கழகத்தைச் சார்ந்த தமிழ்ச் செல்வியை ஓர் ஆண் போலீஸ் ஏதோ கிரிமினலைப் போல் கரங்களைப் பிடித்து இழுத்து வருகிறார். பின்னால் பெண் போலீசார் அணி வகுத்து நிற்கிறார்கள். இந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?

இராயப்பேட்டை கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலையை மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனின் தி.மு.க. ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தியதை தட்டிக் கேட்டதுதான் இவர்கள் செய்த குற்றம். பெரியார் கரம் பிடித்து வளர்ந்ததாகக் கூறும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் பெரியார் சிலை உடைக்கப் படுகிறது. சிலையை உடைத்தது பார்ப்பனர்கள் அல்ல, மதவெறிச் சக்திகள் அல்ல, பெரியார் அண்ணா கொள்கை வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சியினரே இதைச் செய்கிறார்கள்.

சிலைகளை சேதப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்றார் தமிழக காவல்துறை இயக்குனர். ஆனால், சிலையை உடைத்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு, அதுவும் பெண்களுக்கு இந்த ஆட்சியில் சிறை. பிணையில் வெளிவராத வழக்குகளில் கழகத்தைச் சார்ந்த 2 பெண்கள் சுதாவும், தமிழ்ச்செல்வியும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பெரியார் சிலையை உடைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அது மட்டுமல்ல, இரவில் படிப்பகத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் எழுதிய நூல்களையும் தூக்கிச் சென்று விட்டனர். கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் உட்பட அத்தனை நூல்களையும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆயிரம் விளக்கு உசேன் அன்பளிப்பாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் சிலை உடைப்பாளர்களாகவும், கலைஞர் கருணாநிதி எழுதிய நூல்களை அப்புறப்படுத்தக் கூடியவர்களாகவும் தி.மு.க.வினர். “பரிணாம வளர்ச்சி” பெற்று நிற்கிறார்கள். தி.மு.க. எங்கே போகிறது? காவல்துறையின் இந்த அத்துமீறல்களுக்கு எதிராக பேசும் கழகம் மனித உரிமை ஆணையத்திடம் புகார் தர இருப்பதோடு காவல் துறையினர்மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.

இராயப்பேட்டையில் நடந்தது என்ன? ஈழத் தமிழர் பிரச்சினையை பேசியதற்காக கழகத்தினர் மீது தாக்குதல்; பொய் வழக்கு

தயாநிதிமாறன் போட்டியிடும் மத்திய சென்னை தொகுதியில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை முன்னிறுத்திப் பேசிய கழகத் தோழர்களை காவல்துறையும், தயாநிதி மாறன் ஆட்களும் இணைந்து தாக்கியதோடு கழகத் தோழர்கள் மீதே பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இது பற்றி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பெரியார் திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து செய்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க.வினர் காவல் துறையுடன் இணைந்து அடக்கு முறையால் முடக்கி வருகிறார்கள். கடந்த 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வேன் வழியாக பிரச்சாரம் செய்தபோது பாதி வழியில் நிறுத்தி ஈழத் தமிழர் பிரச்சினையை பேச அனுமதிக்க முடியாது என்று கூறி வேனை பறிமுதல் செய்ததோடு 5 பேர் மீது தேச துரோக வழக்கு தொடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் 2.5.2009 அன்று கழகத்தினர் பிரச்சாரத்தை நடத்தியதால் தி.மு.க வினர் இரவு 10 மணி அளவில் காவல் துறையினருடன் வந்து ‘பெரியார் படிப்பகத்தை’ அடித்து நொறுக்கி அருகில் இருந்த பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர், தாக்குதலில் மூன்று பேர் படுகாயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இரவு முழுவதும் வி.எம். சாலையில் பொது மக்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல் துறை இழிவாக நடத்தியுள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்ததற்குப் பதிலாக தாக்குதலுக்கு உள்ளான பெரியார் திராவிடர் கழகத்தினர் மீதே தி.மு.க.வினரையும், காவல்துறையினரையும், தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் தாக்கியதாக பொய் வழக்கு போட்டு மீண்டும் 5 பேரை கைது செய்து பிணையில் வர இயலாத பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள். கழக குடும்பத்தைச் சேர்ந்த சுதா, வயது 35, தமிழ்ச்செல்வி வயது 25 ஆகிய தமிழ்ச் செல்வியின் ஒரு வயது கை குழந்தையை உடன் கொண்டு செல்ல காவல் துறை அனுமதிக்கவில்லை.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான எந்த பிரச்சாரமும் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, பெரியார் தி.க.வினர் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் காவல்துறை தி.மு.க.வினர் ஆதரவோடு வன்முறையை கட்டவிழ்த்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெரியார் தி.க.வினரை கைது செய்து பெரியார் தி.க. வினரின் பணியை முடக்கிவிட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கருத்துரிமைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறையை கண்டிக்க தமிழ் இன உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் முன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Pin It