01.தொல்லியல் எனும் புலம் (subject) பொருளியல் பண்பாடு (material culture) வழியே மனித இனத்தின் வரலாற்றினை ஆய்வதாகும். இதற்கான சான்றுகள் பெரும்பாலும் அகாழாய்வுகளில் பெறப்பட்ட மனிதர், விலங்குகளின் எலும்புக்கூடுகள், மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், பாத்திரங்கள், மட்கலங்கள், அணிமணிகள் போன்றவை. இவை பெரும்பாலும் மனிதரின் கல்லறைகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இதன்வழியே, நம் முன்னோரின் வரலாற்றினை அறியும் உணர்வினை முதலில் ஓர் அரசர் வெளிப்படுத்தினார். கி.மு ஆறாம் நூற்றாண்டில் புதிய பாபிலோனியாவின் பேரரசர் நபோனிடஸ் (Nabonidus) என்பவர் அவர் வாழும் காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓர் இடத்தினை அகழாய்வு செய்தார். பல நூற்றாண்டுகள் கழித்து மறுமலர்ச்சி காலம் ஐரோப்பியரின் மனத்தில் பழமையின்மேல் ஓர் ஈர்ப்பான இரசனையினை முகிழ வைத்தது. அது சமூகத்தில் பழமை சேகரிப்பு எனும் உந்துதலை ஏற்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் இவ்வுணர்வு தேசியமாக (nationalism) உருபெற்றது. தொடர்ந்து, வரலாற்றுப் பொருள் சேகரித்தல் எனும் பழக்கம் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவதற்கு வழி விட்டது.

ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் எழுந்த தேசியவாதம் (nationalism) அரசியல் ஒருங்கிணைவு (political unification) என்ற கருத்தியல்கள் மக்கள் இனப்பெருமை பேசுவதற்கு திறவுகோலாயின. இக்காலகட்டத்தில் சமூகவியல், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகள் வளர்ந்துவந்தன. இவை தொல்லியல் சான்றுகளை வரலாறாகப் புரிந்து கொள்வதற்கு ஊக்கமளித்தன. எனவே, அக்காலகட்டத்தில் அறிஞர்கள் பல்துறை வல்லுநர்களாக இருந்தனர். மேற்சொல்லப்பட்ட துறைகள் வரலாற்றினை எழுதுவதற்கு பெரிதும் பயன்பட்டன. இக்காலகட்டத்தில்தான் கார்ல்மார்க்ஸ் (1818-1883) மொழிந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் கோட்பாடு வரலாற்றையும் அதன் சான்றுகளையும் புரிந்துகொண்டு விளக்குவதற்கான ஓர் ஒளிவிளக்காக அமைந்தது. இவையெல்லம் அறிஞர் தளத்தில் இயங்கியபோதுதான் Vere Gordon Childe (VGC) என்பவர் தொல்லியலின் பின்னணியில் நாகரிகங்களின் வரலாற்றினை புரிந்து கொள்வதற்கு விரிவான ஆய்வினை மேற்கொண்டார். விளைவு: நடுநிலையான முடிவுகளை பலநூல்கள் வழியே வெளியிட்டார். நாகரிகங்களின் வழியே மனிதரின் வரலாற்றினை எவ்வாறு புரிந்து கொள்ள முடிகிறது எனும் முறையியலையும் கற்றுத் தந்தார். இவரின் முறையியலில் முக்கியமானது ஒப்பாய்வாகும். குறிப்பாக, மட்கலங்களின் வடிவம், நிறம், அளவு, அவற்றின்மேல் வரையப்பட்ட உயிரினங்களின் வடிவங்கள், வகைப்படங்கள் (designs) போன்றவற்றின் அடிப்படையில் அவற்றினை பயன்படுத்தியவர்களின் சமூகப் பொருளியல், பண்பாட்டு வரலாற்றினை மீட்டெடுத்தார். ஓர் ஏற்கும்படியான பதிவு என்னவெனில், வெவ்வேறு நாகரிகங்களின் மீன்பிடி சமூகங்கள் பயன்படுத்திய மீன்பிடிஊசிகள். இவை வெவ்வேறு பொருள்களில் செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை வடிவம் ஊசியின் “வளைவு” ஆகும். வளைக்கப்படாத ஊசியால் மீன்பிடிக்க முடியாது.

02.இவரின் ஆய்வின் வாயிலாக கிடைக்கும் மற்றொரு முக்கியகருத்து. ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தினை உருவாக்கியது ஒரு இனம்மட்டுமல்ல. அதில் பல இனத்தவரும் பங்கு பற்றியுள்ளனர் என்பதாகும். இதில் பெரும்பாலும் கைவினைஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதனை இவராய்வில் அறியலாம். அதிலும் குறிப்பாக, மட்கலங்கள் செய்வோர், உலோகக் கொல்லர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்றோர். இவர்களுக்கெல்லாம் தம் உபரிஉற்பத்தி (surplus production) மூலம் வாழ்வளித்த வேளாண்குடிகள் மிக முக்கியமானவர்கள் என்கிறார். ஏனெனில், நன்கு கட்டமைக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட (planned irrigation-system) நீர்ப்பாசனஅமைப்பே உபரி உற்பத்தியினைத்தரும். இதனால், உழைக்கும் கைவினைஞர்கள், உழைக்காத பூசாரிகள் (priests) நன்கு உண்பர். உபரியால் வணிகம் பெருகும். இதுவே, இவரது ஆய்வின் அடிப்படைக் கருத்தாக அமைகிறது. இவர் நாகரிகங்களின் வரலாற்றுப் போக்குகளை படிப்படியாக விளக்குவதன் அடிப்படையில், உலகின் பிறபகுதிகளில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எளிதில் ஒப்பீட்டளவில் புரிந்து கொள்ளலாம்.

03.இவர் (VGC) சென்ற நூற்றாண்டில் உலகின் ஆகச் சிறந்த தொல்லியல் அறிஞர்களின் பட்டியலில் ஒருவர். அகழாய்வுவில் கிடைத்த சான்றுகளை உயிரற்ற ஜடப்பொருளாகக் கணிக்காமல் அவை எம்மாதிரியான சமூக இயக்கதால் உருவாக்கப்பட்டன அவை எப்படி எவ்வாறு புழங்கப்பட்டன என்பதனை மேற்சொன்னபடி இயங்கியல்பார்வையுடன் ஆய்ந்தவர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பிறந்து அங்கிருந்த University of Sydney இல் பயின்று இலண்டன் (Oxford University) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட The Queens’s College இல் கல்வி பயின்றவர். பல ஐரோப்பிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். Archaeology, Philology என்ற இரு துறைகளில் வல்லவர். இங்கிலாந்தில் பயின்றபோது முதல் உலகப்போருக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தார். அதனாலேயே அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. இங்கிலாந்திற்குத் திரும்பி Royal Anthropological Institute இல் நூலகராகப் பணியாற்றினார். 1927-1951 காலகட்டத்தில் Edinburg பல்கலைக்கழகத்தில் (Professor of Archaeology) தொல்லியல்பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற இடங்களில் நிகழ்ந்த அகழாய்வுகளை பேற்பார்வை (over saw) செய்தார். 1934 இல் Pre-historic society என்ற அமைப்பினை உருவாக்கினார். அவர் வறட்டுத்தனமான தொல்லியலாளர் இல்லை. இலக்கிய இலயிப்பும் உள்ளவர். John Keats கவிதைகளை விரும்பியவர். William Wordsworth “Ode to Duty” என்ற கவிதையினை இரசிப்பவர். அவர், தொல்லியலில் இருவிதமான கோட்பாடுகளை (Neolithic revolution and Urban revolution) உருவாக்கி அவற்றை விளக்கினார். பல நூல்களில் அவர்எழுதிய ஆய்வின்திரட்டு என்னெவெனில்: தொழில்நுட்பமும் பொருளியல் வளர்ச்சியும் வரலாற்றுப் போக்கின் புரட்சிகளை இயக்கின என்பதாகும். உலகின் கிழக்கில் (Orient) மூன்று நாகரிகங்கள் உலகில் முதன்மையானவை என்றார்: நைல்நதியின் எகிப்திய நாகரிகம்; யூப்ரடிஸ்-டைகிரிசின் மெசபடோமியா நாகரிகம்; இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்துநாகரிகம். தம் ஆய்வில் இம்மூன்றினையும் ஒப்பிடுகிறார். அவருடைய மூன்று நூல்களின் மையமான கருத்துகள் இங்கு கூறப்படுகின்றன.

New History on the Most Ancient East (1934) என்ற நூல் 295 பக்கங்களில் அமைந்து 12 இயல்களில் எழுதப்பட்டுள்ளன. 39 ஒளிப்படங்கள், 111 வரை படங்கள் என விரிகிறது இந்நூல். இவற்றின் விளக்கங்களுடன் தம் ஆய்வினை வலுப்படுத்துகிறார் VGC.

04.அணுகுமுறை 1

இந்நூலில் இவர் விவரிக்கும் மூன்று முக்கியமான நாகரிகங்களும் வெப்பமான வரண்ட பகுதிகளில் உருவானவை (hottest and driest climatic zone. Extreme aridity and excessive summer heat and feature) என்கிறார். எகிப்த், சுமேர், பஞ்சாப் மூன்றும் நிலப்பரப்பியல்பூர்வமாக (geographically) ஒத்த கூறுகளைக்கொண்டவை (certain unitary character) என்கிறார். VGC மனித இனத்தின் வரலாற்றுப்படிநிலைகளை Lewis Henry Morgan (1818-1881) வகுத்தளித்த savagery, barbarianism, civilized என்ற கருத்தியலின் அடிப்படையில் பிரிக்கிறார். இப்பார்வை அந்தந்த காலகட்டத்தில் அம்மக்களின் இயல்புநிலையினை அளவிடாமல் நவீனகாலத்தின் பின்னணியில் பார்க்கப்பட்டதாகும். இதனை அறிவியல்பூர்வமான தொழில்நுட்பப் பார்வையுடன் அணுகியிருக்கவேண்டும். பண்டையகாலத்தின் கூட்டுறவுத்தன்மை நாகரிகத்தினை வளர்த்தது. தற்போது நவீனம் என்ற பெயரில் அந்நாகரிகத்தின் நுணுக்கமான, நுட்பமான அறிவியல் கூறுகள் அழிக்கபடுகின்றன என்பதனை இந்நூலினைக் கற்கும்போது உணரமுடிகிறது. VGC தொல்லியலையும் வரலாற்றையும் மானிடவியல் பின்னணியில் அலசுகிறார். வேட்டைச்சமூகத்தில் குழந்தைகள் இடைஞ்சலாக கருதப்பட்டதால் அவர்கள் பயிர்களைக் களையெடுக்கவும், விலங்குகளைக் கவனிக்கவும் அமர்த்தப்பட்டனர் என்கிறார். இவ்விடத்தில், இந்தியச்சமூகத்தின் சமையவரலாற்றில் வளரிளம்பருவத்துக் கடவுளர்களாக அறியப்படும் கண்ணன் வடக்கிலும், தெற்கில் முருகனும் ஆயர்குலத்தின் சிறுவர்களாக படைக்கப்பட்டதனை நினைவுகூரவேண்டும். மேய்ச்சல் சமூகத்தினர் நாடோடிச்சமூகமாக மாறினர். சில விவசாயிகள் அவ்வப்போது பயிர் செய்தனர் (sedentary). அப்பிரிக்காவில் (hoe-culture) கலப்பைவேளாண்மை, தோட்டவேளாண்மை பொதுவானவை. சில சில சிறிய இடங்களில் பெண்கள் உழுதனர். அங்கு உரமிடலும் பிறவேலைகளும் இல்லை. ஒவ்வொருமுறையும் ஒரு புதியநிலப்பரப்பினை எரிபுனச்சாகுபடியின் அடிப்படையில் பயன்படுத்தினர் (shifting cultivation). அப்படி, ஒவ்வொருமுறையும் புதியநிலப்பரப்பினைத் தெரிவுசெய்யும்போது அது நாடோடிவாழ்விற்கு (nomadism) இட்டுச்சென்றது (Hoe-culture thus may entail to nomadism). VGC சோலைகளின் அருகே விளைநிலங்கள் அமையும்போதும் வெள்ளத்தால் மண்படிவு உருவாகும்போதும் நாடோடிவாழ்வு நிலைத்தவாழ்வாகிறது என்கிறார். நீர்த்தேவைகளை வழிநடத்துவதற்கு பாசனவாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. நீர்ப்பாசனத்தையும் வடிகாலையும் இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் மொத்தசமூகத்தின் ஒத்துழைப்பு (whole community) தேவையாக எழுந்தது என்றும் அங்கு சமூக ஒற்றுமையினை (social solidarity) உருவாக்குவதற்கு பொருளியல் பிணைப்பு (economic bond) உருவாக்கப்பட்டது என்றும் மேற்சொல்லப்பட்ட நீர்ப்பாசன நாகரிகங்களின் கூறுகளை பிசிரற்று விளக்குகிறார். இதனை, தமிழ்நாட்டின் சோழர்காலத்தில் காவிரிவடிநிலப்பகுதியில் தொழிற்பட்ட வெட்டி, வேதினை, ஆள், முட்டாஆள், எச்சோறு போன்ற உடலுழைப்பு வரிகளோடு (labouring tax) ஒப்பிடலாம். அதேகாலகட்டத்தில் தலைவாய்ச்சான்றார் என்றொருகுழு நீர்ப்பாசனக்கட்டமைப்பினை பராமரித்து பாதுகாத்ததனையும் கணக்கில் கொள்ளவேண்டும். இதுபோன்ற அமைப்பு, ஒட்டுமொத்த ஆற்றுமுறையினையும் (river-system) ஒருங்கிணைப்பதற்கு அரசியல் ஒருங்கிணைவு (political unification) வழிகோலியது. அவரின் கூற்றுப்படி பெரும்பாலான பெரிய நாகரிகங்கள் நீர்ப்பாசனவேளாண்மையினால் விளைந்தவை. இங்கு, கலப்புப்பயிரிடலை (mixed farming) நாடோடிவாழ்வும் வேளாண்வாழ்வும் இணைத்து உருவாக்கின. இப்படி நாகரிகங்களை, மேய்ச்சல்பொருளியலும் நீர்ப்பாசனவேளாண்பொருளியலும் இணைந்து உருவாக்கின. இதனை நிலைக்கவைத்தது வணிகப்பொருளியலாகும்.

05.எகிப்திய நாகரிகம்

இந்நூலில் எகிப்திய நாகரிகம்பற்றி பரக்கப் பேசுகிறார். இந்நாகரிகம் பற்றிய புரிதலுக்கு பெரும்பாலும் கல்லறைகள், புதைகுழிகளில் (Cemeteries and burial sites) கிடைக்கப்பெற்ற பொருள்களில் இருந்து சான்றுகளைத் தொகுத்துள்ளார். எகிப்தியப் பேரரசர்களின் கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பல்வகைசான்றுகளை மானிடவியல் பின்னணியில் பகுப்பாய்வு செய்தார். அரசர்கள் வளர்ப்புவிலங்குகளுக்காகவும் நிலத்தினை ஆக்கிரமிக்கவும், கொள்ளையிடவும் (booty) போரினை ஊக்குவித்தனர் என்றார். இவற்றினைத் தொல்லியல் தளவாடங்கள் வாயிலாக அறியலாம் என்கிறார். இவ்விடத்தில் கன்றுகாலிகளுடன் சோழர்படைகள் கங்கைவாடியின்மேல் படையெடுத்துத் திரும்பியதனை ஒருகணம் நினைக்கலாம். எகிப்த்தில் அரசுகள் எழும்முன்பு மக்கள் இனக்குழுக்களாக வெவ்வேறிடங்களில் இருந்தனர் என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குலக்குறி உண்டு (totem symbols) என்றும் அறிகிறார். அக்குலச்சின்னங்கள் கரடி, சிங்கம், புள்ளிச்சிறுத்தை, கொம்புள்ள ஆடுகள், சர்ப்பபந்தம் போன்றன. அவ்வுருக்கள் பெரும்பாலும் தந்தத்தில் செய்யப்பட்ட கைப்பிடிகளில் காணப்படுபவை. அவை பெரும்பாலும் கொலைக்கருவிகள். அங்கு வெவ்வேறு குலச்சின்னங்கள் கொண்ட கிராமங்கள் தங்களுக்குள் சண்டையிட்டன என்றும் ஒரே குலக்குறிகொண்ட பல கிராமங்கள் இருந்தன என்றும் கூறினார். Falcon Horus, Cow-Hathor கோலப்பாம்பு போன்ற குலகுறியீடுகள் மிக முக்கியமானவை. இவையணைத்தும் ஒன்றிணைந்து எகிப்திய அரசினை உருவாக்கின. விலங்குகள், தாவரங்கள் அடிப்படையில் பலகடவுளர்கள் இருந்தாலும் அனைத்தையும் இராஜாளி எனும் குறியீடு தன்கீழ் அமர்த்தியது.

06.எகிப்திய பாரோக்களின் கல்லறைகள் பற்றிய விவரனை.

