கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, நம்மால் பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சொல்லாடல் என்றே கூறலாம். இது மனிதர்களால் செய்ய முடியாது என்று பொருள் கிடையாது. மனிதர்களால் செய்யக் கூடியதை இயந்திர மொழி உதவியுடன் அதை மிகைப்படுத்தி நேர்த்தியுடன் நமக்காக செய்து கொடுப்பது. மனிதர்களின் அறிவை, சிந்தனையை, மொழியைப் பயன்படுத்தி அதனை இயந்திர மொழியுடன் வலிமையான மென்பொருளை, தகவல் சேமிப்பை உருவாக்கி, பிறகு அதனையே நம் தேவைக்கு ஏற்ப எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு கொடுப்பது.
முறையே இது மென்பொருள் இயங்கி செயல்படும் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளம், சமூக வலைத்தளங்கள், ரோபோக்கள் (எந்திரன்கள்), கணினி விளையாட்டுகள், அலெக்சா, சிரி போன்ற செவிவழித் தேடல்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்வது, தானியங்கி ஊர்திகள் (Autonomous Vehicle), மொழிபெயர்ப்பு செயலிகள், வரைபட செயலிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதையும் தாண்டி நீங்கள் எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆம் நமக்காக தேர்வுகளையும் எழுதவிருக்கிறது. அதுமட்டுமா நீங்கள் எழுத்தாளராக அல்லது கவிஞராக வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்ய ஆயத்தமாகி விட்டது, செயற்கை நுண்ணறிவு. இனிமேல் நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கவிஞராக மாறலாம், மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் எழுதலாம். நீங்கள் அல்ல, உங்கள் பெயரில் கவிதைகள் எழுதிவிடும் செயற்கை நுண்ணறிவு. மகுடேஷ்வரன் போல தமிழ் பகுப்பாய்வு செய்யலாம், பத்திரிக்கையாளர்? அதையும் செய்யக் காத்திருக்கிறது. எதையாவது செய்தி போல எழுத நினைத்தால் நமக்காக செய்தியையும் எழுதிக் கொடுக்கும். சங்கித்தனத்திற்கு இடமில்லை, ஏனெனில் பொய் செய்திகளை அது எழுதிக் கொடுக்காது.
கடந்த 20 ஆண்டுகால தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் மாறாமல் இருப்பது தேடல் இயந்திரத்தின் தேடல் முறை என்றே சொல்லலாம். இணையதள தேடல் இயந்திரத்தில் நாம் தேடுவது ஏதோ ஒரு இணையதள தொடுதலை நமக்கு பரிந்துரை செய்யும். இதுவே தான் மாறாமல் இருக்கிறது. தற்போது தேடல் இயந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற போட்டி தொடங்கி விட்டது.
இணையதள தேடலில் 85% மேலாக கூகுள் நிறுவனத்திடம் இருக்கிறது. மீதமுள்ள பதினைந்து விழுக்காடு மட்டுமே பிற தேடல் நிறுவனத்தில் இருக்கிறது. தேடல் இயந்திரத்தில் அதிகப்படியான நிறுவனங்கள் கிடையாது. மொத்தமாக விரல் விட்டு எண்ணும் அளவுக்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் பிரபலமான நிறுவனங்கள் இவை:
Google, Microsoft edge and Bing, Duck duck go, Yahoo, Baidu, Ecosia, Wayback Machine, Wolfram Alpha, Safari, Yandex, Ask, Naver, Million Shot.
இணையதள தேடல் இயந்திரத்தின் அடுத்த முயற்சியாக முன்னணி பெரும் தகவல் தொழில்நுட்ப ஆளுமையான மைக்ரோசாப்ட் நிறுவனம் பிப்ரவரி 7, 2023 அன்று தனது Bing தேடு தளத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட செயற்கை ChatGPT மென்பொருள் நுண்ணறிவு பயன்பாட்டை வாசிங்டன் மாநிலத்தில் இருக்கும் தனது முதன்மை அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த புதிய தேடுதளம் நம்மோடு பேசுவது போன்ற "Chatbot Technology" வடிவமைப்பு கொண்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு புதிய தொடக்க நிறுவனத்துடன் ஓராண்டு காலமாக இணைந்து உருவாக்கிய புதிய நுண்ணறிவு தொழில்நுட்ப தேடு தளத்தை உருவாக்கியது. 2019ல் OpenAI புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து கூட்டாக இந்த முயற்சியை மேற்கொண்டது மைக்ரோசாப்ட்.
சரி, பொதுவாக நாம் எதையாவது தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் அண்ணாச்சியின் உதவியை நாடுவோம். கூகுள் தான் இணையதள தேடல் இயந்திரத்தின் முன்னோடி மற்றும் வலிமையான சந்தையைக் கொண்டது. நாம் தேடும் சொற்களுக்கு ஏற்ப அதனோடு ஒட்டிய இணையதளத்தை நமக்குக் காட்டும். இதை மாற்றி அமைக்கிறது ChatGPT செயற்கை நுண்ணறிவு கொண்ட மைக்ரோசாப்ட் பிங்க்.
எடுத்துக்காட்டாக நீங்கள் மும்பைக்குச் செல்ல வானூர்தி தேடினால் ChatGPT உங்களுக்கு டிக்கெட் itinerary உருவாக்கி அதை சரி பார்க்கச் சொல்லும். (சோழர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி கேட்க நினைத்தால் ஆய்வுகளைத் தேடி வேறு எங்கும் செல்லாமல் அதுவே கொடுத்து விடும்! சோழர்கள் பற்றிய கட்டுரை சுடச்சுட நீங்களே எழுதிவிட முடியும்! இல்லை உங்களுக்காக எழுதி கொடுத்து விடும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் வரக் கூடும்.) பதினைந்தாம் நூற்றாண்டில் புதிய உலகைக் கண்டறிந்த கொலம்பஸ் ஏன் அமெரிக்கா வந்தார்? (அமெரிக்க தொல்குடிகள் தான் கொலம்பஸைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு நகைப்பு கூட உண்டு) என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறது.
