கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ப.தனஞ்ஜெயன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. மேலும் இங்கு நில உரிமையும் மற்ற புறம் சார்ந்த உரிமைகள் அனைத்துமே விலங்குகளுக்கும் உண்டு. பல நூற்றாண்டுகளாக யானைகளை மனிதன் தன் வாழ்வைக் கட்டியமைக்க பயன்படுத்திக் கொண்டதை எவராலும் மறுக்க இயலாது.
பெரும்பாலும் யானைகள் பசிக்காகவே ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்கின்றன. இந்தியாவில் யானைகள் அதிகமாக உள்ள மாநிலத்தில் கேரளா மூன்றாவதாகத் திகழ்கிறது. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 6,177 யானைகள் இருந்ததாகவும், இன்று 5,700 யானைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி வந்த ஒரு யானைக்கு முதலில் அன்னாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்டதாக ஊடகம் முழுவதும் செய்திகள் வெளியானது. பின்பு அந்தச் செய்தி மறுக்கப்பட்டு இந்தியன் பிஸ்னஸ் டைம் என்கிற பத்திரிக்கை இந்திய வனத்துறை அதிகாரி ஏ.பி. கியூம் அவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்ட செய்தியில் சற்று மாற்றி, வெடிமருந்து நிரப்பிய அன்னாச்சிப் பழங்களை காட்டுப் பன்றிகளுக்காக வைத்திருந்தார்கள், அவற்றை யானைக்கு யாரும் கொடுக்கவில்லை, அதுவாகவே சாப்பிட்டு விட்டதாகக் கூறப்பட்டது.
அம்பலப்பாரா எனும் பகுதியில் வெடிமருந்து நிரப்பி இரப்பர் தோட்ட உரிமையாளர் வைத்திருந்த தேங்காய்களை மே மாதம் 12ம் தேதியே அந்த யானை சாப்பிட்டு வெடி வெடித்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி தெரிந்தும் அவர்கள் வனத்துறையிடம் முறையிடாதது சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் வெடிமருந்து பயன்படுத்தியதை எடுத்துக் காட்டுகிறது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட யானை சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுற்றித் திரிந்து உணவு உட்கொள்ள முடியாமல், புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மே மாதம் 25ம் தேதி வெள்ளியாரின் அருகே அந்த யானை சுற்றிக்கொண்டு இருந்தது பிறகு தான் தெரிய வந்தது என வனத்துறை கூறியிருக்கிறது. இத்தனை நாட்களாக பரிதவித்து வந்த இந்தச் செய்திகளை மக்களும் கண்டுகொள்ளவில்லை, வனத்துறைக்கு செய்தி ஏன் சொல்லவில்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.
அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், யானைகள் இங்கு விவசாயப் பொருட்களை சேதப்படுத்துவதாக நாங்கள் பல முறை வனத்துறையிடம் முறையிட்டாலும் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கின்றனர்.
மே மாதம் 25 −ல் பார்வையிட்ட வனத்துறையினர் மேலும் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் இரண்டு நாட்கள் போராடி மீட்க முடியாமல் மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போனதால், மே மாதம் 27−ல் யானை பரிதாபமாக உயிர் இழந்து விடுகிறது.அந்த யானையைக் கூராய்வு செய்த மருத்துவர் டேவிட், யானையின் இதயத்தில் அம்னோடிக் திரவம் (வளர்ந்து வரும் கருவிற்கு பாதுகாப்பு மெத்தையாக அமைந்திருக்கும் திரவம்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, யானை கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்து கண்கலங்குகிறார்.
இதற்கு பல்வேறு பிரபலங்கள் தனது கண்டனங்களை எழுத்துகள் மூலமாகத் தெரிவித்தாலும், அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும் குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளும் இன்னும் நிறையவே உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் யானையின் இறப்பு விகிதம் கூடிக் கொண்டே செல்கிறது. எப்படி பறவைகள் வலசை செல்கிறதோ அதேபோன்று யானையும் உணவுக்காக வலசைத் தடங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் மட்டும் யானையின் வலசைப் பாதைகள் 101 இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பாதைகள் இன்றும் 70 சதவிகிதம் யானைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 74 சதவிகிதப் பாதைகள் யானைக் கூட்டம் செல்வதற்கே துன்பப்படும் அளவிற்கு ஒரு கிலோமீட்டருக்குக் குறைவாக சுருங்கி விட்டன. மனிதனுடைய சுற்றுச்சூழல் சார்ந்த அறிவின்மையையும், அக்கறையின்மையையும் இந்தப் பாதை அழிப்பு காட்டுகிறது.
