பரபரப்பு மிகுந்த தற்காலச் சூழலில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வானத்தை அண்ணாந்து பார்ப்போமா?
இரவில் மின்னும் நட்சத்திரங்களையும் பகலில் வட்டமிடும் பறவையினங்களையும் ஒரு ரசனையோடு பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர்?
கோழியின் ஆக்ரோஷமான எதிர்ப்புகளுக்கிடையில் குஞ்சுகளை லாவகமாக தூக்கிச் செல்லும் பருந்துகள் எங்கே?
'க்விக்' 'க்விக்' எனும் ஒலிகளோடு நம் வீட்டு சிலந்தி வலையிலிருக்கும் சிலந்திகளை பிடித்துத் தின்றுவிட்டு 'விருட், விருட்' டென்று பறக்கும் சிட்டுக்கிருவிகள் மறைந்த மாயமென்ன?
தாவித் தாவி கொசுக்களைப் பிடித்து உண்ணும் தவளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததின் காரணம்தான் என்ன?
கண்ணைக் கவரும் செந்நிறம் இருந்தாலும் 'நறுச்', ' நறுச்' என கடிபடும் பேரிக்காய் போன்று அல்லாமல் மாவு போன்று மென்மையாக சுவை தந்த ஆப்பிள் ரகங்களை எந்த ஏவாள் கவர்ந்து சென்றாள்?
இன்னும் பல கானுயிர்கள் அருகிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன என்று கேட்பதும், அதற்கான பதிலும் ஒன்றே ஒன்றுதான். அது மனிதன். மனிதனன்றி வேறு எவர்/எது காரணமாக இருக்க முடியும்?
அறிமுகம் இல்லாத ஊரில் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு நிற்பவனைப்போல் தொழிநுட்ப சுடுகாட்டில் இயற்கையைத் தொலைத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறோம் நாம்.
மனிதன் தன்னைப் பெற்றவர்களுக்கும் வழிவழிவந்த மூதாதையர்களுக்கும் தருகின்ற மரியாதையில் ஒரு சிறு அளவையாவது தனக்குமுன்பே தோன்றி இந்த உலகை சேதாரமின்றி நமக்கு விட்டுச் சென்றிருக்கிற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் தரவேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறானா ?
புவி தோன்றியபோது நிலம், நீர், காற்று இருந்தன. பின் ஒரு செல் உயிரிலிருந்து பல செல் உயிரிகள் வரை தோன்றத் தொடங்கின. இதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனத்தின் தோற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இயற்கையாகத் தோன்றிய புல், பூண்டு, செடி, கொடி, மரம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை மனிதனின் உதவியின்றியே உயிர் வாழக் கூடியவை. ஆனால் பிற உயிரினங்களையும் இயற்கை உற்பத்திகளையும் மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய மனிதனோ உயிரினங்களை வேட்டையாடியும் இயற்கையை சூறையாடியும் தன்னுயிரை நிலைநிறுத்த முயல்கிறான்.
நகரப்பகுதிகளைப் பெருக்கி, காடுகளை அழித்து, வளிமண்டலத்தைக் கிழித்து, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துக் கொண்டே செல்வதால்தான் எப்போதாவது வரவேண்டிய ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், புவிவெப்பமயமாதல் போன்றவை அடிக்கடி வந்து அச்சுறுத்துகின்றன.
நகரப் பெருக்கத்தின் காரணமாக சுருங்கிப் போன குறுகிய வயல் பரப்பில் பேரளவு விளைச்சல் வேண்டி இரசாயனங்களைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் இயற்கையை நமது கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதான ஒரு மூடநம்பிக்கைதான். யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 'குடியிருப்புகளாக்கப்பட்ட' பகுதிகளில் நுழைந்து தாக்குவதை 'நாசம்' செய்கின்றன என்று கூறுகிறோம், நாம் செய்த நாசங்களை மறந்துவிட்டு. நீர்வழிப்பாதைகளை மறித்து கட்டடங்களைக் கட்டிவிட்டு பெருவெள்ளத்தில் ஊர் அழிந்தபின் 'பேரழிவு' என்று சொல்கிறோம்.
உயிரினங்களிலேயே முதிர்ச்சி பெற்ற உன்னதமான இனமாக நம்மை நாமே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு செய்கின்ற இயற்கை சூறையாடலுக்கு வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையைப் பகைத்துக் கொள்வதற்கும் புறக்கணிப்பதற்கும் மனிதனின் பேராசையும் கொடிய குணங்களுமே காரணம். இயற்கை நமக்கு வழங்கிய எண்ணிலடங்கா கொடைகளை வெட்டியும் வெடிவைத்து தகர்த்தும் ஆழத்தோண்டியும் உறிஞ்சியும் கொள்ளையடிக்கிற மகா கொள்ளையர்களாக இருக்கிறேம்.
