கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.முத்துசாமி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும், உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பினணந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன.
இப்பறவைகள் வாழிடத்தின் அருகில் உள்ள வயல் விளைகளில் விளைந்து வரும் தானியங்களையும் புழுப் பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகளின் வித்தியாசமான கூட்டமைப்பே இப் பறவைகளுக்கு பெரும் ஆபத்தாகி விடுகின்றன. ஆம்! இக் கூட்டின் அமைப்பை இரசிப்பதற்காகவே சிறுவர்களால் இக்கூடுகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. கூட்டினை எடுக்கும்போது அக்கூட்டில் உள்ள முட்டைகளும் உடைக்கப்படுகின்றன. இதனால் குருவியினம் படிப்படியாக அழிவினை நோக்கி செல்லுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளால், பயிர்க்குச் சேதம் விளைவிப்பதாகக் கருதி அப்பறவையினங்கள் அழிக்கப்படுகின்றன.
இப்பறவையினங்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைவிட, புழுக்கள், வெட்டுப்பூச்சிகள் ஆகியவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் அதிகம் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பறவைகள் தானியங்களை உண்பதைவிட தானியங்களில் காணப்படும் புழுப்பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் உணவாக உட்கொண்டு, பயிர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது என்ற உண்மையை விவசாயிகள் உணர்ந்து கொண்டால் இப் பறவையினங்கள் அழிவிலிருந்து மீளும் என்பது உண்மை.
தூக்கணாங்குருவியின் இன வேறுபாடு அறிதல்:
தூக்கணாங்குருவியின் தலையில் காணப்படும் வெளி்ர் மஞ்சள் நிறத்தைக் கொண்டு ஆண், பெண் வேறுபாட்டினை அறியலாம். ஆண் பறவையின் தலையில் வெளிர்மஞ்சள் நிறம் இருக்கிறது. பெண் பறவைக்கு தலையில் வெளிர் நிற முடிகள் இல்லை.
தூக்கணாங்குருவியின் கூடு அமைப்பு :
எந்த பொறியியல் கல்லூரியில் பயின்றன இப் பறவைகள்? என்ற வினா எழுப்பும் விதமாக பொறியியல் தொழில் நுட்பக் கலைஞர்களின் அறிவுத்திறனை உள்ளடக்கியது போல் இப் பறவைகளின் கூடுகள் அமைந்துள்ளன.
நுழைவு வாயில் :
முட்டைகள் இடுவதற்கு தனிப்பகுதி, பறவைகள் அமர்வதற்கு குறுக்குச் சட்டகம், கூட்டின் உள் பகுதியில் களிமண் பூசப்பட்டுள்ளது போன்ற அமைப்பு காணப்படுகின்றன. மேலும் இப் பறவையின் கூடுகள், சிறு நீண்ட புல், ஓலை நார்கள் போன்றவற்றால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இ்க் கூட்டினை ஆண்பறவைகளே கட்டி முடிக்கின்றன என்ற சிறப்புச் செய்தியும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.
கூடுகள் அமைவிடம்:
இக்கூடுகள் பெரும்பாலும் கிணற்றின் உட்புறச் சுவர்களில் வளர்ந்துள்ள மரம் மற்றும் செடிகளின் காம்புப்பகுதிகளிலும், தென்னை மரங்களின் ஓலைப்பகுதிகளிலுமே பெரும்பாலும் கூடுகள் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கான காரணம் பெரும்பாலும் கூடுகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுதற்காக இவ்வாறு கிணற்றுச் சுவர் மரங்ளிலும், மிக உயரமான தென்னை மரங்களிலும், முள் மரங்களிலும். கூடுகட்டுவதை அறிய முடிகிறது.
கூட்டம் கூட்டமாய் வாழும் சமூக முறையை இப்பறவைகள் பின்பற்றுகின்றன.