யானைகள் உணவுக்காக சுமார் 500 சதுர கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. ஏறக்குறைய இந்த வலசைத் தடங்களில்தான் நாம் இன்று இரயில்வேப் பாதை, புறவழிச் சாலைகள், கட்டிடங்கள், செங்கல் சூளைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய கட்டுமானங்கள் என பெரிய நிறுவனங்கள் அரசோடு கைகோர்த்து ஆக்கிரமிப்பினை அதிகார பலத்தால் நடத்திக் காட்டியுள்ளது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி மின்சார வேலி அமைத்தல், விஷம் வைத்தல், வேட்டையாடுதல், இரயில் விபத்து போன்றவையும் யானைகளின் அழிவிற்குக் காரணமாகும்.
ஆசிய யானைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் யானையின் இறப்பு விகிதமும், யானைகளால் இறந்த மனிர்களின் இறப்பு விகிதமும் ஏறக்குறைய 2300ஐத் தாண்டியுள்ளது. இது இயற்கை தன்னை சமன்நிலைப்படுத்த முயல்கிறது என்பதாகவே தோன்றுகிறது.
காடு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் சரிவர செயல்படாததே இந்த இறப்பிற்கு முக்கிய காரணமாகும். மனிதன் எப்பொழுதும் பூமியை தான் தான் ஆள வேண்டும் என்ற அதிகார வேட்கையால் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு போவதும் முக்கிய காரணியாக மாறி வருகிறது. இந்தியக் காடுகளில் இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் 50,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாகவும், 2017 ஆம் ஆண்டு 27,000 யானைகள் இருந்ததாகவும், 2019 ஆம் ஆண்டின் நிலவரப்படி 31,368 யானைகள் இருப்பதாகவம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நூற்றாண்டில் வளர்ச்சி என்கிற சொல்லில் சிக்கிக் கொண்டு 20,000 யானைகளை இழந்திருக்கிறோம்.
மனிதன் தந்தங்களை வேட்டையாட ஆரம்பித்ததிலிருந்து யானையின் மரபுப் பொருள் (ஜெனிட்டிக் கோடுகள்) முற்றிலும் மாறி அழிந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செயலால் இப்பொழுது பிறக்கும் யானைகள் பெரும்பாலும் தந்தங்கள் இல்லாமலேயே பிறக்கின்றன. மரபணு மாற்றம் மாறி தந்தங்களை இழந்து விட்ட யானைகள் குறித்த செய்தி மனிதன் யானைகளுக்குச் செய்த மிகப் பெரிய துரோகமாகும். பல நூற்றாண்டுகள் நடுநிலை வகித்த மரபு அணுவை மாற்றி பல இனங்களுக்குச் சவாலாக உள்ளான் மனிதன்.
இதோடு யானைத் தந்தங்கள், அவற்றின் தோல் மற்றும் முடி போன்றவற்றை சர்வதேச அளவில் விற்பனை செய்து கோடிகளை சம்பாதிக்கிறான். ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா என்கிற நாட்டில் யானைகளை குண்டுகளால் துளைத்து வேட்டையாடிக் கொல்கின்றனர். இவர்கள் யானையைக் கொன்று தேவைப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு மீதமுள்ள யானையின் உடலை வீசிவிட்டுச் செல்லும் பொழுது, அந்த உடலை கழுகுகள் காட்டி கொடுத்து விடுவதால் அவற்றையும் விஷம் வைத்துக் கொல்லும் அளவிற்குச் செல்கிறார்கள். இக்கொடூரங்களுக்கு எதிராகப் போராடும் மனிதர்களையும் கொன்று தங்கள் வியாபாரங்களை நடத்துகிறார்கள் என்பதும் அச்சப்படுத்தும் செய்திகளாகவே இருக்கின்றன. பல்லுயிர் சுழற்சியில் கைவைத்து அழித்துக் கொண்டிருக்கும் மனிதன் இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறையவே இருக்கின்றன.
காடுகள் அழிந்து யானைகளும் அழிந்து வரும் அபாயகரமான சூழலில் கேரளாவில் இறந்த யானை கடைசியாக இருக்கட்டும். மனிதர்கள் மத்தியில் கருணையையும் இயற்கை குறித்த அறிவையும் இன்னும் அதிகப்படுத்துவதை நம் கடமையாகக் கொண்டு செயல்படவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
- ப.தனஞ்ஜெயன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக ஓய்வின்றி வேலை செய்யும். அவை ஒரு சிறந்த Pollinators. நமது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் வழக்கமாக சொல்லும் ஒரு வழக்காடல் உண்டு. அது, "தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்". அந்தத் தேனீக்கள் தற்போது புவி வெப்பமடைதலால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை.
தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு தாவரங்கள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை பம்பிள் தேனீக்களின் (bumble bees) எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகை தேனீக்களின் முகம் குண்டாகவும் இறக்கைகள் நீளமாகவும் பார்ப்பதற்கு வண்டுகள் போலக் காட்சியளிக்கும். இவை பெரும்பாலும் குளிர்ப் பிரதேசத்தில் அதிகம் வசிக்கக் கூடியவை. மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பிற பூச்சி வகைகளை (Pollinators) விட பம்பிள் தேனீக்கள் வேகமாக பறந்துச் செல்லக் கூடியது.
கடந்த வாரம் 'Science Journal' இதழில் வெளிவந்த அறிக்கையில் தொடர் காலநிலை மாற்றம் மற்றும் அதிகப்படியான வெப்பநிலை உயர்வுதான் இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணம் என்கிறது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான ஒட்டாவா பல்கலைக்கழக (University of Ottawa) தாவரவியல் வல்லுனர் Peter Soroye அவரின் கருத்தின்படி "எந்தப் பகுதிகளில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்ததோ, அங்கு பம்பிள் தேனீக்கள் முன்பு இருந்ததைவிட அதிகமாக அழிந்து விட்டன. இவை காட்டுப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு (Pollinators) உதவியாக இருந்து காய்கறிகள், பெர்ரி போன்ற பழங்கள் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. நாம் வாழும் காலத்திலேயே தேனீக்கள் இல்லாமல் போவது எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியை அடிப்பதாக இருக்கிறது" என்கிறார் அவர்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இதற்கு முன்பு இரண்டு முறை பம்பிள் தேனீக்கள் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. 1901 - 1974 மற்றும் 2000 - 2014 காலகட்டத்தில் நடைபெற்ற ஆய்வுகளைக் கொண்டு பார்க்கும் போது, தற்போது வெப்பநிலை உயர்வால் பம்பிள் தேனீக்களின் இனப்பெருக்கம் அதிகமாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றங்களை 'climate chaos' என்று அழைக்கிறார்கள் வல்லுநர்கள்.
மேலும் இந்த ஆய்வில் வட அமெரிக்கா கண்டத்தில் மட்டும் 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு பூச்சிகளின் (insects) அளவு வழக்கத்தை விட குறைந்துள்ளதாகவும், அதில் பம்பிள் தேனீக்கள் எண்ணிக்கை மட்டும் 50%க்கும் கீழே குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்கள் போன்ற குணாதிசயங்கள் கொண்ட பூச்சிகள் (Species) எந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பட்டதோ, அந்தப் பகுதியில் அவை பெரிதும் காணாமல் போய்விட்டது. உதாரணமாக கனடாவின் ஒன்டாரியோ (Canada's Ontario) பகுதியில் இந்த வகை பம்பிள் தேனீக்கள் (Bumblebees) முற்றிலுமாக மறைந்து விட்டது.
இந்த பம்பிள் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல் என்னவென்றால், ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து போகும் போது, இந்த வகை பம்பிள் தேனீக்களையும், பிற பூச்சிகளையும் கூடவே அழைத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்: https://insideclimatenews.org/news/05022020/bumblebee-climate-change-heat-decline-migration?utm
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன.
இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் பாரம்பரிய மருந்து உற்பத்தி செய்வதற்கென உலகம் முழுவதிலும் இருந்து கழுதைகள் திருட்டுத்தனமாகவும், நேரடியாகவும் கடத்தப் படுகின்றன.
சீனாவில் ஆண்டுக்குச் சுமார் 48 லட்சம் கழுதைத் தோல்கள் தேவைப்படுகின்றன. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.
உலகெங்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் - குறிப்பாகப் பெண்கள் - உடைய வாழ்வாதாரத்துக்குக் கழுதைகள் பேருதவியாக உள்ளன. தண்ணீர் கொண்டு செல்லுதல், உடல்நலம் குறைந்தோரை மருத்துவமனைகளுக்கும், குழந்தைகளைப் பள்ளிக்கும் கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்குக் கழுதைகள் பயன்படுகின்றன.
