கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வைகை அனிஷ்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மாறிவரும் விஞ்ஞான யுகத்தில் பழமையை நாளுக்கு நாள் மறந்து வருகிறோம். அவ்வகையில் மறந்த மரங்களுள் பனைமரமும் ஒன்று. மனிதன் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாறுதவற்கும், நிலம், வீடு, மனை போன்றவைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கும் மிக முக்கியமான காரணி எழுத்தாணி என்று அழைக்கப்படும் பேனா. அதன் பின்னர் பால்பாயிண்ட் எனப்படும் பந்து முனைப் பேனாக்கள் ஜெல் என்னும் திரவத்தை தாங்கி வருகிறது. இத்தகைய அறிவியல் முன்னேற்றத்திற்கு முன்னர் ஆணி கொண்டு பனை ஓலையில் எழுதினார்கள். இப்பொழுதுள்ள நவீன யுகத்தில் பனை ஓலையில் எழுதினார்கள் என்று கூறினால் நம்மை வியப்புடன் தான் பார்ப்பார்கள்.
பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பனை ஓலையை எழுதுவதற்கேற்றவாறு பதப்படுத்தவேண்டும். பதப்படுத்துதல் என்ற அறிவியல் தொழில் நுட்பத்தை சரியாக தெரிந்து வைத்திருந்தார்கள் நம் பண்டைய தமிழர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஓலைச்சுவடிகள் அப்படியே இன்னும் அருங்காட்சியகத்தில் உள்ளதற்கு பதப்படுத்துதலே காரணம். நமது முன்னோர்கள் எழுதுவதற்காக நல்ல அகலமான ஓலைகளை எடுத்து சீராக நறுக்கி அதனை தண்ணீரில் நன்கு வேகவைத்து பிறகு உலர்த்தி அதன் பின்னர் இந்த ஓலைகளின் பாதுகாப்பிற்காக இரண்டு மரச்சட்டங்களை சுவடிகளின் மேலும் கீழும், வைத்து கட்டி ஆவணப்படுத்துவார்கள்.
இந்தப் பனை ஓலையில் கூர்மையான ஆணி கொண்டு எழுதுவார்கள். ஆணிகள் இரும்பால் இருக்கும். சில வேளைகளில் வேறு உலோகங்களில் கூட செய்யப்பட்டிருக்கும். பண வசதி படைத்தவர்கள் தங்கத்தால் ஆன எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
நம்முடைய பாரம்பரிய இலக்கியம், மருத்துவம், சிற்ப சாஸ்திரங்கள் எல்லாம் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். முதலில் எழுதுபவர்கள் ஒரு பிரதியை எப்படியும் எழுதி முடித்து, அதன் பின்னர் பல பிரதிகள் வேண்டும் என்றாலோ அல்லது வணிக ரீதியாக எழுதவேண்டும் என்றால் எழுதுவதற்கு தனியாக ஒரு தெருவை அமைத்து எழுத்தாணிகாரத்தெரு என்ற தெருவில் வைத்து எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் நினைவாக இன்றும் பல ஊர்களில் எழுத்தாணிக்காரத்தெரு என்ற தெரு உள்ளது. பனை மரங்களை நினைவுபடுத்தும் விதமாக பனப்பாக்கம், கட்டப்பணை, பனங்குடி, பனை மரத்துப்பட்டி, பனஞ்சாடி, பனைவடலி, திருப்பனந்தாள் போன்ற ஊர்கள் உள்ளன. எழுத்து என்ற வரலாற்றின் முன்னோடியாகத் திகழ்ந்த பனை மரங்கள் இன்று காலச்சூழ்நிலையில் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகிறது.