இதுபோன்ற கல்லறைகளில் கிடைத்த எலும்புக்கூடுகள் இருக்கும் அமைப்புநிலையின் (posture) அடிப்படையில் அரசர்களின் பணியாட்களை அடையாளம் காண்கிறார். அப்படிப்பட்ட ஒரு கல்லறையில் அரசருடன் சேர்த்து புதைக்கப்பட்டவர்கள்: அலுவலர்கள், கைவினைஞர்கள், வைப்பாட்டிகள், வேலையாட்கள், அரசு அதிகாரிகள் (royal officials). மற்றொரு கல்லறையில் அரசருடன் சேர்த்து 33 பேர் புதைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவரின் கல்லறையில் 275 அந்தப்புரத்துப்பெண்கள், 43 அரண்மனைப் பணியாளர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இதனோடு சேர்ந்த இன்னொருகல்லறையில் சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில் 269பேர் புதைக்கப்பட்டுள்ளனர். சில அரசர்கள், அரசிகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கல்லறைகள் எழுப்பப்பட்டுள்ளன. அவை மரத்தாலானமாளிகை போன்றன. அரசர்களின் பல பெரியகல்லறைகளில் கிடைத்த பொருள்கள்: மதுசாடிகள், தானியத்தாழிகள், மரத்தாலான பூச்சாடிகள், மரத்தாலான நகைப்பெட்டிகள், கருவிகள் வைக்கப்படும் நகைப்பெட்டிகள், அறைகலன்கள் மற்றும் புதையல்பொருள்கள் போன்றவை. இம்மாதிரியான கல்லறைகள் மிகவும் சூசகமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்டன. இவை பெரும்பாலும் அரசர்களுக்கான பள்ளிப்படைகளாக இருந்தன. இவற்றின் நுணுக்கமான கூறுகள்தான் பிரமிடுகள் எழுப்பப்டுவதற்கான மாதிரியாக அமைந்தன. இதுபோன்ற சில பள்ளிப்படைக் கல்லறைகளை எளிதான வரைபடங்கள் மூலம் விளக்கியுள்ளார். எகிப்திய நாகரிகத்தினை விளக்கும்போது அதன்காலத்தினை அரசகுடும்பத்து ஆட்சிக்கு முன், (pre-dynastic and dynastic) பின் என்று வரையறுக்கிறார். இதில் முதல்காலகட்டத்தில் (pre-dynastic) எகிப்தின் வணிகம் வளமையுற்றதால் அடுத்தகாலகட்டம் எளிதில் மலர்ந்தது என்கிறார். அக்காலத்தில் இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்கள்: வெள்ளி, சூதுபவளம், மரங்கள், மதிப்புறுகற்கள் போன்றன. அப்போது அரசர்கள் தம்மை வளப்படுத்துவதற்கு செம்பு சுரங்கங்களை (copper mines) கைப்பற்றுவதற்கு படையெடுத்தனர். இதனால் செம்புகொல்லர்கள் உருவாயினர். இவ்வுலோகத்தினால் கோடரிகள், இருபுறமும் வெட்டும்கத்திகள், மீன்பிடிஊசிகள், ஈட்டிமுனைகள், வீரர்களுக்கான கருவிகள், கடவுளுக்குப்படைக்கும் கருவிகள் போன்றவை செய்யப்பட்டன. எனவே, பாரோக்களின் காலம் செம்புகாலம் என்று அறியப்படுகிறது. ஆனாலும், மத்தியில் வலுவற்றஅதிகாரம் உள்ளபோது கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டன. காலந்தோறும் அரசுகள் மத்தியில்வலுவோடும் எல்லைகளில்வலுவற்றதாகவும் இருந்தன என்பது வெள்ளிடைமலை. இதனை (core versus peripheral) நடுவணுக்கும் எல்லைக்குமான மோதல் என்ற கருத்துடன் ஒத்துநோக்கவேண்டும். ஒருபுறம் பாரோக்களின்காலம் செம்புக்காலம் என்றாலும் மறுபுறம் வேளாண்குடிகள் மரத்திலானஏர், கதிர்அறுவாள், அறுகற்கள் (flint stones) போன்றவற்றையும் பயன்படுத்தினர். அக்காலத்தில் உலோகத்திலும், மண்ணிலும் கலங்கள் செய்யப்பட்டன. பிடியுடன்கூடிய மண்சாடிகள் செய்யப்பட்டன. சிரியா, பாலஸ்தீனப்பகுதிகளில் இருந்து எகிப்திற்கு செம்பு ஏற்றுமதிசெய்யப்பட்டன. சிரியாவின் குயவர்கள் எகிப்தில் மட்கலங்கள் செய்தனர். இவை, பெரும்பாலும் ஆலிவ்எண்ணை வைத்துக்கொள்ளப் பயன்பட்டன. இயற்கையின் குறைவினால் (natural deficiency) எகிப்தில் இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்கள்:ஆலிவ் எண்ணை, பானைகள், அரிதிற்கிடைக்கும் மது (exotic wine) சூதுபவளம் இன்னபிற.

07.அணுகுமுறை 2

தம் ஆய்வில் VGC ஒரு நாகரிகத்தினை அறியும்போது அதன்வழியே மற்றொரு நாகரிகத்தினை அடையாளம் காணும்முறையினைத் தருகிறார். காட்டாக, எகிப்தில் கிடைத்த பொருள்களில் மெசபடோமியாவின் பல அடையாளங்களைக் காண்கிறார். அவை: மூக்குடன்கூடிய பூச்சாடிகள், உருளைமுத்திரைகள், அயல்நாட்டுப்படகுகள், புதுவகைநாய், கலைமுத்திரை (artistic motif) இருதலையுடைய விலங்குகள் (double-headed beast). இவையனைத்தும் சுமேரியாவிலிருந்து எகிப்திற்கு வந்தவை.

08.இவருடைய ஆய்வின்வழியே பெறப்படும் இன்னுமொரு கருத்து. அது வருமாறு. இயற்கையமைப்பு, நிலவளம், தனிமங்கள்தான் நாகரிகத்தினை உருவாக்கும். இதன் அடிப்படை, தொழில்நுட்பமும் பொருளியலுமாகும். இவற்றினை இயக்கவைப்பது மனிதனின் மனம். அதாவது அனுபவமும் நம்பிக்கையும். இங்கு ஒன்று சொல்லப்படவேண்டும். நாகரிகம் தொழிநுட்பம் சார்ந்தது;பண்பாடு நம்பிக்கையும் பழக்கவழக்கமும் சார்ந்தது. இரண்டும் ஒன்றினை ஒன்று தாக்கத்தினை ஏற்படுத்தும். காட்டாக, உலகம்முழுக்க மீன்பிடி ஊசிகள் வெவ்வேறு அளவுகளில்/வடிவங்களில் அமைக்கப்பட்டன. இது தொழில்நுட்பம் சார்ந்தது. பிடிக்கப்பட்ட மீனினைச்சமைத்து கடவுளுக்கு படைக்கவேண்டும் என்பது பண்பாடு சார்ந்தது. தற்போது மீன்பிடித்தொழிலில் பலநுட்பங்கள் வந்துள்ளன. ஆனால், படைக்கும் பண்பாடு மாறவில்லை. சமைக்கும் தொழில்நுட்பம் மாறிவந்துள்ளது. ஆனால், வளைக்கப்படாத ஊசியால் மீன்பிடிக்கமுடியாது என்பது இயல்புநிலை. அதேபோன்று பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப சாடிகளின் கைப்பிடிகளும் மூக்குகளும் வடிவமைக்கப்பட்டன. இங்கு தேவைதான் நாகரிகத்தினை தோற்றுவிக்கிறது என்பதனை உணரமுடிகிறது. எகிப்தின் நைல்பகுதியில் அரசகுலத்து (pre-dynastic) ஆட்சி எழுவதற்குமுன்புவரை அங்கு எழுத்தாவணங்கள் இல்லை. நைலின் மேல்பகுதியில் (upper Nile) இன்றைக்கும் வசிக்கின்ற மக்களின்தோற்றம், மண்டையோட்டு அமைப்பு, கட்டுடல்போன்றவை, மொழி, உடை போன்றவையும் அவர்களின் பழங்காலத்தினை (oldest Egyptian) ஒத்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் தலைவர்கள் மழைதருவிக்கும் (rain-maker) மந்திரவாதி அல்லது (divine-kings) தெய்வீகஅரசர்கள் என்று நம்பப்பட்டனர். இம்மன்னர்கள் அண்மைநூற்றாண்டுகள்வரை சடங்குகள்மூலம் (ritual slain) இறந்தனர். இம்மக்கள் குலக்குழுக்களாக வாழ்ந்தனர். இக்குலக்குழுக்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட ஆப்பிரிக்காவின் மத்தியப்பகுதியில் வசிக்கும் பழங்குடித்தலைவர்கள் மழைதருவிப்பவர்கள் என்று நம்பப்பட்டனர். எகிப்தில் செட் எனும் காலமுறைச்சடங்கின் வாயிலாக அரசன் Osiris எனும் கடவுளுடன் அடையாளப்படுத்தப்படுகிறான். இச்சடங்கின் வழியே அரசனுக்கு புதிய ஆற்றல் கிடைப்பதாகவும் இறப்பினின்றும் புத்துயிர் பெற்றதாகவும் அறியப்படுகிறான்.

காலத்தால் முந்திய எகிப்தில் எழுதப்பட்ட ஆவணம் கி.மு.1300 ஆம் ஆண்டினைச் சார்ந்தது. இது Turin papyrus தாள்களில் எழுதப்பட்டது. இதனடிப்படையில் கி.மு.3000 ஆண்டுகாலம் தொடக்கம் தொல்லியல்சான்றுக்கான காரணத்தினைக் கணக்கிடலாம். Palemero stone inscription, மேற்சொல்லப்பட்ட ஆவணத்திற்கு பல நூற்றாண்டுகள் முந்தியது. எகிப்திய நாகரிகத்தின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு காலமுறையாகும். இவர்களின் காலமுறை துல்லியமானது என்று அறியப்படுகிறது. எகிப்தியர்கள் ஆற்றுவெள்ளத்தின் கால இடைவெளியின் அடிப்படையில் நாள்களை, ஆண்டுகளைக் கணித்தனர். 365 நாள்களுக்கு ஒருமுறை வெள்ளப்பெருக்கு நிகழ்வதாக அறிந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்வெள்ளம் (annual inundation) அவர்களின் வேளாண்மையினை நிர்ணயித்தது. 50 ஆண்டுக்கான வெள்ளத்தினை இவ்வாறு கணித்தனர். பருவகாலங்களுக்கு வெள்ளம் (inundation) விதைப்பு (sowing) அறுவடை (harvest) என்று பெயரிட்டனர். இதனை ஆடிப்பெருக்கு,ஆடிப்பட்டம் தேடிவிதை, கார்காலம்,ஐப்பசிஅடைமழை, முன்பனிக்காலம், பின்பனிக்காலம், தைநீராடல், மாசிமகம்,அக்னிநட்சத்திரம்,கோடைமழை,வேனிற்காலம் போன்ற தமிழ்த்தொடர்களோடு ஒப்பிடலாம். Menas என்ற அரசர்தான் எகிப்தின் மேல், கீழ் நதிபாயும் நிலப்பரப்புகளை ஒன்றிணைத்து ஓர் அரசின்கீழ் கொண்டுவந்தார். இவருடைய இறப்பிற்குப்பின் அவருடைய கடவுள் (patron deity) பெயரால் (falcon Horus) அழைக்கப்பட்டார். எகிப்தின் மேற்கு வடிநிலப்பகுதி (western delta) Horus பண்பாட்டிற்கு தலையிடமானது. பழங்குடித்தலைவர்கள் போன்று பாரோக்களும் தந்திரத்தின்மூலம் (magic power) இறையாண்மை பெற்றனர். தந்திரச்சடங்கின்மூலம் ஊழ்வினையிலிருந்து (fate) தப்பலாம் என்று நம்பினர். இச்சடங்கு இறப்புச்சடங்குகளுக்கு ஒப்பாகும். இம்மன்னர்கள் சாகும்வயதினை எட்டும் முன் சடங்குமூலம் (ceremonially) கொல்லப்படுவர்.

09.அணுகுமுறை 3

VGC எகிப்தின் கி.மு.3000 காலத்தின் வரலாற்றினை legends, philosophy, comparative religion and ethnography போன்றவற்றால் இனக்குழுக்கள் அரசகுடும்பமாக இயக்கம் பெற்றதனை (dynastic movement) அறியலாம் என்ற ஒரு அணுகுமுறையினை முன்வைக்கிறார். அதே காலகட்டத்தில்தான் ஆன்மீகப்புரட்சியும் (spiritual revolution) நிகழ்ந்தது என்கிறார். இதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் வம்பவேந்தர்கள் வேள்விச்சடங்குகள் மூலம் அறிந்தேற்பு பெற்றதனையும் தொடர்ந்து பக்தியியக்கம் மூலம் பல்லவர்-பாண்டியர் எழுச்சி பெற்றதனையும் ஒப்புநோக்கலாம்.

10.சிந்து நாகரிகம்:கிழக்கின் மூன்றாவது உயர்ந்த நாகரிகம்

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, இயற்கைதான் நாகரிகத்தின் எழுச்சிக்கு காரணம் என்பதனை தம் ஆய்வில் கூறுகிறார். கி.மு.3000இல் சிந்து நாகரிகம் (higher civilization) மேலான நாகரிகம் என்கிறார். இங்கு குறைவான மழையினால் (deficiency of rainfall) நிலைத்த வேளாண்மை (settled agriculture) இயற்கையான அல்லது செயற்கையான நீர்ப்பாசனத்தினை (natural or artificial-irrigation) சார்ந்திருந்தது என்றும் இந்நீர்ப்பாசனப்பரப்பு மெசபடோமியாவிலிருந்த விளைநிலப்பரப்பினைவிட பெரிது என்றும் கூறுகிறார். அங்கு, மக்களின் கூட்டுறவு (cooperative effort) வெள்ளநீரினைக் கட்டுப்படுத்தியது. மொகஞ்சோதரா வளம்பொருந்தியதுதான் என்றாலும் அந்நாகரிகத்தின் மையம் எது என்றும் எதிலிருந்து செல்வத்தினை சேகரித்தது என்றும் அறியமுடியவில்லை என்றும் வியக்கிறார். எவ்விதமான தொழிற்படுதல் (mechanism) ஓர் எளியஊரினை நகரமாக மாற்றியது என்று அறியமுடியவில்லை என்கிறார். அங்கு Eurasian மதிரியான எலும்புகூடுகளும் மங்கோலிய மாதிரியான எலும்புகூடுகளும் கிடைத்தன என்கிறார். ஆனால், அங்கு கிடைத்த செம்பு உருவத்தின் தடித்த உதடுகளும், படர்ச்சியான மூக்கும் (coarse nose) தென்னிந்தியாவின் stock ஆக இருக்கலாம் என்கிறார். சிந்துவெளி மக்கள் வெள்ளி, ஈயம், செம்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினர். அவற்றில் பலவகையான பாத்திரங்களைச் செய்தனர். அவர்கள் அறிந்திருந்த விலங்குகள்: குறுங்கொம்பு காளைகள் (short-horned bull) யானைகள், புலிகள், காண்டாமிருகம், முதலைகள், மான்கள். இங்கு VGC குறிப்பிடும் கருத்து மிகமுக்கியமானது. அதாவது, ஒரு நாகரிகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்தாலும் குயவர்கள், கொல்லர்கள்போன்ற கைவினைஞர்கள் தப்பிப்பிழைத்து அடுத்தடுத்து அங்குவரக்கூடிய புதியவர்களுக்கு வேலைசெய்துகொடுப்பர் என்பதாகும். இங்கு பைபிளில் குறிக்கப்பட்ட நோவா ஒரு மரத்தச்சராகத்தன் இருக்கவேண்டும். எனவே, கடவுள் நோவாவிடம் ஊழி அழிவிலிருந்து மீள்வதற்கு மரத்தாலான ஒருபடகினைச் செய்வதற்கு ஆணையிட்டார் என்ற கருத்தினை இங்கு ஒப்புநோக்கலாம்.

11.சுமேரியம்

ஆற்று வெள்ளத்தினால் வந்த மண்படிவு (flood-deposits) அடிப்படையில் அரசர்களின் வரிசையினை சுமேரிய நாகரிகத்தில் அறியும் முயற்சியினை VGC மேற்கொண்டார். இதனால், அவர் கண்டகருத்து இப்படி அமைகிறது. மேற்சொன்னபடி மண்படிவு காலத்தில் மன்னர்கள் பைபிள்பேசும் வெள்ளக்காலத்திற்கு (anti-diluvian) முந்தியோர் என்கிறார். யூப்ரடிஸ்-டைகிரீஸ் சமவெளியில் இரு வெவ்வேறு இனத்தின் மக்கள் வரலாற்றுக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். அப்போது சுமேரியர்கள் Eridu, Ur, Larsa, Lagash, Umma, Adap, Erech போன்ற நகரங்களில் வாழ்ந்தனர். ‘சுமேர்’ என்பது செமிடிக் நாட்டவர் பயன்படுத்தும் சொல். இவர்கள் உடையிலும் மொழியிலும் தனித்துவமானவர்கள். சுமேரியர்கள் தொடக்ககாலத்தில் வடக்கே மெலடோனியா, அஸ்ஸீரியா பகுதிகளுக்குச்சென்றனர் என்று தொல்லியல் சான்றுகள் புலப்படுத்துகின்றன. அங்கு, செமிட்டிச் மொழிபேசும் மக்களுடன் கலந்தனர். அம்மொழி ஹீப்ரு, அஸ்ஸீரியன், அரபிக் மொழிகளோடு ஒத்திருந்தது. எனவே, சுமேரியர்களே பாபிலோனிய நாகரிகத்தினை நிறுவியவர் என்ற முடிவிற்கு VGC வருகிறார்.

