கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உறங்கும் பறவைகளைத் தாங்கும் கூடு போலவே,
மௌனம் உனது குரலைக் காப்பாற்றும்
- தாகூர்
தமிழகம் எங்கும் காணப்பட்டு வந்த சிட்டுக்குருவி (House sparrow) இனம் அண்மைக்காலமாக கோவை, ஈரோடு, பழனி, மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்பகுதிகளில் நகரங்கள் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
சிறுதானியங்களான தினை, கம்பு, சாமை, வரகு, வேலியில் சிறு விதைகளுடைய செடிகள் போன்றவற்றை பயிரிடுவது குறைந்துவிட்டதாலும், சிறு விதைகளுடைய செடிகள் இல்லாமல் வீடுகள் நவீனமடைவதாலும், வீட்டுச் சிறு கிணறுகள் மூடப்படுவதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிறு புழு பூச்சிகள் குறைந்து வருவதாலும், வளர்வதற்கேற்ற சூழ்நிலை இல்லாததாலும் வீட்டுச்சிட்டுகள் முற்றிலுமாகக் குறைந்து வருகின்றன.
இன்றும் திருநெல்வெலி மாவட்டப் பகுதிகள், நீலகிரி மாவட்டப் பகுதிகள், கோத்தகிரி பகுதிகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் அவை காணப்படுவதற்கு பழைய அமைப்பு கொண்ட வீடுகள், சிறு விதைகளைக் கொண்ட பல வகை செடிகள் இன்றும் அங்கு இருப்பதுதான் முக்கிய காரணம். குருவிகள் வளர்வதற்கேற்ற சூழ்நிலை எங்கு அமைந்துள்ளதோ அங்கெல்லாம் அச்சிட்டுகள் இயல்பாகக் காணப்படுகின்றன .
மைனா, காகம் போன்று சிட்டுக்குருவிகளின் உணவுப் பழக்கமும், கூடு கட்டும் பழக்கமும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியாததும் அவை குறைந்து, அழிந்து வருவதற்கு முக்கிய காரணம். உதாரணத்துக்கு காகம், தேன்சிட்டு போன்ற பறவைகள் கம்பிகளில்கூட கூடுகட்டுகின்றன.
வீட்டுச்சிட்டின் அளவுடைய பறவைதான் மஞ்சள் தொண்டைச் சிட்டு. (Yellow throated Sparrow). இச்சிட்டை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இச்சிட்டைப் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. இவை வேகமாக அழிந்து வருகின்றன. காலப்போக்கில் தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது.
இது சிறு தானியங்கள் மட்டுமன்றி சோளத்தை மிகுதியாக விரும்பி உண்ணக் கூடிய பறவை. சோளம் விளைந்த காடுகளிலும், கதிர் அறுத்த களத்திலும் சிறுசிறு கூட்டமாக ஆங்காங்கே முன்னர் பரவலாகக் காணப்பட்டு வந்த நிலைமாறி, தற்போது இவற்றைக் காண்பது அரிதாகிவிட்டது. ஓராண்டுக்கு முன் தாராபுரம் பகுதியில் கடைசியாக இச்சிட்டைப் பார்த்தேன். அன்பர்கள் யாராவது மஞ்சள் தொண்டை சிட்டை பார்க்க நேர்ந்தால் தெரிவிக்கவும்.
வீட்டுச்சிட்டை போன்ற இயல்பைக் கொண்டதாக இருந்தாலும் நகர்ப்புறங்களில் இதைப் பார்க்க முடியாது. வனத்தை ஒட்டிய திறந்தவெளிப் பகுதிகளிலும், தானியங்கள் விளைந்த திறந்த காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே காணக்கூடியது.
இதன் கூடும் வீட்டுச்சிட்டைப் போன்ற அமைப்புடனே இருக்கும். வீட்டுச்சிட்டு ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். ஆனால் இவை பிப்ரவரி, மே மாதங்களில் முட்டையிடுகின்றன. மரப்பொந்துகளில் 8 முதல் 40 அடி உயரம் வரை கூடு கட்டுகின்றன. ஒரு முறை திறந்த வெளியில் சோளக்காட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 12 அடி நீளமும் ஒன்றரை அங்குல விட்டமும் கொண்ட இரும்புக் குழாயின் முகத்துவாரத்திலிருந்து அரை அடி உள்ளே குச்சிகளையும் சருகுகளையும் கொண்டு அடைப்பு ஏற்படுத்தி இது கூடு கட்டியிருந்ததைப் பார்த்தேன். சாதாரணமாக 3&4 முட்டைகள் வரை இடும்.
இதன் முக்கிய எதிரி யாரென்று கேட்டால், மனிதன்தான். சிறுவர்கள் விளையாட்டாக உண்டி வில் கொண்டு அடிப்பது மட்டுமில்லாமல், சிலர் உணவுக்காகவும் இதை அழிக்கின்றனர். வளர்ப்புப் பூனை, காகம், சிறிய வல்லூறுகளான சின்ன வல்லூறு , சிவப்பு வல்லூறு போன்ற பறவைகளாலும் இதற்கு ஆபத்து ஏற்படுகிறது.
இப்பறவைகளை அழிவிலிருந்து பாதுகாக்க, இவை இருக்கும் இடத்தில் வாழ்பவர்கள் அவற்றை பாதுகாக்க முயற்சிக்க வெண்டும். சிறு தானியங்களான தினை, வரகு, ராகி போன்று இவை உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து நாள்தோறும் வெளியே தூவி பழக்கினால் இவை முற்றிலும் அழிவதிலிருந்து பாதுகாக்க முடியும்.
கட்டுரையாளர் முகவரி: டி.ஆர்.ஏ. அருந்தவச்செல்வன், 414, ஆண்டவர் காம்ப்ளெக்ஸ், கிராஸ் கட் சாலை, கோவை 641 012, மின்னஞ்சல்:
சாலிம் அலியை உருவாக்கிய சிட்டு
உலகப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலி, பறவைகளின் மீது ஈடுபாடு கொண்டதற்கு அடிப்படையாக அவரது சிறு வயதில் ஒரு சம்பவம் நடந்தது.
அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் "ஏர் கன்" எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் இருந்தன. சாலிமுக்கும் அப்படி ஒரு துப்பாக்கி பரிசாகக் கிடைத்திருந்தது. ஒரு நாள் தொண்டைப் பகுதியில் மஞ்சளாக, சற்று புதுமையாக இருந்த ஒரு குருவியை சாலிம் அலி சுட்டார். அந்தக் குருவியை அதற்கு முன் அவர் பார்த்ததில்லை. அது முற்றிலும் புதிதாக இருந்தது. நம்மிடம் உள்ள பறவைகளில் இருந்து இது மாறுபட்டிருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது. அவரது மாமாவுக்குத் தெரிந்த சிலர் பி.என்.எச்.எஸ் எனப்படும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் இருந்தார்கள். பறவைகள், உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, சூழலை காக்க முயற்சிப்பதுதான் அந்த நிறுவனத்தின் வேலை. மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி அறிந்து கொள்வதற்காக, சாலிம் அந்த நிறுவனத்துக்கு சென்றார். அங்கு நிறைய பறவைகள் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டன, அருங்காட்சியகங்களில் வைத்திருப்பதைப் போல. அப்பறவைகளால் கவரப்பட்ட சாலிம், தனக்குள்ளே இப்படி முணுமுணுத்துக் கொண்டார் "பறவைகளைப் பற்றி என்னவெல்லாம் முடியுமோ, அவற்றைப் பற்றி ஒரு நாள் படிப்பேன்" என்று.
பிற்காலத்தில் அவர் பறவையியல் அறிஞராக இந்தச் சம்பவமே காரணம். பின்னர் அவர் பி.என்.எச்.எஸ்ஸின் தலைவராக உயர்ந்தார். பி.என்.எச்.எஸ் தீவிரமான பணிகளில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் சாலிம் அலியே.
(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழகம் இழந்த, இழக்கப் போகிற அரிய உயிரினங்கள் - ஒரு பார்வை
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் மூலம் மரபணுவிலேயே தகவமைப்பைப் பெற்று தனித்துவம் மிக்க உயிரினங்கள் உருவாகின்றன. ஆனால் இயற்கை இப்படி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய உயிரினங்கள், மனிதர்களால் ஒரு சில ஆண்டுகளில் ஓர் இடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போகின்றன. இப்படி நாம் இழந்தது அநேகம். இழக்கப் போவதன் எண்ணிக்கையும் குறைச்சலாக இல்லை. கடந்த 6.5 ஆண்டுகளில் ஆறாவது மிகப் பெரிய உயிரினப் பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது என்று உயிரின பாதுகாவலர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?...
இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனமாகவும், நகர்மயமாகவும் உருமாறி வரும் அதன் வளர்ச்சிகள் இன்னும் 8 ஆண்டுகளில் நாட்டை வல்லரசாக்கி விடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அதற்குள் நாம் எத்தனை உயிரினங்களை, மீண்டும் இயற்கையில் உருவாக்க முடியாத உயிரினங்களை, பறவைகளை, தாவரங்களை இழந்திருப்போம் என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் மக்கள்தொகை வளர்ச்சி, மற்றொரு பக்கம் அதைவிட வேகமாக வளர்ந்து வரும் நவீன வாழ்க்கை முறை, அத்துடன் நமது அரசுத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் முன்னெடுக்கும் வளர்ச்சி முறை ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக சின்னாபின்னமாவது நமது இயற்கைதான். கண்ணுக்குத் தெரியாத ஓர் இயந்திரம் போல, உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் உய்விக்க ஒவ்வொரு கணமும் உழைத்துக் கொண்டிருக்கும் இயற்கை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
“மனிதன் பேராற்றல் மிக்கவன்” என்ற அடைமொழியுடன் இயற்கையை கட்டுப்படுத்தி, துய்த்து, தனக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதை நவீனமயம் ஆதரிக்கிறது. ஆனால் இப்படிச் செய்யும்போது ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி, அது கவலைப்படுவதில்லை. மனிதகுல வரலாற்றில் இல்லாத வகையில் உயிரினங்களும், தாவரங்களும் நம் கண் முன்னாலேயே பெருமளவில் அழிந்து வருகின்றன.
வளர்ச்சி ஏற்படுத்தும் நெருக்கடிகள், காட்டில் பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுதல், குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகள், மக்களின் தேவை அதிகரிப்பு, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களின் சரிவு ஆகியவற்றுடன் மக்கள்தொகை வளர்ச்சி, அது சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கையை கபளீகரம் செய்து வருகின்றன.
சிவிங்கிப்புலி ஏற்கெனவே அற்றுப்போய்விட்டது. புலி, யானை, பனிச்சிறுத்தை, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), கடல்ஆமைகள், கானமயில், ஆசிய சிங்கம், செந்நாய்கள், இமாலய ஐபெக்ஸ் (காட்டாடு) போன்றவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் பல உயிரினங்கள் குறிப்பிட்ட ஒரு சூழல் அமைப்பின் வளத்தை வெளிப்படுத்துபவை. எனவே இவற்றின் அழிவு, ஒட்டுமொத்த சூழல் அமைப்பு அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. வாழிட அழிவுதான் உயிரினங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. எளிதில் சிதைந்துவிடக் கூடிய இந்த வாழிடங்கள் காப்பாற்றப்பட்டால்தான், மண்வளமும், தண்ணீரும் பாதுகாக்கப்படும், வேளாண் உற்பத்தி சரியாமல் தொடரும். சுருக்கமாகச் சொல்வெதென்றால் மனிதன் உயிர்வாழ இந்த வாழிடங்கள் மட்டுமின்றி, அந்த உயிரின வலைப்பின்னலின் முக்கிய அங்கமான உயிரினங்களும் அவசியம்.
உயிரினங்களின் அழிவுக்கு வாழிட அழிவுதான் முக்கிய காரணம் என்பதற்கு சிறுத்தையும், யானையும் சந்தித்து வரும் நெருக்கடி நேரடி உதாரணம். மனிதர்களைப் போல இவற்றின் எண்ணிக்கை எந்த வகையிலும் கட்டுப்பாடில்லாமல் உயரவில்லை, மாறாக சரிந்தே இருக்கிறது. ஆனால் முன்பு இருந்ததைவிட குறுகிய பரப்புக்குள் வாழ இவை நிர்பந்திக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, அவை காட்டின் எல்லைப் பகுதிகளுக்கு வருவதும், அவற்றை ஏதோ எதிரிகள் போல மனிதர்கள் பாவிப்பதும் தொடர்கிறது.