பூக்கும் பருவத்தை அடையாத பனை மரத்தை வடலி எனவும், குறும்பனை எனவும் பனை மர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல்கொண்ட குறும்பனை பெயர் இப்போதும் குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
பண்டைய காலத்தில் சேர மன்னர்களுக்கு அடையாள மாலை 'போந்தை' அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அரிப்பு முதலிய இயற்கைச் சீற்றத்திலிருந்து நாட்டை காப்பதற்குக் கடற்கரையில் வளர்ந்த பனைமரக் கூட்டம் பெரிதும் உதவியாக இருந்தது.
அழிந்த பனை மரங்களை விடுத்து அழியவிருக்கின்ற பனை மரங்களைக் காப்பது நமது கடமையாகும்.
- வைகை அனிஷ் (
- விவரங்கள்
- ஆ.மீ.ஜவகர்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பரபரப்பு மிகுந்த தற்காலச் சூழலில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வானத்தை அண்ணாந்து பார்ப்போமா?
இரவில் மின்னும் நட்சத்திரங்களையும் பகலில் வட்டமிடும் பறவையினங்களையும் ஒரு ரசனையோடு பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர்?
கோழியின் ஆக்ரோஷமான எதிர்ப்புகளுக்கிடையில் குஞ்சுகளை லாவகமாக தூக்கிச் செல்லும் பருந்துகள் எங்கே?
'க்விக்' 'க்விக்' எனும் ஒலிகளோடு நம் வீட்டு சிலந்தி வலையிலிருக்கும் சிலந்திகளை பிடித்துத் தின்றுவிட்டு 'விருட், விருட்' டென்று பறக்கும் சிட்டுக்கிருவிகள் மறைந்த மாயமென்ன?
தாவித் தாவி கொசுக்களைப் பிடித்து உண்ணும் தவளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததின் காரணம்தான் என்ன?
கண்ணைக் கவரும் செந்நிறம் இருந்தாலும் 'நறுச்', ' நறுச்' என கடிபடும் பேரிக்காய் போன்று அல்லாமல் மாவு போன்று மென்மையாக சுவை தந்த ஆப்பிள் ரகங்களை எந்த ஏவாள் கவர்ந்து சென்றாள்?
இன்னும் பல கானுயிர்கள் அருகிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன என்று கேட்பதும், அதற்கான பதிலும் ஒன்றே ஒன்றுதான். அது மனிதன். மனிதனன்றி வேறு எவர்/எது காரணமாக இருக்க முடியும்?
அறிமுகம் இல்லாத ஊரில் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு நிற்பவனைப்போல் தொழிநுட்ப சுடுகாட்டில் இயற்கையைத் தொலைத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறோம் நாம்.
மனிதன் தன்னைப் பெற்றவர்களுக்கும் வழிவழிவந்த மூதாதையர்களுக்கும் தருகின்ற மரியாதையில் ஒரு சிறு அளவையாவது தனக்குமுன்பே தோன்றி இந்த உலகை சேதாரமின்றி நமக்கு விட்டுச் சென்றிருக்கிற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் தரவேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறானா ?
புவி தோன்றியபோது நிலம், நீர், காற்று இருந்தன. பின் ஒரு செல் உயிரிலிருந்து பல செல் உயிரிகள் வரை தோன்றத் தொடங்கின. இதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனத்தின் தோற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இயற்கையாகத் தோன்றிய புல், பூண்டு, செடி, கொடி, மரம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை மனிதனின் உதவியின்றியே உயிர் வாழக் கூடியவை. ஆனால் பிற உயிரினங்களையும் இயற்கை உற்பத்திகளையும் மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய மனிதனோ உயிரினங்களை வேட்டையாடியும் இயற்கையை சூறையாடியும் தன்னுயிரை நிலைநிறுத்த முயல்கிறான்.
நகரப்பகுதிகளைப் பெருக்கி, காடுகளை அழித்து, வளிமண்டலத்தைக் கிழித்து, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துக் கொண்டே செல்வதால்தான் எப்போதாவது வரவேண்டிய ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், புவிவெப்பமயமாதல் போன்றவை அடிக்கடி வந்து அச்சுறுத்துகின்றன.