உங்களுக்கு மோனாலிசா போன்ற வரையப்பட்ட புகைப்படம் தேவைப்பட்டால் உங்களுக்காக வரைந்து கொடுக்கிறது. ஏற்கனவே இருக்கும் புகைப்படங்களைத் தரவில்லை, மாறாக புதிதாக வரைந்து கொடுக்கும்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் வேண்டும் என்றால் சில நூறு கவிதைகள் அதுவே எழுதிக் கொடுக்கும், கட்டுரைகள் எழுதும். முறையே இது புத்தகங்கள், காணொளிக் காட்சிகள் அடிப்படையில் பயனாளிகளுக்கு எழுத்து வடிவமைப்பில் பதில் அளிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆய்வு நிறுவனமாக தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு OpenAI நிறுவனம் 2020ல் GPT-3 என ஒன்றை அறிமுகம் செய்தது. இது பயனாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் கிடைக்கப் பெற்றது. பின்னர் இதிலிருந்து மேலும் மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கியது தான் ChatGPT.
பொதுவாகவே அறிவியல் தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக மாற்றுவது தான் அடிப்படை. அப்படியென்றால் மாணவர்கள் இதை பயன்படுத்த மாட்டார்களா? பயன்படுத்தினார்கள். யாரென்றால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கும், ஆய்வுகள் செய்து கொடுப்பதற்கும் இதை ஓராண்டு காலமாக பெரிய அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் போகுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு ஆங்கிலச் சொற்கள் தெரியும் என்பது அவர்களது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரால் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் போல எப்படி எழுத முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் எழ இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு அண்ணாச்சி இருப்பது தெரிந்திருக்கிறது. விடுவார்களா பல பள்ளிகள் கல்லூரிகளின் முதல்வர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டார்கள். "Do not use ChatGPT are any other automated writing tools for school papers. This is cheating and will not be tolerated. If you are caught using ChatGPT are any other automated writing tools for school papers that will be a serious consequences."
ஆனால் இதை மாணவர்கள் பயன்படுத்தவே கூடாது என்று பள்ளி நிர்வாகமும் கல்லூரி நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்; தெரியாததை தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதையே காப்பி செய்து தன்னுடைய படைப்பாக வெளியிடக்கூடாது. இது மாணவர்களின் கற்பிக்கும் திறனை மழுங்கடிக்கும், புதிய சிந்தனைகளை உருவாக்கவில்லை என்று தெரிவித்திருந்தது நியூயார்க் நகர கல்விக் கூட்டமைப்பு.
ChatGPT செயற்கை நுண்ணறிவு எப்படி இது போல் எழுத முடிகிறது? 90களில் இது தொடங்கப்பட்டபோது வணிகம் சாராத அதாவது லாப நோக்கமற்ற நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. பரவலாக உள்ள அனைத்து புத்தகங்களையும் என்சைக்ளோபீடியா தகவல்களையும் துல்லியமாக சேமித்து வைத்து, அதனை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பதில் வழங்கும் படியாக மேம்படுத்தப்பட்டது. பின் நாட்களில் இதன் தேவை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணம் முதலீடு செய்ததால் இதன் வலிமை இன்னும் கூடியது. யாரோ ஒருவர் நமக்காக நம் வேலையை எளிதாக செய்து முடிக்கிறார் என்றால், நாம் அதை பயன்படுத்துவோம் தானே? இதையே வணிக நோக்கில் உற்று நோக்கினால் என்னவாகும்? இதைத்தான் மைக்ரோசாப்ட் செய்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி ChatGPT மென்பொருள் அமைப்பிடம் எழுந்தபோது. அவர்கள் இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று பதில் அளித்தார்கள். "We don't want chat GPT to misleading purposes in school or anywhere else. So we are already developing mitigation to help anyone identify text generated by that system" - OpenAI கூறியது.
அண்மையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்த மைக்ரோசாப்டின் முதன்மை அலுவலர் சத்யா நாடல்லா என்ன கூறினார் என்றால் "மென்பொருட்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் அதை மறுவடிவமைப்பு செய்யவிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவினை மனிதர்கள் விருப்பப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்க வேண்டும். இதை ஆய்வகத்தில் செய்யப் போவதில்லை. வெளி உலகில் சென்று செய்ய வேண்டும்"
மைக்ரோசாப்ட் தற்போது இதனை கணினி வடிவமைப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் மைக்ரோசாப்ட் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும். திறன் பேசியில் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் திறன்பேசி செயலிகள் மூலம் இதன் பயன்பாடு வெளிவரும் என்று அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட்.
இத்தகைய செயற்கை நுண்ணறிவின் புதிய வடிவமைப்பில் காப்புரிமை சிக்கல் எழாமல் இல்லை. புகைப்படங்கள், புத்தகங்கள் என்று உரிமை பெறாமலேயே பயன்படுத்திய வழக்கு இருந்திருக்கிறது.
வழக்கமான தேடுதளத்திற்கும் புதிய ChatGPT மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தேடு தளத்திற்கும் வேறுபாடு என்ன என்று நானே பிங் தேடல் இயந்திரத்தில் "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கேட்டேன். தற்போது உலகளவில் ஆளுமைகள் பற்றி தொகுப்பு இல்லை என்று கூறியது. ஆனாலும் என்னிடம் சில கவிதைகள் உங்களுக்காக இருக்கிறது என்று திரையில் காட்டியது பிங்.
"கடலில் தேவை கலைஞர் சிலை
சூரியன் உதித்தது காலை
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை
அதி காலை மணி 5:30"
ஆஹா… இதை நானும் எனது நண்பர்களுக்கு நான் எழுதியது என்று அனுப்ப போகிறேன்.
மைக்ரோசாப்டின் இந்த புதிய முயற்சி கூகுள் அண்ணாச்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடலில் செயற்கை நுண்ணறிவை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன் பெயர் பிராட்.
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
காலையில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது என்ன மெட்டாவெர்ஸ்?!
மெட்டாவெர்ஸில் அவர்களின் திருமண விருந்தினர்கள் மெய்நிகர் (virtual) நிலையில் கலந்து கொள்ளலாம். இது அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வின் காணொளிக் காட்சியை இணையத்தில் கண்டு ரசிப்பதை போன்றதல்ல.