“காட்டுக்குள் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், வெளியே இருக்கும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் புலிகளையும் யானைகளையும் காப்பாற்றச் சொல்கிறீர்களே, இது என்ன நியாயம்?” என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்கள். புலிகளும் யானைகளும் முந்தைய காலத்தில் இருந்த அதே எண்ணிக்கையில்தான் இன்றைக்கும் இருக்கின்றனவா, அல்லது குறைந்திருக்கின்றனவா? பழங்குடி மக்களின் எண்ணிக்கையும், அவர்களது வாழ்க்கை முறையும் பழையபடியேதான் தொடர்கின்றனவா என்ற கேள்விகளுடன் இணைத்தே இதைப் பார்க்க வேண்டும்.
பழங்குடிகள் அன்றைக்கு வாழ்ந்த அதே வாழ்க்கையை வாழ்கிறார்களா, எந்த நவீன அறிவியல் வளர்ச்சியையும் காட்டுக்குள் பயன்படுத்தவில்லையா என்பதையும் சேர்த்தே இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்க வேண்டும். “பழங்குடிகளுக்கு நல்ல காற்று கிடைக்கிறது, நல்ல சுற்றுச்சூழல் கிடைக்கிறது. அவற்றைத் தடுக்க வேண்டும்“ என்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று உயிரின பாதுகாவலர்கள் யாரும் வாதாடவில்லை. அவர்களது வாழ்வுரிமையை பறித்து, காட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறவில்லை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. இதில் உணர்ச்சிவசமாகவோ, மனித மதிப்பீட்டு ரீதியிலோ மட்டும் பேசுவது ஒட்டுமொத்த சமநிலைக்கு உகந்தது ஆகாது.
நமது காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல், வகை பிரிக்கப்படாமல் எத்தனையோ உயிரின வகைகள், தாவர வகைகள் உள்ளன. இதற்கு நல்ல உதாரணம் வடகிழக்கு மாநிலங்கள். தவாங் மக்காக் என்ற குரங்கு இனம், கறுப்புக் கேளையாடு, புகுன் லியோசிக்லா என்றொரு பறவை, எண்ணிலடங்காத தவளை இனங்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படி பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே ஓர் இயற்கைச் சூழல் அழிக்கப்பட்டால், இது போல ஓர் உயிரினம் இருந்ததும், அந்தச் சூழலில் அது செலுத்தி வந்த தாக்கமும் சுத்தமாகத் தெரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.
இந்த இடத்தில் கேலபாகஸ் தீவுகளில் ஒரே வகை உயிரினங்களிடம் கண்ட வேறுபாடுகளை வைத்தே “உயிரினங்களின் தகவமைப்புக் கொள்கையை” (Adaptation Theory) சார்லஸ் டார்வின் முன்மொழிந்தார் என்பதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். பரிணாமவியல் கொள்கையின் உருவாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே வகையான உயிரினம் வேறொரு சூழலில் வாழும்போது, அதற்கேற்ப தகவமைத்துக் கொள்கிறது. இல்லாதபட்சத்தில் அழிந்து போகிறது என்பதே தகவமைப்புக் கொள்கை. எனவே, இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
டைனோசர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் உலகிலேயே பிரம்மாண்ட உயிரினமான அந்த டைனோசர்கூட தனக்குத் தேவையான உணவுக்காக இரைகளை மட்டும் கொன்றதே ஒழிய, உலகையோ, மற்ற உயிரினங்களையோ அழிக்கவில்லை.
நமது பாரம்பரிய வளம் என்று எதைஎதையோ சொல்லிக் கொள்கிறோம். வெப்பமண்டலப் பகுதி என்பதாலேயே இயற்கை நமக்கு வாரி வழங்கியுள்ள அரிய வளங்களையும், செல்வங்களையும் அழிப்பதும், அழிய விடுவதும் எப்படி அறிவுடைமை ஆகும்? கடந்த காலத்தில் நம்மிடம் இருந்த மரபுசார்ந்த விழுமியங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய நவீன உலகில் மறக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீட்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பழங்குடிகளுக்கு காடு சார்ந்த, உயிரின நிர்வாகம் சார்ந்த பாரம்பரிய அறிவு குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. அவர்களுடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் இணைத்து நமது காடுகளையும் உயிரினங்களையும் காப்பாற்றலாம். பழங்குடிகளுடன் ஒருங்கிணைக்காமல் காட்டையோ, உயிரினத்தையோ காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள், அவற்றுக்கு அருகே வாழும் பழங்குடிகள், இயற்கையான வாழிடங்கள் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு கொண்டவை, ஒன்றையன்று சார்ந்தவை என்பதை மறந்துவிடக்கூடாது.
அழிந்துபட்ட தமிழக உயிரினங்கள்:
பாலூட்டிகளில் நான்கில் ஒன்றும், பறவைகளில் எட்டில் ஒன்றும் இன்று அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் அநேகம்.
“மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அர்ஜுனன் தவம் சிற்பத்தில் ஒரு பெண் சிங்கம் 2 குட்டிகளுக்கு பால் கொடுப்பது போல் இருப்பதையும், சிங்கநல்லூர், சிங்கம்புணரி போன்ற ஊர் பெயர்களையும் குறிப்பிட்டு, ஆசிய சிங்கம் தென்னிந்தியாவில் இருந்தது” என்று சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் பற்றிய அவரது பதிவுகள்:
சென்ற நூற்றாண்டு நடுப் பகுதி வரை தமிழகத்தில் உலவிய சிவிங்கிப்புலி (Cheetah) இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இல்லை. இதை ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்கிறது (இது சிறுத்தை (leopard) அல்ல). மோயாறும் பவானி நதியும் சேரும் இடத்திலுள்ள புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலி இருந்த விவரம் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. 1876இல் மதராஸ் ராஜதானியில் 135 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக ஓர் ஆவணம் குறிப்பிடுகிறது. சிவிங்கியை எப்படிப் பிடிப்பது, அதை வேட்டைக்குப் பழக்கும் முறைகள், மருத்துவம் பார்க்கும் முறைகள் பற்றி படங்களுடன் விளக்கும் நூல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கிறது.