விவசாயிகளுக்கு நன்மை :
தானியப் பயிர்களை சிறிதளவே உண்டாலும், பயிர்களுக்குப் பெரும் சேதம் விளைவிக்கும் புழுப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளுவதால், தானியப் பயிர்கள் புழுப் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கின்றன. இதன் மூலம் மறைமுகமாக விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பறவையாக தூக்கணாங்குருவி பறவைகள் காணப்படுகின்றன.
தூக்கணாங்குருவியினை பாதுகாப்போம்
இப்பறவைக்கூட்டின் அழகிற்காகவும், விவசாயிகளின் தவறான எண்ணங்களினாலும் இப் பறவை தொடர்ந்து அழிவுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் இப்பறவைகள் அழிந்து விடும். நம் வருங்கால சந்ததியினருக்கு இப்பறவையின் செயல்பாடும் தொழில் நுட்பம் வாய்ந்த கூட்டமைப்பும் தெரியாவண்ணம் போய் விடும். விவசாயிகள் இப்பறவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பறவையினத்தினை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு முன் வரவேண்டும்.
- இரா.முத்துசாமி எம்.,ஏ.,பி.எட்.,பி.எச்.டி., தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கடையநல்லூர்
- விவரங்கள்
- தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இன்று அடிப்படைத் தேவைகளான நீர், மின்சாரம், ஆரோக்கியமான காற்று என எல்லாம் அழிந்து மழைக்கூட பருவக் காலங்களில் பெய்யாது நோய்களின் கூடராங்களாக மக்கள் வாழ்நிலை மாறியுள்ளது. இதற்கு அடிப்படை காரணங்கள் நம் இயற்கை வளங்களான காடுகளும், மலைகளும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளால் சூறையாடப்படுவதுதான். 67 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் உலகின் வறுமை பிரதேசம் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்கா கண்டத்தைக் காட்டிலும், இந்தியாவில் தங்கள் சொந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம். இதில் நம் இயற்கை வளங்களை காலம்காலமாக பாதுகாத்துவரும் பழங்குடிமக்களே அதிகம்.
காடுகளும் பழங்குடி மக்களும் பிரிக்க இயலாத உயிரோட்டமான உறவுமுறை கொண்டவர்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் காடுகளை பாதுகாக்க பழங்குடி மக்கள் நடத்திய 105 போர்களில் 75 போர்கள் ஆங்கியேர்களால் வெற்றிக் கொள்ள இயலவில்லை. காடுகளை சுரண்ட மக்களின் எதிர்ப்பை மீறி பிரிட்டஷ் காலத்தில் சட்டரீதியாக 1855ல் வனத்துறை கொண்டுவரப்பட்டது. அத்துடன் வனங்களின் அழிவும் ஆரம்பித்தது. வனங்களைப் பாதுகாக்கும் மக்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. இன்றும் இந்தியா முழக்க இருக்கும் காடுகளை பாதுகாக்க பன்னாட்டு சுரண்டலுக்கும் அவர்களுக்கு துணைப்போகும் இந்திய அரசுக்கும் எதிராக மிகப் பெரும் உள்நாட்டுப் போரே மாவோயிஸ்ட் தலைமையில் நடத்தி வருகிறார்கள். ஏனென்றால் நம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான காடுகளும், மலைகளும் அவர்களுக்கு தெய்வங்கள், அதை ஒருபோதும் அழிக்கவும் மாட்டார்கள், அழிக்கவும் விடமாட்டார்கள்.
காடுகளில் உள்ள விலைமதிப்பு மிக்க பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாட தடையாக இருக்கும் பழங்குடி மக்களையே காடுகளை சூறையாடுபவர்களாக முன்நிறுத்துகிறது அரசும், கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும். ஆனால் பெரும்பாலான காடுகளையும், காட்டு விலங்குகளையும் அழித்தவர்கள் ஆங்கிலேயர்களும், ஜமீன்தார்களும் தான் என்பது அப்பட்டமான உண்மை. யானைகளையும், புலிகளையும், காண்டா மிருகங்களையும் கொன்று ஜம்பமாக அதன் மீது கால்வைத்து எடுத்திருக்கும் புகைப்படங்களே இதற்கான, கண்கூடான சாட்சிகள்.