நகரப் பெருக்கத்தின் காரணமாக சுருங்கிப் போன குறுகிய வயல் பரப்பில் பேரளவு விளைச்சல் வேண்டி இரசாயனங்களைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் இயற்கையை நமது கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதான ஒரு மூடநம்பிக்கைதான். யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 'குடியிருப்புகளாக்கப்பட்ட' பகுதிகளில் நுழைந்து தாக்குவதை 'நாசம்' செய்கின்றன என்று கூறுகிறோம், நாம் செய்த நாசங்களை மறந்துவிட்டு. நீர்வழிப்பாதைகளை மறித்து கட்டடங்களைக் கட்டிவிட்டு பெருவெள்ளத்தில் ஊர் அழிந்தபின் 'பேரழிவு' என்று சொல்கிறோம்.
உயிரினங்களிலேயே முதிர்ச்சி பெற்ற உன்னதமான இனமாக நம்மை நாமே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு செய்கின்ற இயற்கை சூறையாடலுக்கு வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையைப் பகைத்துக் கொள்வதற்கும் புறக்கணிப்பதற்கும் மனிதனின் பேராசையும் கொடிய குணங்களுமே காரணம். இயற்கை நமக்கு வழங்கிய எண்ணிலடங்கா கொடைகளை வெட்டியும் வெடிவைத்து தகர்த்தும் ஆழத்தோண்டியும் உறிஞ்சியும் கொள்ளையடிக்கிற மகா கொள்ளையர்களாக இருக்கிறேம்.
பல்லாயிரம் கோடி ஆண்டுகள் வழிவழியாய் இப்புவியில் வாழ்ந்துவந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கைவளங்களும் குறைந்துவரும் அதேவேளையில் குடிநீர்த் தட்டுப்பாடும் இயற்கைப் பேரழிவுகளும் மனிதஇனத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதர்களின் வளம் காப்பதற்காக வரம்புமீறி செய்யப்படும் இயற்கைவள சுரண்டலால் 'தக்கன தப்பி வாழ்நிலை பெறும்' (survival of the fittest) எனும் சித்தாந்தம்கூட பிழையாகிப் போகலாம்.
பிற உயிரினங்கள் இன்றி மனிதன் மட்டும் இந்த உலகத்தில் வசதி வாய்ப்போடு கோலோச்சி விடலாம் என்று நினைப்பது ஏகாதிபத்திய மனநிலை மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட. தனிமனித சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டே உலகிற்கே பொதுவாக இருக்கும் இயற்கையின் சுதந்திரத்திற்கு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டு இருக்கிறோம்.
வனப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டும் இருந்தால் போதாது. மனிதனின் மனக்கட்டுபாடுக்கான சுயசட்டமும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்க வேண்டும். அரசின் கடமையும் தனிமனிதக் கடமையும் ஒருங்கிணைத்தால்தான் எந்தத் திட்டமும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் என்பதைத் தோல்வியடைந்த பல திட்டங்கள் வாயிலாகவே புரிந்துகொள்ளலாம். நகர்ப்புற விரிவாக்கத்திற்கும் கணக்கற்ற கட்டடங்களை கட்டுவதற்கும் அனுமதி அளித்துவிட்டு அதற்குத் தேவையான மணலை 'அள்ளாதே' என்று சொல்வதில் என்ன பலனிருக்கும், ஊழல், கொலை, கொள்ளை இவற்றைத் தவிர.
கடலரிப்பைத் தடுப்பதற்காக கரையோரங்களில் பாறாங்கற்களைக் கொட்டினால், தடுக்கப்பட்ட அலைகளின் ஆக்ரோஷம், கற்கள் கொட்டப்படாத அருகிலிருக்கும் வேறு கரையோர கிராமத்தை பதம்பார்க்கும் இயற்கையின் வலிமையை உணர்ந்து தெளிய வேண்டும்.