12.மெசபடோமியாவில் காலனியம்

எகிப்த் தொடக்கத்திலிருந்தே பாலைவனத்தால் சூழப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தது. மாறாக, மெசபடோமியா அடிக்கடி பல இனத்தவரால் தாக்கப்பட்டது. அவர்கள், Elam, Awar, Gutium, Assyrian, Hittites etc.,போன்றோர். பாபிலோன் போதுமான அளவிற்கு தன்னிறைவு பெறாத ஒருநாகரிகமாக (less self-sufficiency than Egypt) இருந்தது என்பது VGC இன் கூற்று. பாபிலோனியர் களிமண்ணால் கட்டப்பட்ட எளியவீடுகளில் வாழ்ந்தனர். அதில் மரத்தாலான கதவுகள் இருந்தன. வெள்ளாடு, செம்மறியாடு, நாய், பன்றி, காளை போன்ற விலங்குகளை வளர்த்தனர். மரத்தாலான கதிரறுவாளால் அறுவடை செய்தனர். மெசபடோமியாவின் Ubaid period எனும் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதாரம் முதன்மையானது. ஆறுகளின் வடிநிலப்பகுதி இயற்கையான பொருளாதாரத்தினை (natural economy) உருவாக்கியது. சமூகக்கட்டமைப்பினை எழுப்பியது. ஒரு கருத்தியலை உருவாக்கியது. தொடக்கத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட கடவுளுக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிட்டது. அவர்கள் குத்தகைதாரர் (tenants) விளைச்சலில்பங்குதாரர் (share-croppers) உழுவோர் (tillers) எனப்பிரிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோயில்பூசாரிகளின் கண்காணிப்பில் வேலைசெய்யவேண்டும். இதனடிப்படையில் நிலத்திற்குத்தேவையான நீரும், பாசனவாய்க்கால்களின் பராமரிப்பும் உறுதிசெய்யப்பட்டன. கோயில்கள் கிராமங்களை ஆளுமை செய்தன. இவை கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் வராலாற்றில் சோழர்காலத்தில் இயங்கிய கண்காணி, காராண்மை, மீயாட்சி, உழுகுடிகள், மூலப்பருடையார் போன்ற சொற்களின் பின்னணியில் செயற்பட்ட கருத்துகளை நினைவூட்டுகின்றன. உபரிஉற்பத்தியினை சேமிக்கும் கிடங்குகள் (repository) இருந்தன. இதற்கென்று குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களின் பொருளாதாரத்தினை (community’s economy) கோயில்கள்தான் நிர்ணையித்தன. சடங்குகள் செய்யப்படுவதற்காக கோயில்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்கிறார் VGC. மேலும், அலுவலர்கள் கடவுளுக்கான குழுக்களாக (professional ministries of the deity) நியமிக்கப்பட்டனர் என்கிறார். இவர்கள் முழுநேரப்பூசாரிகளாக இருந்தனர். அதேநேரத்தில் பொதுகடவுளர்களும் வழிபாட்டில் இடம்பெற்றிருந்தனர். சிலர் தனிப்பட்ட விருப்பில் மந்திரச்சடங்குகளையும் (magic rites) செய்தனர். அங்கு வயதுவந்தோரின் இறந்த உடல்கள் குடியிருப்புகளுக்கு வெளியில் புதைக்கப்பட்டன; இறந்த குழந்தைகளின் உடல்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்டன.

13.மெசபடோமியாவில் நகர்புரட்சி

VGC மட்கலங்களின் நிறம், வடிவம், அளவுகளின் அடிப்படையில் நகரிய வளர்ச்சியின் கூறுகளை வரிசைப்படுத்துகிறார். அக்கூறுகள்: வண்ணம்பூசப்படாத மட்கலங்கள், சாம்பல்நிறத்திலான பானைகள், எளிய கருப்புநிறத்து மட்கலங்கள், சொரசொரப்பான மட்கலங்கள் போன்றன. இந்நகரிய வளர்ச்சியில் கோயில்பண்பாட்டின் அடிப்படையில் உபரியான தானியங்கள், பால், மீன் போன்றவை வேளாண்குடும்பங்களால் (individual peasant families) கோயில்களில் சேமிக்கப்பட்டு கைவினைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. முதன்மையான உற்பத்தியின் உபரி, துறைபோகிய (specialist) கைவினைஞர்கள், கொல்லர்கள், சிற்பிகள், தச்சர்கள், தோல்வேலைசெய்வோர், குயவர்கள், செம்புகொல்லர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டன. செம்புகொல்லர்கள் ஈயத்துடன் செம்பினைச்சேர்த்து கலப்பு உலோகத்தினை உருவாக்கினர். வெள்ளியும் ஈயமும் அவர்களுக்கு Anatolia விலிருந்து வந்தன. சுமேர்கள் வணிகத்தின்மூலம் தொடர்ந்து,செம்பு, சூதுபவளம், coniferous wood போன்றவற்றைப் பெற்றனர். இவை பெரும்பாலும் பதக்‌ஷானிலிருந்து பெறப்பட்டன. இவர்கள் உலோகப்பயன்பாடு இருந்தும் மரம், கல், சுட்டசெங்கற்கள் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

14.மெசபடோமியாவின் அரசரின் புதைகுழியில் (burial) அவருடைய வண்டியினை இழுத்த விலங்குமட்டுமல்ல, வண்டியோட்டிகள், காவல்வீரர்கள், இசைவாணர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், அரசவை உதவியாளர்கள் அனைவரும் சேர்த்து புதைக்கப்பட்டனர். ஊர் என்ற இடத்தில் ஓர் அரசனின் கல்லறையில் 59 சடலங்கள் இருந்தன. அதில் 6 வீரர்கள், 9 பெண்கள். அவர்கள் மதிப்புள்ள நகைகளை அணிந்திருந்தனர்.

15.தொல்லியல் சான்றுகளுக்கான சமூகவியல் விளக்கம்

முன்பே சொன்னபடி VGC தொல்லியல்சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றினை எழுதுவதற்கு பிறதுறை அறிவின் தேவையினை உணர்ந்திருந்தார். அதற்காக சமூகவியல், மானிடவியல் நூல்களைக் கற்றார். Mortemer Wheeler போன்ற அறிஞர்கள் வகுத்தளித்த அரசின் கூறுகளை அறிந்திருந்தார். அறிஞர்கள் வகுத்த சில சமூக நிறுவனங்கள்: அரசு நிர்வாகம், நீதி, குடும்பம், சொத்து, அந்தஸ்தில் படிநிலை, போர், சமைய நிறுவனம். இதனடிப்படையில் சமூகத்தின் பண்பாட்டு படிமலர்ச்சியினை VGC அணுகினார். புதைகுழிகளிலும் மாளிகைகளிலும் கிடைத்த செல்வப்பொருள்கள் சமூகத்தில் தலைவர்களுக்கானது என்று பொதுவாகக்கருதலாம். புதைகுழிகளில் அப்பொருள்கள் இல்லையென்றால் அவர்கள் இல்லை என்று பொருளல்ல என்றும் கூறினார். தொல்லியல் என்ற கருத்துப்பின்னணியில் ஒரு குழுவின் பண்பாட்டினை (community culture) அரசியல் ஒற்றுமை (political unity) என்று கருதக்கூடாது என்றும் விளக்கமளித்தார். ஆனால், கி.மு.3000 இல் கீழை மெசபடோமியாவில் (lower- mesopotomia) தொல்லியல் அடிப்படையில் பண்பாட்டுஒற்றுமை நிலவியது (uniformity in archaeological culture) என்கிறார். அவை: பொதுவழிபாடு (public worship) பொதுமொழி (common language) பொதுகடவுள் (public deities). ஆனாலும், அவர்கள் பத்துக்கும் மேலான அரசுகளாகப் பிரிந்திருந்தனர்; தங்களுக்குள் போரிட்டனர். அதே காலகட்டத்தில் Egypt இல் ஒரேஅரசாக சமமான பண்பாடு (equal cultural unity) நிலவியது. இதுபோன்ற சூழலில் எழுத்துச்சான்றுகள் இல்லை. என்றாலும், அரசகல்லறைகள் (royal tomb) வாயிலாக அரசியல் ஒருங்கிணைவை (political unification) அறியலாம். அதேநேரத்தில் தொல்லியலின் பண்பாட்டினை இனக்குழுவின்பண்பாட்டோடு இணைத்துப்பார்க்கமுடியாது என்கிறார். ஓர் உள்ளூர்குழு என்பது ஒரேஇடத்தில் சிலதலைக்கட்டுகள் (household) வசிப்பதாகும். ஐரோப்பாவில் எரிபுனச்சாகுபடி (shifting cultivation) பின்பற்றப்பட்டதாலும் தொல்லியலின்காலங்கள் நீண்டவை என்பதாலும் (length of archaeological period) அருகருகேயான குடியிருப்புகள் ஒத்தகாலத்தவை என்று கணிக்கமுடியாது என்பது இவரின் கூற்று. இனக்குழுத்தலைவர்களின் கல்லறையும் பொதுமக்களின் கல்லறையும் வேறுபட்டிருந்தன. தலைவர்களின் கல்லறை விரிந்துபரந்தது. பல அறைகளைக்கொண்டது. உள்அறைகளையும் (ante-chamber) கொண்டது. பெண்ணுருபொம்மைகளையும் (effigy) கொண்டது. பொதுவாக 6 முதல் 7 வரை எண்ணிக்கையிலான எலும்புகூடுகளைக் கொண்டது. ஆனால், பொதுவாக சிறியகல்லறையில்கூட 40 முதல் 50 வரையிலான எலும்புகூடுகள் கிடைத்துள்ளன. பிரிட்டனின் பெருங்கற்காலத்தில் பொதுவான புதைகுழிகள் (collective burial place) இருந்தன. அவற்றில் பல உடல்கள் கிடைத்தன. ஒரு புதைகுழியினை பலதலைமுறைகள பயன்படுத்தியுள்ளன. பிரிடிஷ் தீவுகளில் ஒரு புதைகுழியில் அதிக அளவாக 50 உடல்களும் சிலவற்றில் 5 உடல்களும் இருந்தன. இதே காலகட்டத்தில் டென்மார்க்கில் பெருங்கற்காலத்துக் கல்லறையில் (megalithic tomb) 100 க்கும் மேலான எலும்புகூடுகள் இருந்தன. இதுபோன்ற புதைகுழிகள் ஸ்காட்லாந்தின் மலைபகுதிகளின் (Scottish highlands) சிறுவிவசாயிகளுக்கு (crofting community) உரியவை. புதைகுழிகளின் அடிப்படையில் இனகுழுத்தலைவர்களின் அதிகாரத்தினை அளவிடமுடியாது என்றும் VGC கூறுகிறார். ஆனால், அத்தலைவர்களின் மதிப்பு (presdige), வயதுமூப்பு, பிறப்பு, மந்திரத்திறன், போர்நுட்பம், அரசியல் அதிகாரம் இன்னபிறவற்றால் கணக்கிடப்படுகிறது என்றும் கூறுகிறார்.

16.ஒருகுடும்பம் ஒருபொருளியல் அலகினை (economic unit) மூன்று-நான்கு தலைமுறைகளாக தக்கவைத்திருந்தால் அது ஆண்வழிப்பட்ட அல்லது பெண்வழிப்பட்ட ஒரு தலைக்கட்டாக (household) மதிப்பினை அனுபவிக்கும். ஆனால், இத்தலைவர்களை அரசியல்ரீதியாக நிபுணர்கள் (specialist) என்று கூறமுடியாது. Moari என்ற இனத்தில் தலைவரின் தொண்டர்கள் வழிவழியாக (traditionally) போரில் சிறைபிடிக்கப்பட்ட அடிமைகள். அவர்கள் அளித்த பொருள்களினால் இத்தலைவர் செல்வந்தரானார். தலைவராகவும் ஆனார். எனவே, தலைமைத்துவம் என்றநிலையினை ஊக்கம் (brave) விருந்தோம்பல், எல்லைப்புறங்களைத் திறமையாக நிர்ணயித்தல் போன்றவற்றால் மட்டும் அடையமுடியாது. மரங்களைச் சேகரித்தல், இனத்து அடையாளத்தினை பச்சைகுத்திக்கொள்ளுதல், வீடுகளையும் படகுகளையும் கட்டுதல் போன்றவற்றால் மட்டுமே அமையும். இங்கு தொழில்நுட்பமும் உழைப்பும் நாகரிகத்தினை படைக்கின்றன என்பது தெளிவு.

17.ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் படிநிலைகொண்ட சமூகத்தில் வேளாண்குடிகள் திறையினை அளித்து (tributary) தங்களுக்கானத் தலைமையினை ஏற்றனர். குறைவான காலமே நிலவிய Danish Bronze-age புதைகுழிகளில் கிடைத்த பெரும்பாலான கருவிகள், அணிகலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட செம்பினால் செய்யப்பட்டவை. இவை பெரும்பாலும் போர்க்குலத்தவருடையன. ஆனால், அவர்கள் நிலவுடைமையாளர்களும்கூட, கடலாடிகளும்கூட (sea-going). எகிப்தியகாலத்தில் பாரோக்கள் கல்லறைக்கும் பொதுமக்கள் கல்லறைக்கும் வேறுபாடு இருந்தது. இறப்புசடங்கிலும் வேறுபாடு உண்டு. இறுதிஊர்வலத்தின் பாடைகலன்களிலும் வேறுபாடு உண்டு. அவற்றில் வைக்கப்பட்ட பொருள்களிலும் வேறுபாடு உண்டு. ஆனால், புதைகுழிகளில் கிடைக்கும் பொருள்களின் அடிப்படையில் தலைவர்களையும் உயர்குடிகளையும் இனம்காண்பது அரிது. எனில், அடிமைகளை இனம்காண்பது அதனினும் அரிது. தலைவர்களுடன் புதைக்கப்பட்டதாலேயே ஒருவரை அடிமை என்று கருதமுடியாது. பலியிடப்பட்டவர், தலைவரோடு சேர்ந்தே மறு உலகில் சலுகைபெறலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஒருமுறை இரு உடல்கள் (ஒரே பாலினம்) தலைவருடன் புதைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சடங்குகளுடன் புதைக்கப்பட்டுள்ளது; மற்றொன்று வெறுமனே புதைக்கப்பட்டுள்ளது. அதில் பின்னவர் ஒருவேளை அடிமையாக இருக்கலாம். பகுதிநேரத் தொழில்நுட்பம் கொண்டவர்கள் சமூகமாற்றத்தில் (social classification) முக்கியம் பெறமாட்டார். பகுதிநேரத்தொழில் போதுமான உணவளிக்காது. உலோகவேலை செய்பவரும், சக்கரத்தில் பானைவனைவோரும் தொழில்திறம்கொண்டவர்கள். முழுநேரத்தொழில்நுட்பம் கொண்டவர்கள் உணவு உற்பத்தியாளர்கள் இல்லை. அவர்கள் உபரிஉற்பத்தியிலிருந்து உணவுபெறுவர்.

18.புதுகற்காலத்துப் பண்பாட்டில் (Neolithic culture) கோடரி உற்பத்தியாளர்கள் வெட்டுக்கல் (flints) உற்பத்தியாளர்களாகவும் இயங்கினர். அனால், கூடைமுடையும் Lyna இனத்து மக்கள் ஒருவகையான பானைசெய்வதில் (amphilet potters) சிறந்தவர். ஆனால், இவர்கள் தம்முடைய உழவு வேலையினை நிறுத்தவில்லை. சாடிகள் செய்வதையும், பாக்குப்பெட்டிகள் (boxes of betel-nuts) செய்வதையும் நிறுத்தவில்லை. பண்டமாற்றுக்காக செய்யப்பட்ட பொருள்கள் அவர்களின் உணவினையும் வணிகப்பொருளினையும் அதிகரித்தன.

