கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
‘வணிகமுறை பால் உற்பத்திக்கு கலப்பினப் பசு தான் சிறந்தது. நாட்டுப் பசுவினங்களைக் கொண்டு அதிக பாலை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே தான் நாட்டுப் பசுவினங்கள் பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. இது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்’ என துறைசார் வல்லுநர்களே கூட ஆதங்கப்படுவதும் பின்னர் “ஒர் இனம் அழிவதும் (Extinction), மற்றொரு இனம் உருவாவதும் (Speciation) பரிணாமத்தின் (Evolution) ஓர் அங்கமே” என தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்வதையும் வெவ்வேறு தருணங்களில் காண முடிகிறது. சீமை மற்றும் கலப்பினப் பசுக்கள் மட்டும் அதிகமாக பாலை சுரப்பது ஏன்? நாட்டுப் பசுவினங்களையும் சீமை மற்றும் கலப்பினப் பசுக்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியாதா? அப்படி மாற்ற முடிந்தால் நாட்டுப் பசுவினங்களையும் மக்கள் ஆர்வமாக வளர்ப்பார்கள் தானே? நாட்டுப் பசுவினங்களும் அழியாமல் இம்மண்ணில் நீடித்திருக்கமுடியும் தானே? வாருங்கள் ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வோம்.
நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறதே! ஏன்?
ஒரு பசுவினத்தின் பால் உற்பத்திக்கும் (Milk Production) அதன் வளர்சிதை மாற்றத் திறனுக்கும் (Metabolic Rate) இடையே ’மரபணு ரீதியான நேர்மறை சார்புத் தன்மை’ (Genetically Positive Correlation) உள்ளது. நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்களுக்கு வளர்ச்சிதை மாற்றத் திறன் அதிகம். எனவே தான் நாட்டுப் பசுவினத்தை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறது. அது சரி வளர்ச்சிதை மாற்றத் திறன் என்றால் என்ன? என்று தானே கேட்கிறீர்கள். ஒரு உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு, அவற்றை செரிக்கும் திறன், செரித்த உணவை உறிஞ்சும் திறன், உறிஞ்சிய உணவிலிருந்து உயிர்வேதி வினைகள் மூலம் வெளிப்பட்ட ஆற்றலை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகைப் பண்பே (Complex Trait) அவ்வுயிரினத்தின் வளர்ச்சிதை மாற்றம் எனப்படுவது.
சீமை மற்றும் கலப்பினப் பசுவினங்களுக்கு நாட்டுப் பசுவினங்களை விட அதிக வளர்ச்சிதை மாற்ற திறன் உள்ளதற்கு என்ன காரணம்?
சீமை மற்றும் கலப்பின பசுவினங்களின் பரம்பரை பரம்பரையாக (Generation after Generation) சந்ததிகள் (Ancestors) மூலம் கடத்தப்பட்டு (Inherited) வந்த மரபுத் திறனே (Genetic Potential) காரணமாகும். அப்படியென்றால் சீமையின பசுக்களுக்கு ‘ஆதியிலேயே’ அதிகளவு பாலை சுரக்கும் மரபுத் திறன் இருந்ததா? இல்லவே இல்லை. சில நூறு வருடங்களுக்கு முன்னர் சீமைப் பசுக்களும் நாட்டுப் பசுவினங்களைப் போல மிகக் குறைந்த அளவிலேயே பாலை சுரந்தன. சீமைப் பசுக்களும், சீமை பொலிக் காளைகளும் தொடந்து பல சந்ததிகளாக பால் உற்பத்திக்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு (Selection) இனவிருத்தி (Breeding) செய்யப்பட்டன. அதாவது அதிகமாக பால் சுரக்கும் பசுக்களையும் (High Milk Yielding Cows), அதிகமாக பால் சுரக்கும் பசுக்களால் பெற்றெடுக்கப்பட்ட காளைகளையும் (Bull of High Milk Yielding Cow) மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகளை பெற்றெடுக்க அனுமதிக்கப்பட்டன. மந்தையிலுள்ள மற்ற குறைந்த திறனுள்ள பசுக்களும், காளையும் கழித்துக் கட்டப்பட்டன (Culled). இப்படி அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவைகளை மட்டுமே இனவிருத்திக்கு பயன்படுத்தியதன் விளைவாக ஒவ்வொரு சந்ததிகளிலும் உள்ள பசுக்கள் மற்றும் காளையின் பால் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் (Genetic Potential for Milk Production) மேம்படுத்தப்பட்டது. பால் உற்பத்தியை கணிசமாக உயர்த்தவும் முடிந்தது. இன்னமும் அது தொடர்கிறது. அதே காலகட்டத்தில் நம் நாட்டின பசுக்களும், பொலிக் காளைகளும் வேளாண் வேலைக்காக (Draught Power) தேர்ந்தெடுக்கப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டன. எளிமையாக சொல்வதென்றால் நமக்கும், மேலை நாட்டவர்க்கும் தேவைகள் (Demand) வெவ்வேறாக இருந்ததால் மாடுகளை இனவிருத்தி செய்வதன் நோக்கமும் (Breeding Goal) வெவ்வேறாக இருந்தது. அவர்களுக்கு பால். நமக்கு வேலைத் திறன்.