பிற உயிரினங்களைப் போல் மனிதனும் இயற்கை மற்றும் உயிரின சமன்பாட்டிற்கு உதவ வேண்டுமாயின் இயற்கையைப் பேணவேண்டும். இயற்கையாக பழுக்கும் வரை காத்திருக்கப் பொறுமையின்றி இரசாயனக் 'கல்' வைத்து மாம்பழங்களைப் பழுக்கவைத்து உடனே 'காசு ' பார்க்க முயலும் அவசரக்காரர்களிடம் நுகர்வோர் எச்சரிக்கையாய் இருந்து தம் உடல் நலனைப் பாதுகாத்து கொள்வதும், அதுபோன்ற செயற்கை உற்பத்திக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனம்.
இயற்கையின் சுழற்சியில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான உணவுச்சங்கிலியை பாதிக்கும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில் அழிந்து வரும் உயிரினங்கள் குறித்தும் கவனமாக சிந்திக்க வேண்டும்.
தற்காலிகமாக வாழ்ந்து விட்டுப் போக வந்திருக்கும் மனிதனுக்கு இந்தப் பூமியை சிதைத்துப் பார்க்க எந்த உரிமையும் கிடையாது. இந்த பூமி மனிதனுக்கு மட்டும் உடையது அல்ல; உயிரிபன்மயத்திற்கு உதவும் எல்லா உயிரினங்களுக்குமானது.
வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த அரிசியை பறவைகளுக்கு அள்ளிவீசி ஆனந்தம் கண்டவன் நம் பாரதி. நாமோ நம்மை அண்டி, மிச்சம் மீதிகளைத் தின்று உயிர்வாழும் பூனைகளை வெறுப்போடு அடித்து துரத்திவிட்டு "வெள்ளை நிறத்தொரு பூனை, எங்கள் வீட்டில் வளருது கண்டீர்" என போலியாகப் பாடுகிறோம்.
ஞாபகமிருக்கட்டும், பூமி நமக்கு அளித்திருக்கும் வாழ்வதற்கான இந்த அரிய வரத்தை எந்த தவத்தாலும் திரும்பப் பெறமுடியாது.
- ஆ.மீ.ஜவகர் (
- விவரங்கள்
- ச.பாலமுருகன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், முன்னால் இஸ்ரோ விஞ்ஞானியும், மத்திய திட்டக் குழு உறுப்பினருமான திரு கஸ்தூரிரங்கன் தலைமையிலான, மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான உயர்மட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவுடன், கேராளாவில் எதிர்க்கட்சியான சி.பி.எம் பந்துக்கு அழைப்பு விடுத்தது.
இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மலைப்பகுதியினை ஒட்டிய மக்களிடம் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக கேரளா அரசு மூன்று நிபுணர்களை நியமித்து அவர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 5 வரை கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்குச் சென்று கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும், அதன் அடிப்படையில் கேரள அரசு மத்திய அரசிடம் தனது நிலையினைத் தெரிவிக்கும் என்றும் கேரளா முதல்வர் உம்மன்சான்டி கூறினார்.
தமிழகத்தில் இப் பிரச்சனை பொதுத் தளத்தில் விவாதப்பொருளாக மாறாத நிலையில், தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி பகுதிகள் இவ் அறிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படும் நிலையிலும் தமிழக அரசு வெளிப்படையாக இந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு குறித்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்த நிலைபாடும் இதுவரை எடுக்கவில்லை.
குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 129037 சதுர கிலோமீட்டர் நீண்ட பரப்பு கொண்டதாக மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்து இன்றைய மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்த பகுதியாக சில ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படும் இம் மலைத்தொடர் தன்னகத்தே தேசிய பூங்காக்கள் மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என மொத்தம் இம் மலைத்தொடர்ச்சி 39 வகையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. இம் மலைத்தொடர்ச்சி தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தி போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.