19.பெற்றோர், குழந்தைகள் இணந்ததே குடும்பம். அங்கு இரத்தவுறவு முதன்மையானது (biological necessity). ஆனால், குடும்பம் என்ற நிறுவனம் ஓர் கூட்டுறவின் அலகு (unit of co-operation). சொத்து, கௌரவம் இரண்டினையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் (transmission of property and status). வாரிசுகள் தாய்வழியிலோ தந்தைவழியிலோ வந்திருக்கவேண்டும். ஆனால், தொல்லியல்ரீதியாக இரத்தவுறவு (kinship) தந்தைவழியினை அடுத்து தாய்வழிக்கு வந்ததா, தாய்வழியினை அடுத்து தந்தைவழிக்கு வந்ததா என்பதனை அறிவதற்கு குறைந்த அளவில்கூட சான்றுகள் இல்லை. தாய்வழி என்பது ஒரு பெரிதாக்கப்பட்ட கருதுகோள்போல் தோன்றுகிறது. தாய்வழிச்சமூகத்தில் (matriarchal) தாயினைவிட தாய்மாமன் முக்கியம். இவர்தான் குழந்தைகளைப் பேணுவதிலும் சொத்தினை பராமரிப்பதிலும் அதிககவனம் செலுத்துவார். தாய்மாமன் இயக்கத்தினை ஆண்வழிச்சமூகத்தின் பிரிதொரு செயற்பாடு என்றும் வருணிக்கலாம். அங்கு, தாய் புறந்தள்ளப்படுகிறாள் என்பதனை கவனிக்கவேண்டும். அசாமின் Khaghi இனத்திலும் அமெரிக்காவின் Iraquois இனத்திலும் இன்னும்சில அமெரிக்க இந்தியர் இனக்குழுக்களிலும் மனைவியர்தான் வீட்டுச்சொத்தின் உரிமையாளர் / உடைமையாளர். அவர்தான் குடும்பத்தினை நடத்துவார். இருந்தபோதும், இனத்தின் குலத்தலைவராக ஓர் ஆண்தான் இயங்குவார். தொல்லியலாளர்களால் யூகமாக தாய்வழிச்சமூகத்திற்கான கூறுகளைக் கண்டறியமுடியவில்லை. பழங்காலத்தில் (upper-paleolithic) கிடைத்த சில பெண்ணுருக்களின் மூலம் இதனை அறிவதற்கு முயற்சிக்கலாம். கல்லில் கீறப்பட்ட பெண்ணுரு, தந்தத்தில் வடிக்கப்பட்ட பெண்ணுரு, களிமண் பென்ணுருவம், செம்பில்செய்யப்பட்ட பெண்ணுரு போன்றவை புதுகற்காலத்தின் பொதுவான கூறு என்கிறார் VGC. பாபிலோனியாவிலும் அஸ்ஸீரியாவிலும் கிடைத்த Isthar பெண்கடவுள், கிரீஸ், ரோமில் கிடைத்த வீனஸ் போன்ற வரலாற்றுக்கு முந்திய பெண்கடவுளரின் உருக்கள் புதுகற்காலத்தினைச் சார்ந்தவை. ஆனால், அவை கடவுளர்களாக வணங்கப்பட்டவையா என்பது கேள்வியே. பெண்ணுக்கு உற்பத்திசக்தி உள்ளதால் வளமைச்சடங்கிற்கு இந்த பெண்ணுருக்கள் மதிக்கப்பட்டிருக்கலாம். சைபீரியாவில் மீன்வேட்டையாடிகள் (hunter-fishers) ஒரு தாயினை அவரின் குழந்தையுடன் சேர்த்து அம்பெய்தி கொன்றுள்ளனர். கிரிமியாவில் ஒருபுதைகுழியில் ஒருஜோடி உடல்கள் கிடைத்தன. ஓர் ஆண்: வயது 40 முதல் 45 வரை இருக்கலாம; ஒரு பெண்:வயது 20முதல் 25வரை இருக்கலாம். அப்பெண் அடிமையாகவோ வைப்பாட்டியாகவோ இருக்கவேண்டும்; மனைவியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். இங்கு ஒரு கருத்தினை பதிவுசெய்யலாம். மேலே சொல்லப்பட்ட சான்றில் தாயும் குழந்தையும் என்று கருதப்படுகிறபோது அடுத்து சுட்டப்படுகிற சான்றில் உள்ளவர் தந்தையும் மகளுமாக இருந்திருக்கலாமே என்ற கருதலாம்.

மேலே 15 முதல் 19 வரையிலான பத்திகளில் தரப்பட்ட கருத்துகளும், விவரங்களும், வினைகளும் VGC 1950 இல் வெளியிட்ட Social Evolution என்ற நூலிலிருந்து பெறப்பட்டவை. 184 பக்கங்களைக்கொண்ட இந்நூல் தொல்லியல் சான்றுகளின் விளக்கப்படங்களைக் கொண்டிருக்கவில்லை.

20. VGC எழுதிய நூல்களில் மிகவும் கருத்தூன்றி கற்கப்படவேண்டியது What Happenned in History (1954) என்று தலைபிடப்பட்ட நூலாகும். 12 இயல்களில் 302 பக்கங்களாக விரிந்து 4 நிலப்படங்களையும் சொல்லடைவினையும் இந்நூல் கொண்டுள்ளது. VGC இந்நூலினை ஒரு வரலாற்றியல் ஆசிரியர் என்றநிலையில் எழுதியுள்ளார். தொல்லியல சான்றுகளை வரலாற்றுப்பொருள்முதல் என்ற வாதத்தின் பின்னணியில் புரிந்துகொள்வதற்கு இந்நூல் நல்ல வழிகாட்டி. இனி அவரின் குரலில். இதுவரை எழுதப்பட்ட வரலாறு முடிவான ஒன்றல்ல. வரலாறு தொல்லியலின் துணையுடன் இயற்கை வரலாற்றின் (natural history) தொடர்ச்சியாக உள்ளது. தொல்லியல் சான்றுகளும் எழுத்தாவணங்களும் சேர்ந்து வரலாற்றினை அறியவைக்கின்றன. இன்றுவரை, மனிதன் மட்டுமே இயற்கையினை சமாளித்து வாழ்ந்துவருகிறான். இங்கு, இந்நூற்றாண்டில் நாம்வாழ்கின்ற காலத்திலேயே பிணந்திண்ணிக்கழுகுகள் அழிதுவருகின்றன என்பதனை பதிவிடவேண்டும். மனிதன் பயன்படுத்தும் சாதனங்கள் (equipments) பிற உயிர்கள் பயன்படுத்துவதிலிருந்து வேறுபடுகின்றன. மனிதன் பெரிதும் பயன்படுத்தும் இருகருவிகள்: மூளை, கைகள். இவற்றுடன் கால்கள், நகங்கள், பற்கள் போன்றவற்றையும் சேர்க்கவேண்டும். பெண்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தம் பற்களையும் நகத்தினையும் பாவிக்கவேண்டுமென்று மகாத்மா காந்தி அறிவுறுத்தினார். மனிதன் இயற்கைப்பொருள்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கருவிகளை உருவாக்கவும் செய்கிறான். மனிதன், சமூகவிலங்கு; கருவி சமூகத்தின் விளைச்சல். ஒவ்வொருகருவியும் அறிவியலின் வெளிப்பாடாகும். மனிதன் பிறறோடு உறவாடும் (gregarious) இயல்புள்ளவன். ஒலியெழுப்புவதன்மூலம், பேச்சின்மூலம் (articulate sounds) இந்த உறவினை வெளிப்படுத்துகிறான். காலத்தால் முந்தியமனிதனின் மண்டையோட்டுப்பகுதியில் உள்ள மூளையின் பேச்சுப்பகுதி வளர்ந்துள்ளதன் அடிப்படையில் இதனை அறியமுடிகிறது. இம்மூளைப்பகுதி கருவிகள் செய்வதற்கு (tools-making) பெரிதும் உதவிற்று எனலாம். மொழி, மரபினைக்கடத்தும் என்பதற்கும் மேலானது. மொழி, சமூகத்தின் மரபினையும் அனுபவத்தினையும் அடுத்ததலைமுறைக்குக் கடத்துகிறது. மொழி, மரபினை அறிவுப்பூர்வமாக்குகிறது (language makes tradition rational). ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குமுன் இன்றைய மனிதனின் மூத்தவகை (Neanderthal man) தன் குழந்தைகளையும் உறவினர்களையும் புதைத்தபோது அவர்களுடன் கருவிகளையும் உணவினையும் சேர்த்தே புதைத்தான். 25,000 ஆண்டுகளுக்குமுன் உடலில் பலவிதமான நிறங்களைப் பூசிக்கொண்டான். கழுத்தில் மணிகளையும் கிளிஞ்சல்களையும் அணிந்துகொள்ளத் தலைப்பட்டான். தொடக்கநிலை தொல்லியல் மக்கள் (primitive people) தம் தம் சமையங்களை வெள்ளையர் நாகரிகத்தில் அழித்துக்கொண்டன (destruction of religion) என்ற கருத்தினை VGC வைக்கிறார். கருத்தியல் என்பது சமூகத்தின் உற்பத்தி என்பது இவரின் கூற்று. ஆஸ்திரேலியத் தொல்குடிகளிடையே உழைப்பில் பாலினவேறுபாடு உண்டு. இவ்வேறுபாடு உணவுசேகரித்தல், வேட்டையாடுதல், கலங்கள்செய்தல், சாதனங்கள்செய்தல் போன்றவற்றிலும் உண்டு. கருவிகள் வெவ்வேறிடங்களில் வெவ்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கரும் ஆங்கிலேயரும் கத்திகளையும் குறடுகளையும் ஒரேமாதிரி பயன்படுத்துவதில்லை. அயர்லாந்திலும் வேல்ஷிலும் மண்ணள்ளும் கருவிகள் (shovel) நீளமான கைப்பிடிகளையும் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் குட்டையான கைப்பிடிகளையும் கொண்டுள்ளன. தட்பவெப்பமும் சுற்றுச்சூழலும் (climatic and other environmental conditions) மரபுகளை உருவாக்குகின்றன. வரலாற்றுக்கு முந்திய தொல்லியலின்நோக்கம் (principal aim of pre-historical archaeology) தொல்லியல்சான்றுகளின் (relic) அடிப்படையில் வெவ்வேறு சமூகத்தின்மரபுகளை (social tradition) அறிவதாகும் என்கிறார் VGC. தொல்லியல், பண்பாட்டினை ஆராயும் ஏதுவான ஒன்று என்று இப்புலத்தினைக் கணிக்கிறார். ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட தனித்தமொழியின் (distinct language) பண்பாட்டுக்கூறுகளை சமூகமரபுகளில் (social tradition) தனித்தவகைக் கருவிகளைப் பயன்படுத்தி அவிவினத்து மக்கள்வாழ்ந்துவந்தால் அதனை தனித்தபண்பாடு எனலாம். காட்டாக, வளைதடி (boomerang) இதுவரை வட இந்தியாவில் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மைக்காலம்வரைக்கும் இக்கருவி பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. வளைதடியினை ஆஸ்திரேலியப்பழங்குடிகளும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொழிவழக்கில் மாறுபாடு இருந்தால் (linguistic convention) அங்கு புதைகுழி சடங்குகளும் (burial rites) கருவிகளும் மாறுபட்டிருக்கும். பொருளியல் பண்பாடு (material culture) இயற்கைசூழலை (environment) நம்பியுள்ளது. இவை உணவு, இருப்பிடம், எரிபொருள், கருவிகள் போன்றவற்றை நிர்ணயிப்பவை. வனவாசிகள் மரத்தில்வேலைகளை சிறப்பாக செய்வர். தச்சுவேலை, மரத்தாலானவீடு, மரத்தாலானஅணிகள் போன்றவை. புல்வெளிமக்கள் பெரும்பாலும் செம்பினை கருவிகளாக பயன்படுத்துவர், கூடைமுடைவர், தோல்பதனிடுவர். அவர்கள் தோலில் செய்யப்பட்ட கூடாரங்களில் வசிப்பர். தரைகீழ் குகைகளிலும் வசிப்பர்.

21.கி.மு.50,000 இலிருந்து 25,000 ஆண்டுகள் காலத்தின் இடைவெளியில் மனிதன் உணவுசேகரிக்கும் பழக்கத்திற்கு (gathering economy) வந்தான். இதனை savagery காலம் என்று Morgan வரையறுத்தார். பண்பாடு என்ற கருத்தியலின் பின்னணையில் இக்காலத்தினை காட்டுமிராண்டிகாலம் என்று அழைக்கின்றனர். அதாவது கருணையற்றகாலம் என்பர். எல்லாகாலமுமே கருணையற்ற பண்பாடற்ற காலம்தான் என்பதனை எல்லாப்போர்களும் கொலைகளின் மூலம் நிரூபிக்கின்றன. இதனை கரடுமுரடான கற்கருவிகளைப் பயன்படுத்தும் காலம் என்று வரையறுக்கவேண்டும் அல்லது செப்பனிடப்படாத கற்காலம் என்று வகைப்படுத்தவேண்டும் இக்காலத்தினைத் தொல்லியலார் paleolithic-age என்று குறிப்பிடுகின்றனர். பூமி இயலார் (geologist) இதனை (pleistoscine) பனிபடர்ச்சிக்காலம் என்றனர். உலகில் 8000 ஆண்டுகளுக்குமுன் பயிரிடும் உணவு உற்பத்தி (new food-producing economy) தொடங்கியது. தொல்லியலார் இக்காலத்தினை (Neolithic-age) புதுயகற்காலம் என்றனர்.

22.வெண்கலப்புரட்சி

வெண்கலத்தினால் உருவான பொருளியல் புரட்சி (economic revolution) Nile, Eupratis-Tigris, Indus போன்ற ஆற்றுப்பகுதிகளில் உருவாயின. அங்கு, வேளாண்குடிகள் (farmers) விலங்குகள் வளர்ப்பதற்கும், கைவினைஞர்கள், ஆசாரிகள், அலுவலர்கள், எழுத்தர்கள், போன்ற பிறகுழுக்களுக்காகவும் உபரிஉற்பத்தி செய்யவேண்டுமென்று நிர்பந்திக்கப்பட்டனர். அப்பகுதிகளில் நகரநாகரிகம் உருவானது. அக்காலகட்டத்தின் முதல் 2000 ஆண்டுகள் வெண்கலக்காலம் எனப்பட்டது. அப்போது செம்பு, வெண்கலம் இரண்டும் கருவிகள் செய்வதற்கு பெரிதும் பயன்பட்டன. இவ்விரு உலோகங்களும் பெரும்பாலும் கடவுள், அரசர், வட்டாரத்தலைவர், கோயிலலுவலர், அரசுகைகளில் இருந்தன. பாசனவேளாண்மையின் (agricultural irrigation) உபரிஉற்பத்தி பூசாரிகள், அலுவலர்களின் கைகளில் இருந்தன. இதனால், நகரவளர்ச்சியும் தொழில்துறையும் வணிகமும் மக்கள்தொகையும் பாதிக்கப்பட்டன.

23.முந்திய இரும்புக்காலம் (The Early Iron Age)

கிறிஸ்துவிற்கு முன்பே உருக்கப்படாத கச்சா இரும்பு (Wrought iron) பயன்பட்டிற்கு வந்தது. இதே காலத்தில் அண்மைக்கிழக்கில் (Near East) அகரவரிசை எழுத்து உருவாக்கப்பட்டது. இதனை சிறுகுழுவான எழுத்தர்கள் மட்டுமே பயன்படுத்தினர். கி.மு.700இல் காசு பயன்பட்டிற்கு வந்தது. Greco-Roman பொருளியலில் புதியகண்டுபிடிப்புகளால் கிடைத்த உபரிஉற்பத்தியினை வணிகர்கள், பணம்படைத்தவர்கள், பெருநிலவுடைமையாளர்கள் (capitalist farmes) அனுபவித்தனர்.

24.ஐரோப்பாவின் நிலமானியகாலத்தில் காட்டுவேளாண்மை செய்யும் அலைகுடிகள் (semi-nomadic barbarian cultivation) உற்பத்தியினை அதிகரித்தனர். இதனால், இவர்களின் அடிமைத்தனம் ஒழிந்தது. குழுமுறை (Guild system), வணிகர்களையும் கைவினைஞர்களையும் விடுதலை செய்தது. கிழக்கில் (orient) இரும்புக்காலம் அரசமரபினை (monarchical tradition) வெண்கலக்காலத்திலிருந்து எடுத்துக்கொண்டது. Asyyria, Babylonia, Egypt அனைத்தும் வெண்கலக்காலத்து அரசின்தொடர்ச்சி. அவை, சில சில மாற்றங்களுடன் தெய்வீக அரசன் (divine-kingship) என்ற கருத்தியலை எடுத்துக்கொண்டன. மத்தியதரைக்கடலின் ஐரோப்பாவில் கிழக்குமாதிரியான (oriental pattern) சமையம்சார் அரசு (theocratic monarchy) போதுமானதாக எடுபடவில்லை. மத்தியதரைக்கடல் ஐரோப்பாவிற்குள் புகுந்தவர்கள் (barbarian invaders) தந்தைவழி அரசமைப்பினையும் போர்த்தலைவர்களையும் (war chiefs) ஏற்றுக்கொண்டனர். கீழைத்தேயத்து மாதிரியின் (oriental court) அரசினை உருவாக்கவில்லை. எனவே, பெரு நிலவுடைமையாளர்களையும் (rich land holders) வட்டாரத் தலைவர்களையும் (vassals) கட்டுக்குள் வைக்கமுடியவில்லை. இரும்புக்கருவிகள் (iron weapons) கடல்கொள்ளையருக்கும் பயன்பட்டன. அதனால், மன்னராட்சி உதிர்ந்தது. அது ஒருசடங்குநிலை அலுவலகமாக (purely ritual office) மாறிற்று. ஊடுருவியவர்களின் இரத்தவுறவு அமைப்பு (kinship organisation) உடைந்தபின் பணப்பொருளியல் தனியார் நிலவுடைமையினை ஊக்குவித்தது. குலத்தலைவர் (clan chief) பெருநிலக்கிழார் ஆனார். அரசு இயக்கம் நிலவுடைமைச்சமூகத்தால் வீழ்ந்தது.

