தமிழகத்தில் பன்னிரெண்டு இடங்கில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் நீர்நிலைகளில் அமைந்தவைதான். வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே தங்குகின்றன. பொதுவாகவே அதிக பறவை வகைகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை நீர்நிலைகள். பல்வேறு பறவைகளுக்கு இரை தரும் அமுதசுரபியாய் அவை உள்ளன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே நீர்ப்பறவைகள் கூடு கட்டுகின்றன. கூட்டங்கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கம் நீர்ப்பறவைகளின் தனிப்பண்பு.

european_roller_360தாராளமாக இரை கிடைக்கும் இடங்கள், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன. அப்படிப்பட்ட சில நீர்நிலைகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.

நீர்நிலைகளுக்கு உள் சூழலியல் – பல்லுயிரிய முக்கியத்துவத்தைப் பொருத்து ‘ராம்சர் மாநாடு’ அந்தஸ்து வழங்கப்படுகிறது. முக்கிய பாரம்பரியச் சின்னங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்படுவதைப் போல, நீர்நிலைகளுக்கு ராம்சர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தைப் பெற்ற நீர்நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களை தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. ஒரு சரணாலயத்திலே குறிப்பிட்ட சில பறவைகளின் வருகை அதிகரிப்பு காலப்போக்கில் மாறுகிறது.

வேடந்தாங்கல், கூந்தங்குளம், கரிக்கிளி, வடுவூர், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூர் ஏரி போன்று பறவைகள் கூடும் இடங்களுக்கு பறவை நோக்க சென்றுள்ளேன். காட்டுயிர்கள் மீது ஆர்வம் அதிகரித்தபோதும், காடுகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கையை நேரடியாக நோக்கும் வாய்ப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது. ஆனால் எல்லா காலமும் பறவைகள் நோக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்தது. நகரத்தில் வாழ்ந்து கொண்டே இயற்கையோடு நெருக்கத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் பறவை நோக்குதல் முக்கியமானது.

என் திருச்சி வீட்டுத் தோட்டத்திலேயே தினசரி 10 வகை பறவைகளை பார்க்க முடிந்தது. அதேநேரம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறவை சரணாலயங்களுக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை வந்த பின் இந்தப் பழக்கம் தொடர்ந்தது.

பறவைகளை நோக்குவதற்குத் தேவையான இரு கண்ணோக்கியும் வாங்கியிருந்தேன். காட்டுயிர்கள், பறவைகளைப் படமெடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது.

சென்ற இடமெல்லாம் பல பறவைகளுக்கு ஆளாளுக்கு ஒரு பெயர் கூறுவார்கள். ஏற்கெனவே காதில் விழுந்த பெயர்களை பார்க்கும் பறவைகளுக்கு சூட்டி விடுவார்கள். கொக்கையும் நாரையையும் ஒன்று என்பார்கள். இதழ்கள், செய்தித்தாள்களில் எழுதும் போதும், படம் வெளியிடும்போதும் பலர் ஆங்கிலப் பெயரை குறிப்பிடுகிறார்கள். அல்லது தவறான தமிழ்ப் பெயரைத் தருகிறார்கள். வழக்குப் பெயர் என்ன? சரியான தமிழ்ப் பெயர் எது என்று கவனம் செலுத்துவதில்லை.

சில பறவைகள் தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும், மிக நுணுக்கமான வகையில் வேறுபட்டிருக்கும். முக்கிய அடையாளங்களைக் கொண்டு பறவைகள் பிரித்தறிந்தால் தான், அவற்றின் உணவு உள்ளிட்ட இதர பழக்கவழக்கங்களை சரியாக உணர முடியும். இதற்காகத்தான் பறவைகளின் சரியான பெயர்களை அறிய முயற்சிக்கப்படுகிறது.

பறவைகளைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரிப்பது அவசியமே. அத்துடன் அவற்றை சரியாக அறிய பறவைகளின் முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். அலகு, கால், உடல், சிறகுத்தொகுதி, உணவுப்பழக்கம், கூடு அமைந்துள்ள இடம் உள்ளிட்ட அம்சங்களை பறவை புத்தகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண வேண்டும்.

தொடக்க காலத்தில் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரியாது. அவற்றின் பழக்கவழக்கங்களை பார்ப்பதில் கவனம் செலுத்துவேன். அப்பகுதிக்கு வரும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்க முயற்சிப்பேன். பிறகு புலவர் க.ரத்னத்தின் தமிழ்நாட்டுப்  பறவைகள் குறித்த தமிழ்ப்புத்தகம், விஸ்வமோகன் பட் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் (N.B.T.) வெளியிட்ட ‘ஜாய் ஆப் பேர்ட்வாட்சிங்’, தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்ட வேடந்தாங்க-வாட்டர் பேர்ட் சேஞ்சுவரி, சாலிம் அலியின் ‘பறவை உலகம்’, கூந்தங்குளம் பற்றி உலகை இயற்கை நிதியம் (WWF) வெளியிட்ட சிறு வெளியீட்டைக் கொண்டு பறவைகளை அடையாளம் காண பழகிக் கொண்டேன்.

மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்றழைக்கப்படும் பறவையை பலரும் செங்கால் நாரை என்பார்கள். இது தவறு. ஆங்கிலத்தில் White Stork என்றே இப்பறவை அழைக்கப்படுகிறது. தமிழில் செங்கால் நாரை. குளிர் காலத்தில் தமிழகத்துக்கு வலசை வரும் இப்பறவை அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. அதனால் இதைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பலருக்கும் நாரைகளைப் பற்றித் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, சத்திமுற்றப் புலவர் குறிப்பிடும் செங்கால் நாரை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதன் வீச்சு விரிவானது என்றாலும், அறியாமையால் பல நேரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் மூக்கு நாரை உள்ளூர் வலசை பறவை. வேடந்தாங்கல், கூந்தங்குளம், பழவேற்காடு உள்ளிட்ட சரணாலயங்களில் இது பெருமளவு கூடுகிறது. இந்தப் பறவைகளை பெரும் எண்ணிக்கையில் பார்க்கலாம்.

ஒரு சூழல் செழிப்பாக, உயிர்வளத்துடன் வளங்குன்றா வளர்ச்சியை தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா – சீர்கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளம்.

பறவைகளை நோக்குதல் மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்கு போலவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. காட்டுயிர் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களும் பறவைகளை நோக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

பறவை நோக்குதல் வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. இது காட்டுயிர் அறிவியலின் ஒரு பிரிவு. பறவைகளின் உணவுப் பழக்கவழக்கம், செயல்பாடுகள், நடமாட்டங்களை கவனிப்பது பல்வேறு நுணுக்கமான விஷயங்களை உணர்த்தும். பறவை நோக்குதலின் பிரதான நோக்கம், அவற்றின் அழகைப் பார்த்து வியப்பதல்ல. பழக்கவழக்கத்தை ஊன்றி நோக்குவதும், அதன்மூலம் பல்லுயிரிய சுழற்சியில் அவற்றின் பங்கேற்பைப் புரிந்து கொள்வதுமே அடிப்படை நோக்கம். பறவையியல் என்பது ஓர் அறிவியல் துறை. அதன் நீட்சியே பறவை நோக்குதல்.

Pin It