அவர்கள் இணையத்தில் நுழைந்து, ஹாரிபாட்டரின் (Harry Potter) ஹாக்வார்ட்ஸ் கோட்டைக்கு (Hogwarts castle) வந்து விடுவார்கள். வீடியோ கேம் போல அவர்கள் மணமக்களின் அலங்காரத்தோடு கூடிய அவதார் (Avatar) பயன்படுத்திக் கொள்வார்கள். அங்கு சாப்பாட்டு மேசையில் காத்திருப்பார்கள். உங்களுக்கு அழைப்பு இருந்தால் நீங்களும் இணையத்தில் நுழைந்து ஒரு அவதாரை தேர்ந்தெடுத்து அவர்களோடும் மற்ற விருந்தினர்களோடும் அளவளாவலாம். ஆனால் உணவு மட்டும் கிடைக்காது. திருமணப் பரிசாக அன்பளிப்பு வவுச்சர்கள் மூலமாகவோ, Gpay மூலமாகவோ வழங்கலாம். கிரிப்டோவாக (crypto) கூட வழங்கலாம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் காலம்சென்ற மணமகளின் தந்தையாரின் அவதாரை உருவாக்கி அதில் நடமாட விடுகிறார்கள். மணமகன் ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு இது எளிதாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருமண வரவேற்பை தங்களது நண்பர்கள் பார்ப்பதற்கு வசதியாக இப்படி ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார். மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டிரேசி (Traci) என்பவரும் டேவ் காக்னான் (Dave Gagnon) என்பவரும் இதேபோல மெட்டாவெர்ஸ் திருமணம் முடித்தது பெரிய செய்தியாக இருந்தது.
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? இதுதான் இனி சமூக ஊடகங்களின் ஒரு வடிவமாக இருக்கப் போகிறது. தொழில்நுட்பம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் இதைத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இதற்காகவே தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார். மைக்ரோசாப்ட் கூட மெஷ் (Mesh) என்னுமொரு மெய்நிகர் அனுபவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்கி வருகிறது. கூகுளும் ஆப்பிளும் கூட தனித்தனியே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இந்த மெட்டாவெர்ஸ் சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், வணிகம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் பயன் அளிக்கப் போவதாக இருக்கிறது.
மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் சத்ய நாடெல்லா போன்ற தலைமை செயல் அதிகாரிகளின் பேச்சுக்களில் இருந்து மெட்டாவெர்ஸ் என்பது இணையத்தின் எதிர்கால வடிவம் என்று தெரிகிறது. இப்போது மெட்டாவெர்ஸை பற்றிப் பேசுவது என்பது எழுபதுகளில் இணையத்தை பற்றிப் பேசுவது போலாகும். அப்போது, இணையம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் அப்போது இணையம் என்பது ஒரு பெரிய நூலகமாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இணையம் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வளவோ சேவைகளை அது வழங்குகிறது என்பது பின்னாளில் உறுதியாகிப் போன ஒன்று.
மெட்டாவெர்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வரும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பினால் விளைவது. அதிகரிக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality), மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவை இந்த மெட்டாவெர்ஸை முன்னோக்கி செலுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் மெட்டாவெர்ஸ் என்பது பல விதமான மக்கள், தங்களுக்குள்ளும், டிஜிட்டல் பொருள்களோடும், தங்களுடைய மெய்நிகர் மாதிரிகள்(virtual models), அதாவது அவதார்களை வைத்து உறவாடும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மெய்நிகர் சூழல்களின் (virtual environment), ஒரு வலைப்பின்னல் (network) எனலாம்.
மெட்டாவெர்ஸ் என்னும் இந்த சொல், அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் 'நீல் ஸ்டீபன்சன்' என்பவரது 1992 இல் வெளியான "ஸ்நோ கிராஷ்" (Snow Crash) என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டது. அதில் வரும் கதாபாத்திரம் இதேபோல அவதார்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஊடாடுகிறது; கடைகளில் பொருட்களை வாங்குகிறது; எதிரிகளை அழித்து ஒழிக்கிறது.
"மனித அனுபவத்தை விட உயர்ந்த" என்று பொருள்படும் மெட்டா (meta) என்ற சொல்லும் யுனிவர்ஸில் (universe) வரும் வெர்ஸ் என்ற சொல்லும் இணைந்து உருவான ஒரு இரட்டைப்பதமே மெட்டாவெர்ஸ்.
மெட்டாவெர்ஸூக்கு மூன்று அடிப்படையான அம்சங்கள் தேவை. ஒன்று, இருத்தல் (presence). அதாவது ஒரு மெய்நிகர் வெளியில் (virtual space) மெய் நிகராக உலாவும் மற்றவர்களுடன் (virtual others) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது. இதற்குப் பெரிதும் உதவுவது தலையில் பொருத்திக் கொள்ளும் காட்சிக் கருவிகள் (head mounted displays).
இரண்டாவது, பரஸ்பர செயல்படும் தன்மை (inter operability). அதாவது ஒரு மெய்நிகர் நிலையிலிருந்து, மற்றொன்றிற்கு தனது மெய்நிகர் பொருட்களுடன், (அதாவது அவதார்கள், டிஜிட்டல் பொருட்கள்) எளிதில் செல்வதும் திரும்ப வருவதுமான ஒரு சூழல்.
மூன்றாவது, தரப்படுத்துதல். (Standardization). இதுவே பல்வேறு தளங்களும் சேவைகளும ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் பரஸ்பர தன்மைக்கு உதவி செய்வதாக அமையும். இதற்கு கை கொடுப்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
மெட்டாவெர்ஸ் இணையத்தின் எதிர்கால வடிவம் என்று சொன்னாலும், மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. இப்போது நாம் பயன்படுத்தும் இணையம் Web 2.0. எதிர்காலத்தில் வர இருப்பது Web 3.0. இப்போதுள்ள இணையத்தில் உள்ளடக்கங்கள் நம்மைப் போன்ற பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்தவும், பணமாக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இனி வரும் இணையத்தில் (Web 3.0) உள்ளடக்கமும் நம்மால் உருவாக்கப்படும். அதைக் கட்டுப்படுத்துவதும், பணமாக்கிக் கொள்வதும் கூட பயனர்களால் முடியும். இதற்கும் முழுவதும் உதவுவது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.