சிவிங்கிப்புலிக்கும் தற்போதும் நம் காடுகளில் வசிக்கும் சிறுத்தைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிப்படை வேறுபாடு, சிவிங்கிப்புலிக்கு தோல்போர்வையில் புள்ளிகளே இருக்கும். ஆனால் சிறுத்தைக்கு கறுந்திட்டுகள் இருக்கும். சிவிங்கிக்கு கண்ணுக்குக் கீழே கறுப்புக்கோடு இருக்கும். கால்கள் நீண்டவை. உலகிலுள்ள இரைகொல்லிகளில் வேகமாக ஓடக்கூடியது. ஏறக்குறைய 100 கி.மீ. வேகத்தில் ஓடும். 1950களில் இது அற்றுப்போய்விட்டது.
ஒளவையார் எழுதியதாக கூறப்படும் மூதுரை பாடல் ஒன்றில்
“கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானுமதுவாகப் பாவித்து தானுந்தான்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கல்வி” மூதுரை 14
என்றொரு செய்யுள் இருக்கிறது. இதில் குறிப் பிடப்படும் கானமயில் ஆண் பறவை வாலை விசிறி போல விரித்து, இறக்கைகளைப் பரப்பி, ஆடுவதுண்டு. அது வான்கோழியை நினைவுபடுத்தும். இந்தப் பாடல் ஒளவையார் எழுதியது இல்லை என்றும் கூறப்படுகிறது. புகழ்பெற்ற இந்தச் செய்யுளில் கூறப்படும் கானமயில் (The Great Indian Bustard) என்ற பறவை ஒகேனக்கல் அருகேயுள்ள புதர்காடுகளில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு அருகேயும் இருந்ததாம். தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்ட இப்பறவை, இன்றைக்கு ராஜஸ்தானிலும் மகாராஷ்டிரத்திலும் ஆந்திரத்திலும் தென்படுகிறது. வறண்ட புதர்க்காடுகளில் தரையில் முட்டையிட்டு அடைகாக்கும் பறவை இது. அதேபோல வரகுக்கோழி (Lesser Florican) என்ற மற்றொரு தரைவாழ் பறவையும் தமிழகத்தில் இருந்து அழிந்துவிட்டது. செங்கம் அருகே சுடப்பட்ட ஒரு வரகுக்கோழி, பாடம் செய்யப்பட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தப் பறவை தமிழகத்தில் இருப்பதாக பதிவுகள் இல்லை. தமிழகம் ஏற்கெனவே இழந்துவிட்ட உயிரினங்கள் இவை. இது தியடோர் பாஸ்கரன் கூறும் செய்திகள்.
அதேபோல தமிழக பகுதிகளிலும், தேசிய அளவிலும் பிணந்தின்னிக் கழுகுகள் பெருமளவு அழிந்துவிட்டன. இதற்கு Diclophenac என்ற வலிநிவாரணியே காரணம். இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து இந்த மருந்து கழுகுகளின் உடலுக்குள் சென்று, அவை அழியக் காரணமானது. இப்போது இந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டாலும் கழுகுகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன.
ஒரு காலத்தில் சிவிங்கிப்புலியின் இரையாக இருந்த, சென்னையிலும், தமிழகத்தின் பல வறண்ட காட்டுப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த வெளிமான் இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் எஞ்சியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், சென்னை ஐ.ஐ.டி. கிண்டி தேசிய பூங்காவின் ஒரு பகுதியை அழித்துத்தான் ஐ.ஐ.டி கட்டப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி வளாகத்துக்குள் இன்றைக்கு வெளிமான்கள் மிக மிகச் சொற்பம்.
இப்படி தற்போதும்கூட பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை சிங்கவால் குரங்கு என்று பரவலாக அறியப்படும் சோலை மந்தி. மற்றொன்று தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு.
உலகில் அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். (IUCN - International Union for Conservation of Nature) என்ற அமைப்பு பட்டியலிடுகிறது. ஒரு எச்சரிக்கையாகவே இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும் அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி முற்றிலும் அற்றுப்போகும் முன் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பட்டியலின் நோக்கம். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக உயிரினங்கள்:
1. வரையாடு (Nilgiritragus hylocrius)
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் காடுகளின் 5 சதவீதப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. 1970&80களில் 2000& 2,500 வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 2008 வாக்கில் 1,800&2,000 ஆகக் குறைந்துவிட்டது. மலை முகடுகள், புல்வெளிகள், திறந்த வெளிகளில் வாழும் இந்த ஆடு அதிகாலையிலும், பிற்பகல் நேரத்திலும் இரை தேடும். சராசரியாக 3.5 ஆண்டுகளே வாழும். வாழிட அழிவும், கள்ள வேட்டையும்தான் இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம்.
2. சோலை மந்தி (Macaca silenus)
சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்பட்டாலும் சோலை மந்தி என்பதே சரியான பெயர். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழ்கிறது. இவற்றின் எண்ணிக்கை 4,000 ஆக இருந்தாலும், முதிர்ந்த விலங்குகள் 2,500தான் எஞ்சியிருக்கின்றன. வாழிட அழிவு, வேட்டையாடல் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆனைமலை பகுதியில் சுமார் 500 சோலை மந்திகள் வாழ்கின்றன. இது வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடுகளின் தாவரவிதானப் பகுதியில் வாழக்கூடியது. அனைத்துண்ணி. வாழிடம் துண்டாதல் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். வெட்டுமரத் தொழில், தேயிலை, காப்பி, தைல மரத் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதே இவற்றின் அழிவுக்கு முதன்மைக் காரணம்.
3. மலபார் புனுகுப் பூனை (Viverra civettina)
உலகின் அரிய பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. இரவாடியான இந்த விலங்கு, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் உயிரினம். மரங்கள் அடர்ந்த சமவெளிகள், பசுமைமாறா மழைக்காடுகளின் மலைச்சரிவுப் பகுதிகளில் வாழும். காடழிப்பும், வணிகத் தோட்டங்களுமே இதற்கு மிகப் பெரிய எதிரிகள். இந்த உயிரினத்தின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.