# மேற்சொல்லப்பட்ட பத்திகளின் வாயிலாக ஒரு நெடிய வரலாற்றுப்போக்கில் மனிதசமூகம் இயற்கையினை எவ்வாறு மூலவளங்களாகப் பயன்படுத்தி வரலாற்றினை எழுதுவதற்கான சான்றுகளை விட்டுச்சென்றது என்பதனை அறியலாம். மேற்சொல்லப்பட்ட நூல்களுடன் மேலும் சில நூல்களையும் VGC இயற்றியுள்ளார். அவை ஒவ்வொன்றும் படித்தறியத்தக்கன. இவரின் பங்களிப்பினைஅறிந்தால் ஒருவர் தொல்லியல் ஆய்வினை செம்மையாக நிறைவேற்றலாம். பத்திகளில் சாய்வெழுத்தில் தரப்பட்ட பதிவுகள் கட்டுரையாளரின் கருத்தாக்கும். கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலத்தொடர்கள் கார்டன் சைல்ட் அவர்களின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆம் நூற்றாண்டில் எழுந்த தேசியவாதம் (nationalism) அரசியல் ஒருங்கிணைவு (political unification) என்ற கருத்தியல்கள் மக்கள் இனப்பெருமை பேசுவதற்கு திறவுகோலானயின. இக்காலகட்டத்தில் சமூகவியல், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகள் வளர்ந்துவந்தன. இவை தொல்லியல்சான்றுகளை வரலாறாகப் புரிந்துகொள்வதற்கு ஊக்கமளித்தன. எனவே, அக்காலகட்டத்தில் அறிஞர்கள் பல்துறைவல்லுநர்களாக இருந்தனர். மேற்சொல்லப்பட்ட துறைகள் வரலாற்றினை எழுதுவதற்கு பெரிதும் பயன்பட்டன. இக்காலகட்டத்தில்தான் கார்ல்மார்க்ஸ் (1818-1883) மொழிந்த வரலாற்றுப்பொருள்முதல்வாதம் எனும் கோட்பாடு வரலாற்றையும் அதன் சான்றுகளையும் புரிந்துகொண்டு விளக்குவதற்கான ஓர் ஒளிவிளக்காக அமைந்தது. இவையெல்லம் அறிஞர் தளத்தில் இயங்கியபோதுதான் Vere Gordon Childe (VGC) என்பவர் தொல்லியலின் பின்னணியில் நாகரிகங்களின் வரலாற்றினை புரிந்துகொள்வதற்கு விரிவான ஆய்வினை மேற்கொண்டார். விளைவு: நடுநிலையான முடிவுகளை பலநூல்கள் வழியே வெளியிட்டார். நாகரிகங்களின் வழியே மனிதரின்வரலாற்றினை எவ்வாறு புரிந்துகொள்ளமுடிகிறது எனும் முறையியலையும் கற்றுத்தந்தார். இவரின் முறையியலில் முக்கியமானது ஒப்பாய்வாகும். குறிப்பாக, மட்கலங்களின் வடிவம், நிறம், அளவு, அவற்றின்மேல் வரையப்பட்ட உயிரினங்களின் வடிவங்கள், வகைப்படங்கள் (designs) போன்றவற்றின் அடிப்படையில் அவற்றினை பயன்படுத்தியவர்களின் சமூகப்பொருளியல், பண்பாட்டு வரலாற்றினை மீட்டெடுத்தார். ஓர் ஏற்கும்படியான பதிவு என்னவெனில், வெவ்வேறு நாகரிகங்களின் மீன்பிடி சமூகங்கள் பயன்படுத்திய மீன்பிடிஊசிகள். இவை வெவ்வேறு பொருள்களில் செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை வடிவம் ஊசியின் “வளைவு” ஆகும். வளைக்கப்படாத ஊசியால் மீன்பிடிக்கமுடியாது.

02.இவரின் ஆய்வின் வாயிலாக கிடைக்கும் மற்றொரு முக்கியகருத்து. ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தினை உருவாக்கியது ஒரு இனம்மட்டுமல்ல. அதில் பல இனத்தவரும் பங்குபற்றியுள்ளனர் என்பதாகும். இதில் பெரும்பாலும் கைவினைஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதனை இவராய்வில் அறியலாம். அதிலும் குறிப்பாக, மட்கலங்கள்செய்வோர், உலோகக்கொல்லர்கள், கட்டிடத்தொழிலாளர்கள் போன்றோர். இவர்களுக்கெல்லாம் தம் உபரிஉற்பத்தி (surplus production) மூலம் வாழ்வளித்த வேளாண்குடிகள் மிகமுக்கியமானவர்கள் என்கிறார். ஏனெனில், நன்கு கட்டமைக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட (planned irrigation-system) நீர்ப்பாசனஅமைப்பே உபரி உற்பத்தியினைத்தரும். இதனால், உழைக்கும் கைவினைஞர்கள், உழைக்காத பூசாரிகள் (priests) நன்கு உண்பர். உபரியால் வணிகம் பெருகும். இதுவே, இவரது ஆய்வின் அடிப்படைக்கருத்தாக அமைகிறது. இவர் நாகரிகங்களின் வரலாற்றுப்போக்குகளை படிப்படியாக விளக்குவதன் அடிப்படையில், உலகின் பிறபகுதிகளில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எளிதில் ஒப்பீட்டளவில் புரிந்துகொள்ளலாம்.

03.இவர் (VGC) சென்ற நூற்றாண்டில் உலகின் ஆகச்சிற்ந்த தொல்லியல் அறிஞர்களின் பட்டியலில் ஒருவர். அகழாய்வுவில் கிடைத்த சான்றுகளை உயிரற்ற ஜடப்பொருளாகக் கணிக்காமல் அவை எம்மாதிரியான சமூக இயக்கதால் உருவாக்கப்பட்டன அவை எப்படி எவ்வாறு புழங்கப்பட்டன என்பதனை மேற்சொன்னபடி இயங்கியல்பார்வையுடன் ஆய்ந்தவர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பிறந்து அங்கிருந்த University of Sydney இல் பயின்று இலண்டன் (Oxford University) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட The Queens’s College இல் கல்வி பயின்றவர். பல ஐரோப்பிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவர். Archaeology, Philology என்ற இரு துறைகளில் வல்லவர். இங்கிலாந்தில் பயின்றபோது முதல் உலகப்போருக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தார். அதனாலேயே அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. இங்கிலாந்திற்குத் திரும்பி Royal Anthropological Institute இல் நூலகராகப் பணியாற்றினார். 1927-1951 காலகட்டத்தில் Edinburg பல்கலைக்கழகத்தில் (Professor of Archaeology) தொல்லியல்பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற இடங்களில் நிகழ்ந்த அகழாய்வுகளை பேற்பார்வை (over saw) செய்தார். 1934 இல் Pre-historic society என்ற அமைப்பினை உருவாக்கினார். அவர் வரட்டுத்தனமான தொல்லியலாளர் இல்லை. இலக்கிய இலயிப்பும் உள்ளவர். John Keats கவிதைகளை விரும்பியவர். William Wordsworth “Ode to Duty” என்ற கவிதையினை இரசிப்பவர். அவர், தொல்லியலில் இருவிதமான கோட்பாடுகளை (Neolithic revolution and Urban revolution) உருவாக்கி அவற்றை விளக்கினார். பல நூல்களில் அவர்எழுதிய ஆய்வின்திரட்டு என்னெவெனில்: தொழில்நுட்பமும் பொருளியல்வளர்ச்சியும் வரலாற்றுப்போக்கின் புரட்சிகளை இயக்கின என்பதாகும். உலகின் கிழக்கில் (Orient) மூன்று நாகரிகங்கள் உலகில் முதன்மையானவை என்றார்: நைல்நதியின் எகிப்திய நாகரிகம்; யூப்ரடிஸ்-டைகிரிசின் மெசபடோமியா நாகரிகம்; இந்தியத்துணைக்கண்டத்தில் சிந்துநாகரிகம். தம் ஆய்வில் இம்மூன்றினையும் ஒப்பிடுகிறார். அவருடைய மூன்று நூல்களின் மையமான கருத்துகள் இங்கு கூறப்படுகின்றன.

New History on the Most Ancient East (1934) என்ற நூல் 295 பக்கங்களில் அமைந்து 12 இயல்களில் எழுதப்பட்டுள்ளன. 39 ஒளிப்படங்கள், 111 வரை படங்கள் என விரிகிறது இந்நூல். இவற்றின் விளக்கங்களுடன் தம் ஆய்வினை வலுப்படுத்துகிறார் VGC.

04.அணுகுமுறை 1

இந்நூலில் இவர் விவரிக்கும் மூன்று முக்கியமான நாகரிகங்களும் வெப்பமான வரண்ட பகுதிகளில் உருவானவை (hottest and driest climatic zone. Extreme aridity and excessive summer heat and feature) என்கிறார். எகிப்த், சுமேர், பஞ்சாப் மூன்றும் நிலப்பரப்பியல்பூர்வமாக (geographically) ஒத்த கூறுகளைக்கொண்டவை (certain unitary character) என்கிறார். VGC மனித இனத்தின் வரலாற்றுப்படிநிலைகளை Lewis Henry Morgan (1818-1881) வகுத்தளித்த savagery, barbarianism, civilized என்ற கருத்தியலின் அடிப்படையில் பிரிக்கிறார். இப்பார்வை அந்தந்த காலகட்டத்தில் அம்மக்களின் இயல்புநிலையினை அளவிடாமல் நவீனகாலத்தின் பின்னணியில் பார்க்கப்பட்டதாகும். இதனை அறிவியல்பூர்வமான தொழில்நுட்பப் பார்வையுடன் அணுகியிருக்கவேண்டும். பண்டையகாலத்தின் கூட்டுறவுத்தன்மை நாகரிகத்தினை வளர்த்தது. தற்போது நவீனம் என்ற பெயரில் அந்நாகரிகத்தின் நுணுக்கமான, நுட்பமான அறிவியல் கூறுகள் அழிக்கபடுகின்றன என்பதனை இந்நூலினைக் கற்கும்போது உணரமுடிகிறது. VGC தொல்லியலையும் வரலாற்றையும் மானிடவியல் பின்னணியில் அலசுகிறார். வேட்டைச்சமூகத்தில் குழந்தைகள் இடைஞ்சலாக கருதப்பட்டதால் அவர்கள் பயிர்களைக் களையெடுக்கவும், விலங்குகளைக் கவனிக்கவும் அமர்த்தப்பட்டனர் என்கிறார். இவ்விடத்தில், இந்தியச்சமூகத்தின் சமையவரலாற்றில் வளரிளம்பருவத்துக் கடவுளர்களாக அறியப்படும் கண்ணன் வடக்கிலும், தெற்கில் முருகனும் ஆயர்குலத்தின் சிறுவர்களாக படைக்கப்பட்டதனை நினைவுகூரவேண்டும். மேய்ச்சல் சமூகத்தினர் நாடோடிச்சமூகமாக மாறினர். சில விவசாயிகள் அவ்வப்போது பயிர் செய்தனர் (sedentary). அப்பிரிக்காவில் (hoe-culture) கலப்பைவேளாண்மை, தோட்டவேளாண்மை பொதுவானவை. சில சில சிறிய இடங்களில் பெண்கள் உழுதனர். அங்கு உரமிடலும் பிறவேலைகளும் இல்லை. ஒவ்வொருமுறையும் ஒரு புதியநிலப்பரப்பினை எரிபுனச்சாகுபடியின் அடிப்படையில் பயன்படுத்தினர் (shifting cultivation). அப்படி, ஒவ்வொருமுறையும் புதியநிலப்பரப்பினைத் தெரிவுசெய்யும்போது அது நாடோடிவாழ்விற்கு (nomadism) இட்டுச்சென்றது (Hoe-culture thus may entail to nomadism). VGC சோலைகளின் அருகே விளைநிலங்கள் அமையும்போதும் வெள்ளத்தால் மண்படிவு உருவாகும்போதும் நாடோடிவாழ்வு நிலைத்தவாழ்வாகிறது என்கிறார். நீர்த்தேவைகளை வழிநடத்துவதற்கு பாசனவாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. நீர்ப்பாசனத்தையும் வடிகாலையும் இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் மொத்தசமூகத்தின் ஒத்துழைப்பு (whole community) தேவையாக எழுந்தது என்றும் அங்கு சமூக ஒற்றுமையினை (social solidarity) உருவாக்குவதற்கு பொருளியல் பிணைப்பு (economic bond) உருவாக்கப்பட்டது என்றும் மேற்சொல்லப்பட்ட நீர்ப்பாசன நாகரிகங்களின் கூறுகளை பிசிரற்று விளக்குகிறார். இதனை, தமிழ்நாட்டின் சோழர்காலத்தில் காவிரிவடிநிலப்பகுதியில் தொழிற்பட்ட வெட்டி, வேதினை, ஆள், முட்டாஆள், எச்சோறு போன்ற உடலுழைப்பு வரிகளோடு (labouring tax) ஒப்பிடலாம். அதேகாலகட்டத்தில் தலைவாய்ச்சான்றார் என்றொருகுழு நீர்ப்பாசனக்கட்டமைப்பினை பராமரித்து பாதுகாத்ததனையும் கணக்கில் கொள்ளவேண்டும். இதுபோன்ற அமைப்பு, ஒட்டுமொத்த ஆற்றுமுறையினையும் (river-system) ஒருங்கிணைப்பதற்கு அரசியல் ஒருங்கிணைவு (political unification) வழிகோலியது. அவரின் கூற்றுப்படி பெரும்பாலான பெரிய நாகரிகங்கள் நீர்ப்பாசனவேளாண்மையினால் விளைந்தவை. இங்கு, கலப்புப்பயிரிடலை (mixed farming) நாடோடிவாழ்வும் வேளாண்வாழ்வும் இணைத்து உருவாக்கின. இப்படி நாகரிகங்களை, மேய்ச்சல்பொருளியலும் நீர்ப்பாசனவேளாண்பொருளியலும் இணைந்து உருவாக்கின. இதனை நிலைக்கவைத்தது வணிகப்பொருளியலாகும்.

05.எகிப்திய நாகரிகம்

இந்நூலில் எகிப்திய நாகரிகம்பற்றி பரக்கப் பேசுகிறார். இந்நாகரிகம் பற்றிய புரிதலுக்கு பெரும்பாலும் கல்லறைகள், புதைகுழிகளில் (Cemeteries and burial sites) கிடைக்கப்பெற்ற பொருள்களில் இருந்து சான்றுகளைத் தொகுத்துள்ளார். எகிப்தியப் பேரரசர்களின் கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பல்வகைசான்றுகளை மானிடவியல் பின்னணியில் பகுப்பாய்வு செய்தார். அரசர்கள் வளர்ப்புவிலங்குகளுக்காகவும் நிலத்தினை ஆக்கிரமிக்கவும், கொள்ளையிடவும் (booty) போரினை ஊக்குவித்தனர் என்றார். இவற்றினைத் தொல்லியல் தளவாடங்கள் வாயிலாக அறியலாம் என்கிறார். இவ்விடத்தில் கன்றுகாலிகளுடன் சோழர்படைகள் கங்கைவாடியின்மேல் படையெடுத்துத் திரும்பியதனை ஒருகணம் நினைக்கலாம். எகிப்த்தில் அரசுகள் எழும்முன்பு மக்கள் இனக்குழுக்களாக வெவ்வேறிடங்களில் இருந்தனர் என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குலக்குறி உண்டு (totem symbols) என்றும் அறிகிறார். அக்குலச்சின்னங்கள் கரடி, சிங்கம், புள்ளிச்சிறுத்தை, கொம்புள்ள ஆடுகள், சர்ப்பபந்தம் போன்றன. அவ்வுருக்கள் பெரும்பாலும் தந்தத்தில் செய்யப்பட்ட கைப்பிடிகளில் காணப்படுபவை. அவை பெரும்பாலும் கொலைக்கருவிகள். அங்கு வெவ்வேறு குலச்சின்னங்கள் கொண்ட கிராமங்கள் தங்களுக்குள் சண்டையிட்டன என்றும் ஒரே குலக்குறிகொண்ட பல கிராமங்கள் இருந்தன என்றும் கூறினார். Falcon Horus, Cow-Hathor கோலப்பாம்பு போன்ற குலகுறியீடுகள் மிக முக்கியமானவை. இவையணைத்தும் ஒன்றிணைந்து எகிப்திய அரசினை உருவாக்கின. விலங்குகள், தாவரங்கள் அடிப்படையில் பலகடவுளர்கள் இருந்தாலும் அனைத்தையும் இராஜாளி எனும் குறியீடு தன்கீழ் அமர்த்தியது.

06.எகிப்திய பாரோக்களின் கல்லறைகள் பற்றிய விவரனை.