மெட்டாவெர்ஸ்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ஒரு எஞ்சினாக இந்த எதிர்கால இணையம் Web 3.0 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மெட்டாவெர்ஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமம் வரை வந்து விட்டது. நாமும் அதற்கு தயாராகத்தான் வேண்டும்.
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change), அக்டோபர் 2018 இல் வெளியிட்ட உலக வெப்பமயமாதல் பற்றிய சிறப்பு அறிக்கையில், உலக வெப்பமயமாதல், உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த அளவுகளை விட 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயர்ந்திருக்கின்றது என கணிக்கிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி (Paris Agreement) தேசங்கள் அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Commitments) என்று சொல்லப்படும் மிகக் கடுமையான சவால் நிறைந்த நடவடிக்கைகள் எடுத்தும் கூட 2030 க்கு பிறகு உலக வெப்பமயமாதல் நிகழ்வு 1.5 டிகிரி சென்டிகிரேடு அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பமயமாதலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, 2050ஆம் வருட வாக்கில், எந்த கார்பன்–டை-ஆக்சைடு வெளியீட்டையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதேபோல கார்பன்-டை-ஆக்சைடு தவிர்த்த மற்ற பசுமை வாயுக்களின் வெளியீட்டையும், குறிப்பாக மீத்தேனையும் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியது இருக்கும்.
உலக வெப்பமயமாதலின் உயர்வு இரண்டு டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது இருப்பதைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது வரும் ஆபத்துகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியா தனது பசுமை வாயுக்கள் வெளியீட்டு அளவினை, 2005 அளவுகளில் இருந்ததைவிட 2030 ஆம் ஆண்டு வாக்கில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கில் 33 லிருந்து 35 சதவீதம் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டு வாக்கில் புதை படிவம் சாராத எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி நிறுவப்படும் மின்சக்தி திறன்களை 40% அதிகரிப்பதன் மூலமாகவும், மேலதிகமாக காடுகள் மற்றும் மரங்களின் பரவலால் 2.5 இலிருந்து 3 பில்லியன் வரையிலான கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கான (GtCO2e) கார்பன் மூழ்கிகளை (carbon sinks) கூடுதலாக உருவாக்குவதன் மூலமும் மட்டுமே அடைய முடியும்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்சார திறன் சக்தியை நிறுவ இலக்கு ஏற்படுத்தியுள்ளது. அதில் 40% மேற்கூரை மற்றும் சிறிய அளவிலான சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களும் அடங்கும்.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை (Ministry of New and Renewable Energy), தமிழ்நாட்டிற்கு 2022 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தியின் இலக்காக 9 ஆயிரம் மெகாவாட் திறனை முன்வைப்பு செய்திருக்கிறது. தமிழக அரசும் தனது சூரிய ஒளி சக்திக்கான கொள்கையினை (Solar Energy Policy) 2012 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது.
தனிநபர்களின் பங்களிப்பாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வுப் போக்கில் சிறிய அளவுகளில் நமது இல்லங்களிலோ, வணிக நிறுவனங்களிலோ மேற்கூரை சூரிய மின்நிலையங்கள் (Solar Rooftop Power Plant) அமைத்து அதில் கலந்து கொள்வது மிகவும் எளிதான விடயமே.
மேற்கூரை சூரிய மின் நிலையம்
சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெருமளவில் அதாவது அதன் மின்திறன் கணக்கில், மெகா வாட்டுகள் அளவில், பரந்த நிலப்பரப்பில் நிறுவப்படுவது. பெரும்பாலும் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், அவற்றை நிறுவிய நிறுவனங்களின் சொந்த உபயோகத்திற்கோ, அல்லது மின்சார நிறுவனங்களுக்கு விற்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது, சிறிய மின்சக்தி திறன் அளவில் வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்கூரையின்மீது நிறுவப்பட்டு சொந்த உபயோகத்திற்கு பயன்படுபவை. இதில், மின் நிறுவனத்தின் மின் இணைப்போடு பொருத்தப்பட்டு இயக்குவது; மாறாக மின் இணைப்போடு பொருந்தியில்லாமல் தனிப்பட்ட முறையில் இயக்குவது என இரண்டு வகைகள் உண்டு. மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்குவதில் பல சிரமங்கள் உள்ளன. முதலில் அதற்கு மின்கலம் வேண்டும்.
மின்கலத்தை பராமரிப்பதற்கு உண்டான செலவுகளும் ஒரு பிரச்சனை. அது தவிர ஒருவேளை நாம் பயன்படுத்தும் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகும் போது, மின்கலமும் கொள்ளளவு நிறைந்துவிட்ட போது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வீணாகத்தான் போகும். இது தவிர, மின்சாரம் மின் கலன்களில் சேமித்து வைத்து மறுபடி உபயோகப்படுத்துவதன் காரணமாக 15 லிருந்து 20 சதவீதம் வரை எரிசக்தி விரயமாக வாய்ப்பிருக்கிறது.
சூரிய மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும், மின்சார நிறுவன மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும் தனித்தனியாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இந்த மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்கும் முறை பிரபலமடையவில்லை. மேலும் அரசினால் ஊக்கப்படுத்தப்படுவதும் இல்லை.
மேற்கூரை சூரிய மின் அமைப்பிற்கு மிகவும் அவசியமானது பேனல்கள் (solar panel) அமைக்க திறந்த மாடியில் நல்ல சூரிய ஒளி விழும் தேவையான இடம். ஒரு கிலோ வாட் மின்சக்தி திறன் கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 8 முதல் 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் தேவை.
முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம்
தமிழக அரசு, முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்ற பெயரில் ஒரு சூரிய ஒளி மின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வாட் திறன்சக்தி கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 20 ஆயிரம் ரூபாயை மானியமாக தருகிறது. இது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அளிக்கும் 30 சதவீத மானியத்திற்கும் கூடுதலாக கிடைக்கும்.