காடுகளை அழிக்கும் திட்டங்களும், காகிதத்தில் மட்டுமே இருக்கும் வன உரிமைச்சட்டமும்
காடுகளில் இருந்து காட்டின் பாதுகாவலர்களான பழங்குடி மக்களை வெளியேற்ற வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகம், கார்பன் டிரேடிங் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வனவிலங்குகளைப் பாதுகாப்பதாகவும், பழங்குடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதாகவும், சுற்று சூழலைப் பாதுகாப்பதாகவும் கூறுகிறார்கள் மத்திய மாநில அரசுகளும், பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும். ஆனால் இந்தியாவில் அதிகமாக புலிகள் பாதுகாப்பிற்கு செலவு செய்யபட்ட இராஜஸ்தான் சரிஸ்கா புலகள் சரணாலயத்தில் ஒரு புலிக் கூட இல்லை என்பது தான் இவர்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் லட்சணம். புலிகள் காப்பகமும் கார்ப்பரேட் என்.ஜி.ஒ க்களும் என்ற புத்தகத்தில் எழுத்தாளர் முருகவேள் காட்டைக் கொள்ளை அடிக்கும் திட்டமே புலிகள் காப்பகம் என்பதை விரிவாக ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். பழங்குடி மக்களின் போராட்டங்களும், பல்வேறுப் பட்ட அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியினாலும் 2006 வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் வனமும், வனம் சார்ந்தவையும் பழங்குடி மக்களுக்கே சொந்தம், எந்த ஒரு திட்டமும் அவர்களின் கிராம சமை ஒப்புதல் இல்லாமல் காடுகளில் நடைப் பெறக் கூடாது என்கிறது. மேலும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மீள்குடியேற்றம் செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறது.
ஆனால் தமிழகத்தின் இயற்கை ஆதாரங்களான மேற்குத் தொடர்ச்சி மலையையும், கிழக்கு குன்றுகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு தமிழகத்தில் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட 36 பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு கூட இதுவரை பட்டா வழங்கவில்லை, கிராம சபைகள் அமைக்கப்படவில்லை, அவர்களின் நலனிற்காக ஒதுக்கப்பட்ட பண்டைய பழங்குடி நிதி இதுவரை இவர்களுக்கு செலவு செய்யப்படவில்லை என்பது தான் வன உரிமைச்சட்டத்தின் நடை முறை.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனக்கிராமங்கள் பேருராட்சியின் கீழ் தள்ளப்பட்டியிருக்கின்றனர். இதனால் அவர்களின் வன உரிமைகள் ஒட்டு மொத்தமாக துண்டிக்கப்பட்டு எந்த வாழ்வாதரமும் இல்லாது இருக்கின்றனர்.
பழங்குடிகளை வெளியேற்ற வனவிலங்குகளை காரணம் காட்டும் அரசு
தமிழகத்தின் மலையோரக் கிராமங்களில் வனவிலங்குத் தாக்கப்பட்டு 100க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல்வேறு விளைச்சல் நிலங்கள் வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் வாழ்வாதரங்களை பழங்குடி மக்கள் அழிப்பதால் அவைகள் வெளியேறி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுப்படுகின்றது என்கிறார்கள் அரசுத் தரப்பும், கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும். ஆனால் வனவிலங்குகளின் வழித்தடங்களையும், பழங்குடிகளின் வாழ்வாதாரங்களையும் ஆக்கிரமித்து உள்ள ஈஷா யோகா, வேதாந்த மகரிஷியின் அறிவுத்திருக் கோவில், தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராமகிருண்ணா , காருண்யா, பி.எஸ்.ஜி, அமிர்தமாயி போன்ற கல்வி நிறுவனங்கள் மேலும் பல்வேறு ரெசாட்டுகள் இவைகளுக்கு எதிராக அரசும், கார்ப்பரேட் அறிவு ஜீவிகளும சிறு குரலையும் எழுப்புவதில்லை. ஈஷா யோகா மையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. ஆனால் 24 மணி நேரமும் மின்சார வசதியும், குடிநீரையும் வழங்கிறது இந்த அரசு.