பல்லாயிரம் கோடி ஆண்டுகள் வழிவழியாய் இப்புவியில் வாழ்ந்துவந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கைவளங்களும் குறைந்துவரும் அதேவேளையில் குடிநீர்த் தட்டுப்பாடும் இயற்கைப் பேரழிவுகளும் மனிதஇனத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதர்களின் வளம் காப்பதற்காக வரம்புமீறி செய்யப்படும் இயற்கைவள சுரண்டலால் 'தக்கன தப்பி வாழ்நிலை பெறும்' (survival of the fittest) எனும் சித்தாந்தம்கூட பிழையாகிப் போகலாம்.
பிற உயிரினங்கள் இன்றி மனிதன் மட்டும் இந்த உலகத்தில் வசதி வாய்ப்போடு கோலோச்சி விடலாம் என்று நினைப்பது ஏகாதிபத்திய மனநிலை மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட. தனிமனித சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டே உலகிற்கே பொதுவாக இருக்கும் இயற்கையின் சுதந்திரத்திற்கு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டு இருக்கிறோம்.
வனப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டும் இருந்தால் போதாது. மனிதனின் மனக்கட்டுபாடுக்கான சுயசட்டமும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்க வேண்டும். அரசின் கடமையும் தனிமனிதக் கடமையும் ஒருங்கிணைத்தால்தான் எந்தத் திட்டமும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் என்பதைத் தோல்வியடைந்த பல திட்டங்கள் வாயிலாகவே புரிந்துகொள்ளலாம். நகர்ப்புற விரிவாக்கத்திற்கும் கணக்கற்ற கட்டடங்களை கட்டுவதற்கும் அனுமதி அளித்துவிட்டு அதற்குத் தேவையான மணலை 'அள்ளாதே' என்று சொல்வதில் என்ன பலனிருக்கும், ஊழல், கொலை, கொள்ளை இவற்றைத் தவிர.
கடலரிப்பைத் தடுப்பதற்காக கரையோரங்களில் பாறாங்கற்களைக் கொட்டினால், தடுக்கப்பட்ட அலைகளின் ஆக்ரோஷம், கற்கள் கொட்டப்படாத அருகிலிருக்கும் வேறு கரையோர கிராமத்தை பதம்பார்க்கும் இயற்கையின் வலிமையை உணர்ந்து தெளிய வேண்டும்.
பிற உயிரினங்களைப் போல் மனிதனும் இயற்கை மற்றும் உயிரின சமன்பாட்டிற்கு உதவ வேண்டுமாயின் இயற்கையைப் பேணவேண்டும். இயற்கையாக பழுக்கும் வரை காத்திருக்கப் பொறுமையின்றி இரசாயனக் 'கல்' வைத்து மாம்பழங்களைப் பழுக்கவைத்து உடனே 'காசு ' பார்க்க முயலும் அவசரக்காரர்களிடம் நுகர்வோர் எச்சரிக்கையாய் இருந்து தம் உடல் நலனைப் பாதுகாத்து கொள்வதும், அதுபோன்ற செயற்கை உற்பத்திக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனம்.
இயற்கையின் சுழற்சியில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான உணவுச்சங்கிலியை பாதிக்கும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில் அழிந்து வரும் உயிரினங்கள் குறித்தும் கவனமாக சிந்திக்க வேண்டும்.
தற்காலிகமாக வாழ்ந்து விட்டுப் போக வந்திருக்கும் மனிதனுக்கு இந்தப் பூமியை சிதைத்துப் பார்க்க எந்த உரிமையும் கிடையாது. இந்த பூமி மனிதனுக்கு மட்டும் உடையது அல்ல; உயிரிபன்மயத்திற்கு உதவும் எல்லா உயிரினங்களுக்குமானது.
வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த அரிசியை பறவைகளுக்கு அள்ளிவீசி ஆனந்தம் கண்டவன் நம் பாரதி. நாமோ நம்மை அண்டி, மிச்சம் மீதிகளைத் தின்று உயிர்வாழும் பூனைகளை வெறுப்போடு அடித்து துரத்திவிட்டு "வெள்ளை நிறத்தொரு பூனை, எங்கள் வீட்டில் வளருது கண்டீர்" என போலியாகப் பாடுகிறோம்.
ஞாபகமிருக்கட்டும், பூமி நமக்கு அளித்திருக்கும் வாழ்வதற்கான இந்த அரிய வரத்தை எந்த தவத்தாலும் திரும்பப் பெறமுடியாது.
- ஆ.மீ.ஜவகர் (