குளிர் தட்பவெப்ப காலநிலை (Cold Climate), பரந்த மேய்ச்சல் நிலம் (Extensive Grass Land), பெரிய அளவிலான பண்ணைய முறை (Large Scale Farming System), திட்டவட்டமான இனவிருத்திக் கொள்கைகள் (Planned Breeding Policies)… போன்ற பல காரணிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் (Temperate Countries) உள்ள பசுவினங்களை அதிக பால் உற்பத்தியை நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன. அதைப் போலவே கோடை தட்பவெப்ப காலநிலை (Hot Climate), பரந்த சாகுபடி நிலம் (Extensive Cultivable Land), மிகமிகச் சிறிய அளவிலான பண்ணைய முறை (Micro and Small Scale Farming System) போன்ற பல காரணிகள் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் (Tropical Countries) உள்ள பசுவினங்களை அதிக வேலைத் திறன் நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன. இப்படி ஆதி காலத்து மாட்டு மந்தைகள் தான் வாழும் சூழல் (Ecosystem) சார்ந்து பாலுக்காகவும், வேலைக்காகவும் என இருவேறு கிளைகளாக பரிணமித்தன (Evolved). இன்றளவும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர் இயற்கை நிகழ்வாகும்.
ஆதியில் வெவ்வேறு நிலப்பரப்புகளில் மேய்ந்து திரியும் மாட்டு மந்தைகளாக மட்டுமே அறியப்பட்ட கூட்டங்களெல்லாம் கால ஓட்டத்தில் பாலுக்கான மந்தைகளாகவும், வேலைக்கான மந்தைகளாகவும், இறைச்சிக்கான மந்தைகளாகவும் மாற்றப்பட்டன. பால், இறைச்சி போன்றவை வணிக பண்டங்களாக்கப்பட்ட (Commercial Commodity) பின் அவற்றின் உற்பத்தி ’தேவையின் அடிப்படையில்’ (Demand Based) அமையாமல் ‘லாபத்தின் அடிப்படையில்’ (Profit Based) மாற்றியமைக்கப்பட்டது. பெரிய பெரிய கறவைப் பண்ணைகள் முளைக்க ஆரம்பித்தன. பண்ணை முதலாளிகள் ஒன்று சேர்ந்து உற்பத்தியை மேலும் மேலும் பெருக்குவதற்கு திட்டத்தை வகுத்தனர். தொழில்நுட்பத்தையும் புகுத்த ஆரம்பித்தனர்.