தனிப்பட்ட வீடுகளுக்கு அல்லது தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிப்பட்ட ஒருவருக்கு சூரிய ஒளி மின் அமைப்பின் திறன் அளவு ஒரு கிலோ வாட் அளவிலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சேர்ந்து 10 கிலோவாட் அல்லது அதன் மடங்குகளிலும் இதை நிறுவிக் கொள்ளலாம். தனிப்பட்ட வீடுகளில் நிறுவும் போது 1 கிலோ வாட்டிற்கு அதிக அளவிலான மின்திறனிலும் நிறுவிக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு கிலோவாட்டுக்கு மட்டும்தான் மானியம் உண்டு. மின்சார நிறுவனத்தின் மின் இணைப்புடன் செயல்படும் சூரிய மின்சார அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
நிறுவுதலுக்கான வழிமுறைகள்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் (Tamil Nadu Energy Development Agency - TEDA) விண்ணப்பித்து அனுமதி பெற்று நிறுவ வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1, 2, 5 அல்லது 10 கிலோ வாட் மின்சக்திக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ஒரு வீட்டிற்கு அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு, ஒரு கிலோவாட் அளவிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணைய தளத்தின் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (இணைய தள முகவரி: http://www.teda.in/CIS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி, பின்னர் அதில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தினை பிரிண்ட் செய்து, கையொப்பமிட்டு, தமிழ்நாடு எரிசக்தி முகமையின் சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபாலில் விண்ணப்பிக்க, குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். இரண்டு முறைகளிலும் விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணம் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறகுதான் ஆஃப்லைனில் உள்ள விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள், முன்னுரிமை மற்றும் அவற்றின் சரித்தன்மையினை உறுதி செய்த பின்னர், பதிவு செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட விவரம் மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அந்த வார இறுதியில் அனுப்பப்படும்.
பதிவுபெற்ற விண்ணப்பங்களின் பதிவு எண்கள் அதனுடைய ஒப்புதல் விவரங்களுடன் இணையதளத்திலும் வெளியிடப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும், மற்ற படிவங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பதிவு செய்யப்பட்ட நிறுவனர்கள் மூலமாக மட்டுமே நாம் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வாங்கி நிறுவ முடியும். இந்த நிறுவனங்களின் பட்டியல் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
நமது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் அந்த நிறுவனங்களுடன் நாம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி இதில் 22 நிறுவனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
அதோடு அவர்களின் சூரிய மின் நிலையத்தினை அமைத்துத் தருவதற்கான விலை, கிலோ வாட்டுக்கு எவ்வளவு என்ற விவரங்களும், மற்ற தொடர்பு விவரங்களும் அதில் தரப்பட்டிருக்கும். பட்டியலின்படி தற்போதைய விலை ஒரு கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாயிலிருந்து 70,000 ருபாய் வரை இருக்கின்றது.
மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தவிர்த்த நிகர விலைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். நிறுவனர்கள் நமக்கு இந்த சூரிய மின்சார அடுக்குகளை நிறுவிய பின் அவர்கள் நேரடியாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அந்த மானியத்தை பெற்றுக் கொள்வார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அனுமதிகள்
அடுத்ததாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து நீங்கள் அமைக்கப்போகும் சூரிய மின் அமைப்பினை அவர்களது மின் இணைப்போடு இணைப்பதற்கும், நெட் மீட்டர் இணைப்பு பெறுவதற்காகவும் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
முதலாவதாக, உங்கள் பகுதியில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டியிருக்கும். பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டியிருக்கும். உயரழுத்த மின் இணைப்பு வேண்டுவதாக இருந்தால் உங்கள் பகுதி TANGEDCO மேற்பார்வை பொறியாளரிடம் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.
இரண்டாவதாக, TANGEDCO உங்களது சூரிய மேற்கூரை மின் அமைப்பினை அதன் விநியோக வலைப்பின்னலில் (Distribution Network) இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்வது; இதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது நீங்கள் பொருத்தப் போகும் மேற்கூரை சூரிய மின் அமைப்பின் மின்சக்தி திறனின் அளவு, உங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின்மாற்றியின் சக்தியில், 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
அதுமட்டுமன்றி, நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கியிருக்கும் மின் இணைப்பிற்கான அனுமதிக்கப்பட்ட மின்சக்தியை விடவும் அதிகமாகவும் இருக்கக் கூடாது. அப்படி ஒருவேளை அதிகமாக இருக்க நேர்ந்தால் முதலில் உங்களுக்கான மின்சக்தி அளவினை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பின்னரே சூரிய மின் அமைப்பின் இணைப்பிற்கும், நெட் மீட்டர் இணைப்பிற்குமான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
TANGEDCO உங்களது சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை தனது விநியோக வலைப்பின்னலில் இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடு இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கடிதம் தரும். நீங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் இந்த கடிதம் அனுப்பப்படும்.
மூன்றாவதாக, சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை நிறுவுவதும், அது தயார் நிலையில் உள்ளது என TANGEDCO விற்கு அறிவிப்பதும்; இப்போது நீங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நீங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கி நிறுவிக் கொள்ளலாம்.
உங்களுக்கு தொழில்நுட்ப சாத்தியப்பாடு அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள் இதை நிறுவ வேண்டும். தேவைப்படுமேயானால், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இந்த நிறுவுதல் பணி முடிந்தவுடன், TANGEDCO செயற்பொறியாளரிடம், உங்களது சூரிய மின் அமைப்பு தயார் நிலையில் உள்ளது என்ற கடிதத்தினை கொடுக்க வேண்டும்.
நான்காவதாக, பாதுகாப்பு ஆய்வு; நீங்கள் தயார்நிலை கடிதத்தை கொடுத்த பத்து நாட்களுக்குள் உங்களது சூரிய மின் அமைப்பின் பாதுகாப்பினை சோதனையிடுவார்கள். 10 கிலோ வாட்டுக்கும் குறைந்த மின்சக்தி திறனானால் TANGEDCO இந்த ஆய்வினை மேற்கொள்ளும்.
10 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சக்தி திறனாக இருந்தால் உங்கள் பகுதியின் மின் ஆய்வாளர் இந்த பணியினை மேற்கொள்வார். ஆய்வு முடிந்த தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
ஐந்தாவதாக, மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதும், சூரிய மின் அமைப்பினை செயல்படுத்துவதும்; TANGEDCO உங்களது தற்போதைய மின் இணைப்பின் மீட்டரை மாற்றியமைத்து ஒரு இருபுறமும் செல்லும் (Bi-directional, அதாவது மின் நிறுவனத்திடமிருந்து உங்கள் வீட்டிற்கும், மற்றும் உங்கள் சூரிய மின் அமைப்பிலிருந்து மின் நிறுவனத்திற்கும்), மின்சாரத்தை அளக்கும் மீட்டரை பொருத்துவார்கள்.