அறிஞர் மாதவ் காட்கில் குறிபிட்டது போன்று அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் அவள். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.
கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போதிலும் இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருகதையற்றதாக மாறியுள்ளது. சுமார் 20,000 மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அந்தப் பஞ்சாயத்து, ஆலை மூட முடிவு செய்த தீர்மானத்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.
மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியினை மூன்று சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகப் பிரிப்பது என்றும் இதில் இப் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லது மலை வசிப்பிடங்கள் எதையும் புதிதாக உருவாக்கக்கூடாது, மலை கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்குவது தவிர புதிதாக விவசாயம் சாராத செயல்பாடுகளுக்காக நிலங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மலைப்பகுதியில் பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை நிறுவுவது, பூச்சி மருந்து அல்லது மரபினி மாற்றுப் பயிர்களுக்கும், மலைப்பகுதிக்கு தொடர்பற்ற குரோட்டன்ஸ் வகை செடிகளுக்குத் தடை விதிப்பது, யூக்கலிப்டஸ் மரங்களைத் தடுப்பது, சூழல் முக்கியத்துவப் பகுதி 1ல் பூச்சி மருந்து, இரசாயன உரப் பயன்பாட்டை 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் தடுப்பது, சூழல் முக்கியத்துவ பகுதி 2ல் அந்த தடையினை 8 ஆண்டுகளுக்குள்ளும், 3 வது பகுதியில் 10 ஆண்டுக்குள்ளும் நடைமுறைப்படுத்துவது, வன உரிமைச்சட்டம் 2006ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மக்களுக்கு அதன் படி நில உரிமை வழங்க முயற்சிப்பது,
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள வனக்கூட்டு நிர்வாக முறைக்கு பதிலாக வன உரிமைச்சட்டம் படி வளங்களை நிர்வகிப்பது, சிறு நில உரிமையாளர்கள் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சூழல் சேவைத் தொகை வழங்குவது, குறிப்பாக சூழல் முக்கியத்துவப்பகுதி 1 ல் உள்ள சுரங்கங்களை 2016க்குள் கை விடுவது, சட்டவிரோத சுரங்கங்களை உடனே தடுப்பது, இரண்டாம் பகுதியில் உள்ள சுரங்கங்களை தீவிரமாக கண்காணிப்பது, புதிய சுரங்கங்களுக்கு அனுமதி மறுப்பது, பகுதி 3ல் தீவிரமான ஆய்வுக்குப் பின் சுரங்க அனுமதி தருவது, ஆனால் மக்கள் இத் திட்டங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பது, பகுதி 1 மற்றும் 2ல் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கும் புதிய சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை தொழிற்கூடங்களுக்கு அனுமதி மறுப்பது, மூன்றாம் பகுதியில் தொழிற்சாலைகளை தீவிர கண்காணிப்புக்குப் பின் அனுமதிப்பது, அதே சமயம் சூழலுக்கு ஏற்ற பச்சை மற்றும் நீலத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது,
பகுதி 1 மற்றும் 2ல் புதிய பெரிய அணைக்கட்டுகளைத் தடை செய்வது, இருக்கும் பழைய காலாவதியான அணைகளைக் கைவிடுவது, புதிய நீர் மின்சார நிலையங்களை தவிர்ப்பது, சிறிய மின் நிலையங்களை ஆதரிப்பது, பகுதி 1ல் புதிய சாலைகள் ,இரயில் பாதைகளுக்குத் தடை விதிப்பது, தீவிர ஆய்வுக்குப் பின் பகுதி 2ல் இவற்றை அனுமதிப்பது, அத்தியாவசிய சாலைகளை பகுதி 3ல் அனுமதிப்பது, அதே போன்று பகுதி 1ல் சூழல் சுற்றுலா தடை செய்வது, இதை பகுதி 2 மற்றும் 3ல் அனுமதிப்பது, கேரளாவின் சாலக்குடி நீர்வீழ்ச்சி நீர் மின் திட்டத்தையும், கர்நாடகாவின் குந்தா நீர் மின் திட்டத்துக்கும் அனுமதிக்ககூடாது என்பதுடன் மேற்குத்தொடர்ச்சி மலையை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை ஆணையம் என்ற ஒன்றை தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை மாதவ் காட்கில் குழு கூறியது.