மாட்டு மந்தைகள் பால் உற்பத்தி திறன் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு தனித்தனியாக இனவிருத்தி செய்யப்பட்டன. இவ்வாறு பல சந்ததிகள் தொடர்ந்து செய்யும் போது ஒவ்வொரு மாட்டு மந்தையும் தங்களுக்குள் ஒரே அளவிலான பால் உற்பத்தியையும், ஒரே மாதிரியான தோற்றத்தையும் பெற்றன. அவைகளுக்கு அவை வாழும் இடம் சார்ந்து ஒரு ‘பெயரும்’ சூட்டப்பட்டன. அப்பெயரே பிற்காலத்தில் இனத்தின் பெயராக (Breed Name) அறியப்பட்டது. இன்றளவும் அறியப்படுகிறது. இப்படி பெரும் பண்ணை முதலாளிகளால் தோற்றுவிக்கப்பட்டது தான் ‘இனம்’ எனும் கருத்துரு (Breed Concept). ஆக இனம் எனும் கருத்துரு பால் மற்றும் இறைச்சி வணிகமயப்படுத்த ஆரம்பித்த பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஒன்றேயாகும். ஒவ்வொரு இனத்தையும் வணிக ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்திற்காக பண்ணை முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டமைப்பு தான் “இனச் சங்கம்” (Breed Association) என்பது. இதன் முக்கிய நோக்கம் அது சார்ந்த இனத்தை பற்றிய உடல் தோற்றம், வளர்ச்சி, பால் உற்பத்தி, தீவனம் உட்கொள்ளும் அளவு, நோய் எதிர்ப்பாற்றல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முறையாக பதிவு (Recording) செய்வதும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இனவிருத்தியை மேற்கொள்ள ஆலோசனைகளை (Breeding Consultancy) வழங்குவதுமே ஆகும். இப்படியெல்லாம் சில நூறு வருடங்களாக செயல்பட்டுக் கொண்டுள்ள ”இன மேம்பாட்டு திட்டம்” (Breed Improvement Programme) எனும் மிக நீண்ட திட்டத்தினால் விளைந்ததே இன்று நாம் கண்டு அதிசயிக்கும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீஷியன் (Holstein Friesian), ஜெர்சி (Jersey), ப்ரௌன் ஸ்விஸ் (Brown Swiss), ரெட் டேன் (Red Dane) போன்ற பால் உற்பத்திக்கு பிரசித்திப் பெற்ற சீமை பசுவினங்களெல்லாம்.
வேலை திறனுக்கு பிரசித்திப் பெற்ற நாட்டு மாட்டினங்களை சீமை பசுவினங்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியுமா?
முடியும். நாட்டுப் பசுவினங்களின் பால் உற்பத்தி திறனை சீமை பசுவினங்களைப் போல அப்படியே மாற்ற முடியாவிட்டாலும் கணிசமாக (Significantly) கண்டிப்பாக உயர்த்த முடியும். ஒரு இனத்தின் பால், இறைச்சி உள்ளிட்ட உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் நாம் தொடர்ந்து செயல் படுத்த வேண்டியதெல்லாம் ”இன மேம்பாட்டு திட்டம்” எனும் திட்டமே ஆகும். குறைந்தபட்சம் சில நூறு வருட பொறுமையும், உழைப்புமே இதற்கு அடிப்படை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
இன மேம்பாட்டு திட்டத்திற்கும், கலப்பினச் சேர்க்கை திட்டத்திற்கும் (Cross Breeding Programme) உள்ள வித்தியாசம் என்ன?
இன மேம்பாட்டு திட்டமென்பது ஒரு இனத்திற்குள்ளாகவே சிறந்த பசுக்களையும் காளைகளையும் தேர்ந்தெடுத்து பல சந்ததிகளுக்கு இனவிருத்தி செய்யப்படுவது. பல சந்ததிகளுக்குப் பிறகு இனத்தின் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் கணிசமாக உயர்த்தப் படுகிறது. அதே சமயத்தில் இனத்தின் புறத் தோற்றத்தில் (Phenotypic Appearance) மாறுபாடு ஏற்படுவதில்லை. ஆனால் கலப்பினச் சேர்க்கை என்பது சீமை காளையையும் நாட்டு பசுவையும் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தி கலப்பின மாடுகளை பெறுவதாகும். கலப்பின பசுவானது சீமை மற்றும் நாட்டு மாட்டினங்களின் பண்புகளை ஒருங்கே (Combined) பெற்றிருக்கும். கலப்பின மாடு தோற்றத்தில் நாட்டு மாட்டினத்தைப் போல் இருக்காது. ஆகவே இங்கு நாட்டின மாடுகள் அழிக்கப்படுவதாக பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டு மாடினங்கள் பரிணமித்த இந்திய சூழலில் கலப்பின மாடுகளால் ஒரு போதும் பிரகாசிக்க முடியாது. இந்த முரண்பாடு தான் வர்த்தக கறவை பண்ணைகளின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலமாக இருக்கிறது.
