- இலக்கியங்கள் பிறக்கின்றன. இதன் மீதுதான் தமது தாக்கத்தையும் அவை பிரயோகிக்கின்றன. பூமியின் மடியிலிருந்து பிறந்த இரும்பு பூமியையே கிளரும் ஏர்முனையாவது போல இது நடக்கிறது. தன்னைப் பிறப்பித்த சமூகத்தைக் கலை இலக்கியம் பாதுகாக்க முனைகிறது அல்லது மாற்றப் பார்க்கிறது. படைப் பாளிகளைப் பொறுத்தவரை இது உணர்வுபூர்வமாகவும் நடக்கலாம், உணர்வுபூர்வமற்றதாகவும் நடக்கலாம். விஃயம் என்னவென்றால் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம், நமது படைப்புகள் எந்த குணத்தைக் கொண்டவை என்பதுதான். வாழ்வைச் சற்றேனும் முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதா அல்லது பின்னுக்குத் தள்ளுகிறதா, அது முற்போக்கா, பிற்போக்கா என்பதுதான் முக்கியம்.

இப்படியெல்லாம் கலை - இலக்கியங்களைத் தரம் பிரிக்கக்கூடாது, இப்படி கொள்கை பேசுவது ஒரு போதை சமாச்சாரம் என்று அண்மையில் ஒரு எழுத்தாளர் பேட்டி கொடுத்தார். தமிழ்நாட்டில் விதவிதமான போதை வஸ்துக்களால் மனிதர்கள் கெட்டுப்போகிறார்கள். அந்த வரிசையில் கொள்கையையும் சேர்த்துவிட்டார் அவர்! ஆனால் இப்படிப்பேசுவதும் ஒரு கொள்கைதான் என்பதை அவர் மறந்துவிட்டார். சமூக மாற்றம் பற்றி கலை - இலக்கியங்கள் பேசக்கூடாது என்பது தற்போதைய சமூகநிலை தொடரட்டும் என்கிற நிலைமாறாக் கொள்கை என்பதை அவர் மறந்துவிட்டார். கொள்கையற்ற நிலை என்பது படைப்பாளிகள் மத்தியில் இருக்கமுடியாது. காரணம் அவர்கள் அறிவுஜீவிகள். அறிவுத்தேடலற்ற அறிவுஜீவிகள் எப்படி இருக்கமுடியும்? பறக்கத் தெரியாத பறவை, நீந்தத் தெரியாத மீன் எனும் வெற்று முரண்வாதம் அது.

உண்மையில் இத்தகைய படைப்பாளர்கள் தப்பிச்செல்லும் மனோபாவத்தில் இருக்கிறார்கள். இவர்களால் கலை கலைக்காகவே எனும் காலாவதியான கோட்பாட்டை முன்மொழியவும் முடியவில்லை, கலை - இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் கொள்கையை ஏற்கவும் முடியவில்லை. ஆகவே குறுக்குசால் ஒட்டுகிறார்கள்.

த.மு.எ.க.ச.வைப் பொறுத்தவரை யதார்த்தவாதம் எனும் கலை - இலக்கியக் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது. இதன் பொருள், முக்காலத்தின் எந்த ஒன்றின் சாரத்தையும் உணர்ச்சிபூர்வமாகத் தருவது. புறவாழ்வின் அஸ்திவாரத்தில் நின்று அகவாழ்வையும் தருவது. அண்மையில் ஒரு விமர்சகர் முற்போக்காளர்கள் அகவாழ்வுக்குள் போவதில்லை என்று குற்றஞ்சாட்டினர். மார்க்சிம் கார்க்கியின் “தாய்” நாவல் புரட்சிக்கான தயாரிப்பு எனும் புறச்சூழல் பின்புலத்தில் தாய்க்கும் மகனுக்குமான அகஉலகத்தையும் சித்தரிப்பதை அவர் எப்படி மறந்தார் என்று நினைத்துக் கொண்டேன்.அகவாழ்வு என்ற பெயரில் புறவுலகிற்குச் சம்பந்தமில்லாத மனக்குகை மர்மங்களையே எழுதிச்செல்ல வேண்டும், இருண்மை வாதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் எதிர்பார்த்தால் அது அவர்களின் தவறு. அதற்கு முற்போக்காளர்கள் பொறுப்பு அல்ல.