இந்த மீட்டர் மாற்றுவதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது நாமே கூட இந்த மீட்டரை வாங்கிக்கொடுத்து பொருத்தித் தரச் சொல்லலாம். இதற்காக TANGEDCO அனுமதிக்கப்பட்ட மீட்டர் வகைகளையும் அவர்களது இணையதளத்தில் பட்டியலிட்டு இருப்பார்கள்.
பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரு மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் அமைப்பில் இருக்க வேண்டும். சூரிய மின்சாரத்தினை நமது மின் இணைப்போடு இணைக்கும் கருவியான சோலார் இன்வெர்டரில், ஆன்டி-ஐலான்டிங் (Anti-islanding) பாதுகாப்பு இருக்க வேண்டும்.
நமது வீட்டுக்கு வரும் மின் இணைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் கம்பிகளில் வேலை செய்யும் மின் பணியாளர்களை, நமது சூரிய மின் அமைப்பிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு.
இதில் அறிந்து கொள்ள வேண்டியது, மின் நிறுவனத்தால் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் போது சூரிய மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்பதுதான். இது தவிர, மற்ற மின் உபகரணங்கள் போல இதற்கும் தரை இணைப்பு (earthing) கொடுக்கப்பட வேண்டும்.
சூரிய மின் அமைப்பிலிருந்து வரும் ஒரு திசை மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்றும் சோலர் இன்வெர்டரின் (solar inverter) இரண்டு புறங்களிலும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் (surge protection devices), அவை கட்டாயமாகவில்லையென்றாலும், இணைக்கப்படலாம். நமது வீட்டு மின் இணைப்பின் முக்கிய விசை (main switch) அருகிலும், மீட்டர் அருகிலும் 10 செமீ க்கு 7 செமீ அளவில் Solar PV System என்ற அறிவிப்பு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.
என்ன பலன் கிடைக்கும்
ஒவ்வொரு கிலோவாட் மின் திறனுள்ள சூரிய ஒளி மீன் அமைப்பும் வருடத்திற்கு 1500 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். மின் உற்பத்தியானது சூரிய சக்தியின் அளவினையும், அந்த சூரிய மின் அமைப்பு பேனல்கள் நிறுவப்பட்டிருக்கும் கோணத்தையும், காலச் சூழ்நிலையையும், மின் நிறுவனத்தின் மின் இணைப்பு தொடர்ந்து கிடைப்பதைப் பொறுத்தும், சூரிய மின் அமைப்பு பேனல்களின் சுத்தத்தை பொருத்தும் மாறுபட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏறக்குறைய 6 இலிருந்து 8 யூனிட்டுகள் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீடுகளுக்கு தற்போதைய கட்டணக் காலம் இருமாதங்களாய் இருப்பதால், நெட் மீட்டரில் பதிவான TANGEDCO விலிருந்து நாம் எடுத்துக் கொண்ட மின்சாரமும், TANGEDCO விற்கு நாம் செலுத்திய மின்சாரமும் தனித்தனியாக கணக்கிடப்படும். நாம் எடுத்துக் கொண்ட மின்சாரத்திற்கு ஏற்கெனவே உள்ள மின்கட்டண அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். நமது சூரியமின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு நாம் உபயோகித்தது போக TANGEDCO விற்கு செலுத்தப்பட்ட மின் அளவிற்கு தமிழ்நாடு மின்சார ஆணையம் நிர்ணயித்த விலைப்படி கணக்கிடப்பட்டு பில்லில் சரி செய்யப்படும்.
தற்போது அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட விலையானது யூனிட்டிற்கு ரூபாய் 2.28 ஆக இருக்கிறது. அப்படி சரிசெய்யப்பட்டதற்கும் அதிமாக நாம் செலுத்திய மின்சார அளவு இருந்தால், அந்த வித்தியாசம் அடுத்த மின் கட்டண கால நுகர்வோடு சரி செய்ய எடுத்துச் செல்லப்படும். இப்படியாக 12 மாதங்களுக்கு (ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்த மார்ச் மாதம் வரை) சரி செய்வதற்காக, அதிகம் செலுத்திய மின் அளவு எடுத்துச் செல்லப்படும். ஆனால் நாம் இந்த 12 மாத காலத்தில் நுகர்வு செய்த மின்சாரத்தின் அளவில் 90 சதவீதம் வரை மட்டுமே சரிசெய்யப்படும்.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டில், 1 கிலோ வாட் திறனுள்ள சூரிய மின் அமைப்பு நிறுவுவதாகக் கொள்வோம். அது தினமும் 5 யூனிட்டுகள் உற்பத்தி செய்வதாகக் கொண்டால், இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் மின்சாரத்தினை உற்பத்தி செய்திருக்கும்.
இந்த 300 யூனிட்டுகளுக்கு மின்நிறுவனம் விதிக்கும் ரூ.4.60 கட்டணத்திலிருந்து சேமிப்பை பெற முடியும். இதன் ஒரு ஆண்டு பலன் ரூ.8,260/- எனக் கொண்டால், 7 வருடங்களில் சூரிய மின் அமைப்பு நிறுவிய செலவினத்தை மீட்டுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வில் பங்களிக்கிறோம் என்ற மன திருப்தியைப் பெறலாம்.
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
மரபணு மாற்றம் (Genome editing) குறித்த ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடங்கப்பட்டது. இதனை சுருக்கமாக சொல்லப் போனால் 'உடலில் உள்ள செல்களை மாற்றம் செய்து மீண்டும் மறு உற்பத்தி (Re productive) செய்வது ஆகும்.