இதுபோன்ற கல்லறைகளில் கிடைத்த எலும்புக்கூடுகள் இருக்கும் அமைப்புநிலையின் (posture) அடிப்படையில் அரசர்களின் பணியாட்களை அடையாளம் காண்கிறார். அப்படிப்பட்ட ஒரு கல்லறையில் அரசருடன் சேர்த்து புதைக்கப்பட்டவர்கள்: அலுவலர்கள், கைவினைஞர்கள், வைப்பாட்டிகள், வேலையாட்கள், அரசு அதிகாரிகள் (royal officials). மற்றொரு கல்லறையில் அரசருடன் சேர்த்து 33 பேர் புதைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவரின் கல்லறையில் 275 அந்தப்புரத்துப்பெண்கள், 43 அரண்மனைப் பணியாளர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இதனோடு சேர்ந்த இன்னொருகல்லறையில் சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில் 269பேர் புதைக்கப்பட்டுள்ளனர். சில அரசர்கள், அரசிகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கல்லறைகள் எழுப்பப்பட்டுள்ளன. அவை மரத்தாலானமாளிகை போன்றன. அரசர்களின் பல பெரியகல்லறைகளில் கிடைத்த பொருள்கள்: மதுசாடிகள், தானியத்தாழிகள், மரத்தாலான பூச்சாடிகள், மரத்தாலான நகைப்பெட்டிகள், கருவிகள் வைக்கப்படும் நகைப்பெட்டிகள், அறைகலன்கள் மற்றும் புதையல்பொருள்கள் போன்றவை. இம்மாதிரியான கல்லறைகள் மிகவும் சூசகமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்டன. இவை பெரும்பாலும் அரசர்களுக்கான பள்ளிப்படைகளாக இருந்தன. இவற்றின் நுணுக்கமான கூறுகள்தான் பிரமிடுகள் எழுப்பப்டுவதற்கான மாதிரியாக அமைந்தன. இதுபோன்ற சில பள்ளிப்படைக் கல்லறைகளை எளிதான வரைபடங்கள் மூலம் விளக்கியுள்ளார். எகிப்திய நாகரிகத்தினை விளக்கும்போது அதன்காலத்தினை அரசகுடும்பத்து ஆட்சிக்கு முன், (pre-dynastic and dynastic) பின் என்று வரையறுக்கிறார். இதில் முதல்காலகட்டத்தில் (pre-dynastic) எகிப்தின் வணிகம் வளமையுற்றதால் அடுத்தகாலகட்டம் எளிதில் மலர்ந்தது என்கிறார். அக்காலத்தில் இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்கள்: வெள்ளி, சூதுபவளம், மரங்கள், மதிப்புறுகற்கள் போன்றன. அப்போது அரசர்கள் தம்மை வளப்படுத்துவதற்கு செம்பு சுரங்கங்களை (copper mines) கைப்பற்றுவதற்கு படையெடுத்தனர். இதனால் செம்புகொல்லர்கள் உருவாயினர். இவ்வுலோகத்தினால் கோடரிகள், இருபுறமும் வெட்டும்கத்திகள், மீன்பிடிஊசிகள், ஈட்டிமுனைகள், வீரர்களுக்கான கருவிகள், கடவுளுக்குப்படைக்கும் கருவிகள் போன்றவை செய்யப்பட்டன. எனவே, பாரோக்களின் காலம் செம்புகாலம் என்று அறியப்படுகிறது. ஆனாலும், மத்தியில் வலுவற்றஅதிகாரம் உள்ளபோது கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டன. காலந்தோறும் அரசுகள் மத்தியில்வலுவோடும் எல்லைகளில்வலுவற்றதாகவும் இருந்தன என்பது வெள்ளிடைமலை. இதனை (core versus peripheral) நடுவணுக்கும் எல்லைக்குமான மோதல் என்ற கருத்துடன் ஒத்துநோக்கவேண்டும். ஒருபுறம் பாரோக்களின்காலம் செம்புக்காலம் என்றாலும் மறுபுறம் வேளாண்குடிகள் மரத்திலானஏர், கதிர்அறுவாள், அறுகற்கள் (flint stones) போன்றவற்றையும் பயன்படுத்தினர். அக்காலத்தில் உலோகத்திலும், மண்ணிலும் கலங்கள் செய்யப்பட்டன. பிடியுடன்கூடிய மண்சாடிகள் செய்யப்பட்டன. சிரியா, பாலஸ்தீனப்பகுதிகளில் இருந்து எகிப்திற்கு செம்பு ஏற்றுமதிசெய்யப்பட்டன. சிரியாவின் குயவர்கள் எகிப்தில் மட்கலங்கள் செய்தனர். இவை, பெரும்பாலும் ஆலிவ்எண்ணை வைத்துக்கொள்ளப் பயன்பட்டன. இயற்கையின் குறைவினால் (natural deficiency) எகிப்தில் இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்கள்:ஆலிவ் எண்ணை, பானைகள், அரிதிற்கிடைக்கும் மது (exotic wine) சூதுபவளம் இன்னபிற.

07.அணுகுமுறை 2

தம் ஆய்வில் VGC ஒரு நாகரிகத்தினை அறியும்போது அதன்வழியே மற்றொரு நாகரிகத்தினை அடையாளம் காணும்முறையினைத் தருகிறார். காட்டாக, எகிப்தில் கிடைத்த பொருள்களில் மெசபடோமியாவின் பல அடையாளங்களைக் காண்கிறார். அவை: மூக்குடன்கூடிய பூச்சாடிகள், உருளைமுத்திரைகள், அயல்நாட்டுப்படகுகள், புதுவகைநாய், கலைமுத்திரை (artistic motif) இருதலையுடைய விலங்குகள் (double-headed beast). இவையனைத்தும் சுமேரியாவிலிருந்து எகிப்திற்கு வந்தவை.

08.இவருடைய ஆய்வின்வழியே பெறப்படும் இன்னுமொரு கருத்து. அது வருமாறு. இயற்கையமைப்பு, நிலவளம், தனிமங்கள்தான் நாகரிகத்தினை உருவாக்கும். இதன் அடிப்படை, தொழில்நுட்பமும் பொருளியலுமாகும். இவற்றினை இயக்கவைப்பது மனிதனின் மனம். அதாவது அனுபவமும் நம்பிக்கையும். இங்கு ஒன்று சொல்லப்படவேண்டும். நாகரிகம் தொழிநுட்பம் சார்ந்தது;பண்பாடு நம்பிக்கையும் பழக்கவழக்கமும் சார்ந்தது. இரண்டும் ஒன்றினை ஒன்று தாக்கத்தினை ஏற்படுத்தும். காட்டாக, உலகம்முழுக்க மீன்பிடி ஊசிகள் வெவ்வேறு அளவுகளில்/வடிவங்களில் அமைக்கப்பட்டன. இது தொழில்நுட்பம் சார்ந்தது. பிடிக்கப்பட்ட மீனினைச்சமைத்து கடவுளுக்கு படைக்கவேண்டும் என்பது பண்பாடு சார்ந்தது. தற்போது மீன்பிடித்தொழிலில் பலநுட்பங்கள் வந்துள்ளன. ஆனால், படைக்கும் பண்பாடு மாறவில்லை. சமைக்கும் தொழில்நுட்பம் மாறிவந்துள்ளது. ஆனால், வளைக்கப்படாத ஊசியால் மீன்பிடிக்கமுடியாது என்பது இயல்புநிலை. அதேபோன்று பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப சாடிகளின் கைப்பிடிகளும் மூக்குகளும் வடிவமைக்கப்பட்டன. இங்கு தேவைதான் நாகரிகத்தினை தோற்றுவிக்கிறது என்பதனை உணரமுடிகிறது. எகிப்தின் நைல்பகுதியில் அரசகுலத்து (pre-dynastic) ஆட்சி எழுவதற்குமுன்புவரை அங்கு எழுத்தாவணங்கள் இல்லை. நைலின் மேல்பகுதியில் (upper Nile) இன்றைக்கும் வசிக்கின்ற மக்களின்தோற்றம், மண்டையோட்டு அமைப்பு, கட்டுடல்போன்றவை, மொழி, உடை போன்றவையும் அவர்களின் பழங்காலத்தினை (oldest Egyptian) ஒத்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் தலைவர்கள் மழைதருவிக்கும் (rain-maker) மந்திரவாதி அல்லது (divine-kings) தெய்வீகஅரசர்கள் என்று நம்பப்பட்டனர். இம்மன்னர்கள் அண்மைநூற்றாண்டுகள்வரை சடங்குகள்மூலம் (ritual slain) இறந்தனர். இம்மக்கள் குலக்குழுக்களாக வாழ்ந்தனர். இக்குலக்குழுக்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட ஆப்பிரிக்காவின் மத்தியப்பகுதியில் வசிக்கும் பழங்குடித்தலைவர்கள் மழைதருவிப்பவர்கள் என்று நம்பப்பட்டனர். எகிப்தில் செட் எனும் காலமுறைச்சடங்கின் வாயிலாக அரசன் Osiris எனும் கடவுளுடன் அடையாளப்படுத்தப்படுகிறான். இச்சடங்கின் வழியே அரசனுக்கு புதிய ஆற்றல் கிடைப்பதாகவும் இறப்பினின்றும் புத்துயிர் பெற்றதாகவும் அறியப்படுகிறான்.

காலத்தால் முந்திய எகிப்தில் எழுதப்பட்ட ஆவணம் கி.மு.1300 ஆம் ஆண்டினைச் சார்ந்தது. இது Turin papyrus தாள்களில் எழுதப்பட்டது. இதனடிப்படையில் கி.மு.3000 ஆண்டுகாலம் தொடக்கம் தொல்லியல்சான்றுக்கான காரணத்தினைக் கணக்கிடலாம். Palemero stone inscription, மேற்சொல்லப்பட்ட ஆவணத்திற்கு பல நூற்றாண்டுகள் முந்தியது. எகிப்திய நாகரிகத்தின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு காலமுறையாகும். இவர்களின் காலமுறை துல்லியமானது என்று அறியப்படுகிறது. எகிப்தியர்கள் ஆற்றுவெள்ளத்தின் கால இடைவெளியின் அடிப்படையில் நாள்களை, ஆண்டுகளைக் கணித்தனர். 365 நாள்களுக்கு ஒருமுறை வெள்ளப்பெருக்கு நிகழ்வதாக அறிந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்வெள்ளம் (annual inundation) அவர்களின் வேளாண்மையினை நிர்ணயித்தது. 50 ஆண்டுக்கான வெள்ளத்தினை இவ்வாறு கணித்தனர். பருவகாலங்களுக்கு வெள்ளம் (inundation) விதைப்பு (sowing) அறுவடை (harvest) என்று பெயரிட்டனர். இதனை ஆடிப்பெருக்கு,ஆடிப்பட்டம் தேடிவிதை, கார்காலம்,ஐப்பசிஅடைமழை, முன்பனிக்காலம், பின்பனிக்காலம், தைநீராடல், மாசிமகம்,அக்னிநட்சத்திரம்,கோடைமழை,வேனிற்காலம் போன்ற தமிழ்த்தொடர்களோடு ஒப்பிடலாம். Menas என்ற அரசர்தான் எகிப்தின் மேல், கீழ் நதிபாயும் நிலப்பரப்புகளை ஒன்றிணைத்து ஓர் அரசின்கீழ் கொண்டுவந்தார். இவருடைய இறப்பிற்குப்பின் அவருடைய கடவுள் (patron deity) பெயரால் (falcon Horus) அழைக்கப்பட்டார். எகிப்தின் மேற்கு வடிநிலப்பகுதி (western delta) Horus பண்பாட்டிற்கு தலையிடமானது. பழங்குடித்தலைவர்கள் போன்று பாரோக்களும் தந்திரத்தின்மூலம் (magic power) இறையாண்மை பெற்றனர். தந்திரச்சடங்கின்மூலம் ஊழ்வினையிலிருந்து (fate) தப்பலாம் என்று நம்பினர். இச்சடங்கு இறப்புச்சடங்குகளுக்கு ஒப்பாகும். இம்மன்னர்கள் சாகும்வயதினை எட்டும் முன் சடங்குமூலம் (ceremonially) கொல்லப்படுவர்.

09.அணுகுமுறை 3

VGC எகிப்தின் கி.மு.3000 காலத்தின் வரலாற்றினை legends, philosophy, comparative religion and ethnography போன்றவற்றால் இனக்குழுக்கள் அரசகுடும்பமாக இயக்கம் பெற்றதனை (dynastic movement) அறியலாம் என்ற ஒரு அணுகுமுறையினை முன்வைக்கிறார். அதே காலகட்டத்தில்தான் ஆன்மீகப்புரட்சியும் (spiritual revolution) நிகழ்ந்தது என்கிறார். இதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் வம்பவேந்தர்கள் வேள்விச்சடங்குகள் மூலம் அறிந்தேற்பு பெற்றதனையும் தொடர்ந்து பக்தியியக்கம் மூலம் பல்லவர்-பாண்டியர் எழுச்சி பெற்றதனையும் ஒப்புநோக்கலாம்.

10.சிந்து நாகரிகம்:கிழக்கின் மூன்றாவது உயர்ந்த நாகரிகம்

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, இயற்கைதான் நாகரிகத்தின் எழுச்சிக்கு காரணம் என்பதனை தம் ஆய்வில் கூறுகிறார். கி.மு.3000இல் சிந்து நாகரிகம் (higher civilization) மேலான நாகரிகம் என்கிறார். இங்கு குறைவான மழையினால் (deficiency of rainfall) நிலைத்த வேளாண்மை (settled agriculture) இயற்கையான அல்லது செயற்கையான நீர்ப்பாசனத்தினை (natural or artificial-irrigation) சார்ந்திருந்தது என்றும் இந்நீர்ப்பாசனப்பரப்பு மெசபடோமியாவிலிருந்த விளைநிலப்பரப்பினைவிட பெரிது என்றும் கூறுகிறார். அங்கு, மக்களின் கூட்டுறவு (cooperative effort) வெள்ளநீரினைக் கட்டுப்படுத்தியது. மொகஞ்சோதரா வளம்பொருந்தியதுதான் என்றாலும் அந்நாகரிகத்தின் மையம் எது என்றும் எதிலிருந்து செல்வத்தினை சேகரித்தது என்றும் அறியமுடியவில்லை என்றும் வியக்கிறார். எவ்விதமான தொழிற்படுதல் (mechanism) ஓர் எளியஊரினை நகரமாக மாற்றியது என்று அறியமுடியவில்லை என்கிறார். அங்கு Eurasian மதிரியான எலும்புகூடுகளும் மங்கோலிய மாதிரியான எலும்புகூடுகளும் கிடைத்தன என்கிறார். ஆனால், அங்கு கிடைத்த செம்பு உருவத்தின் தடித்த உதடுகளும், படர்ச்சியான மூக்கும் (coarse nose) தென்னிந்தியாவின் stock ஆக இருக்கலாம் என்கிறார். சிந்துவெளி மக்கள் வெள்ளி, ஈயம், செம்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினர். அவற்றில் பலவகையான பாத்திரங்களைச் செய்தனர். அவர்கள் அறிந்திருந்த விலங்குகள்: குறுங்கொம்பு காளைகள் (short-horned bull) யானைகள், புலிகள், காண்டாமிருகம், முதலைகள், மான்கள். இங்கு VGC குறிப்பிடும் கருத்து மிகமுக்கியமானது. அதாவது, ஒரு நாகரிகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்தாலும் குயவர்கள், கொல்லர்கள்போன்ற கைவினைஞர்கள் தப்பிப்பிழைத்து அடுத்தடுத்து அங்குவரக்கூடிய புதியவர்களுக்கு வேலைசெய்துகொடுப்பர் என்பதாகும். இங்கு பைபிளில் குறிக்கப்பட்ட நோவா ஒரு மரத்தச்சராகத்தன் இருக்கவேண்டும். எனவே, கடவுள் நோவாவிடம் ஊழி அழிவிலிருந்து மீள்வதற்கு மரத்தாலான ஒருபடகினைச் செய்வதற்கு ஆணையிட்டார் என்ற கருத்தினை இங்கு ஒப்புநோக்கலாம்.

11.சுமேரியம்

ஆற்று வெள்ளத்தினால் வந்த மண்படிவு (flood-deposits) அடிப்படையில் அரசர்களின் வரிசையினை சுமேரிய நாகரிகத்தில் அறியும் முயற்சியினை VGC மேற்கொண்டார். இதனால், அவர் கண்டகருத்து இப்படி அமைகிறது. மேற்சொன்னபடி மண்படிவு காலத்தில் மன்னர்கள் பைபிள்பேசும் வெள்ளக்காலத்திற்கு (anti-diluvian) முந்தியோர் என்கிறார். யூப்ரடிஸ்-டைகிரீஸ் சமவெளியில் இரு வெவ்வேறு இனத்தின் மக்கள் வரலாற்றுக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். அப்போது சுமேரியர்கள் Eridu, Ur, Larsa, Lagash, Umma, Adap, Erech போன்ற நகரங்களில் வாழ்ந்தனர். ‘சுமேர்’ என்பது செமிடிக் நாட்டவர் பயன்படுத்தும் சொல். இவர்கள் உடையிலும் மொழியிலும் தனித்துவமானவர்கள். சுமேரியர்கள் தொடக்ககாலத்தில் வடக்கே மெலடோனியா, அஸ்ஸீரியா பகுதிகளுக்குச்சென்றனர் என்று தொல்லியல் சான்றுகள் புலப்படுத்துகின்றன. அங்கு, செமிட்டிச் மொழிபேசும் மக்களுடன் கலந்தனர். அம்மொழி ஹீப்ரு, அஸ்ஸீரியன், அரபிக் மொழிகளோடு ஒத்திருந்தது. எனவே, சுமேரியர்களே பாபிலோனிய நாகரிகத்தினை நிறுவியவர் என்ற முடிவிற்கு VGC வருகிறார்.