இந்த அறிக்கையினை கேரளாவில் உள்ள எஸ்டேட் உரிமையாளர்களும், நில வியாபாரிகளும் அவர்கள் சார்ந்த அரசியல் வட்டாரங்களும் முதலில் எதிர்க்கத் துவங்கினர். இந்த எதிர்ப்பு வலுத்து மாதவ் காட்கில் அறிக்கையினை முற்றிலும் கைவிடவேண்டும் என்ற நிர்பந்தம் மத்திய அரசுக்குச் சென்றது. அதன் பின்னர் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை உயர்மட்ட பணிக் குழு என்ற குழுவை அமைத்து மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையினை மறு ஆய்வு செய்தது. அந்தக் குழு தனது ஆய்வில் மேற்குத் தொடர்ச்சி மலையின் 1,64,280 கிலோ மீட்டர் தூரத்தில் 41 சதவிகித பகுதி உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பகுதி என்றும், அதில் 37 சதவிகிதப் பகுதி சூழல் முக்கியப் பகுதி (Eco sensitive area)இதனை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்,
இப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தீவிர கண்காணிப்புக்குப் பின் அனுமதிக்க வேண்டும், இப் பகுதியில் சுரங்கம், மணல் எடுப்பது, கல்குவாரிகள் ஐந்தாண்டுக்குள்ளோ அல்லது லைசன்ஸ் முடிந்ததுமோ தடைசெய்யப்பட வேண்டும், நீர் மின்சாரம் உற்பத்தி நீரோட்டத்தின் 30 சதவிகித நீரோட்டத்தை பாதிக்காத வகையில் அனுமதிக்கலாம், நதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் அல்லது 50 சதவீத நதிப் படுகையினை பாதிக்காத வகையில் திட்டப்பணிகள் அனுமதிக்கலாம், காற்றாலைகள் துவங்க சூழல் பாதிப்பு அனுமதி வாங்கவேண்டும், சிவப்பு வகை ஆலைகள் தடை செய்யப்பட வேண்டும், திட்டங்களுக்கு அனுமதிப்பது வெளிப்படையானதாக இருக்க வேண்டும், இப் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் துவங்கும் எல்லா திட்டப் பணிகளுக்கும் சூழல் பாதிப்பு ஆய்வு அவசியம், சூழல் பகுதியில் துவங்கப்படும் எல்லா திட்டங்களுக்கும் வன உரிமைச்சட்டத்தின் படி கிராம சபையின் ஒப்புதல் அவசியமானது, இப் பகுதியில் வன விலங்கு வலசைப் பாதைகள் சம்மந்தமான திட்டங்கள் பகுதி மக்களின் ஆலோசனையுடன் நடைபெற வேண்டும், கேரளாவின் சாலக்குடி மற்றும் கர்நாடக குண்டியா நீர் மின் திட்டத்துக்குத் தீவிரமான சுற்றுச்சூழல் ஆய்வுக்குப் பின் அனுமதிக்கலாம், இப் பகுதியில் 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானப்பணிகளை தடை செய்ய வேண்டும்.
மேற்கண்ட கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 13 நவம்பர் 2013 ல் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது.