2012 ஆம் ஆண்டில் CRISPR-Cas9 என்ற Gene editing தொழில்நுட்பத்தை வடிவமைத்து, இதுகுறித்து ஆய்வுகளை சமர்ப்பித்த அமெரிக்காவின் Jenifer A Dounda என்பவருக்கும் (இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்), இவருடன் ஜெர்மனியின் Emmanurlle Charpentier என்பவருக்கும் (இவர் 'Max Planck Unit for the Science of Pathogens, Berlin, Germany' -ல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்) மரபணு மாற்று CRISPER tool -ஐ கண்டுபிடித்ததற்காக, இவ்விரு பெண்களுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிரந்துக் கொள்ளப்பட்டது.
"இந்த தொழில்நுட்பம் வாழ்வில் அறிவியலில் ஒரு புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக புற்றுநோய் மாற்று சிகிச்சைக்கு புதிய வழிகளை காட்டியிருக்கிறது" என்கிறது வேதியியல் நோபல் குழு.
ஆய்வாளர்களின் கருத்துப்படி Gene editing tool மூலம் விலங்குகள், தாவரங்கள், மற்றும் நுண்ணுயிர்களின் மரபணுக்களை மாற்ற முடியும். இதில் சட்ட ரீதியான பிரச்சனைகளும், அதாவது முறையான முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் கிடையாது. அதேவேளையில் சர்ச்சைகளும் இருக்கிறது. இயற்கைக்கு எதிராக நம் உடலில் அல்லது விலங்குகளுக்கு, தாவரங்களுக்கு மாற்றம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
CRISPER-Cas9 tool என்றால் என்ன?
மரபணு மாற்றம் என்பதே பல்வேறு வகையான தொழில்நுட்ப முறையில் உடலில்/உயிரில் இருக்கும் உறுப்புகளின் DNA -வை மாற்றம் செய்வது அல்லது மாற்றி வடிவமைப்பது ஆகும் என்பதை நாம் சுருக்கமாக பார்த்தோம். இந்த தொழில்நுட்பம் மூலம் உயிர் உற்பத்தி ஆகும் போது கிடைக்கப் பெறும் genetic material -ஐ உடலினுள் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் சேர்க்கவும், அகற்றவும், அல்லது மாற்றி அமைக்கவும் முடியும்.
இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் சமீபத்தில் கண்டறியப்பட CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகளால் அதிகம் கையாளப்படுகிறது. Clustered Regularly Interspaced Dhort Palindromic Repeats and CRISPR-associated protein 9 இதன் சுருக்கமே CRISPER-Cas9 ஆகும்.
CRISPER-Cas9 என்ற முறை இயற்கையாக பாக்டீரியாக்களை மாற்றம் செய்வதில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. பாக்டீரியாக்கள் டி.என்.ஏவின் துணுக்குகளை படையெடுக்கும் வைரஸ்களிலிருந்து பிடிக்கின்றன, மற்றும் CRISPER-Cas9 arrays எனப்படும் டி.என்.ஏ (DNA-deoxyribonucleic acid) பிரிவுகளை உருவாக்க அவற்றைப் பயன்படுத்துகின்றன. CRISPR வரிசைகள் பாக்டீரியாக்களை வைரஸ்களை (அல்லது நெருங்கிய தொடர்புடையவை) "நினைவில்" வைக்க அனுமதிக்கின்றன.
வைரஸ்கள் மீண்டும் தாக்கினால், வைரஸ்களின் டி.என்.ஏவை குறிவைக்க பாக்டீரியா CRISPER-Cas9 வரிசைகளில் இருந்து ஆர்.என்.ஏ (RNA - Ribonucleic acid) பிரிவுகளை உருவாக்குகிறது. பின்னர் அந்த DNA -வைத் துண்டிக்க Cas 9 அல்லது இதே போன்ற நொதியைப் பயன்படுத்தி அதை வெட்டுகிறது.
இது வைரஸை முற்றிலுமாக முடக்குகிறது. இதுவே இதன் அடிப்படை செயல்படும் முறை என கூறலாம். இந்த முறையை பயன்படுத்தி ஒற்றை மரபணு கோளாறு நோய்களான Cystic fibrosis, Hemophilia, Sickle Cell Decease, போன்ற நோய்களை குணப்படுத்த முடியும், என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
CRISPER-Cas9 மூலம் செய்யப்பட்ட மரபணு மாற்று சிகிச்சை:
Sickle cell deceas நோயினால் பாதிக்கப்பட்டிருந்த Victoria Gray வயது 34, என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் பெண்மணி தாமாகவே முன்வந்து இந்த மரபணு மாற்று சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நேஷ்வில் நகரத்தில் வசித்து வருகிறார். அவர் மூன்று வயதாக இருக்கும்போது அவரது பாட்டி அவரை குளிக்க வைத்து போது, கையில் பயங்கரமான வலி ஏற்பட்டிருக்கிறது.
மற்ற குழந்தைகள் போல அவரால் விளையாடவோ, பயணம் செய்யவோ முடியவில்லை. ஒரு வேதனையான வாழ்க்கையை தான் தனது இளமைக் காலத்தில் கழித்தார். மருத்துவமனையில் சோதித்த போது தான் அவருக்கு Sickle cell deceas இருப்பது தெரியவந்தது. இவர் தான் பொதுவெளியில் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் முதல் நபர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு மேலே உயிர் பிழைப்பதே அரிதாக இருக்கிறது. உலகளவில் மில்லியனில் ஒரு நபருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
அவரது உடம்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளால் எலும்பின் மஜ்ஜை (bone marrow) சிதைந்த புரதத்தை உற்பத்தி செய்து, இரத்தத்தின் செல்களை அரிவாள் போன்ற வடிவில் மாற்றி இரத்த ஓட்டத்தைத் சரியாக இயங்காமல் தடிமனான மாறியுள்ளது. சிதைந்த செல்கள் இரத்த நாளங்களுக்குள் சிக்கிச் சாதாரணமாக ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லாததால் பலவீனமடையும் மற்றும் ஆயுளைக் குறைக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக ஒருவரின் உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல ஹீமோகுளோபின் பயன்படுத்துகின்றது.