இந்தியா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக ’இன மேம்பாட்டு திட்டத்தை’ கைக்கொள்ளாமல் ‘கலப்பினச் சேர்க்கை திட்டத்தை’ தேர்ந்தெடுத்தது ஏன்?
கலப்பினச் சேர்க்கை மூலம் பால் உற்பத்தியை குறுகிய காலத்திலேயே பெருக்க முடியும் என்பதால் தான். மேலும் கலப்பினச் சேர்க்கைக்கு தேவையான சீமை காளைகள் உறைவிந்து (Frozen Semen) வடிவில் மிக எளிதாக ’உலகமய’ சந்தையில் கிடைத்ததும் மற்றொரு காரணம். வீடுகள் தோறும் சிதறிக் காணக்கிடந்த நாட்டின பசுக்கள், அவற்றை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இருந்த கள பிரச்சினைகள், அன்று நிலவிய சமுதாய-பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணிகள் ‘இன மேம்பாட்டு திட்டத்தை’ கைக்கொள்வதை ஆதரிக்க வில்லை. கலப்பினச் சேர்க்கை திட்டத்தை களத்தில் அமல்படுத்தும் போது தெரிந்தோ தெரியாமலோ இழைத்த சில தவறுகளால் நாட்டு பசுவினங்களை இன்று நாம் கணிசமாக இழந்திருக்கிறோம். மறுப்பதற்கில்லை. அதை உணர தொடங்கியதன் விளைவு தான் இன்று நாட்டு மாட்டினங்களின் மீது நாம் காட்டும் கரிசனம் என்பது.
இழந்த நாட்டு மாட்டினங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?
முடியும். ஆனால் முடியாது.
புரியவில்லையே?
இழந்த நாட்டு மாட்டினங்களை கலப்பினச் சேர்க்கை மூலமே மீட்டெடுக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? ”கலப்பினச் சேர்க்கையால் தானே நாட்டு மாட்டினங்களை தொலைத்தோம். பிறகெப்படி அதே கலப்பினச் சேர்க்கை தொலைந்துப் போன நாட்டு மாட்டினங்களை மீட்டெடுக்கும்?” என்று தானே கேட்கிறீர்கள். இன்றுள்ள கலப்பினப் பசுக்களை நாட்டு மாட்டின காளைகளுடன் தொடர்ந்து ஆறு சந்ததிகளுக்கு இனச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது ஏழாவது சந்ததிகள் 100% நாட்டு மாட்டினமாக மாற்றமடைந்திருக்கும். இழந்த நாட்டு மாட்டினத்தை மீட்டெடுத்திருப்போம். எனவே தான் ’முடியும்’ என்றேன்.
ஆனால் ஏழாவது சந்ததி பசுக்களின் பால் உற்பத்தி இன்றைய கலப்பின பசுக்களைப் போன்று அதிகமாக இருக்காது. நாட்டு மாட்டின பசுக்களை போன்று குறைவாகத் தான் இருக்கும். இதை நாம் விரும்புவோமா? மாட்டோம் தானே? கண் திறந்தது முதல் கண் மூடும் வரை பால் தானே நம் மூச்சு. எனவே தான் ’முடியும் ஆனால் முடியாது’ என்றேன்.