கடந்த மாதம் நீலகிரியில் தேயிலைத் தோட்ட தொழிலாளிப் பெண் ஒருவரை புலி அடித்துக் கொன்றது. இதைக் கண்டுக் கொள்ளாத வனத்துறையைக் கண்டித்து நடந்தப் போராட்டத்தில் வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை ஒட்டிப்பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட் தேடுதல் என்றப் பெயரில் அதிரடிப்படையினர் 4 பேர் கூடலூரில் கணவனுடன் வந்த பெண்ணைக் கற்பழிக்க முயற்சி செய்து அவரது கணவரையும் அடித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் வனத்துறை மற்றும் அதிரடிப்படையினால் தங்கள் வாழ்வியல்பை இழந்து பயத்தோடே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எல்லாக் குற்றங்களும் பழங்குடி மக்கள் மீதே சொல்லப்படுகிறது.
போராடும் மக்கள் மற்றும் சனநாயகவாதிகள் கைது நடவடிக்கையும்
பொள்ளாச்சி ஜே.ஜே. நகர் பழங்குடி மக்கள் 20 வருடங்களுக்கு முன்பு காடுகளைவிட்டு வெளியேற்றப் பட்டு இன்றுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லாது வாழ்ந்துவருகின்றனர். பல வருடப் போராட்டங்கள் அரசின் செவியில் விழாததால் காடுப்புகும் போராட்டத்தை நடத்தினர். 10 நாட்களில் தீர்வு சொல்வதாகக் கூறி பழங்குடி மக்களை அனுப்பிவைத்த வனத்துறை ,பழங்குடி மக்கள் உட்பட 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சனநாயக இயக்கத் தோழர்கள 3பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் நாடு முழுக்க பழங்குடி மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.
நாட்டை விற்கும் அவசரச் சட்டங்கள்
மத்தியில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக அவசரச் சட்டங்களாகக் கொண்டுவரப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம், அணு ஆயுத ஓப்பந்தம் இது மட்டும் அல்லாது வன உரிமைச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர முயற்சித்து வருகிறார்கள். வனம் சார்ந்த திட்டங்களுக்கு கிராமசபை ஒப்புதல் இல்லாது நடத்த முடியாது என்பதே வன உரிமைச் சட்டம் பழங்குடி மக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. ஓரிசாவில் நியாம்கிரி மலையில் வேதாந்தாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பழங்குடி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை ஒட்டிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பழங்குடி மக்கள் உள்ள அந்தப்பகுதியின் கிராமசபை ஒப்புதல் இல்லாது இந்த திட்டத்தை நடத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கி
யுள்ளது. இப்படிப்பட்ட கிராமசபையின் உரிமையை திருத்தம் செய்வதே வன உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் நடவடிக்கை.
பழங்குடி மக்கள் இல்லாது காடுகள் இல்லை
நம் நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சி என்றப் பெயரில் சூறையாடப்படுகிறது. பெரும்பாலான உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதைத்தான் வளர்ச்சி என்கிறார்கள். இதுநாள் வரை காடுகளையும், மலைகளையும் தங்கள் தெய்வங்களாகக் கருதிப் பாதுகாத்து வந்த பழங்குடி மக்களை வெளியேற்றாமல் காடுகளை அழிப்பது என்பது சாத்தியமில்லை. இதை அறிந்து கொண்டே பழங்குடி மக்களுக்கான நிதியில் 57 சதவீதம் குறைத்துள்ளது மத்திய அரசு. காடுகளின் உயிர் கண்ணியில் ஒருவர்களான இவர்களை வறுமையிலும், நாட்டின் வளர்ச்சியென்றும் வெளியேற்றுவது மனித உரிமை மீறல் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது. ஆனால் இங்கு சாமானியர்களுக்கான சட்டங்களும், திட்டங்களும் போராடாமல் நடைமுறைக்கு வராது என்பதே யதார்த்தமாக உள்ளது. நம் நீர் ஆதாரங்களையும், இயற்கை சூழல்களையும் பாதுகாக்காக வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுப்பதை தாண்டி வேறுவழியில்லை. இந்த மக்கள் விரோத்தைத் தடுக்க துணியாவிட்டால் நம் வருங்கால சந்ததியருக்கு நாம் விட்டுவைப்பது வெறும் சுடுகாடுகள்தான்.