இதை உணராமல், இன்னுமொரு விமர்சகர் முற்போக்கு எழுத்தாளர்கள் சாதனை எதையும் செய்யவில்லை என்று ஒரேபோடாகப் போட்டிருக்கிறார். அவர் எதைச் “சாதனை” என்கிறார் என்று பார்த்தால் பின்னைநவீனத்துவத்தின்படி எழுதுவதை மட்டுமே அந்தப் பட்டியலில் சேர்க்கிறார். நடப்போ இதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. இன்று தமிழ் இலக்கிய வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிற, ஆர்வத்தோடு படிக்கப்படுகிற நாவல்கள் பலவும் யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த உண்மையை மறந்து முற்போக்காளர்களை மட்டந்தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த விமர்சகர் இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார் என்று படுகிறது.

அத்தகையோருக்குச் சொல்லிக் கொள்வோம், விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் எத்தனைப் பொய்மைகளை அவிழ்த்துவிட்டாலும், அதையெல்லாம் மீறி முற்போக்காளர்கள் தாங்கள் வகுத்துக்கொண்ட பாதையில் பயணிப்பார்கள். காரணம் அது காலத்தின் தேவை. நாங்கள் பேசுவதை விடவும் எங்களது படைப்புகள் அதிகம் பேசும். நீங்கள் எல்லாம் நினைப்பதை விடவும் எங்களது பார்வை விசாலமானது. யதார்த்தவாதம் என்பதை நாங்கள் குறுகிய நோக்கில் கொள்ளவில்லை. வாழ்வின் எந்தவொரு கூறையும் கருப்பொருளாக்கலாம் என்கிறோம். கலை - இலக்கிய வானில் நிலவும் எந்தவொரு வடிவத்தையும் பின்பற்றலாம் என்கிறோம். பாலே நடனக்காரர் வானில் சுழன்று சுழன்று ஆடுவதாகப்பட்டாலும் அவரின் கட்டைவிரல் பூமியில் ஊன்றியிருக்குமே அப்படி படைப்பு வாழ்வில் ஊன்றியிருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆகாயத்தில் எவ்வளவு தூரம் சிறகடித்துப் பறந்தாலும் இரையெடுக்க பூமிக்கு வருகிறதே பறவை, அப்படி இலக்கிய வெளியில் எங்கு பயணித்தாலும் முடிவில் யதார்த்தத்திற்கு திரும்பிவருமாறு கோருகிறோம்.

சகமனிதர்களின் வாழ்வு பற்றி,அவர்களது ஏக்கம், அழுகை, ஆனந்தம் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று ஒரு படைப்பாளி கருதுவாரேயானால் அவரது படைப்பைத் தான் ஏன் படிக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும் என்று கூற அந்தச் சகமனிதர்களுக்கு உரிமை உண்டு என்பதைப் படைப்பாளி மனதில் கொள்ள வேண்டும். எங்கும் மனிதர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த இயக்கம் அவ்வப்போது போராட்டங்கள் எனும் உச்சஸ்தாயியை எட்டுகிறது. நமது படைப்புகள் அந்த உழைப்பாளி மக்களின் போராட்டங்களைப் பிரதிபலித்து அவர்களுக்கு உத்வேகம் தந்து, அப்படியாக அந்தப் போராட்டங்களுக்கு உதவுமானால் அதைவிட வேறு என்ன பேறு இருக்க முடியும்?.

சார்லஸ் டிக்கென்சின் நாவல்கள் இங்கிலாந்து நாட்டுக் குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை உலகிற்குச் சொல்லி அவர்களின் மனசாட்சியை உலுக்கின. “டாம் மாமாவின் குடில்” எனும் ஒற்றை நாவல் அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகப் பேரெழச்சி தோன்றுவதற்கு ஒரு காரணமாய் இருந்தது. லியோ டால்ஸ்டாய் தொடங்கி மார்க்சிம் கார்க்கி வரையிலானவர்களின் படைப்புகள் வரலாற்றுத் திருப்புமுனையான மாபெரும் ரஷ்யப் புரட்சிக்குத் தடம் போட்டுக் கொடுத்தன. பிரிட்டீஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜூவாலையைக் கிளறி விடுவதில் பாரதியின் படைப்புகளும், சமூகசீர்திருத்தத்தை முன்னிறுத்தியதில் பாரதிதாசன் படைப்புகளும், பாட்டாளியின் ஆவேசத்தை வெளிப்படுத்தியதில் பட்டுக்கோட்டையாரின் படைப்புகளும் எவ்வளவு காத்திரமான பங்களிப்பைச் செய்தன என்பதை நாமறிவோம்.கலைத்துறையைப் பொறுத்தவரை உலகளவில் சார்லி சாப்ளினும், தமிழக அளவில் என்.எஸ்.கிருஷ்ணனும் இப்படியாகத் திகழ்ந்தார்கள்.