4. பெரிய பாறை எலி (Cremnomys elvira)
இந்தியாவில் மட்டுமே வாழக்கூடியது பெரிய பாறை எலி அல்லது எல்விரா எலி. இடைப்பட்ட அளவு கொண்ட, வளை தோண்டி வாழும் இரவாடி விலங்கு இது. பாறைப் பகுதிகள் கொண்ட வெப்பமண்டல வறண்ட புதர்க்காடுகளில் வாழக்கூடியது. தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் இது வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழிட அழிவு, காட்டை சீர்திருத்துதல், விறகு சேகரிப்பு போன்றவை இதற்கு அச்சுறுத்தல்.
5. வெண்முதுகுக் கழுகு (Gypsbengalensis)
இந்தியாவில் மொத்தமுள்ள ஒன்பது பிணந்தின்னிக் கழுகு வகைகளில் வெண்முதுகுக் கழுகு White-backed Vulture (Gypsbengalensis), செந்தலைக் கழுகு - Slender-billed Vulture (Gyps tenuirostris), கோடாங்கிக் கழுகு - Long-billed Vulture (Gyps indicus) ஆகிய மூன்று வகைகளும் 99 % அழிந்துவிட்டன. சிவப்பு பிணந்தின்னிக் கழுகு (Sarcogyps calvus) சமீப காலத்தில் அதிவேகமாக அழிந்துவிட்டது. முன்பு இந்தியா முழுமையும் காடுகள், கிராமங்களில் இந்தக் கழுகுகள் சாதாரணமாக காணப்பட்டன.
பிணந்தின்னிக் கழுகுகள்தான் இயற்கை துப்புரவாளர்கள், காட்டில் இறந்த விலங்குகளை உண்டு வாழ்வதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையையும் பாதுகாப்பையும் இவை உறுதி செய்கின்றன. டைகிளோஃபெனாக் வலிநிவாரணி கால்நடைகளுக்கு வகைதொகை இல்லாமல் கொடுக்கப்பட்டது இவற்றின் அழிவுக்கு முதன்மை காரணம். கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக மாட்டு டாக்டர்களால் தரப்பட்ட டைகிளோஃபெனாக் என்ற மருந்து இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து, இந்த கழுகுகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றின் ரத்தத்தில் டைகிளோஃபெனாக் அளவு அதிகரித்த நிலையில் கழுத்து சரிவது, கீல்வாதம் போன்ற நோய்கள் அதிகரித்து கடைசியில் கழுகுகள் கூட்டங்கூட்டமாக அழிந்து போயின.
இக் கழுகுகளின் அழிவு காரணமாக இறந்த விலங்குகள் சுத்தம் செய்யப் படாமல் போவதால் ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. அத்துடன் பார்சிகளின் அமைதி கோபுரத்தில் சடலங்கள் இடப்படும் சடங்கையும் இது பாதிக்கிறது.
6. கரண்டிவாய் உள்ளான் (Eurynorhynchus pygmeus)
இந்தியாவுக்கு வலசை வரும் பறவைகளுள் ஒன்று கரண்டிவாய் உள்ளான் Spoon Billed Sandpiper - (Eurynorhynchus pygmeus). இது உலகம் முழுவதுமே 150&320 ஜோடிகள்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைக்கு சிறப்புத்தன்மை கொண்ட இனப்பெருக்க மையங்கள் தேவை. இதன் காரணமாகவே இதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குளிர்காலத்தில் வலசை வரும் இந்தப் பறவைக்கு தமிழகமும் ஒரு புகலிடம். ஓரளவு தாவரங்கள் உள்ள கடற்கரைப் பகுதிகளே இதன் இருப்பிடம். வாழிட சிதைவு, நிலச் சீர்திருத்தம், மனிதத் தொந்தரவுகளே இவற்றின் இனப்பெருக்கத்துக்கு அச்சுறுத்தல்.
7. சிஸ்பாரா மரப்பல்லி (Cnemaspis sisparensis)
இது காட்டில் இருக்கும் ஒரு வகைப் பல்லி. பூச்சியுண்ணியான இந்தப் பல்லி ஓர் இரவாடி. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே இருக்கும் இந்தப் பல்லி, நீலகிரிப் பகுதியில் உள்ள சிஸ்பாராவில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்தப் பெயரே வைக்கப்பட்டது. வாழிடம் திருத்தப்படுதல், வாழிடம் மாற்றப்படுதல்தான் இவற்றுக்கு எதிரி. இதன் எண்ணிக்கை தொடர்பாக முறையான பதிவுகள் இல்லை.
8. அழுங்காமை (Eretmochelys imbricata)
கடலாமைகளில் அழுங்காமை - Hawksbill Turtle (Eretmochelys imbricata) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் வலசை செல்லும் பண்பு கொண்ட இந்த ஆமை, உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் முட்டையிடக் கூடியது. இந்த ஆமை இனப்பெருக்க வயதை அடைவதற்கு காலதாமதம் ஆகும். 25&40 வயதுள்ள ஆமைகளே இனப்பெருக்கம் செய்ய முடியும். மேலும் தனித்த, மணல் நிரம்பிய கடற்கரைகளிலேயே முட்டையிடும். தமிழகத்துக்கும் இந்த ஆமை அவ்வப்போது வருவது உண்டு. ஓடு விற்றல், முட்டை சேகரிப்பு, இறைச்சிக்கு கொல்லப்படுதல், எண்ணெய் மாசு, முட்டையிடும் இடம் சிதைவு, தீவனம் அழிப்பு போன்றவை இவற்றுக்கு அச்சுறுத்தல்.