மத்திய அரசே ! மாநில அரசே !
வன உரிமைச்சட்டத்தில் உள்ளதைப் போல பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் கிராமசபைகளும், வன உரிமைக் குழுக்களும் உருவாக்கு!
அனைத்து பழங்குடி மக்களுக்கும்; பட்டா வழங்கு!
வனங்களை ஆக்கிரமித்துள்ள மத நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும், ரியல் எஸ்டேட்காரர்களையும் உடனடியாக வெளியேற்று!
பேரூராட்சியின் கீழ் உள்ள வனக் கிராமங்களை, கிராம பஞ்சாயத்திற்கு மாற்று!
பழங்குடி மக்களுக்கு விரோதமான புலிகள் காப்பகத்திட்டத்தைக் கைவிடு!
மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை என்றப் பெயரில் வனத்துறை மற்றும் அதிரடிப்படைகளின் அட்டூழியங்களை நிறுத்து!
நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் வன உரிமைச் சட்டத்தில் மக்கள் விரோத திருத்தங்களைக் கொண்டுவராதே!
உழைக்கும் மக்களே ! சனநாயக சக்திகளே !
பழங்குடி மக்களின் நியாமான வன உரிமைக்காக குரல் கொடுப்போம்!
காடுகளை சூறையாடும் சட்டங்களையும், திட்டங்களையும் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம்!
நம் இயற்கை வளங்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்!
- தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு
- விவரங்கள்
- இரா.முத்துசாமி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பசுமையைப் பேணும் இயற்கை விரும்பி
மரத்தில் கூடு கட்டும் காகங்கள், காலையில் இரை தேட கிளம்பி மதியத்திற்குள் அதே மரத்தை வந்தடைகின்றன. தான் கூடு கட்டி வாழும் மரத்திற்கு கீழே கூட்டிலிருந்து விழும் காகத்தின் எச்சங்கள் மரத்திற்கு சிறந்த உரமாகப் பயன்படுகின்றன. அதனால் மரங்கள் செழிப்பாக வளர்வதுடன் பிற தாவரங்களும் செழிப்பாக வளர்வதற்கு காரணமாக அமைகின்றது.
எச்சத்தின் மூலமாக மண்ணில் பதிந்த விதைகள் மழைக்காலங்களில் முளைக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு விதைகள் ஆங்காங்கே பரவி மரங்கள் உற்பத்தியாக இயற்கை விதைத்தூவியாக காகங்கள் விளங்குகின்றன.
மேலும் மரத்தின் கனிகளிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட விதையின் முளைப்புத் திறன், காகத்தின் எச்சத்திலிருந்து பெறப்பட்ட விதையின் முளைப்புத்திறனை விட குறைவாக இருப்பதும் ஆய்வுப் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் உற்ற தோழன்
ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு மிகுந்த தொல்லையைத் தருவது உண்ணிப் பூச்சிகளாகும். அவ் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஆடு, மாடுகள் அவற்றினுடைய உடம்பை பாறை, சுவர், மரம் போன்ற பொருட்களின் மீது உராய்ந்து உண்ணிப்பூச்சிகளின் தொல்லையைக் குறைக்க முயல்கின்றன.
