இலங்கையில் நடந்த தமிழ் இனவழிப்பில் தொடர்புடைய இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ்ப் பெண் அம்பிகை செல்வக்குமார் இலண்டனில் தொடர்ந்து 17 நாட்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டார்.
தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுப் பொறிமுறை அமைக்க வேண்டும்; அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும், சிறிலங்காவுக்கான தனி அறிக்கையாளர் அமர்த்த வேண்டும்; வடக்கு - கிழக்கு மாகாணத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வுக்குப் பரிந்துரைக்க வேண்டும் ஆகிய நான்கு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
அம்பிகை செல்வக்குமார் இனவழிப்பைத் தடுப்பதற்கான பன்னாட்டு மையத்தின் தலைவர்களில் ஒருவர். இவர் பிரித்தானிய அரசிடம் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 27ஆம் நாள் முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டார்.
இவரது போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் தமிழர்கள் போராடினார்கள். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், வீட்டுக்கு முன் பெருந்தொகையாகக் குவிந்த தமிழர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.
உண்ணாவிரதம் குறித்து அம்பிகை செல்வக்குமார் கூறுகையில், ``இலங்கையில், ஈழத் தமிழர்கள் மீதான போரில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த இலங்கை மீது, ஜெனிவாவிலுள்ள ஐ.நா - வின் மனித உரிமைப் பேரவையில், பிரிட்டன் அரசின் ஆதரவு நாடுகள் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை முன்வைக்கவிருக்கிறார்கள்.
இது இலங்கை அரசு மேலும் மேலும் தமிழ் மக்களைத் துன்பறுத்தவும், இதுவரை செய்த கொடுமைகளைத் தொடரவும், கொன்றுகுவித்த மக்களின் மீதான நியாயத்தை கேள்விக்குறியாக்கவும் உதவக்கூடியதாகும். இதை எதிர்த்து, பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நார்வே முதல் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அம்பிகை செல்வகுமாருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஒவ்வொரு நாளும் போராட்ட அரங்கிலிருந்து நடத்தப்பட்ட இணையக் கருத்தரங்கில் தாயகத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் உலகெங்கிலுமிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து ததேவிஇ பொதுச் செயலாளர் தோழர் தியாகு இருமுறை இந்நிகழ்வில் பேசினார். அவர் பிரித்தானிய அரசுக்குள்ள வரலாற்று பொறுப்பை எடுத்துக்காட்டினார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரிட்டனின் தூதரகத்தில், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாகவும், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இங்கிலாந்தில் வசிக்கும் சுமார் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரதம் இருக்கும் வீட்டின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்ற அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல தலைவர்களும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அம்பிகையின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இறுதியில் பட்டினிப் போரின் 17ஆம் நாளில் 15.03.2021 அம்பிகையின் போரட்டம் நிறைவுற்றது.
பிரித்தானிய அரசிடம் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தைக் கைவிடுவேன் என 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும், உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டுகோளையும் ஏற்று அம்பிகை தன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைவில் ஒரு புதிய வகையிலான அனைத்துலகத் தற்சார்புப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கியக் கூறுகளை உள்ளடக்கியதாக) சேர்க்கப்பட்டுள்ளது, அத்துடன் நிரந்தர ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது என்று உறுதியளிக்கப்பட்டது.
நீண்ட நெடிய தமிழினப் போராட்ட வரலாற்றில் அம்பிகையின் அறப்போராட்டம் உறுதியாகப் பெருமைக்குரிய இடம் பெறும்.
- தியாகு