முடியுமா, முடியாதா என்பதெல்லாம் நம் கையில் தான் உள்ளது! கறவைப் பசுக்களில் நாட்டுப் பசு, சீமைப் பசு, கலப்பினப் பசு என்பதெல்லாம் ஒரு வகையான ஒப்பீட்டு சொல்லேயாகும். அதை தவிர உள்ளார்ந்த, மாற்ற முடியாத, மாற்றத்திற்குட்படாத பொருள் என்று எதுவுமில்லை.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பொதுமக்களில் சிலர் செயற்கை முறை கருவூட்டல் இயற்கைக்கு எதிரானது என்பது போல கருதுகிறார்கள். பொதுவாக அதிக பால் உற்பத்தித் திறனுக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். இவைகளை மட்டும் கொண்டு இயற்கை முறையில் இனவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். இதன் பொருட்டு வந்தது தான் செயற்கை முறை கருவூட்டல் என்பது. இதில் சில எண்ணிக்கையிலான காளைகளின் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் பல பசுக்களை கருத்தரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்காகப் பயன்படுத்தும் போது குறைந்த மரபுத் திறனுள்ள சந்ததிகளை உருவாக்கி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் செயற்கை முறை கருத்தரிப்பில் காளைகள் முதலில் சந்ததி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் விந்துக்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதில்லை. இன்றளவும் இந்தியா பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய காரணமாகும்.
காளைகளிடமிருந்து விந்தணுக்களை சேகரிப்பதற்காக பிரத்தியோக பொலிகாளைப் பண்ணைகளை அரசாங்கமே அமைத்துள்ளது. அங்கு காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு அவைகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் அவைகளை முறையாக செயற்கைமுறை கருத்தரிப்பில் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
விவசாயத்தில் எந்திரமயமாக்கலால் காளை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இது மேலும் காளைகளின் பங்கை சமுதாயத்தில் குறைத்து விட்டது. ஒரு பக்கம் அதிக பால் தேவை, மறுபக்கம் காளைகளுக்கு வேலையின்மை. இவையிரண்டும் சேர்ந்து காளைகளின் மேல் ஒரு வித பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் பொதுமக்களில் சிலர் செயற்கை முறைக் கருவூட்டலை இயற்கைக்கு எதிராகப் பாவித்து, அது தவறு எனப் பொருள் கொள்கிறார்கள். செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிகாளைப் பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்களின் கருத்தரிப்புத் திறனை உறுதி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஏனெனில் இங்கு விந்தணுக்களை காளையிடமிருந்து சேகரித்து அதை ஆய்வகத்தில் முறையாக உறைவிந்து குச்சியில் அடைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விந்துக்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது. இதனால் தான் செயற்கை முறைக் கருவூட்டலில் இயற்கைமுறை கருவூட்டலை விட கருத்தரிப்புத் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்துவது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.
பசுக்களில் செயற்கைமுறை கருவூட்டல்
காளைகளிடமிருந்து விந்துவை சேகரிக்கும் போது மிகவும் கவனமாக சேகரிக்கப்பட வேண்டும். மேலும் காளைகளை பசுவிடமிருந்து பிரித்து பராமரிக்கப் படவும் வேண்டும். இதைக் காரணம் காட்டி பொது மக்களில் சிலர் இது இயற்கைக்கு எதிரானது என கூறுகின்றனர். காளைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பதே அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமும் ஆகும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இன்று நாம் காணும் கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி அடிப்படையில் ரெட் ஜங்கிள் பவுல் எனும் காட்டுக் கோழியிலிருந்து வந்ததே ஆகும். இதில் பரிணாமத்திற்கும் மிக முக்கிய பங்குள்ளது. மேலும் மனிதனின் உணவுத் தேவைக்காக அவைகள் இனவிருத்திக்கு உட்பட்டு இன்று நாம் காணும் கறிக்கோழியாகவும், முட்டைக் கோழியாகவும் உருவெடுத்துள்ளது. வணிகக் கோழியின் உற்பத்தித் திறன் அதன் மூதாதையரை விட அதிகமாகும்.
நாட்டுக் கோழி (Native / Desi Chicken)
அடிப்படையில் இந்த காட்டுக் கோழிகள் வீட்டு விலங்காக காலப் போக்கில் மாற்றப்பட்டப் பின்னர், அறிவியலின் புரிதலால் அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவைகள் மனிதனின் தெரிவுக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது மனிதன் விரைவாக வளரும் கோழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவைகளை இனவிருத்திக்கு உட்படுத்தினான். அடுத்த தலைமுறையில் கோழிகளின் வளர்ச்சி முந்தைய தலைமுறையைக் விட கூடியிருந்தது. இப்படி அதிக வளர்ச்சிக்கான மரபணுக்களைக் கொண்டு உருவானதே இன்று நாம் காணும் கறிக் கோழிகள்.