12.மெசபடோமியாவில் காலனியம்

எகிப்த் தொடக்கத்திலிருந்தே பாலைவனத்தால் சூழப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தது. மாறாக, மெசபடோமியா அடிக்கடி பல இனத்தவரால் தாக்கப்பட்டது. அவர்கள், Elam, Awar, Gutium, Assyrian, Hittites etc.,போன்றோர். பாபிலோன் போதுமான அளவிற்கு தன்னிறைவு பெறாத ஒருநாகரிகமாக (less self-sufficiency than Egypt) இருந்தது என்பது VGC இன் கூற்று. பாபிலோனியர் களிமண்ணால் கட்டப்பட்ட எளியவீடுகளில் வாழ்ந்தனர். அதில் மரத்தாலான கதவுகள் இருந்தன. வெள்ளாடு, செம்மறியாடு, நாய், பன்றி, காளை போன்ற விலங்குகளை வளர்த்தனர். மரத்தாலான கதிரறுவாளால் அறுவடை செய்தனர். மெசபடோமியாவின் Ubaid period எனும் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதாரம் முதன்மையானது. ஆறுகளின் வடிநிலப்பகுதி இயற்கையான பொருளாதாரத்தினை (natural economy) உருவாக்கியது. சமூகக்கட்டமைப்பினை எழுப்பியது. ஒரு கருத்தியலை உருவாக்கியது. தொடக்கத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட கடவுளுக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிட்டது. அவர்கள் குத்தகைதாரர் (tenants) விளைச்சலில்பங்குதாரர் (share-croppers) உழுவோர் (tillers) எனப்பிரிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோயில்பூசாரிகளின் கண்காணிப்பில் வேலைசெய்யவேண்டும். இதனடிப்படையில் நிலத்திற்குத்தேவையான நீரும், பாசனவாய்க்கால்களின் பராமரிப்பும் உறுதிசெய்யப்பட்டன. கோயில்கள் கிராமங்களை ஆளுமை செய்தன. இவை கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் வராலாற்றில் சோழர்காலத்தில் இயங்கிய கண்காணி, காராண்மை, மீயாட்சி, உழுகுடிகள், மூலப்பருடையார் போன்ற சொற்களின் பின்னணியில் செயற்பட்ட கருத்துகளை நினைவூட்டுகின்றன. உபரிஉற்பத்தியினை சேமிக்கும் கிடங்குகள் (repository) இருந்தன. இதற்கென்று குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களின் பொருளாதாரத்தினை (community’s economy) கோயில்கள்தான் நிர்ணையித்தன. சடங்குகள் செய்யப்படுவதற்காக கோயில்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்கிறார் VGC. மேலும், அலுவலர்கள் கடவுளுக்கான குழுக்களாக (professional ministries of the deity) நியமிக்கப்பட்டனர் என்கிறார். இவர்கள் முழுநேரப்பூசாரிகளாக இருந்தனர். அதேநேரத்தில் பொதுகடவுளர்களும் வழிபாட்டில் இடம்பெற்றிருந்தனர். சிலர் தனிப்பட்ட விருப்பில் மந்திரச்சடங்குகளையும் (magic rites) செய்தனர். அங்கு வயதுவந்தோரின் இறந்த உடல்கள் குடியிருப்புகளுக்கு வெளியில் புதைக்கப்பட்டன; இறந்த குழந்தைகளின் உடல்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்டன.

13.மெசபடோமியாவில் நகர்புரட்சி

VGC மட்கலங்களின் நிறம், வடிவம், அளவுகளின் அடிப்படையில் நகரிய வளர்ச்சியின் கூறுகளை வரிசைப்படுத்துகிறார். அக்கூறுகள்: வண்ணம்பூசப்படாத மட்கலங்கள், சாம்பல்நிறத்திலான பானைகள், எளிய கருப்புநிறத்து மட்கலங்கள், சொரசொரப்பான மட்கலங்கள் போன்றன. இந்நகரிய வளர்ச்சியில் கோயில்பண்பாட்டின் அடிப்படையில் உபரியான தானியங்கள், பால், மீன் போன்றவை வேளாண்குடும்பங்களால் (individual peasant families) கோயில்களில் சேமிக்கப்பட்டு கைவினைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. முதன்மையான உற்பத்தியின் உபரி, துறைபோகிய (specialist) கைவினைஞர்கள், கொல்லர்கள், சிற்பிகள், தச்சர்கள், தோல்வேலைசெய்வோர், குயவர்கள், செம்புகொல்லர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டன. செம்புகொல்லர்கள் ஈயத்துடன் செம்பினைச்சேர்த்து கலப்பு உலோகத்தினை உருவாக்கினர். வெள்ளியும் ஈயமும் அவர்களுக்கு Anatolia விலிருந்து வந்தன. சுமேர்கள் வணிகத்தின்மூலம் தொடர்ந்து,செம்பு, சூதுபவளம், coniferous wood போன்றவற்றைப் பெற்றனர். இவை பெரும்பாலும் பதக்‌ஷானிலிருந்து பெறப்பட்டன. இவர்கள் உலோகப்பயன்பாடு இருந்தும் மரம், கல், சுட்டசெங்கற்கள் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

14.மெசபடோமியாவின் அரசரின் புதைகுழியில் (burial) அவருடைய வண்டியினை இழுத்த விலங்குமட்டுமல்ல, வண்டியோட்டிகள், காவல்வீரர்கள், இசைவாணர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், அரசவை உதவியாளர்கள் அனைவரும் சேர்த்து புதைக்கப்பட்டனர். ஊர் என்ற இடத்தில் ஓர் அரசனின் கல்லறையில் 59 சடலங்கள் இருந்தன. அதில் 6 வீரர்கள், 9 பெண்கள். அவர்கள் மதிப்புள்ள நகைகளை அணிந்திருந்தனர்.

15.தொல்லியல் சான்றுகளுக்கான சமூகவியல் விளக்கம்

முன்பே சொன்னபடி VGC தொல்லியல்சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றினை எழுதுவதற்கு பிறதுறை அறிவின் தேவையினை உணர்ந்திருந்தார். அதற்காக சமூகவியல், மானிடவியல் நூல்களைக் கற்றார். Mortemer Wheeler போன்ற அறிஞர்கள் வகுத்தளித்த அரசின் கூறுகளை அறிந்திருந்தார். அறிஞர்கள் வகுத்த சில சமூக நிறுவனங்கள்: அரசு நிர்வாகம், நீதி, குடும்பம், சொத்து, அந்தஸ்தில் படிநிலை, போர், சமைய நிறுவனம். இதனடிப்படையில் சமூகத்தின் பண்பாட்டு படிமலர்ச்சியினை VGC அணுகினார். புதைகுழிகளிலும் மாளிகைகளிலும் கிடைத்த செல்வப்பொருள்கள் சமூகத்தில் தலைவர்களுக்கானது என்று பொதுவாகக்கருதலாம். புதைகுழிகளில் அப்பொருள்கள் இல்லையென்றால் அவர்கள் இல்லை என்று பொருளல்ல என்றும் கூறினார். தொல்லியல் என்ற கருத்துப்பின்னணியில் ஒரு குழுவின் பண்பாட்டினை (community culture) அரசியல் ஒற்றுமை (political unity) என்று கருதக்கூடாது என்றும் விளக்கமளித்தார். ஆனால், கி.மு.3000 இல் கீழை மெசபடோமியாவில் (lower- mesopotomia) தொல்லியல் அடிப்படையில் பண்பாட்டுஒற்றுமை நிலவியது (uniformity in archaeological culture) என்கிறார். அவை: பொதுவழிபாடு (public worship) பொதுமொழி (common language) பொதுகடவுள் (public deities). ஆனாலும், அவர்கள் பத்துக்கும் மேலான அரசுகளாகப் பிரிந்திருந்தனர்; தங்களுக்குள் போரிட்டனர். அதே காலகட்டத்தில் Egypt இல் ஒரேஅரசாக சமமான பண்பாடு (equal cultural unity) நிலவியது. இதுபோன்ற சூழலில் எழுத்துச்சான்றுகள் இல்லை. என்றாலும், அரசகல்லறைகள் (royal tomb) வாயிலாக அரசியல் ஒருங்கிணைவை (political unification) அறியலாம். அதேநேரத்தில் தொல்லியலின் பண்பாட்டினை இனக்குழுவின்பண்பாட்டோடு இணைத்துப்பார்க்கமுடியாது என்கிறார். ஓர் உள்ளூர்குழு என்பது ஒரேஇடத்தில் சிலதலைக்கட்டுகள் (household) வசிப்பதாகும். ஐரோப்பாவில் எரிபுனச்சாகுபடி (shifting cultivation) பின்பற்றப்பட்டதாலும் தொல்லியலின்காலங்கள் நீண்டவை என்பதாலும் (length of archaeological period) அருகருகேயான குடியிருப்புகள் ஒத்தகாலத்தவை என்று கணிக்கமுடியாது என்பது இவரின் கூற்று. இனக்குழுத்தலைவர்களின் கல்லறையும் பொதுமக்களின் கல்லறையும் வேறுபட்டிருந்தன. தலைவர்களின் கல்லறை விரிந்துபரந்தது. பல அறைகளைக்கொண்டது. உள்அறைகளையும் (ante-chamber) கொண்டது. பெண்ணுருபொம்மைகளையும் (effigy) கொண்டது. பொதுவாக 6 முதல் 7 வரை எண்ணிக்கையிலான எலும்புகூடுகளைக் கொண்டது. ஆனால், பொதுவாக சிறியகல்லறையில்கூட 40 முதல் 50 வரையிலான எலும்புகூடுகள் கிடைத்துள்ளன. பிரிட்டனின் பெருங்கற்காலத்தில் பொதுவான புதைகுழிகள் (collective burial place) இருந்தன. அவற்றில் பல உடல்கள் கிடைத்தன. ஒரு புதைகுழியினை பலதலைமுறைகள பயன்படுத்தியுள்ளன. பிரிடிஷ் தீவுகளில் ஒரு புதைகுழியில் அதிக அளவாக 50 உடல்களும் சிலவற்றில் 5 உடல்களும் இருந்தன. இதே காலகட்டத்தில் டென்மார்க்கில் பெருங்கற்காலத்துக் கல்லறையில் (megalithic tomb) 100 க்கும் மேலான எலும்புகூடுகள் இருந்தன. இதுபோன்ற புதைகுழிகள் ஸ்காட்லாந்தின் மலைபகுதிகளின் (Scottish highlands) சிறுவிவசாயிகளுக்கு (crofting community) உரியவை. புதைகுழிகளின் அடிப்படையில் இனகுழுத்தலைவர்களின் அதிகாரத்தினை அளவிடமுடியாது என்றும் VGC கூறுகிறார். ஆனால், அத்தலைவர்களின் மதிப்பு (presdige), வயதுமூப்பு, பிறப்பு, மந்திரத்திறன், போர்நுட்பம், அரசியல் அதிகாரம் இன்னபிறவற்றால் கணக்கிடப்படுகிறது என்றும் கூறுகிறார்.

16.ஒருகுடும்பம் ஒருபொருளியல் அலகினை (economic unit) மூன்று-நான்கு தலைமுறைகளாக தக்கவைத்திருந்தால் அது ஆண்வழிப்பட்ட அல்லது பெண்வழிப்பட்ட ஒரு தலைக்கட்டாக (household) மதிப்பினை அனுபவிக்கும். ஆனால், இத்தலைவர்களை அரசியல்ரீதியாக நிபுணர்கள் (specialist) என்று கூறமுடியாது. Moari என்ற இனத்தில் தலைவரின் தொண்டர்கள் வழிவழியாக (traditionally) போரில் சிறைபிடிக்கப்பட்ட அடிமைகள். அவர்கள் அளித்த பொருள்களினால் இத்தலைவர் செல்வந்தரானார். தலைவராகவும் ஆனார். எனவே, தலைமைத்துவம் என்றநிலையினை ஊக்கம் (brave) விருந்தோம்பல், எல்லைப்புறங்களைத் திறமையாக நிர்ணயித்தல் போன்றவற்றால் மட்டும் அடையமுடியாது. மரங்களைச் சேகரித்தல், இனத்து அடையாளத்தினை பச்சைகுத்திக்கொள்ளுதல், வீடுகளையும் படகுகளையும் கட்டுதல் போன்றவற்றால் மட்டுமே அமையும். இங்கு தொழில்நுட்பமும் உழைப்பும் நாகரிகத்தினை படைக்கின்றன என்பது தெளிவு.

17.ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் படிநிலைகொண்ட சமூகத்தில் வேளாண்குடிகள் திறையினை அளித்து (tributary) தங்களுக்கானத் தலைமையினை ஏற்றனர். குறைவான காலமே நிலவிய Danish Bronze-age புதைகுழிகளில் கிடைத்த பெரும்பாலான கருவிகள், அணிகலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட செம்பினால் செய்யப்பட்டவை. இவை பெரும்பாலும் போர்க்குலத்தவருடையன. ஆனால், அவர்கள் நிலவுடைமையாளர்களும்கூட, கடலாடிகளும்கூட (sea-going). எகிப்தியகாலத்தில் பாரோக்கள் கல்லறைக்கும் பொதுமக்கள் கல்லறைக்கும் வேறுபாடு இருந்தது. இறப்புசடங்கிலும் வேறுபாடு உண்டு. இறுதிஊர்வலத்தின் பாடைகலன்களிலும் வேறுபாடு உண்டு. அவற்றில் வைக்கப்பட்ட பொருள்களிலும் வேறுபாடு உண்டு. ஆனால், புதைகுழிகளில் கிடைக்கும் பொருள்களின் அடிப்படையில் தலைவர்களையும் உயர்குடிகளையும் இனம்காண்பது அரிது. எனில், அடிமைகளை இனம்காண்பது அதனினும் அரிது. தலைவர்களுடன் புதைக்கப்பட்டதாலேயே ஒருவரை அடிமை என்று கருதமுடியாது. பலியிடப்பட்டவர், தலைவரோடு சேர்ந்தே மறு உலகில் சலுகைபெறலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஒருமுறை இரு உடல்கள் (ஒரே பாலினம்) தலைவருடன் புதைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சடங்குகளுடன் புதைக்கப்பட்டுள்ளது; மற்றொன்று வெறுமனே புதைக்கப்பட்டுள்ளது. அதில் பின்னவர் ஒருவேளை அடிமையாக இருக்கலாம். பகுதிநேரத் தொழில்நுட்பம் கொண்டவர்கள் சமூகமாற்றத்தில் (social classification) முக்கியம் பெறமாட்டார். பகுதிநேரத்தொழில் போதுமான உணவளிக்காது. உலோகவேலை செய்பவரும், சக்கரத்தில் பானைவனைவோரும் தொழில்திறம்கொண்டவர்கள். முழுநேரத்தொழில்நுட்பம் கொண்டவர்கள் உணவு உற்பத்தியாளர்கள் இல்லை. அவர்கள் உபரிஉற்பத்தியிலிருந்து உணவுபெறுவர்.

18.புதுகற்காலத்துப் பண்பாட்டில் (Neolithic culture) கோடரி உற்பத்தியாளர்கள் வெட்டுக்கல் (flints) உற்பத்தியாளர்களாகவும் இயங்கினர். அனால், கூடைமுடையும் Lyna இனத்து மக்கள் ஒருவகையான பானைசெய்வதில் (amphilet potters) சிறந்தவர். ஆனால், இவர்கள் தம்முடைய உழவு வேலையினை நிறுத்தவில்லை. சாடிகள் செய்வதையும், பாக்குப்பெட்டிகள் (boxes of betel-nuts) செய்வதையும் நிறுத்தவில்லை. பண்டமாற்றுக்காக செய்யப்பட்ட பொருள்கள் அவர்களின் உணவினையும் வணிகப்பொருளினையும் அதிகரித்தன.

