கறவைப் பண்ணைகளில் கிடேரிக் கன்றுகளை மட்டும் பிறக்கச் செய்வதன் மூலம் காளைகளின் எண்ணிக்கை குறையலாம். இதன் மூலம் இனவிருத்திக்கு பயன்படுத்தப்படும் காளைகளில் மரபணு அடிப்படையிலான பன்முகத் தன்மை குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இதை சீர் தூக்கிப் பார்த்து இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

cow 352

‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் தனியே சலித்தெடுத்து அவற்றை சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் செலுத்தி சினை முட்டையை கருவூட்டச் செய்து கிடேரிக் கன்றை மட்டுமே இப்பூமியில் பிறக்கச் செய்வதே ஆகும்.

இந்த கட்டுரையில் கிடேரி கன்றுகளின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாலும், கிடா கன்றுகளின் பிறப்பு வீதத்தைக் குறைப்பதாலும் எதிர் காலத்தில் துளிர் விட வாய்ப்புள்ள சவால்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

கருத்தரிப்புக்காக ஆகும் செலவு அதிகரிக்கலாம். செலவு அதிகமாக இருப்பதால் இந்த வகையான விந்தணுக்களைக் கொண்டு கருவூட்டல் செய்யும் போது தக்க வல்லுநர்களை அழைக்க வேண்டியிருக்கும். அது மேலும் செலவுகளை அதிகரிக்கும். வல்லுநர்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

காளைகளின் எண்ணிக்கை குறைவதால் மரபணு பன்முகத் தன்மை குறையலாம். இதனால் உள்ளினச் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எதிர்கால சந்ததிகள் மரபணு சார்ந்த சில இன்னல்களுக்கு ஆளாகலாம். கிராமப்புறங்களில் காளைகள் குறைவதால் இனவிருத்திக்காக விவசாயிகள் தற்சார்பை இழக்க வேண்டியிருக்கும்.

காளைக் கன்றுகளை பிறப்பிலேயே கட்டுப்படுத்துவது என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. வணிகம் ஒரு பக்கம் அழுத்தத்தைக் கொடுத்தாலும் அறத்தையும் காக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.

ஆக இந்த தொழில்நுட்பத்தை பரிட்சார்த்த அடிப்படையில் அமல்படுத்தி அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பின்னரே களத்தில் முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.

- செந்தமிழ்ச் செல்வன்

Pin It