ஆழ்கூள முறையில் (Deep Litter System) கறிக்கோழி வளர்ப்பு
இதைப் போலவே தான் முட்டைக் கோழிகளும். ஆரம்ப தலைமுறைகளில் சில கோழிகள் அதிக எண்ணிக்கையில் முட்டையிடுவதையும், அதிக குஞ்சு பொறிக்கும் திறனையும் பெற்றிருப்பதை கண்டுகொண்ட மனிதன், அந்தக் கோழிகளை மட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்குமாறு செய்தான். இப்படி செய்ததன் விளைவாக புதிதாக வரும் சந்ததிகள் அதிக உற்பத்திக்கான பண்புகளைப் பெற்றிருந்தன. அதன் விளைவாக அதிக விளைச்சலை மனிதன் பெற்றான். இந்த உற்பத்தி சார்ந்த இனவிருத்தி முறை இன்றளவும் நடைபெற்று கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் 100 முட்டைகளுக்கும் குறைவாக இருந்தவை இன்று 300 முட்டைகளை இடும் வகையில் முன்னேறியுள்ளது. இது மனிதனின் புரதத் தேவையை பூர்த்தி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கறிக்கோழியும் இன்று ஆறு வாரங்களில் இரண்டு கிலோ எடையை அடையுமாறு அதன் வளர்ச்சித் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(கூண்டு முறையில் (Cage System) முட்டைக் கோழி வளர்ப்பு)
இந்த முன்னேற்றத்தில் இனவிருத்தி, மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு போன்ற துறைகளுக்கு முக்கிய பங்குள்ளது. இயற்கை திடமான கோழிகளை மட்டும் ஆதரிக்கும். ஆனால் மனிதனின் தொழில்நுட்பம் உற்பத்தித் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்தக் கோழிகளை மட்டும் ஆதரிக்கும். மேலும் தற்போது உற்பத்தியுடன் கோழியின் திடம் சார்ந்த பண்புகளும் முக்கியம் என்பதை மனிதன் உணர்ந்துள்ளான்.
ஆக சுருக்கமாகக் கூறுவதென்றால் காட்டுக் கோழிகள் வணிகக் கோழிகளாக மாறியதில் மனிதனின் செயற்கை முறை தெரிவும், தொழில்நுடபம் மிகுந்த மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகளும் குறிப்பிடத் தக்கவை. கோழிகளின் நலன் பாதிக்காமல் அதன் உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்பது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- ஆர்.எஸ்.பிரபு
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஜல்லிக்கட்டு நடத்தி நாட்டுப் பசுக்களை காப்பாற்றிய தன்னார்வலர்கள், தமிழரின் மரபுசார் விளையாட்டில் கலந்துகொண்டு ஆங்காங்கே இறந்துகிடக்கும் இளைஞர்களின் பிணத்தை எந்த சலனமும் இல்லாமல் தாண்டிச் சென்று, இன்று சீமைக்கருவேல மரத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளனர்.
சீமைக்கருவேல் தண்ணீரை ஏகத்துக்கும் உறிஞ்சி வறட்சியை உண்டாக்குகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு அதை அகற்றும் பணியில் நடைமுறை சிக்கல்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் நடைபெற்று வரும் கூத்துகள்.
நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் தமிழகத்தில் எதுவுமே நடக்கும் என்ற ஒரு புதிய வகையான மக்களாட்சி முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், அந்தந்த துறைசார் வல்லுனர்கள், அதிகாரிகள் என்ற இனம் அருகி தன்னார்வலர்களே மருத்துவர்களாக, நீரியல் நிபுணர்களாக, மண்வள வல்லுநர்களாகி விட்டனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி காட்டன் சைஸிங் ஆலைகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களின் பாய்லர்கள், கரியில் எரியும் தேநீர் அடுப்புகள், இஸ்திரி கடைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே எரிபொருள் சீமைக்கருவேல் மரம்தான். ஒரு கிலோ மூன்று முதல் நாலரை ரூபாய் மட்டுமே என்பதோடு மிகக்குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள்.