மாதவ்காட்கில் குழு அறிக்கையோடு ஒப்பிடும் போது கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை கடுமை குறைந்ததாகவும் பல்வேறு தரப்பினரை திருப்தி படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும் வடிவமைத்த வடிவமாக உள்ளது. கிராம சபை மற்றும் மலைப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் ஆதரவோடு மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்கும் கொள்கை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இந்த அறிக்கைக்கு கூட எதிர்ப்பு வரத் துவங்கிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாப்பது வெறும் சூழல் சார்ந்த செயல்பாட்டுக்கு மாத்திரம் அல்ல, சமூகத்தில் நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை இயற்கை பாதுகாப்பு மேற்கண்ட எல்லா சிக்கல்களையும் தீர்க்கும் செயல்பாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
அறிஞர் குழுக்கள் திரும்பத் திரும்ப வன உரிமைச்சட்டம் மற்றும் மலைப்பகுதி மக்களின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்டுள்ளது. நடைமுறையில் வனத்துறை தனது அதிகாரவர்க்கப் பிடியில் மலையினையும் வனத்தையும் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றது. வனவிலங்கும் மக்களும் இணைந்து வாழும் நிலைப்பாடே வனவிலங்கு சரணாலயங்கள். ஆனால் வனவிலங்குப் பாதுகாப்புக்காக மக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்று அதிகார வர்க்கம் கூறும் நடைமுறையினை எதிர்கொண்ட மக்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு நடவடிக்கையிலும் தாங்கள் வெளியேற்றப்படக் கூடும் என அஞ்சுவது இயற்கையே. அரசு இந்த அச்சத்தைப் போக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க வேண்டும்.
- ச.பாலமுருகன் (
- விவரங்கள்
- பி.மாரியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உணர்வுகளின் அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை ஆறு வகைகளாகக் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். ஓரறிவினை
“ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே” (தொல். பொருள். மரபியல், 27)
என்றும் அதற்கு உதாரணமாகப்
“புல்லும் மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள். மரபியல், 28)
என்னும் அடிகள் மூலம் புல், மரங்களை ஓரறிவு உயிர்களாக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.
இங்கே அறிவியலார் புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளதை நாம் நோக்க வேண்டும். அறிவியல் கூறும் ஐம்புலம்கள் மெய், வாய், மூக்கு, கண், காது ஆகியனவாகும். இவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தொடுவுணர்வு கொண்ட தாவரங்களும் மரங்களும் ஓரறிவு உள்ள உயிரிகளாக முன்னரே வகைப்படுத்தப்பட்டுள்ளது வியப்புக்குரியதன்றோ!
தாவரங்களுக்கும் இசை கேட்கும் ஆற்றல் உண்டு என்று கூறுவோரும் உள்ளனர், ஒரு சில அறிவியல் ஆய்வுகளும் இதனை வலியுறுத்தியபோதிலும், இக்கருத்தினை அறிவியல் உலகம் இன்னும் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் அறிவியல் உலகம் தாவரங்களுக்குத் தொடுவுணர்வு உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குச் சான்றாகத் தொட்டாற் சிணுங்கிச் (Touch me not plant- Mimosa pudica) செடியினையும் பூச்சிகளை உண்ணும் தாவரத்தினையும் (Venus fly trap - Dionaea muscipula) கூறலாம்.
கடுகு குடும்பத்தினைச் சார்ந்த தாவரமான குதிரைப்புல்லில் (Arabidopsis thaliana) அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலமாக தாவரங்கள் மழை, காற்று முதலானவை ஏற்படுத்தும் அதிர்வுகளையும் உணர்ந்து செயல்படுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
- தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!
- பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு
- மஞ்சள் தொண்டைசிட்டு
- கானமயிலைத் தொலைத்தோம்!
- பேரீச்ச மரங்கள் - சில தகவல்கள்
- மணங்களின் ராணி ஏலம்
- காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்!
- மானாம்பள்ளி பயணத்தில் - பௌர்ணமி நிலவில்... சிறுத்தையின் சத்தம்...
- சரணாலயங்கள் – பாதுகாப்பு
- சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
- வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்
- பறவை நோக்குதல்
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்