9. பாண்டிச்சேரி சுறா (Carcharhinus hemiodon)
இந்திய துணைக்கண்ட கடற்கரைகளிலும், திட்டுப் பகுதிகளுக்கு அருகிலும் வசிக்கக் கூடிய ஒரு கடல் மீன் இனம் இது. மேலும் மிகவும் அரிய, மிகக் குறைவாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஓர் உயிரினம். இந்தியக் கடல் பகுதிகளில் உள்ளது. கடற்கரை பகுதிகளிலும் அது வாழுமிடங்களிலும் முறைப்படுத்தப்படாத மீன்பிடி முறைகள் பெருகி வருவதே இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது வலையில் விழுந்தாலும், சந்தை ஆய்வுகளில் பதிவு ஆவதில்லை. வணிகரீதியில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், மற்ற மீன்களுடன் வலையில் சிக்கிக் கொள்வதாலேயே பெருமளவு அழிக்கப்பட்டது.
10. கூட்டி எட்டுக்கால் பூச்சி (Poecilotheria metallica).
உலோக எட்டுக்கால் பூச்சி அல்லது மயில் எட்டுக்கால் பூச்சி என்று பல பெயர்கள் கொண்ட இந்த எட்டுக்கால் பூச்சி இரும்பு நீல நிறத்தில், ஆரஞ்சு மஞ்சள், கறுப்பு வெள்ளை திட்டுகள் கொண்டது. இது முதன்முதலில் உதகமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாலேயே கூட்டி எட்டுக்கால் பூச்சி என்ற பெயர் வந்தது. ஊட்டிக்கு ரயில்பாதை போட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் இது முக்கிய இடத்தைப் பிடித்தது. இதன் குஞ்சுகள் மிகச் சிறியதாக இருப்பதாலும், மனிதர்கள் ஏற்படுத்தும் மற்ற நெருக்கடிகள் காரணமாகவும் அழியும் ஆபத்துக்குச் சென்றுள்ளது. தென்னிந்திய மலைக் காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் மட்டுமே இந்த எட்டுக்கால் பூச்சி இருக்கிறது. செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்படும் எட்டுக்கால் பூச்சி வகை இது. இவை வாழ்ந்த பெருமளவு காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது விறகுக்காக இவற்றின் வாழிடம் சிதைக்கப்பட்டுவிட்டது. ஆந்திராவில் இருப்பதாக பதிவு உள்ளது.
11. தேரைத் தோல் தவளை-கேரள இந்தியத் தவளை (Indirana phrynoderma)
கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியில் வாழக்கூடியது. தோலின் மீது மரு, கழலை, சுரப்பிகளுக்கான மடிப்புகள் போன்றவற்றை முதுகுப் பகுதியில் பெற்றிருப்பதால், தேரைத் தோல் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை பகுதியில் காணப்படுகிறது. தொடர்ச்சியான வெட்டுமரம், விறகு சேகரித்தல் காரணமாக ஏற்பட்ட வாழிட அழிவுதான் இந்த தவளைக்கு பெரும் அச்சுறுத்தல்
12. கிரெய்ட் புதர் தவளை (Raorchestes griet)
இந்த சிறிய புதர்த் தவளை, மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 22.2 செ.மீ. இந்தத் தவளை கடல் மட்டத்தில் இருந்து 600& 1,800 மீட்டர் உயரத்தில்தான் வாழும். கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி, வால்பாறை பகுதியில் தென்படுகிறது. தேயிலை, தைலமரத் தோட்டங்களால் காடுஅழிவும், வாழிடம் துண்டாடப்பட்டதுமே இவற்றின் அழிவுக்குக் காரணம்.
13. பொன்முடி பெரிய புதர்த் தவளை (Raorchestes ponmudi)
இந்தியாவிலுள்ள புதர்த் தவளைகளில் பெரியது. மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 4 செ.மீ. கோவை மாவட்டம் ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் வாழக் கூடியது. சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்கள் விரிவாக்கப்படுவதன் காரணமாக காடழிவு, வாழிட அழிவே இவற்றுக்கு முக்கிய அச்சுறுத்தல்.
14. சுஷில் புதர் தவளை (Raorchestes sushili)
2009ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் வால்பாறை அருகேயுள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடுகளில் இது கண்டுபிடிக் கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்துக்கு மேல் இது வாழ்கிறது. வால்பாறை பகுதியில் மட்டுமே இந்தத் தவளை வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடுதல் காரணமாக இதன் வாழிடம் பெருமளவு அழிந்துவிட்டது.
15. ஆனைமலை பறக்கும் தவளை (Rhacophorus pseudomalabaricus)
கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தெற்குப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே வாழ்கிறது. வால்பாறை பகுதியில் உள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடு, புதுத்தோட்டம், ஆனைமலை மலைப்பகுதிகளில் உள்ளது. இந்திரா காந்தி தேசிய பூங்காவுக்கு வெளியே காட்டைத் திருத்தி வயலாகவும், வெட்டுமரக் காடாகவும் மாற்றுவது, உள்ளூர் மக்கள் மரத்தை வெட்டுவதுதான் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.
(கீழ்க்கண்ட புத்தகங்களில் இருந்து கருத்துகள், தகவல்கள் இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன: இன் டேஞ்சர், பவோலா மான்ஃபிரெடி, சு. தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள், கிரிடிகலி என்டேஞ்சர்டு அனிமல் ஸ்பீசீஸ் ஆஃப் இந்தியா, மத்திய வனத்துறை அமைச்சக வெளியீடு - பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ஆரோக்கியம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதன் முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் மெசபொட்டேமியா, எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபிய பாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது.
பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை. மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்ச மரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழ உற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.
பேரீச்சம் பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம் பழம் சுமார் 3000 கலோரிக்கும் அதிகமான எரிசக்தியை தரக்கூடியது. இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக் காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமே மாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும் பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.
பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600 மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.
நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம்.
பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம்.
பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில் கீழ்க்கண்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.
பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஏலக்காய் டீ!.. இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், ‘அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன். ! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ’ ஆர்டர் பறக்கும். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்களா ? ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ஏலக்காயின் மகிமை அப்படி!
மணங்களின் ராணி. . !