இந்த விலை குறைவான firewood-க்கு மாற்று இல்லாததால் தமிழகத்தின் பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அதில் கடுமையாக பாதிக்கப்படப் போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு. மின்சாரத்தை நெருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த த.நா.மி.வா இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது.
ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளிடம் மிகப்பெரிய அளவில் தேங்கியுள்ள Fuel oil எனப்படும் Furnace oil பெரும் மானியத்துடன் சந்தையில் இறக்கிவிடப்பட்டபோதிலும் சீண்டுவாரில்லாமல் கிடக்கிறது. இருக்கும் எரிபொருள்களிலேயே அதிகபட்ச (கிட்டத்தட்ட 4%) கந்தகத்தை மாசாக வெளியிடக்கூடியது. 25 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் உறைந்துவிடும் என்பதால் குளிர்காலத்தில் தொட்டியிலிருந்து உறிஞ்சுவதற்கு மின்சார வெப்பமூட்டி வேண்டுமென்பதால்தான் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி வருகின்றன. டெல்லியில் 2000 சிசி-க்கும் அதிக சக்தியுடைய டீசல் மகிழ்வுந்துகளைத் தடை செய்த பின்னரும் காற்று மாசு குறையாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை; பக்கத்து மாவட்டங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று முட்டு கொடுக்கப்பட்டபோது தலைநகரத்தில் எத்தனை ஆலைகளில் நாள்தோறும் எத்தனை ஆயிரம் லிட்டர் ஃபர்னேஸ் ஆயில் எரிக்கப்படுகிறது, அதன் மானிய விழுக்காடு குறித்த தகவல்களை CSE-யின் சுனிதா நாராயண் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மாற்று எரிபொருள் தேவைகள் குறித்து பல மேலைநாட்டு தொழில் வர்த்தக சபைகள் அக்கறை காட்டி பேசிவரும் சூழலில் பெட்ரோலிய சுத்திகரிப்பின்போது ஃபர்னேஸ் ஆயிலுக்கு கொஞ்சம் மேலே நிற்கும் பெட் கோக் எனப்படும் petroleum coke-இன் அமெரிக்காவுக்கான இந்திய இறக்குமதி குறித்து சுனிதா நாராயண் ஆரம்பித்து வைத்திருக்கும் சர்ச்சைகள் முக்கியத்துவம் பெறுகிறது. சில நேரங்களில் CSE-யின் உட்டாலக்கடி டேட்டாக்கள் வாட்சப்பில் வருவதைவிட பயங்கர அபாயகரமானது என்பதையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படியெனில் தமிழகத்தின் மலிவான விறகு எரிபொருளை திட்டமிட்டு அழித்து மிக அதிக மாசைப் பரப்பும் ஃபர்னேஸ் ஆயிலை விற்க அமெரிக்க இலுமினாட்டிகள் செய்யும் சதியா என்ற சாதாரண வாட்சப் வாசகனின் கேள்விக்கு இப்போது என்னிடம் பதிலில்லை.
சரி, தமிழகத்தில் சீமைக்கருவேல் அனைத்தும் வேரோடு பிடுங்கி எரியப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதன் உடனடி விளைவு வரும் மழைக்காலத்தில் என்னவாக இருக்கும்? வேரும், மரமும் விறகுக்காக எடுத்துச் செல்லப்பட்டபின் அதன் நுனிக்கிளைகள் அனைத்தும் அப்படியேதான் வீசப்பட்டிருக்கின்றன.
