electric trucks ecascadia and m2 daimlerகடந்த 2015 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒன்றிணைந்து, புதைபடிவ எரிபொருள் தேவையைக் குறைப்பது குறித்தும், பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் (Paris Climate Accord) கையெழுத்திட்டார்கள்.

உலகளவில் கரியமில வாயு (CO2) அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா (27.53%) முதல் இடத்திலும், முதலாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட அமெரிக்கா (14.81%) இரண்டாவது இடத்திலும், இதையடுத்து பொருளாதாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதே தெரியாத இந்தியா (7.26%) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. பெருவாரியான நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிரடியாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ஆம் ஆண்டில் வெளியேறியது.

ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் அமெரிக்க அதிபர் அதைப் புறக்கணித்தார். "எங்களுக்கு, எங்கள் நாட்டில் உள்ள பென்சில்வேனியாவில் இருக்கும் தொழிலாளர்களின் வேலை தான் முக்கியம். பாரிஸ் ஒப்பந்தம் முக்கியமல்ல" என்று அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். அப்போது அமெரிக்காவுக்கு உள்ளேயே அவருக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அவர் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

மின்சார கனரக வாகனங்கள்:

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது கரியமில வாயுவை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து போன்றவைகள் இதற்கு அடுத்த நிலையில் இடம் பெறுகின்றன. உலக அளவில் இயங்கும் வாகனங்களில் 97% போக்குவரத்து புதைபடிவ எரிபொருள் மூலமாகவே நடைபெறுகிறது. புதைபடிவ எரிபொருளுக்கு மாற்று சக்தியாக மின்சார ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பரவலாக வரத் தொடங்கி விட்டன. தற்சமயம் பயன்பாட்டில் இருப்பது ஏனோ நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிகள் வாகனம் மட்டுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலும் ஓட்டுநர் மட்டுமே அமர்ந்து சொல்வதாக அது இருக்கிறது. அதுவும் சாதாரண மக்கள் இந்த வாகனங்களை வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை அதிகமாக உள்ளது. சொல்லப் போனால் இதனை சொகுசு வாகனம் என்றே அழைக்கலாம். தற்சமயம் பயணிகளின் வாகனங்கள் மட்டுமல்லாமல் கனரக வாகனங்களையும் மின்சாரத்தைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த மோட்டார் இயந்திரங்களை வடிவமைத்து, சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க ஒன்றியத்தில் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திற்கு என்று தனி அங்கீகாரமும், சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் சட்டத்தில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மிக வேகமாக எதிர்காலத் திட்டங்களை வகுக்கக் கூடிய மாகாணங்களில் ஒன்றுதான் கலிஃபோர்னியா.

கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வருகிற 2024 ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் மின்சார கனரக வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது கலிபோர்னியா அரசாங்கம். அதேவேளையில் 2045 ஆண்டுக்குப் பிறகு அனைத்து கனரக வாகனங்களும் 'Zero Emissions' என்பதைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்றது California Air Resources Force என்ற காற்று மாசுபடுதலைக் கண்காணிக்கும் ஆணையம்.

சில நிறுவனங்கள் இதனை ஏற்கனவே கருத்தில் கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டன. ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Daimler Trucks (Mercedes Benz) என்ற நிறுவனம், வட அமெரிக்காவில் முதன் முதலாக 38 பெரிய சற்றே நடுத்தரமான மின்சார கனரக வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிறுவனத்தின் புதிய மின்சார கனரக வாகன வடிவமைப்பான 'heavy-duty Freightliner eCascadia trucks' என்ற வகையைச் சேர்ந்த வாகனங்கள், ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் மணிக்கு 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) பயணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும். இதில் இருக்கும் மின்கலத்தின் (பேட்டரிகள்) மொத்த கொள்ளளவு 554kWh ஆகும். ஒரு முறை இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய தோராயமாக 120 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமான ஃபோர்ட் ஆஃப் லாங்ஃபோர்ட் - லாங் பீச்சில் (கலிபோர்னியா) இருந்து பிற பகுதிகளுக்கு சரக்குகள் கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் முக்கியமாக சரக்குகளை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள், துறைமுகத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இருக்கும் 24 மைல்கள் நீளம் கொண்ட '710 freeway' என்ற சாலையை 'diesel death zone' என்று அழைக்கின்றனர் உள்ளுர் வாசிகள். தொடர்ந்து இந்த சாலை வழியே பயணிக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசுபட்டு மேகமூட்டம் போல் சூழ்ந்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் முதலாவது heavy-duty Freightliner eCascadia trucks -ஐ சோதனை நடத்துகிறார்கள் Daimler நிறுவனத்தினர். மின்சார கனரக வாகனங்கள் முழு அளவில் செயல்படுத்தப்படும் காலம் வரும்போது தான் எங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம் வரும் என்கிறார்கள் இந்த சாலையை ஒட்டி அமைந்திருக்கும் நகரவாசிகள்.

