இமானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்கச் சென்ற தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேரைப் படுகொலை செய்துள்ளது. கலவரங்களைச் சமாளிப்பதிலும், தவிர்ப்பதிலும் திறமைவாய்ந்த தமிழகக் காவல்துறை பரமக்குடியைக் கொலைக்களமாக்கியது. யாரை மகிழ்விக்க என்பது புரியவில்லை.

அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவர்களை அப்படியே போக அனுமதித்திருந்தால், ஜான் பாண்டியனைக் கைது செய்து பரமக்குடி வரவிடாமல் தடுக்காதிருந்தால் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. காவல்துறை விவேகமற்று நடந்திருக்கிறது. மேலும் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி நடந்ததா என்பது விசாரணை செய்யப்பட வேண்டும். நல்லவேளையாக இது சாதிய மோதலாக உருமாறவில்லை. இதில் மதுரை அருகே நடந்த துப்பாக்கிச்சூடும் முற்றிலும் தேவையற்றதாகும். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்.

குண்டுக்காயமடைந்த பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர். பின்பு உயர்நீதிமன்றத் தலையீட்டின் பேரில் மோசமாகக் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்த கதை மாதிரி காவல்துறையினர் பரமக்குடி சுற்று வட்டார தலித் கிராமங்களில் புகுந்து நள்ளிரவு வேட்டை நடத்துகின்றனர். இரவு நேரத்தில் இருளில் காவல்துறைக்குப் பயந்து ஒடிய மக்களை ஓடஓட விரட்டியுள்ளனர். இதில் குழியில் விழுந்து ஒருவரும், பாம்பு கடித்து ஒருவருமாக இருவர் இறந்துவிட்டனர். மற்றொருவரும் பாம்பு கடித்து அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசே! இந்தக் கொடுமை எல்லாம் நியாயமா? போலீசைக் காப்பாற்ற இதை "இன மோதல்" என்ற தோனியில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொன்னது விபரீதமானதாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் துப்பாக்கிச்சூட்டை வன்மையாய் கண்டனம் செய்தது. சட்டமன்ற உறுப்பினர்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்களும் அந்த கிராமங்களுக்கு நேரில்சென்று ஆறுதல் கூறினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் சென்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஏழுபேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25000 வீதம் வழங்கியுள்ளார்.

தமிழக அரசு இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலின்பேரில் நீதிவிசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. ஏழு பேரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அரசு அறிவித்துள்ள ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு போதாது. தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கவேண்டும். எதிர்காலத்தில் மக்கள்மீது காவல்துறையின் இத்தகை ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம் அணுமின்நிலையம் இந்தியாவும், ரஷ்யாவும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகும். இந்த ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியும் கோர்பச்சேவும் கையொப்பமிட்டுள்ளனர். ஆண்டு பலவாகப் பணிகள் நடந்து முடிந்து தற்போது மின்உற்பத்தி துவங்கப்போகும் நேரத்தில் கூடங்குளம் பகுதியிலுள்ள எட்டு கிராமமக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை அடியோடு மூட வலியுறுத்தி சுற்றுவட்டார கிராம மக்கள் 11 நாட்கள் உண்ணாவிரதமிருந்தனர். தமிழக முதல்வர் தலையிட்டு, பிரதமருடன் பேசி நிறுத்திவைக்க உறுதிகூறி, தற்போது உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து தனியான ஒரு ஆய்வுக்குழுவை நியமித்து உறுதிப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது.

ஜப்பானில் வெடித்த புகுஷிமா அணுஉலை விபத்தும் அதையொட்டி வந்த கருத்துக்களும் கூடங்குளம் மக்களைப் பீதியூட்டின. மேலும் அணுஉலை ஒத்திகை பார்க்கப் போவதாகவும், அப்போது ஆபத்து ஏற்பட்டால் என்னசெய்யவேண்டும் என்று அணுஉலை நிர்வாகம் செய்த பிரச்சாரம் மக்களைப் போராடத் தூண்டியது.

"அணு உலைகள் அபாயகரமானவை என்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இயங்கச் செய்யவேண்டும். வேறுவழிகளில் மின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாது" என்பதே உலக நாடுகளின் கருத்தாகும். இந்தியாவிலும் குஜராத், ஆந்திரா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அணு உலைகள் ஏற்படுத்த அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

புகுஷிமா அணுஉலை ஜப்பானில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்றும், கூடங்குளம் இரண்டு உலைகளும் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் முதல் உலை உடனே துவங்கப்படும் என்றும், இரண்டாவது 1000 மெகாவாட் திறன் கொண்ட உலை 6 மாதம் கழித்துத் துவங்கப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

எனினும், பாதுகாப்பை உறுதிசெய்து, மக்கள் உறுதியாக நம்பும்படி ஏற்பாடு செய்தபின்பே அணு உலையைத் துவங்க வேண்டும் என்பதே இதில் சரியான முடிவாகும்.