ஓர் உயிர்சூழலில் ஒரு மரத்தினை முற்றிலுமாக அகற்றும்போது அடுத்த வலுவான தாவர இனம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பது இயல்பு. ஆனால் கோடை ஆரம்பிக்கும் தருவாயில் அவற்றை அப்புறப்படுத்துகையில் கோடை முடிந்து அடுத்த மழை வரும்வரை அந்த இடம் கட்டாந்தரையாகவே கிடக்கும் என்பது தன்னார்வலர்களுக்கும் தெரியும். கன மழை வரும்போது மாற்று மரங்களோ, செடிகொடிகளோ இல்லாத நிலையில் ஏற்படப்போகும் கடுமையான மண் அரிப்பு, அதனால் மேல் மண்ணில் ஏற்படும் சத்துக்கள் இழப்பு, வெட்டி வீசப்பட்ட நுனிக்கிளைகள் நீர்வழிப்பாதைகளில் சென்று வாய்க்கால்களை, மதகுகளை அடைத்து அதனால் உண்டாகப் போகும் கரை உடைப்புகள், அதன் மேற்படி சேதம் எல்லாம் மனித திட்டமிடலில் உள்ள தவறால் நிகழக்கூடியவை.
நம் முன்னோர்கள் குளங்களை கோடையில் குடிமராமத்து செய்து அந்தந்த ஊர் மக்களே பாதுகாத்தனர் என்ற தகவலை வாட்சப் மூலம் அறிந்துகொண்ட தன்னார்வத் தமிழர்கள் குளங்களைப் பாதுகாக்க ஜேசிபி-யை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். புற்கள், புதர்கள், செடிகொடிகள், சிறு மரங்கள், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள் என அனைத்தும் சேர்ந்துதான் உயிர்ச்சூழல். ஏரி, குளம் என்றாலே அபார்ட்மென்ட்வாழ் தமிழர்கள் பொச்சு கழுவ ஊருக்கு நடுவில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் பெரிய மண்ணாலான தொட்டி என்ற புரிதலோடு ஜேசிபி-யுடன் நின்று போஸ் கொடுக்கும் குரூர மனங்கொண்ட சகமனிதர்களுடன் வாழப் பழகிவிட்டிருக்கிறோம். கடும் மழைக்காலத்தையும், கோடை காலத்தையும் தாங்கித்தான் தேரை, நத்தை முதல் யானைவரை வாழ்கின்றன. ஒரு நிலத்தை அறுத்து எடு்த்துவிட்டு எதை பாதுகாக்கப் போகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் வாழ வேண்டியிருக்கிறது. பலவருட வண்டலை, குளங்களில் முற்றிலும் மண்தெரிய ஒரே ஆண்டில் தோண்டுவதுதான் தூர்வாருதல் என்றால் களைக்கொல்லிகளைத் தெளித்துவிட்டு இரண்டு வாரங்கள் கழித்து தீ வைத்துவிடலாம. இரண்டும் ஒரேமாதிரியான விளைவுகளைத்தான் உண்டாக்கும் என்றாலும் பின்னது மிகவும் செலவு குறைவான ஒன்று. உயிரிச்சூழலாவது, வெங்காயமாவது.
திராவிட ஆட்சிகள்தான் தமிழகத்தின் இயற்கை வளங்களை சூறையாடிவிட்டன என்று இராஜஸ்தான் மார்பில்ஸ் பதிக்கப்பட்ட கக்கூஸில் அமர்ந்துகொண்டு பலர் தொடர்ந்து பதிவு எழுதி ஒருவகையான மனப்பிறழ்வுக்கு ஆளாகி வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். திராவிடக் கட்சிகள் இல்லாத மாநிலங்களில் மார்பில்ஸ் என்பது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மரத்தில் காய்க்கிறது, டைல்ஸ் எல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நாட்டுக் கோமாதாவின் பாலிலிருந்து நெய் எடுப்பதுபோல லேசாக ஆப்பையை விட்டு கிளறி எடுக்கப்படுகிறது என்று எண்ணுகிறார்கள் போலும்...!
- ஆர்.எஸ்.பிரபு
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!
- சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு
- இன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும்
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
- தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!
- பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு
- மஞ்சள் தொண்டைசிட்டு
- கானமயிலைத் தொலைத்தோம்!
- பேரீச்ச மரங்கள் - சில தகவல்கள்
- மணங்களின் ராணி ஏலம்