ஏல விதைக்கு அதன் சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, "சொர்க்கத்தின் தானியம் / சொர்க்கத்தின் வாசனைப்பொருள்" என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. ரொம்ப பொருத்தமான பெயர்தான். ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. ஏலத்தின் மணத்தை மிஞ்ச,இந்த உலகில் வேறு மணமே கிடையாது. அதனால்தான் அனைத்து இனிப்பு வகை உணவிலும், ஏலம் கலக்கப்படுகிறது. ஒரு பொருளில் ஏலத்தைக் கலந்தாலே அதன் வாசனையே அப்படியே அலாக்காக ஆளைத் தூக்கிவிடும். பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப்படுவது வாசனை ராணியான ஏலக்காய்தான். விலைதான் குங்குமப்பூவை விட குறைவே. தவிர மணத்தில் குங்குமப்பூவை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஏலம்.
பழம் பெருமை பேசும் ஏலம். !
உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள்களில் ஒன்று ஏலம். ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. அன்று இருந்த ஏராளமான் வாசனைப் பொருட்களில், வாசனையுடன் மருத்துவ குணத்திலும், சமையல் பயன்பாட்டிலும், உடலுக்குப் பயன்படுத்தும் நறுமண தைலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பும் மரியாதையும் அதிகமோ அதிகம்தான். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய சரித்திரத்தில், அதன் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் ஏலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது எப்பர்ஸ் பாப்பிரசில் (Ebers Papyrus) குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் எகிப்தியர்களின் மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம். எகிப்திய பதிவுகளில் பழமையானதும், முக்கியமான மருத்துவக் குறிப்புகள் அடங்கியுள்ளதும் இதுதான்.
ஏற்கனவே சுமார் 5000 ஆண்டுகுகளுக்கு முற்பட்ட தகவல்களை எடுத்து மீண்டும் இந்த பாப்பிரஸ் பட்டையில் ஹீராடிக் எழுத்தில் எழுதியுள்ளார்கள் , இந்த பாப்பிரஸ் சுருள் 110 பக்கங்கள் கொண்டது. 20 மீட்டர் நீளம் உள்ளது. இதில் சுமார் 700 அற்புதமான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைக்கப் பட்டுள்ளன. ஏலத்தை அன்று எகிப்தியர்கள் நறுமணப் பொருளாக பயன்படுத்தியதுடன், உடல் வலி போக்கும் மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகவும்,, மதரீதியான சடங்குகளுக்கும் ஏலத்தை அதிகம் பயன் படுத்தினர்.
நாட்டுக்குள் வந்த காட்டு ராணி ஏலம். . !
ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி. மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம். மேலும் கி. பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். மத்திய தரைக் கடல் வழியே பயணம் செய்த வணிகர்கள், மணம் மிகுந்த மனதைக் கொள்ளையிடும் ஏலத்தை கான்ஸ்டாண்டி நோபிளிருந்து ஸ்காண்டிநேவியாவுக்கு கொண்டு வந்தனர். இன்றும் கூட அங்கு இதன் பெருமை குன்றாமல் இருக்கிறது. இன்றும் கூட இங்கு பாஸ்திரி, கறி உருண்டை மற்றும் ஒயினில் மணமிக்க ஏலத்தை கலக்கின்றனர்.
அனைத்துப் பொருள்களிளும் ஏலக் கலப்புதான். அங்கே ஏலத்தை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாயின் துர்நாற்றம் போக்கவும், பல்லின் வெண்மைக்கும் இன்றும் ஏலம் பயன்படுகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் அன்று ஏலத்தை நறுமணத் தைலங்களிலும், களிம்புகளிலும்,வாசனை எண்ணெய்களிலும்,பயன்படுத்தினர். ரோமானியர்கள் மேலும் இதனை உடலின் மணப்பொருள் தயாரிக்கும்போதும், வாயின் கெட்ட வாசனை போகவும், அதைவிட முக்கியமாக, உடலுறவைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.
இந்தியாவின் ஏலம் !
ஏலம் கடந்த 2000 ஆண்டுகளாக, இந்திய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் கூட இதனை பற்றி இந்திய வரலாற்றில் பதிவு உள்ளது. கி. மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, ஏலத்தை இந்தியர்கள் சமையல், வாசனைப் பொருள் மற்றும் மருத்துவத்தில் பயன் படுத்தினர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் 11 ம் நூற்றாண்டிலிருந்து எல்லம் நடமாடுகிறத். அப்பொது பஞ்சமுக தாம்பூலத்தில், ஏலக்காயின் பட்டியல் உள்ளது. ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமை வளம் கொழிக்கும் மழைக்காடுகள் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏலம் இந்தியாவிலும், மலேசியாவிலும் அக்டோபர் மாதம் ஏலம் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அந்த காய் முழுவதையும் சூரிய ஒளியில் வைத்தே வெயிலில் காயப்போட்டு உலர்த் துவார். அதன் நிறத்துக்கு ஏற்றாப்போல தெரிவு செய்யப்பட்டு அதன் மணம் அறிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பச்சை ஏலம். அடுத்து கருப்பு ஏலம். அவை பச்சை நிறத்தில இருந்து கருஞ்சிவப்பு /வெள்ளை கூட இருக்கிறது.
ஏலத்தின் விதை பச்சை வண்ணத்திலிருந்து, மஞ்சள், சாம்பல் வரை. இருக்கும்
ஏலத்தின் மணம் முழுவதும், ஏல விதைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடைத்து பொடி செய்துவிட்டால் மணம் காலப்போக்கில் குறைந்து போகும். ஏலத்தின் அருமையான மணம் மனித மனங்களை,சுண்டி இழுக்கிறது. ஏலத்தை உலர்த்திய பிறகுதான் முழு மணமும் கிடைக்கிறது. தென்னிந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஏலம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அது இன்று இலங்கை, கவுதமாலா ,இந்தோ-சீன மற்றும் டான்செனியாவிலும் பயிரிடப்படுகிறது . இந்தியாவில்தான் ஏராளமான ஏலம் விளைந்தாலும், இங்கிருந்து குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் நாமே எல்லாவற்றையும் பயன்படுத்திவிடுகிறோம். உலகிலேயே அதிகம் ஏலம் ஏற்றுமதி செய்யும் நாடு கவுதமாலாதான். ஆனால் இங்கே சுமார் 100 ஆண்டுக்கு முன்னர்தான் ஏலம் அறிமுகமாயிற்று.