ஆடு மேய்ப்பவர்கள் வளர்ப்பு ஆடுகளின் காது மடல்களை முக்கால்வாசி வெட்டி விடுவர். காரணம் என்னவென்றால், ஆடுகளின் காது மடல்கள் மடங்கி இருப்பது காதுமடல்களில் அதிகளவு உண்ணிப்பபூச்சி இருந்து ஆடுகளின் இரத்த்த்தை குடித்துவிடுகின்றன. அதனால் ஆடுகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றன. காது மடல்களை வெட்டிவிட்டால் காகங்கள் ஆடுகளின் கழுத்துப் பகுதியில் அமர்ந்து கொண்டு காதுக்குள் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை எளிதில் எடுத்து விடுகின்றன. இதனால் ஆடுகள் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளிலிருந்து எளிதில் விடுபடுகின்றன.
இயற்கை துப்புறவாளர்
மனிதனால் கொல்லப்பட்டு வீதியில் எறியப்பட்ட விலங்குகள், இறைச்சிக்கடை வியாபாரிகளால் கொட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கழிவுகள், மனிதன் உண்ட பின்பு வீதியல் எறியப்படும் எச்சில் உணவுப் பதார்த்தங்கள் போன்றவை சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகின்றன. சுகாதார நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும் மேற்கண்ட மனிதர்கள் செய்யும் சுகாதாரக்கேட்டினை அப்புறப்படுத்தும் இயற்கைத் துப்புறவாளராக காகம் இருந்து வருகின்றது.
இத்தகைய அற்புதப் பணிகளைச் செய்து வரும் காக இனங்கள் மனிதனின் செயல்களால் அழிந்து வருகின்றது. எலித்தொல்லையை கட்டுப்படுத்த மனிதன் உணவில் விஷம் வைத்துக் கொல்கிறான். விஷ உணவை உண்ட எலிகள் இறந்தவுடன், இறந்த எலியை வீதியில் தூக்கி எறிகிறான். இதனை உண்ட காகமும் இறந்துவிடுகிறது. மேலும் மனிதன் வயல் வெளியில் உள்ள எலிகளை ஒழிக்கும் பொருட்டு அவிக்கப்பட்ட நெல்லில் விஷம் கலந்து அவற்றை வீட்டின் மாடிகளில் உலர வைக்கின்றான். அவற்றை உணவுப் பொருட்களாக நினைத்து, இரை எடுத்த காகங்கள் அழிகின்றன.
காக இனத்தின் அற்புத செயல்களை நினைத்து காகங்கள் அழிபடாமல் காத்தால், நம் சுற்றுப்புறம் தூய்மை ஆவதுடன் நமது நலன்களும் பாதுகாக்கப்படும் என்பது திண்ணம்.
- இரா.முத்துசாமி எம்.ஏ.,பி.எட்., தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர். அலைபேசி 9994531009
- விவரங்கள்
- எஸ்.கீர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காடழிப்பானது பல் வகையான உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதுடன் நீண்ட காலப்போக்கில் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக அமையும். இவ் அயன மழைக்காடுகள் அழியும் இடங்களாக பிரேசலின் அமேசன் காடுகள், ஆபிரிக்காவின் கொங்கோ காடுகள், மலகாசி, கெய்ட்டி, பிலிப்பைன்ஸ், இலங்கையில் சசிங்கராஜவனம், சுமாத்திரா, யாவா, பனாமா, நைஜீரியா, இந்தோனேசியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, காபோன், கிழக்கு அவுஸ்திரேலியா போன்றவற்றில் நடைபெறுகின்றது. காடுகளின் சீரழிவு/தரமிழப்பு என்பது பொதுவாக தாவர போர்வைகளின் இழப்பு என்று கருத முடியாது.