இந்தக் காலத்தில் இத்தகைய படைப்பாளிகளுக்கு வேலையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. இதை நம்மால் ஏற்கமுடியாது. ஏகாதிபத்தயமும், சுரண்டலும், வறுமையும், ஊழலும், மதவெறியும், சாதிவெறியும், பெண்ணடிமைத்தனமும், தேசியஇனப் பிரச்சனைகளும் நிலவும் ஒரு பூமியில் எப்படி இத்தகைய படைப்பாளிகளுக்குத் தேவை இல்லாமல் போகும்? விஃயம் என்னவென்றால் இத்தகைய படைப்பாளிகள் மீண்டும் மீண்டும் தோன்றிவிடக்கூடாது என்பதுதான் ஆளும் வர்க்கங்களின், வருணாசிரமவாதிகளின், சுயநலக் கூட்டங்களின் ஆசை. இதையே கலை - இலக்கிய உலகில் சிலர் டாம்பீக சொல்லாட்சிகள் மூலம் எதிரொலிக்கிறார்கள். இதைக்கேட்டு முற்போக்காளார்கள் மயங்கிவிட மாட்டார்கள், மயங்கித் தடம்புரண்டுவிட மாட்டார்கள்.

கலை - இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். மக்களிடமிருந்து கற்று மக்களுக்குச் சொல்லுவோம். அவர்களிடமிருந்து கருப்பொருளைப் பெற்று அவர்களுக்கு கலை - இலக்கிய விருந்து படைப்போம். சமூக இயங்குநிலையை நன்கு உள்வாங்குவோம். கூடவே அழகியலுக்கு எனத் தனி விதிமுறைகள் உண்டு என்பதை மனதில் வைப்போம். மக்களில் பல அடுக்குகள் உண்டு என்பதை நாம் அறிவோம். எந்தவொரு அடுக்கையும் மனதில் கொண்டு படைப்பதில் தவறில்லைதான். ஆனால் பரந்துபட்ட இடைநிலை வாசகர்களை பிற்போக்காளர்கள் கையில் விட்டு விடாமல் அவர்களைக் குறிவைத்தும் படைப்புகளைத் தருவோம். துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல அந்த முழு குடிமைச் சமூகத்தையும் வென்றெடுப்பதை நமது குறிக்கோளாகக் கொள்வோம்.

மீண்டும் கபீரையே தஞ்சமடைய வேண்டியுள்ளது. அவர் பாடினார்-

“ கடவுளானவர் மணலில் சிதறிக் கிடக்கும் சர்க்கரை

 அதை யானையால் பொறுக்க முடியாது.

 குரு ஓர் அற்புதமான ஆலொசனை கூறினார்.

 ஓர் எறும்பாகி விடு, சாப்பிட்டு விடு”

மெய்யான தெய்வீக நிலைக்கு இட்டுச்செல்ல புரோகிதப் பண்டிதர்கள் போன்ற படாடோபக்காரர்களால் முடியாது, கபீர் போன்ற எளியவர்களால் மட்டுமே முடியும் என்பதுதான் இதன் சாரம். இங்கே கடவுள் என்பதற்குப் பதிலாக நல்ல கலை - இலக்கியம் என்று போட்டுப் பார்த்தால் இந்தக் கவிதை படைப்பாளிகளாகிய நமக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது. அந்தந்தச் செயலுக்கு ஏற்ற அந்தந்த வடிவம்.சர்க்கரையைப் பொறுக்க எறும்பே ஏற்றது. நோக்கத்திலும் தெளிவாக இருப்போம், அதை அடையும் மார்க்கத்திலும் தெளிவாக இருப்போம்.

Pin It