19.பெற்றோர், குழந்தைகள் இணந்ததே குடும்பம். அங்கு இரத்தவுறவு முதன்மையானது (biological necessity). ஆனால், குடும்பம் என்ற நிறுவனம் ஓர் கூட்டுறவின் அலகு (unit of co-operation). சொத்து, கௌரவம் இரண்டினையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் (transmission of property and status). வாரிசுகள் தாய்வழியிலோ தந்தைவழியிலோ வந்திருக்கவேண்டும். ஆனால், தொல்லியல்ரீதியாக இரத்தவுறவு (kinship) தந்தைவழியினை அடுத்து தாய்வழிக்கு வந்ததா, தாய்வழியினை அடுத்து தந்தைவழிக்கு வந்ததா என்பதனை அறிவதற்கு குறைந்த அளவில்கூட சான்றுகள் இல்லை. தாய்வழி என்பது ஒரு பெரிதாக்கப்பட்ட கருதுகோள்போல் தோன்றுகிறது. தாய்வழிச்சமூகத்தில் (matriarchal) தாயினைவிட தாய்மாமன் முக்கியம். இவர்தான் குழந்தைகளைப் பேணுவதிலும் சொத்தினை பராமரிப்பதிலும் அதிககவனம் செலுத்துவார். தாய்மாமன் இயக்கத்தினை ஆண்வழிச்சமூகத்தின் பிரிதொரு செயற்பாடு என்றும் வருணிக்கலாம். அங்கு, தாய் புறந்தள்ளப்படுகிறாள் என்பதனை கவனிக்கவேண்டும். அசாமின் Khaghi இனத்திலும் அமெரிக்காவின் Iraquois இனத்திலும் இன்னும்சில அமெரிக்க இந்தியர் இனக்குழுக்களிலும் மனைவியர்தான் வீட்டுச்சொத்தின் உரிமையாளர் / உடைமையாளர். அவர்தான் குடும்பத்தினை நடத்துவார். இருந்தபோதும், இனத்தின் குலத்தலைவராக ஓர் ஆண்தான் இயங்குவார். தொல்லியலாளர்களால் யூகமாக தாய்வழிச்சமூகத்திற்கான கூறுகளைக் கண்டறியமுடியவில்லை. பழங்காலத்தில் (upper-paleolithic) கிடைத்த சில பெண்ணுருக்களின் மூலம் இதனை அறிவதற்கு முயற்சிக்கலாம். கல்லில் கீறப்பட்ட பெண்ணுரு, தந்தத்தில் வடிக்கப்பட்ட பெண்ணுரு, களிமண் பென்ணுருவம், செம்பில்செய்யப்பட்ட பெண்ணுரு போன்றவை புதுகற்காலத்தின் பொதுவான கூறு என்கிறார் VGC. பாபிலோனியாவிலும் அஸ்ஸீரியாவிலும் கிடைத்த Isthar பெண்கடவுள், கிரீஸ், ரோமில் கிடைத்த வீனஸ் போன்ற வரலாற்றுக்கு முந்திய பெண்கடவுளரின் உருக்கள் புதுகற்காலத்தினைச் சார்ந்தவை. ஆனால், அவை கடவுளர்களாக வணங்கப்பட்டவையா என்பது கேள்வியே. பெண்ணுக்கு உற்பத்திசக்தி உள்ளதால் வளமைச்சடங்கிற்கு இந்த பெண்ணுருக்கள் மதிக்கப்பட்டிருக்கலாம். சைபீரியாவில் மீன்வேட்டையாடிகள் (hunter-fishers) ஒரு தாயினை அவரின் குழந்தையுடன் சேர்த்து அம்பெய்தி கொன்றுள்ளனர். கிரிமியாவில் ஒருபுதைகுழியில் ஒருஜோடி உடல்கள் கிடைத்தன. ஓர் ஆண்: வயது 40 முதல் 45 வரை இருக்கலாம; ஒரு பெண்:வயது 20முதல் 25வரை இருக்கலாம். அப்பெண் அடிமையாகவோ வைப்பாட்டியாகவோ இருக்கவேண்டும்; மனைவியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். இங்கு ஒரு கருத்தினை பதிவுசெய்யலாம். மேலே சொல்லப்பட்ட சான்றில் தாயும் குழந்தையும் என்று கருதப்படுகிறபோது அடுத்து சுட்டப்படுகிற சான்றில் உள்ளவர் தந்தையும் மகளுமாக இருந்திருக்கலாமே என்ற கருதலாம்.

மேலே 15 முதல் 19 வரையிலான பத்திகளில் தரப்பட்ட கருத்துகளும், விவரங்களும், வினைகளும் VGC 1950 இல் வெளியிட்ட Social Evolution என்ற நூலிலிருந்து பெறப்பட்டவை. 184 பக்கங்களைக்கொண்ட இந்நூல் தொல்லியல் சான்றுகளின் விளக்கப்படங்களைக் கொண்டிருக்கவில்லை.

20. VGC எழுதிய நூல்களில் மிகவும் கருத்தூன்றி கற்கப்படவேண்டியது What Happenned in History (1954) என்று தலைபிடப்பட்ட நூலாகும். 12 இயல்களில் 302 பக்கங்களாக விரிந்து 4 நிலப்படங்களையும் சொல்லடைவினையும் இந்நூல் கொண்டுள்ளது. VGC இந்நூலினை ஒரு வரலாற்றியல் ஆசிரியர் என்றநிலையில் எழுதியுள்ளார். தொல்லியல சான்றுகளை வரலாற்றுப்பொருள்முதல் என்ற வாதத்தின் பின்னணியில் புரிந்துகொள்வதற்கு இந்நூல் நல்ல வழிகாட்டி. இனி அவரின் குரலில். இதுவரை எழுதப்பட்ட வரலாறு முடிவான ஒன்றல்ல. வரலாறு தொல்லியலின் துணையுடன் இயற்கை வரலாற்றின் (natural history) தொடர்ச்சியாக உள்ளது. தொல்லியல் சான்றுகளும் எழுத்தாவணங்களும் சேர்ந்து வரலாற்றினை அறியவைக்கின்றன. இன்றுவரை, மனிதன் மட்டுமே இயற்கையினை சமாளித்து வாழ்ந்துவருகிறான். இங்கு, இந்நூற்றாண்டில் நாம்வாழ்கின்ற காலத்திலேயே பிணந்திண்ணிக் கழுகுகள் அழிதுவருகின்றன என்பதனை பதிவிடவேண்டும். மனிதன் பயன்படுத்தும் சாதனங்கள் (equipments) பிற உயிர்கள் பயன்படுத்துவதிலிருந்து வேறுபடுகின்றன. மனிதன் பெரிதும் பயன்படுத்தும் இருகருவிகள்: மூளை, கைகள். இவற்றுடன் கால்கள், நகங்கள், பற்கள் போன்றவற்றையும் சேர்க்கவேண்டும். பெண்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தம் பற்களையும் நகத்தினையும் பாவிக்கவேண்டுமென்று மகாத்மா காந்தி அறிவுறுத்தினார். மனிதன் இயற்கைப்பொருள்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கருவிகளை உருவாக்கவும் செய்கிறான். மனிதன், சமூகவிலங்கு; கருவி சமூகத்தின் விளைச்சல். ஒவ்வொருகருவியும் அறிவியலின் வெளிப்பாடாகும். மனிதன் பிறறோடு உறவாடும் (gregarious) இயல்புள்ளவன். ஒலியெழுப்புவதன்மூலம், பேச்சின்மூலம் (articulate sounds) இந்த உறவினை வெளிப்படுத்துகிறான். காலத்தால் முந்தியமனிதனின் மண்டையோட்டுப்பகுதியில் உள்ள மூளையின் பேச்சுப்பகுதி வளர்ந்துள்ளதன் அடிப்படையில் இதனை அறியமுடிகிறது. இம்மூளைப்பகுதி கருவிகள் செய்வதற்கு (tools-making) பெரிதும் உதவிற்று எனலாம். மொழி, மரபினைக்கடத்தும் என்பதற்கும் மேலானது. மொழி, சமூகத்தின் மரபினையும் அனுபவத்தினையும் அடுத்ததலைமுறைக்குக் கடத்துகிறது. மொழி, மரபினை அறிவுப்பூர்வமாக்குகிறது (language makes tradition rational). ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குமுன் இன்றைய மனிதனின் மூத்தவகை (Neanderthal man) தன் குழந்தைகளையும் உறவினர்களையும் புதைத்தபோது அவர்களுடன் கருவிகளையும் உணவினையும் சேர்த்தே புதைத்தான். 25,000 ஆண்டுகளுக்குமுன் உடலில் பலவிதமான நிறங்களைப் பூசிக்கொண்டான். கழுத்தில் மணிகளையும் கிளிஞ்சல்களையும் அணிந்துகொள்ளத் தலைப்பட்டான். தொடக்கநிலை தொல்லியல் மக்கள் (primitive people) தம் தம் சமையங்களை வெள்ளையர் நாகரிகத்தில் அழித்துக் கொண்டன (destruction of religion) என்ற கருத்தினை VGC வைக்கிறார். கருத்தியல் என்பது சமூகத்தின் உற்பத்தி என்பது இவரின் கூற்று. ஆஸ்திரேலியத் தொல்குடிகளிடையே உழைப்பில் பாலினவேறுபாடு உண்டு. இவ்வேறுபாடு உணவுசேகரித்தல், வேட்டையாடுதல், கலங்கள்செய்தல், சாதனங்கள்செய்தல் போன்றவற்றிலும் உண்டு. கருவிகள் வெவ்வேறிடங்களில் வெவ்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கரும் ஆங்கிலேயரும் கத்திகளையும் குறடுகளையும் ஒரேமாதிரி பயன்படுத்துவதில்லை. அயர்லாந்திலும் வேல்ஷிலும் மண்ணள்ளும் கருவிகள் (shovel) நீளமான கைப்பிடிகளையும் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் குட்டையான கைப்பிடிகளையும் கொண்டுள்ளன. தட்பவெப்பமும் சுற்றுச்சூழலும் (climatic and other environmental conditions) மரபுகளை உருவாக்குகின்றன. வரலாற்றுக்கு முந்திய தொல்லியலின்நோக்கம் (principal aim of pre-historical archaeology) தொல்லியல்சான்றுகளின் (relic) அடிப்படையில் வெவ்வேறு சமூகத்தின்மரபுகளை (social tradition) அறிவதாகும் என்கிறார் VGC. தொல்லியல், பண்பாட்டினை ஆராயும் ஏதுவான ஒன்று என்று இப்புலத்தினைக் கணிக்கிறார். ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட தனித்தமொழியின் (distinct language) பண்பாட்டுக்கூறுகளை சமூகமரபுகளில் (social tradition) தனித்தவகைக் கருவிகளைப் பயன்படுத்தி அவிவினத்து மக்கள்வாழ்ந்துவந்தால் அதனை தனித்தபண்பாடு எனலாம். காட்டாக, வளைதடி (boomerang) இதுவரை வட இந்தியாவில் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மைக்காலம்வரைக்கும் இக்கருவி பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. வளைதடியினை ஆஸ்திரேலியப்பழங்குடிகளும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொழிவழக்கில் மாறுபாடு இருந்தால் (linguistic convention) அங்கு புதைகுழி சடங்குகளும் (burial rites) கருவிகளும் மாறுபட்டிருக்கும். பொருளியல் பண்பாடு (material culture) இயற்கைசூழலை (environment) நம்பியுள்ளது. இவை உணவு, இருப்பிடம், எரிபொருள், கருவிகள் போன்றவற்றை நிர்ணயிப்பவை. வனவாசிகள் மரத்தில்வேலைகளை சிறப்பாக செய்வர். தச்சுவேலை, மரத்தாலானவீடு, மரத்தாலானஅணிகள் போன்றவை. புல்வெளிமக்கள் பெரும்பாலும் செம்பினை கருவிகளாக பயன்படுத்துவர், கூடைமுடைவர், தோல்பதனிடுவர். அவர்கள் தோலில் செய்யப்பட்ட கூடாரங்களில் வசிப்பர். தரைகீழ் குகைகளிலும் வசிப்பர்.

21.கி.மு.50,000 இலிருந்து 25,000 ஆண்டுகள் காலத்தின் இடைவெளியில் மனிதன் உணவுசேகரிக்கும் பழக்கத்திற்கு (gathering economy) வந்தான். இதனை savagery காலம் என்று Morgan வரையறுத்தார். பண்பாடு என்ற கருத்தியலின் பின்னணையில் இக்காலத்தினை காட்டுமிராண்டிகாலம் என்று அழைக்கின்றனர். அதாவது கருணையற்றகாலம் என்பர். எல்லாகாலமுமே கருணையற்ற பண்பாடற்ற காலம்தான் என்பதனை எல்லாப்போர்களும் கொலைகளின் மூலம் நிரூபிக்கின்றன. இதனை கரடுமுரடான கற்கருவிகளைப் பயன்படுத்தும் காலம் என்று வரையறுக்கவேண்டும் அல்லது செப்பனிடப்படாத கற்காலம் என்று வகைப்படுத்தவேண்டும் இக்காலத்தினைத் தொல்லியலார் paleolithic-age என்று குறிப்பிடுகின்றனர். பூமி இயலார் (geologist) இதனை (pleistoscine) பனிபடர்ச்சிக்காலம் என்றனர். உலகில் 8000 ஆண்டுகளுக்குமுன் பயிரிடும் உணவு உற்பத்தி (new food-producing economy) தொடங்கியது. தொல்லியலார் இக்காலத்தினை (Neolithic-age) புதுயகற்காலம் என்றனர்.

22.வெண்கலப்புரட்சி

வெண்கலத்தினால் உருவான பொருளியல் புரட்சி (economic revolution) Nile, Eupratis-Tigris, Indus போன்ற ஆற்றுப்பகுதிகளில் உருவாயின. அங்கு, வேளாண்குடிகள் (farmers) விலங்குகள் வளர்ப்பதற்கும், கைவினைஞர்கள், ஆசாரிகள், அலுவலர்கள், எழுத்தர்கள், போன்ற பிறகுழுக்களுக்காகவும் உபரிஉற்பத்தி செய்யவேண்டுமென்று நிர்பந்திக்கப்பட்டனர். அப்பகுதிகளில் நகரநாகரிகம் உருவானது. அக்காலகட்டத்தின் முதல் 2000 ஆண்டுகள் வெண்கலக்காலம் எனப்பட்டது. அப்போது செம்பு, வெண்கலம் இரண்டும் கருவிகள் செய்வதற்கு பெரிதும் பயன்பட்டன. இவ்விரு உலோகங்களும் பெரும்பாலும் கடவுள், அரசர், வட்டாரத்தலைவர், கோயிலலுவலர், அரசுகைகளில் இருந்தன. பாசனவேளாண்மையின் (agricultural irrigation) உபரிஉற்பத்தி பூசாரிகள், அலுவலர்களின் கைகளில் இருந்தன. இதனால், நகரவளர்ச்சியும் தொழில்துறையும் வணிகமும் மக்கள்தொகையும் பாதிக்கப்பட்டன.

23.முந்திய இரும்புக்காலம் (The Early Iron Age)

கிறிஸ்துவிற்கு முன்பே உருக்கப்படாத கச்சா இரும்பு (Wrought iron) பயன்பட்டிற்கு வந்தது. இதே காலத்தில் அண்மைக்கிழக்கில் (Near East) அகரவரிசை எழுத்து உருவாக்கப்பட்டது. இதனை சிறுகுழுவான எழுத்தர்கள் மட்டுமே பயன்படுத்தினர். கி.மு.700இல் காசு பயன்பட்டிற்கு வந்தது. Greco-Roman பொருளியலில் புதிய கண்டுபிடிப்புகளால் கிடைத்த உபரி உற்பத்தியினை வணிகர்கள், பணம் படைத்தவர்கள், பெருநிலவுடைமையாளர்கள் (capitalist farmes) அனுபவித்தனர்.

24.ஐரோப்பாவின் நிலமானியகாலத்தில் காட்டுவேளாண்மை செய்யும் அலைகுடிகள் (semi-nomadic barbarian cultivation) உற்பத்தியினை அதிகரித்தனர். இதனால், இவர்களின் அடிமைத்தனம் ஒழிந்தது. குழுமுறை (Guild system), வணிகர்களையும் கைவினைஞர்களையும் விடுதலை செய்தது. கிழக்கில் (orient) இரும்புக்காலம் அரசமரபினை (monarchical tradition) வெண்கலக்காலத்திலிருந்து எடுத்துக்கொண்டது. Asyyria, Babylonia, Egypt அனைத்தும் வெண்கலக் காலத்து அரசின் தொடர்ச்சி. அவை, சில சில மாற்றங்களுடன் தெய்வீக அரசன் (divine-kingship) என்ற கருத்தியலை எடுத்துக் கொண்டன. மத்திய தரைக் கடலின் ஐரோப்பாவில் கிழக்கு மாதிரியான (oriental pattern) சமையம்சார் அரசு (theocratic monarchy) போதுமானதாக எடுபடவில்லை. மத்திய தரைக் கடல் ஐரோப்பாவிற்குள் புகுந்தவர்கள் (barbarian invaders) தந்தைவழி அரசமைப்பினையும் போர்த்தலைவர்களையும் (war chiefs) ஏற்றுக்கொண்டனர். கீழைத்தேயத்து மாதிரியின் (oriental court) அரசினை உருவாக்கவில்லை. எனவே, பெரு நிலவுடைமையாளர்களையும் (rich land holders) வட்டாரத் தலைவர்களையும் (vassals) கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இரும்புக்கருவிகள் (iron weapons) கடல் கொள்ளையருக்கும் பயன்பட்டன. அதனால், மன்னராட்சி உதிர்ந்தது. அது ஒருசடங்குநிலை அலுவலகமாக (purely ritual office) மாறிற்று. ஊடுருவியவர்களின் இரத்தவுறவு அமைப்பு (kinship organisation) உடைந்தபின் பணப்பொருளியல் தனியார் நிலவுடைமையினை ஊக்குவித்தது. குலத்தலைவர் (clan chief) பெருநிலக்கிழார் ஆனார். அரசு இயக்கம் நிலவுடைமைச்சமூகத்தால் வீழ்ந்தது.

# மேற்சொல்லப்பட்ட பத்திகளின் வாயிலாக ஒரு நெடிய வரலாற்றுப் போக்கில் மனிதசமூகம் இயற்கையினை எவ்வாறு மூலவளங்களாகப் பயன்படுத்தி வரலாற்றினை எழுதுவதற்கான சான்றுகளை விட்டுச் சென்றது என்பதனை அறியலாம். மேற்சொல்லப்பட்ட நூல்களுடன் மேலும் சில நூல்களையும் VGC இயற்றியுள்ளார். அவை ஒவ்வொன்றும் படித்தறியத் தக்கன. இவரின் பங்களிப்பினை அறிந்தால் ஒருவர் தொல்லியல் ஆய்வினை செம்மையாக நிறைவேற்றலாம். பத்திகளில் சாய்வெழுத்தில் தரப்பட்ட பதிவுகள் கட்டுரையாளரின் கருத்தாக்கும். கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலத் தொடர்கள் கார்டன் சைல்ட் அவர்களின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

கி.இரா.சங்கரன்

Pin It