மோடியில் மோடி வேலை

குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திரமோடி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு என்ற கட்சிசாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக மோடியும் ராகுலும் தான் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மோடிக்குப் பிரதமர் ஆசை வந்துவிட்டது. அந்த ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தவே மோடி தனது படாடோபமான மூன்று நாள் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்துள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தை விளம்பரப்படுத்த பல போடி ரூபாய்களை ஊடகங்களுக்கு மோடி வாரி இறைத்துள்ளார். மோடி ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை உலகமே அறியும். ஒளிக்க முடியாத இந்த உண்மையை ஒளிக்க மதச்சார்பின்மையை நிலைநாட்டவே இந்த உண்ணாவிரதம் என்று அறிவித்துள்ளார். சில முஸ்லிம் தலைவர்கள் மேடையில் வந்து மோடியை மரியாதை செய்து பாராட்டுவதற்கு அவரே ஏற்பாடு செய்தார். ஆனால் அவர்கள் அளித்த முஸ்லிம் குல்லாவை மட்டும் இந்த ஆர். எஸ். எஸ். காரர் அணிய மறுத்துவிட்டார். மோடி மதச்சார்பின்மை பற்றிப் போலித்தனமாகப் பேசினார். அதையே ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய அமைப்பால் பொறுத்துக்கொள்ள முடியாமல் "மோடி தன்னிச்சையாக முடிவெடுத்துத் தன்னை மட்டும் முன்நிறுத்துகிறார்" என்று அறிக்கை வெளியிட்டது.

மதவெறிக்குப் பெயர் பெற்ற மோடி தனது உண்ணாவிரதத்தை வாழ்த்துவதற்கு இந்துச்சாமியார்களையும், முஸ்லிம் மௌலவிகளையும், கிறிஸ்தவ பாதிரிமார்களையும், பார்சி மத குருமார்களையும் கொண்டுவந்திருந்தார். அவர்களும் இந்த மகாராஜாவை வாழ்த்தினர். மோடியின் உள்நோக்கமெல்லாம் தன்னை ஒரு மதச்சார்பற்ற தலைவராகக் காட்டிக்கொள்ளவே ஆகும். ஆனால் குஜராத்தின் சிறுபான்மை மக்கள் 2002ல் மோடி நடத்திய கொலைபாதகங்களை மறக்கவில்லை. சொல்லப்போனால் மோடியின் மதவெறி அரசியலை நாடு முழுவதும் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.

பாரதிய ஜனதாக் கட்சியில் நாட்டில் ஒரு இடைத்தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பும், அதையொட்டி பிரதமர் வேட்பாளர் யார் என்ற குழப்பமும் தீவிரமாக நிலவுகிறது. அதன் எதிரொலியாகவே அவசர கோலத்தில் மோடியின் உண்ணாவிரதம் நடந்து முடிந்துள்ளது. உண்ணாவிரதத்திற்கு சுஷ்மா சுவராஜ் உட்பட வந்திருந்தாலும், அவர்கள் யாரும் மோடியை விரும்பவில்லை என்றே தெரிகிறது. இதில் அதிமுக தனது பிரதிநிதிகளை அனுப்பியதும், காஷ்மீரத்து மெகபூபா நேரில் சென்று வாழ்த்தியதும் அபத்தமானவையாகும்.

மோடி உண்ணாவிரதம் இருக்கும்போது பி.ஜே.பி. தலைவர் நிதின் கட்காரி தனது உடல் பருமனை அறுவைச் சிகிச்சை மூலம் குறைத்துள்ளார். பிரதமர் வேட்பாளராக அவரும் களமிறங்கத் தயாராகிவிட்டார். கர்னாடகாவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழல் செய்து ஏப்பம் விட்டது பி.ஜே.பி. ஆனால் அத்வானி ஊழலை எதிர்த்து ரதயாத்திரை நடத்தப் போகிறாராம். கடந்த வாரம் ராஜஸ்தானில் 12 முஸ்லிம்களை அங்குள்ள பி.ஜே.பி. அரசு சுட்டுக்கொன்றுள்ளது. எனவே, மோடியின் மதச்சார்பின்மை வித்தைகள் எடுபடப் போவதில்லை.

Pin It