இன்றைய புவி மேற்பரப்பில் 2/5 பங்கு காடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை அடங்கியுள்ள பகுதியிலும் பார்க்க 3.5 மடங்கு அதிகமாகும். உலகளாவிய ரீதியில் சராசரியாக 4499 million ha ஆக காணப்பட்ட காட்டு வளத்தில் அயன மண்டல காடுகள் சராசரியாக 2346million ha ஆக காணப்படுகிறது. இக் காடுகளில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4 million ha வரை இடைநிலை காடுகளாக மாற்றமடைந்து வரும் அதேவேளை 1945 இன் பின் வளர்முக நாடுகளில் இக்காடழிப்பின் விகிதாசாரங்கள் அதிகரித்து உள்ளதோடு மத்திய அமெரிக்காவில் சராசரியாக 38% காடுகளும் ஆபிரிக்காவில் 24% காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ் அயனமண்டல காடழிப்பானது பூகோளத்தில் வருடாந்தம் 6.5 million ha காணப்படுகிறது. இது மொத்த நிலப்பரப்பில் 0.6% ஆகும். இவ்வாறு காடழிப்புகள் அயன வலயப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றபொழுது தற்பொழுது ஆசிய பிராந்தியத்தில் 25% தென்கிழக்காசியாவிலும் 57% அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இவ் அயன காடுகளின் சராசரியான அடர்த்தி 1202 million ha ஆகும்.
இவ் அயனமழைகாடுகளின் சீரழிவிற்கான காரணங்கள் என்ற ரீதியில் நாம் பார்க்கின்ற போது பல காரணிகளை குறிப்பிடலாம். அமிலமழைத்தாகத்தினை உற்றுநோக்கும் போது அயனக்காடுகள் பரம்பல் அடைந்துள்ள பகுதிகளில் அமில மழையானது பொழிகின்ற போது அம் மழையின் தாக்கத்திற்கு பசும்போர்வைகள் ஆளாகி கருகி அழிவடைந்து செல்கின்ற நிலை காணப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசிய காட்டுப்பகுதி, அமேசன் காட்டுப்பகுதிகளில் இதனை அவதானிக்கலாம்.
இயற்கை இடர்களினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் நடைபெறுகின்ற அயனச்சூறாவளி, மட்சரிவு,காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை இடர்களினால் பசும் போர்வைகள் அழிவிற்கு உட்படுகிறது. குறிப்பாக 2008 அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2011களில் அவுஸ்திரேலியாவில் விடோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2013 களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ போன்றவற்றினை குறிப்பிடலாம்
அயனச்சூறாவளியினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் தாழமுக்க இறக்கம் ஏற்படுகின்ற பகுதிகளினை மையமாக கொண்டு தோற்றம் பெறுகிற அயனசூறாவளிகளினால் சுழிப்பு வலயமானது ஓர் பிரதேசத்தில் பிரசன்னமாகிறது. இதனால் அயன மழைக்காடு தாவரங்கள் அடி வேரோடு பெயர்க்கப்பட்டு அழிவடைகின்றது. குறிப்பாக 2012 களில் ஜனவரி மாதத்தில் அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தை 300km/h வேகத்தில் தாக்கிய யாசி சூறாவளியின் போது பல மரங்கள் அழிக்கப்பட்டன.
மட்சரிவினை அவதானிக்கின்றபோது மலைநாட்டு பகுதிகளில் திணிவுஅசைவு செயன்முறையின் பிரகாரம் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு உயரம் குறைந்த பகுதிகளை நோக்கி அடி வேரோடு மரங்கள் முறிந்து விழுகின்றமையால் காடுகள் அழிப்பு குறிப்பாக இலங்கையில் கடந்த 2014 oct களில் கொஸ்லாந்தை பகுதிகளில் ஏற்பட்ட மட்சரிவு காரணமாக மரங்கள் வீழ்ந்து இடிந்து 9m உட்பகுதி மண்ணினுள் புதையுண்டன.