கடத்திச் செல்லப்படும் கழுதைகள் மிக மோசமான முறையில் நடத்தப் படுகின்றன. அதன் விளைவாக ஐந்தில் ஒரு பங்குக் கழுதைகள் வழியில் இறந்து விடுகின்றன.
https://thewire.in/environment/is-indias-donkey-population-falling-prey-to-chinese-ejiao-producers
---------------------
உலகின் காடுகள், புல்வெளிகள், 'தரிசு' நிலப் பகுதிகள், பனிப் பாறைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் சுமார் 4,35,000 வகையான புதலிகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.
பசுங்குடில் வளி வெளியீடு, புவி சூடேறுதல், காடழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளின் விளைவாக மேற்கண்ட நிலப் புதலிகளில் (அதாவது, நீர் நிலைகளில் அல்லாது நிலத்தில் வளரும் செடி, கொடி, மர வகைகள்) நாற்பது விழுக்காடு அழியுந் தருவாயில் உள்ளன!
நம் மிதமிஞ்சிய நுகர்வு, அதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ('முதலாளித்துவம்' எனப்படும்) முதலாண்மைப் பொருளாதார முறைமை ஆகியவையே இந்தப் பேரழிவுக்குக் காரணங்கள்.
நமக்கு உணவாகப் பயன்படுகின்ற புதலிகளின் 'உறவுகளும்' அழிந்து வரும் புதலியினங்களில் அடங்கும். இது நம் வருங்கால உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். (இப்போது நாம் விளைவிக்கும் பயிர்கள் புதுப் புது நோய்களால் தாக்கப்படல், சூழல் மாறுபாட்டால் விளைச்சல் குன்றுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கையில் அப்பயிர் வகைகளின் 'உறவு'களில் இருந்து வலு மிக்க புதுப் பயிரினங்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால், அப்படி உறவாகும் உயிரினங்கள் அழிந்து விட்டால் புது ரகங்களை உருவாக்குவது மிகக் கடினமாகிவிடும்.)
- பரிதி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கிராமப் புறங்களில் ஆடு வளர்ப்பு என்பது இயல்பானதாக இருக்கும். ஏனெனில், அதற்குப் பிரத்தியேகமாக ஏதும் செலவு செய்து தீவனம் வாங்கத் தேவையில்லை. வயக்காட்டு ஓரங்களில், குளங்களை ஒட்டிய காடுகளில், ஆற்றுப் படுகைகளில், உடைமரம் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள புற்களை மேய்ந்து விடும், பின்னர் அதுவே செரிமானமாகி வெளிவரும் ஆட்டுப் பழுக்கைகள் சூழலியலுக்கு ஏற்றதாக மாறிவிடும்.
எங்கள் ஊர்ப் பகுதிகளில் பெரிய ஆட்டு மந்தைகள் வைத்திருக்கும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஆடுகளை வெவ்வேறு வயக்காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று 'ஆட்டுக் கிடை' அமைப்பார்கள். பகல் முழுவதும் ஆடுகள் காட்டுப் பகுதியில் மேய்ச்சல் செய்துவிட்டு, இரவில் அந்த கிடைகளில் தட்டி வைத்து உறங்க வைத்து விடுவார்கள். காலையில் அவை படுத்திருந்த இடங்கள் முழுவதும் ஆட்டுப் புழுக்கைகளாக இருக்கும். அடுத்த நாள் வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள். இப்படிச் செய்வதால் நுண்ணுயிர்கள் பெருகும், இயற்கை உரம் அந்த மண்ணில் கால்நடைகள் மூலமாகக் கிடைத்துவிடும்.
அமெரிக்காவிலும் இந்த முறையைக் கையாளுகின்றனர். இயற்கை உரத்திற்காக அல்ல. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக - ஆடுகளை மலையோர காட்டுப் பகுதிகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்காக!
'கலிபோர்னியா' என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'ஹாலிவுட்' இல்லை என்றால் 'சிலிக்கான் பள்ளத்தாக்கு' (Silicon valley). ஆனால், அமெரிக்க மக்களைக் கேட்டால் வேறு விதமாக 'Shake, Bake & Spin' எனச் சொல்வார்கள்.
ஆம், கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏதாவது ஒரு மலைக் காடுகளில் தீ எரிவது வழக்கமாக உள்ளது. 2018ல் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பேரடைஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, (camp fire) அந்தப் பகுதியையே சாம்பல் காடாக்கியது. ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து எரிந்த காடுகள், பல மனித உயிர்களையும் வன விலங்குகளையும் பலி கொண்டது. இதில் தோராயமாக 600,000 ஏக்கர் பரப்பளவில் வனக் காடுகள் எரிந்தது.
கடந்த ஆண்டு அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், மாலிபு பள்ளத்தாக்கிலும் ஏற்பட்ட காட்டுத் தீ (Woolsey fire), சுமார் 100,000 ஏக்கர் பரப்பளவில் காடுகளை சாம்பலாக்கியது.