பெயர் சூடும் சூடாமணி. . !
ஏலத்திற்கு கார்டமன் (Cardamon)என்ற பெயர் பெர்சியாவிலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய பெயரான ஏலேட்டரிய என்பது தெற்காசிய நாவிலிருந்து பிறந்திருக்க வேண்டும். இந்தி, பஞ்சாபி யிலும் இது எலாச்சிதான். இதன் பொருள் பச்சை ஏலம் என்பதே. ஆனால் சில மொழிகளில்கருப்பு ஏலம் என்றும் போருல்படியாகவும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதனை ஏலா/எல்லாகா என்கின்றனர். எல்லாம் திராவிடிய மொழியிலிருந்து வந்துள்ளது. ஆனால் ஏலம் என்பது முடிவாக தமிழ் எல்லை என்பத தெரிகிறது. தமிழ் மலையாளம், கன்னடம், இது ஏலக்காய் தான் தெலுங்கில் மட்டும் இதன் பெயர் ஏலகுலு .
வேதத்திலும், கிரேக்கத்திலும் ஏலம். !.
ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். . . கிரேக்க மருத்துவத்தில், கி. மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி. மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.
ஏலத்தின் மணத்தில் சொக்கிய உலகப் பேரழகி. . !
போருக்கு வந்து நாட்டைக் கையகப்படுத்த வந்த மாவீரன் அலெக்சாண்டரின் போர்வீரர்கள், இங்கு இந்தியாவில் தங்கி இருந்தபோது இலக்காயால் ஈர்க்கப்பட்டனர். அதன் மணத்தில் மயங்கிய போர் வீரர்கள், மறக்காமல், தங்கள் ஊருக்குத் திரும்புமோது, கி. மு 325 ல் இந்தியாவிலிருந்து அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனாராம். அப்படிப்பட்ட பெருமை உடையது ஏலம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான செய்தி! கி.மு. 27ம் ஆண்டுகளில் வாழ்ந்த ,கிரேக்க சாம்ராஜ்யத்தின் உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏல மணத்தின் மீது கொள்ளைப் பிரியமாம். கிளியோபாட்ரா தான் குளிக்கும் நீரில் ஏலத்தை அரைத்து கலக்கச் சொல்லியே குளிப்பாராம். . அதன் வாசனையில் அவள் கிறங்கிப் போவாராம். அது மட்டுமா? தன் காதலன் மார்க் ஆண்டனியின் வருகையை எதிர்பார்க்கும்போதேல்லாம், தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின் புகை மணத்தில் மூழ்க வைப்பாராம். எப்போதும் அவரை சுற்றி ஏலத்தின் மணம் கமழுமாம்.
பைபிளிலும் சொர்க்கத்தின் மகனுக்கும் ஏலம்...!
இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி.11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் கூட, ஐரோப்பாவுக்கு, கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதியானது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் தரும்படியான கிரேக்க வார்த்தையில் "அமோமன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல கொண்டுதான பேரரசர்களைச் சந்திக்க வேண்டுமாம். அரசர்கள் முன் இவர்கள் வாய் நாற்றத்துடன் பேசிவிடக்கூடாதல்லவா? அதான். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களான பேரரசர்கள் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்தபந்தவான படாடோபமான ஏற்பாடெல்லாம். . !வாய் நாறினால் பின் எப்படி பேச. . . ! அதான் இது.
நாங்க இஞ்சி குடும்பம்தாங்க. . !
இப்படி பார் புகழும் ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும். ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000-15,000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும். சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர். காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும். இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்
அரேபியரின் உபசரிப்பு ஏலத்தின் மதிப்பு. . . !
ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர். அரேபியர்கள் காபியில் எலாம் கலந்து தருவதை உபசரிப்பின் உச்சபட்ச மரியாதை என்று நினைக்கின்றனர் . அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் கலந்து அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர். அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் போது அரிசியுடன் ஏல அரிசியும் கலந்து போட்டே சமைக்கின்றனர். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்றுதான். . புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன்,உப்புமா என அனைத்துப் பொருளகளிலும் மற்றும் பிற இனிப்புகளில்மும் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்! எதியோபியாவிலும் இதே கதைதான். அவர்களும் விதம் விதமாக ஏலத்தை காபியில் கலந்து பரிமாறுவார்கள். மத்திய ஆசியாவிலும், உஸ்ப்கிச்தானிலும் அரிசி, கறி மற்றும் இனிப்பில் என அனைத்துப் பொருள்களிலும் சும்மா சகட்டு மேனிக்கு கலந்து உண்கின்றனர் . உலகில் அதிக அளவில் ஏலம் பயபடுத்துவதில் முதல் பரிசுதான் அரேபியாவுக்கு.
மருத்துவ குணம் கொண்ட ஏலக்காய். . . !
ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம், ஏலம் இருமலை சரி செய்யும் மருந்தாகவும், உணவு தூண்டுவதாகவும், உடலின் சூட்டைத் தக்கவைக்கவும், எதிர் உயிரியாகவும், எதிர் பூஞ்சைக்காலன் பொருளாகவும், , டானிக்காகவும்,வயிற்றை சரி செய்யும் மருந்தாகவும், உடல்வலியைக் குறைக்கும் மருந்தாகவும் இருக்கிறது. 100 கிராம் ஏலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் : மேலும் வயிற்றுப் போக்கு மலமிளக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் கொண்டது இது. வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இதனைக் கட்டாயம் வா உன்ன வேண்டும். நெஞ்சு சளிக்கும் இது நல்லது. பொதுவாக கருவுற்ற பெண்கள் இதனை உண்ணக்கூடாது.
தங்கத்தில் குளித்த ஏலக்காய்...!
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம்.
1801ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால், இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் வைத்திருந்தனர். . 1879ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம் முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. பிற நாட்டு முதலாளிகள் எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டியதுதான். வேறென்ன செய்ய?
- காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்!
- மானாம்பள்ளி பயணத்தில் - பௌர்ணமி நிலவில்... சிறுத்தையின் சத்தம்...
- சரணாலயங்கள் – பாதுகாப்பு
- சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
- வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்
- பறவை நோக்குதல்
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்