அதிகரித்து வருகின்ற சனத்தொகையினை பார்க்கின்ற போது வளர்முக நாடுகளில் அதிகரித்த சனத்தொகையினால் குடியிருப்பு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் கைத்தொழில் மையம் போன்றவற்றினை நிர்மாணிப்பதற்கு போதியளவு இடவசதி இன்மையினால் மேற்பரப்பு பசும்போர்வை அழிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக 2013களின் தரவின்படி இந்தோனேசியாவில் 249 million சனத்தொகையும், பிரேசிலில் 201 million சனத்தொகையும் இலங்கையில் 21.6million சனத்தொகையும் இந்தியாவில் 1.23 billion சனத்தொகையும் சீனாவில் 1.31 billion சனத்தொகையும் காணப்படுமிடத்து உட்கட்டுமானஅபிவிருத்தி செயற்பாடு காரணமாக இங்கு காடுகள் துரிதமாக அழிக்கப்படுகின்றன எனலாம்.
விவசாய ரீதியான செயற்ப்பாடுகளினை அவதானிக்கின்ற போது புவி மேற்பரப்பில் விவசாயரீதியான நடவடிக்கைகள் என்னும் போர்வையில் பெருந்தோட்ட பயிர் உற்பத்திகளினை முன் எடுத்து கொள்வதற்காகவும் அடர்ந்த காடுகள் பற்றைக்காடுகள் காணப்படும் பகுதிகளில் அவற்றை எரித்து சாம்பலினை உழுது மண்ணை பண்படுத்துகின்ற சேனைப்பயிர் செய்கையாலும் பசும் போர்வைகள் அழிக்கப்பட்டு குறித்த பயிர் உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெருந்தோட்டப்பயிரான தேயிலை இறப்பர் தெங்கு போன்றனவற்றுக்காக இலங்கை, இந்தியா, சீனா போன்றவற்றிலும் சேனைப்பயிருக்காக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.
துறைசார்ரீதியான வேலைவாய்ப்புகளுக்காக அயன காடுகளானது வெட்டுமர ஏற்றுமதி, கடுதாசி உற்பத்திக்கான மரத்தூள் சேகரித்தல், காடுபடு திரவியங்களை பெற்று கொள்ளல் போன்ற செயன்முறைகளுக்காக பசும்போர்வை அதிகம் அழிக்கப்படுகிறது. குறிப்பாக தாய்லாந்து, இந்தோனேசியா, கிழக்கு அவுஸ்திரேலியா, இலங்கை போன்றவற்றில் இவ்வாறு நடைபெறுகின்றது.
இதை தவிர மந்தைவளர்ப்பு, எரிபொருள் தேவை, வர்த்தகநோக்கு, நீர்மின்சாரதிட்டம் போன்றவற்றுக்காக இக்காடுகள் இன்றுவரை அழிக்கப்படுகிறது. இதனால் இன்று பல்வேறு சூழல், காலநிலையியல் சார் பிரச்சனைகள் உருவாகின்றது. குறிப்பாக உயிர்ப்பல்வகைமைகள் பாதிக்கப்படல், மண்வளம் இழக்கப்படல், சூழலில் காபநீரோட்சைட் பெறுமானம் அதிகரித்தல், பழங்குடி மக்களின் வதிவிடங்கள் அருகி அழிவடைதல், சூழலியல் சுற்றுலாத்துறை பாதிக்கப்படல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன எனலாம். இன்றைய உலகில் காலநிலை மாற்றத்துக்கு ஏதுவான ஒரு பிரதான காரணியாகவும் காணப்படுகிறது எனலாம்.
- எஸ்.கீர்த்தி, சண்டிலிப்பாய், இலங்கை
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
- தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!
- பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு
- மஞ்சள் தொண்டைசிட்டு
- கானமயிலைத் தொலைத்தோம்!
- பேரீச்ச மரங்கள் - சில தகவல்கள்
- மணங்களின் ராணி ஏலம்
- காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்!
- மானாம்பள்ளி பயணத்தில் - பௌர்ணமி நிலவில்... சிறுத்தையின் சத்தம்...
- சரணாலயங்கள் – பாதுகாப்பு
- சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
- வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்
- பறவை நோக்குதல்
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்