2017, 2018 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, கலிபோர்னியா வரலாற்றில் மிகவும் தீவிரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகும்.
2019 ஆம் ஆண்டும் காட்டுத் தீ, கலிபோர்னியா மாகாணத்தை மிகக் கொடூரமாக சேதப்படுத்தியது. இவையனைத்தும் புவி வெப்பமயமாதலுடன் தொடர்பு உடையது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீயணைப்புத் துறையினரும், சில நகரங்களில் அரசுத் துறையினரும் காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் கால்நடைகளை புற்கள் அதிகம் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்துவது. இது அந்த நகரத்தில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அனாகிம் நகரின் நகராட்சி நிர்வாகம். காட்டுத் தீ பரவாமல் இருக்க ஒரு திட்டமாக (Anaheim, City Hall) ஆட்டு மந்தைகளைப் பயன்படுத்தலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். புகழ் பெற்ற 'டிஸ்னி லேண்ட்' இந்தப் பகுதியில் தான் உள்ளது.
Deer Canyon Park பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் குன்றுகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்கு, கால்நடைகள் குறிப்பாக ஆடுகளை அதிகளவில் ஈடுபடுத்த முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இதனால் அதிகளவில் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்கலாம். "காடுகளில் ஏற்படும் தீயானது, தொடர்ந்து பரவி அதிகமாக விரிவடைய காய்ந்த புற்கள் அதற்கு 'Fuel' ஆக மாறி விடுகிறது. காய்ந்த புற்களை ஆடுகள் தின்று, செரிமானமாகிய அதன் புழுக்கைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாக அமையும், அதே வேலையில் தீயையும் கட்டுப்படுத்தலாம். ஒரு வகையில் இது ஒரு சூழலியல் முறை (ecology) தான்" என்கிறார் Environmental Land Management மேலாளர் ஜானி ஹோன்சாலேஸ்.
பேராசிரியர் Bethany Bradley, professor of environmental conservation at UMass Amherst and co-author of the study, "மழை பொழியும் பருவ காலங்களிலும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை, எனினும் அடுத்த பருவம் (Spring) தொடரும் போது இளம் புற்கள் வளர ஆரம்பித்து விடும். இந்த உயிரியல் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். இப்படி வளரும் புற்களை உண்டு உயிரியலை சுழற்சி முறையைக் காக்க, ஆடுகள் ஆகச் சிறந்த வேலையை செய்கின்றன. ஆடுகள் புற்களை நல்ல மேய்ந்து தின்னும், ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவைகளை வைத்து ஒருமுறை மட்டும் இப்படி செய்தால் போதாது. தொடர்ந்து காட்டில் உயிரியல் சுழற்சி நடைபெற கால்நடைகள் ஒவ்வொரு முறையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்." (https://www.npr.org/2020/01/05/792458505/california-cities-turn-to-hired-hooves-to-help-prevent-massive-wildfires)
கால்நடைகளைக் கொண்டு மேற்கொள்ளும் இந்த முறையானது, தீ பரவுவதைப் தவிர்க்க பரவலாக சூழலியல் ஆர்வலர்களால் முன்வைக்கும் முறையில் ஒன்று. இதை மறுப்பவர்களும் உண்டு. அதாவது, "ஆடுகளை எல்லா இடத்திலும் கொண்டு போக முடியாது. ஆடுகள் போக முடியாத இடங்களில், பல மடங்கு உயரத்தில் புற்கள் வளர்ந்து இருக்கும். அவைகளை எப்படி அகற்ற முடியும்?" என்கிறார்கள்.
பொதுவாக தீ எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து எரிய மூன்று இன்றியமையாத காரணிகள் உண்டு. அதை 'Fire triangle' என அழைப்பார்கள். அதாவது Heat, Fuel, Oxygen. இதில் ஒன்றைத் தடுத்து நிறுத்திவிட்டால் தீ தானாகவே அணைந்து விடும். காடுகளில் தீ தொடர்ந்து எரிவதற்க்கு 'Fuel' ஆக காய்ந்த புற்கள், இலை, தழைகள் அமைந்து விடுகிறது.
ஆதலால் காட்டுத் தீ ஏற்பட்டால் அதிக பரப்பளவில் படராமல் இருக்க கால்நடைகளைப் பயன்படுத்தும் முயற்சியும் வரவேற்க்கத் தக்கது.
- பாண்டி
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...
- தேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!
- சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு
- இன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும்
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?