இந் நோயாளிகளின் சிவப்பு ரத்த அணுக்களை குறைபாடுள்ள ஹீமோகுளோபின் கொண்டு செல்வதால், அவை சிவப்பு செல்களை மேலும் சிதைக்கின்றன. இதனால் போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லாது. (fetal hemoglobin) கருவில் உருவான ஹீமோகுளோபின் மீண்டும் அவரது உடலில் செலுத்துவதன் மூலம் குறைபாடுள்ள புரதத்திற்கு புதிய வடிவத்தை கொடுக்கும்.
fetal hemoglobin இதனை எப்படி உள்வாங்கி கொள்வது என்றால், தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அதற்கு தேவையான புரதத்தை fetal hemoglobin மூலம் எடுத்துக் கொள்ளும். குழந்தை பிறந்தவுடன் fetal hemoglobin உற்பத்தியாகுவது தானாக நின்றுவிடும். பின்னர் குழந்தையின் உடலில் இருக்கும் hemoglobin தொடர்ந்து இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவி புரியும்.
2019, ஜூன் 29 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது Bone marrow -வை மரபணு மாற்றம் செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை ஆரம்பமானது. அதாவது பில்லியன் கணக்கில் புதிய fetal hemoglobin ஆக மாற்றம் செய்து எலும்புகள் செல்லுமாறு சிகிச்சை நடைபெற்றது.
அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் அவரின் சிகிச்சை முடிந்து ஓராண்டு காலம் ஆகிறது. அவர் நலமுடன் வசித்து வருகிறார். இது ஒரு அற்புதம் என்றே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் Dr. Haydar Frangoul தெரிவித்தார்.
மரபணு மாற்றம் சர்ச்சைகள்:
இப்புதிய தொழில் நுட்பத்தின் மூலம் தீராத சில வியாதிகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாலும், இதில் சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2018ல் சீன விஞ்ஞானிகள் இத்தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (genetically modified human babies) இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கச் செய்தார்கள்.
ஒரு குழந்தையின் பெயர் Lulu மற்றொன்றின் பெயர் Nana. இவ்வுலகில் பிறந்த மற்றக் குழந்தைகளைப் போலவே அவ்விரு குழந்தைகளின் அழுகையை உலகம் பார்த்தது. பின்னர் நல்ல சுகத்துடன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள்.
என்ன மாற்றம் செய்தார்கள் என்றால்? தந்தையின் விந்து அணுவிலும் தாயின் கரு முட்டையிலும் HIV (human immunodeficiency virus) வராமல் தடுக்க மாற்றி அமைத்தார்கள். HIV என்ற வைரஸ் தான் எயிட்ஸ் நோயாக கருதப்படுகிறது. அக் குழந்தைகளின் தந்தை மார்க் இவருக்கு HIV positive இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகள் குறித்த செய்தி உலகுக்கு தெரிந்த அடுத்த கணமே, மருத்துவ சம்மேளனம் கண்டனம் தெரிவித்து. சீன நாட்டின் மருத்துவ வழிமுறைகளையும், சட்டத்தை பெண்களையும் இவர் கையாளவில்லை என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர் சீன அரசாங்கம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் செய்த ஆய்வுகள் குறித்து அவரது பல்கலைக்கழகத்துக்கு தெரியாது. இப்போது அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் இதை மறைமுகமாக அமெரிக்காவும் சீனாவும் ஆதரிக்கிறது என்றே அப்போது செய்திகள் வெளிவந்தன.
சீன விஞ்ஞானிகளின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார் Jennifer Doudna, "இந்த வேலை உலகளாவிய விஞ்ஞான சமூகத்தின் CRISPR-Cas9 -ஐ மனித மரபணு மாற்றம் பயன்பாட்டின் எச்சரிக்கையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையிலிருந்து ஒரு முறிவு ஆகும்" என்றார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் Jennifer Doudna, biochemist at the University of California, இவருக்கு தான் இப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அவர் கூறுகையில், HIV தொற்று நோயைத் தவிர்ப்பதற்காக இது செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே பயனுள்ள தொற்று நோயைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் உள்ளன. எச்.ஐ.வி ஒழிக்க பாதிக்கப்பட்ட விந்து தானம் செய்பவர்களின் விந்தணுக்களை "கழுவுதல்" (Washing) போன்றவை, ஏற்கனவே நிறுவப்பட்ட அணுகுமுறைக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்துவீர்கள்? என்று அப்போதே காட்டமாக தெரிவித்திருந்தார்.
"இது ஒரு சிக்கலான தொழில்நுட்பம்" என்கிறார் பேராசிரியர் Sheila Jasanoff, இவர் பாஸ்டன் ஹார்வர்ட் கென்னடி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். Genetic engineering இதுவே ஒரு வெகுநாள் விவாதத்திற்கு உட்பட்ட பாடமாக உள்ளது. அமெரிக்காவில் மரபணுவின மறு உற்பத்தி என்பது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தனிமனிதர் உரிமையாக கூட இருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டுமென்றால் அவர் மரபணு மாற்றம் மூலம் அதை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இது இயற்கைக்கும் மரபுக்கும் முரணானது. பல மனித உரிமை குழுக்கள் இதை எதிர்க்கிறார்கள்." என்றார்.
இத்தொழில் நுட்பம் குறித்த பரந்துபட்ட பார்வையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதுவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் மனித சமூகத்தை கட்டுக்கள் வைத்திருக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது.
2. இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாக உயிர் உள்ள செல்களை உருவாக்க முடியும் என்று சீன விஞ்ஞானி கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
3. இத் தொழில்நுட்பத்தை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் உலகளவில் போதிய சட்டங்கள் இல்லை.
4. இத்தொழில் நுட்பம் மூலம் சமூக வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
5. பல நாடுகளில் தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்கள் மீது செயல்படுவதற்கு தடை விதித்திருக்கிறது.
6. விரும்பிய வகையில் குழந்தைகளை உருவாக்குவதற்கு இத்தொழில்நுட்பம் பயன்படலாம்.
கடைசியாக இத்தொழில் நுட்பம் குறித்த சட்டங்களும் கண்காணிப்பு குழுக்களும் உருவாக்க வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கிறது. (நன்றி; வெற்றிச்செல்வன் முகநூல் பதிவு)
அறிவியலின் வளர்ச்சி இப்பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும். மரபணு மாற்று சிகிச்சை ஒருபுறம் நல்ல பயன்களை கொடுத்தாலும் அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
- பாண்டி
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்