ஜெர்மனியின் தொலைநோக்கு பார்வை:

வாகனத் தொழிற்சாலைகளின் முன்னோடி யார் என்றால் அதற்குப் பதில் ஜெர்மனி என்றே வரும். ஜெர்மனி அரசாங்கம் ஒரு படி மேலே சென்று, மின்சார கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரத்யேக 'மின்சார சாலை' (Electric highway) ஒன்றை வடிவமைத்து உள்ளது. பிராங்புரூட் மற்றும் டிராம்ஸ்டாட் என்ற இரண்டு பகுதிகளுக்கு இடையே, 10 கிலோமீட்டர் தொலைவுக்கு 'இ-ஹைவே' என்ற சாலைகளுக்கு மேலே உயரழுத்த மின் கம்பிகளை அமைத்து, (பார்ப்பதற்கு ரயில் தடம் போன்ற ஒரு வடிவமைப்பு) அதில் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இதனால், அதிகளவில் காற்று மாசுபடுதல் CO2 மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேறுவது தவிர்க்கப்படும். இந்தத் திட்டமானது சீமன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கையாக மின்சாரத்தில் ஓடும் இயந்திரம் மற்றும் சாதாரண சாலையில் செல்லும் இயந்திரம் (Hybrid Engine) பொருத்திய கனரக வாகனங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

இதற்காக ஜெர்மனி அரசாங்கம் €70 மில்லியன் யூரோ செலவிட்டு ஆராய்ச்சிகள் செய்துள்ளது.

கனரக வாகனங்களுக்கே அதிகபடியான புதைபடிவ எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த புதுமையான வடிவமைப்பில் கனரக வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு அது வர்த்தக ரீதியாக செயல்படுத்தப்படும் போது CO2 வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும். 

காலநிலை மாற்றத்தை தடுக்க அதிக நிதி பங்களிப்பு

இன்னும் 4 மாதங்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்த முறை ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, தனது அரசு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 2 ட்ரில்லியன் டாலர்கள் ஒதுக்கப் போவதாக அறிவித்திருந்தார். வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 'net-zero carbon' என்பதை குறிக்கோளாக வைத்து திட்டங்களை வகுப்போம் என்றார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அமேசான் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி ஜெப் பெசோஸ், காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தன்னுடைய நிறுவனம் 10 பில்லியன் டாலர்களை அளிப்பதாக தெரிவித்திருந்தார். அவர் அளித்த நிதி அனைத்தும் Bezos Earth Fund என்ற அமைப்பை உருவாக்கி அதிலிருந்து காலநிலை குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்த கூடிய புதிய தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் என்றார். "காலநிலை மாற்றம் நமது பூமிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் நமது பூமியைப் பாதுகாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்கள், மாகாணங்கள், நாடுகள், உலகளாவிய நிறுவனங்கள் எல்லோருடைய கூட்டு நடவடிக்கைகள் மூலமாக நாம் காலநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். வாருங்கள் எல்லோரும் ஒன்றிணைவோம்" என்றார்.

பல வர்த்தகங்களைக் கையாளும் அமேசான் நிறுவனமும் ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகத் தான் இருக்கிறது. இவர்களது 'கிளவுட் கம்ப்யூட்டிங் சிஸ்டம்' போன்ற சேவைகளுக்காக தகவல் சேமிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தங்களது இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையான போக்குவரத்துகளையும், விமான சேவைகளையும் பயன்படுத்துகிறது அமேசான். இவைகள் எல்லாம் அடிப்படையில் புதைபடிவ எரிபொருள் மூலம் இயக்கப்படுகிறது. அவர் அளித்திருக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியாக 'Rivian' என்ற நிறுவனத்தில் இருந்து 100,000 emission-free electric vehicles -களை வாங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காலநிலை மாற்றம் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது. என்னவென்றால் 'Carbon Negative by 2030' அவர்களின் அனைத்து டேட்டா சென்டர்கள் மற்றும் பிற சேவைகள் அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் அதற்கு மாற்று சக்தியைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க உதவி செய்வோம் என்றது மைக்ரோசாப்ட்.

அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலும், உள்நாட்டில் உள்ள சில மாகாணங்கள் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது வரவேற்கத் தக்கது. முதலாளித்துவ நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது வருத்தமளிக்கும் செய்தி தான்.

அமேசான், மைக்ரோசாப்ட் போலவே வேறு நிறுவனங்களும், பல நாடுகளும் காலநிலை மாற்றத்தைக் குறித்து தங்களது எதிர்காலத் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சொல்வதை நிறைவேற்றும் பட்சத்தில், காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க கொஞ்சமாவது அது வழிவகுக்கும். இல்லையென்றால் வெறுமனே மக்களைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காக இனிப்பு தடவிய சொற்களை கூறியதாகவே இருக்கும்.

(நன்றி:https://www.npr.org/2020/06/26/883634480/californias-landmark-electric-truck-rule-targets-diesel-death-zone)

- பாண்டி