அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி காலி

(Sperm Sexing or Semen Sexing Technology in Dairy Cattle Farming: Surgery Success But Patient Died)

கிடேரிக் கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியில் பிறந்ததே இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing / Semen Sexing Technology) என்பதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம். இயற்கை ஒரு கன்று கிடாவாக (ஆணாக) பிறப்பதற்கும், கிடேரியாக (பெண்) பிறப்பதற்கும் உள்ள சாத்தியக் கூற்றை சமமாகவே (50%-50%) வைத்திருக்கிறது. அப்படித்தான் இயற்கை இது வரை ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கையை அல்லது விகிதாச்சாரத்தை (Gender Ratio) மனிதன் உள்ளிட்ட இதர பாலூட்டிகளில் முடிந்தவரை சமமாக வைத்துள்ளது. நிற்க!

ஆனால் இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” எனும் தொழில்நுட்பத்தின் நோக்கமென்பது இப்பூமியில் பிறப்பெடுக்கும் ஒரு கன்று பெண்ணாயிருப்பதற்கான (கிடேரி) சாத்தியக்கூறை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை நோக்கி உயர்த்துவதே ஆகும். இப்படி ஆண் மற்றும் பெண் பாலினத்தின் பிறப்பு விகிதத்தை அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றுவதன் மூலம் மனிதன் தனக்கு வேண்டிய பாலினத்திற்கு ஆதரவாகவும், தனக்கு வேண்டாத பாலினத்திற்கு எதிராகவும் செயல்படுகிறான். இதற்கு அவன் பிரதானமாக விளிக்கும் காரணமென்னவென்றால் பொருளாதாரம்! பொருளாதாரம்!! பொருளாதாரம்!!!

            பசுவின் கருப்பையில் உருப்பெறும் கருமுட்டையின் (Zygote) பாலினத்தை தீர்மானிப்பது அந்த கருமுட்டை உருவாக காரணமாயிருந்த விந்தணுவின் வகையை பொருத்தது என்பதையும் முந்தைய கட்டுரையின் வாயிலாக அறிந்தோம். காளையின் விந்துவில் ”X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்கள் உள்ளதென்றும், கிடேரி கன்று உருவாக பசுவின் சினைமுட்டை (Ovum / Egg) காளையின் ”X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்பட வேண்டும் என்பதையும் கண்டோம்.

ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொலிக்காளையின் விந்துவை லாவகமாக சேகரித்து அவற்றிலிருந்து ”X” மற்றும் “Y” வகை விந்தணுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து பின்னர் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட ”X” வகை விந்தணுக்களை மட்டும் சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் புகுத்தி சினைமுட்டையை கருவுறச் செய்து பெண் (கிடேரி) கருமுட்டையை (Female Zygote) உருவாக்குதலே ஆகும். அது பின்னர் பெண் கருவாக (Female Embryo) வளர்ந்து, பெண் கன்றாக (Female Calf) மண்ணில் பிறப்பெடுக்கும். இந்த நெடும் பயணத்தின் முக்கிய கூறு என்னவென்றால் கோடானுகோடி விந்தணுக்களைக் கொண்ட “காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும்” சல்லடை போட்டு பிரித்தெடுப்பதே ஆகும். இங்கு தான் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது! அந்த தொழில்நுட்பம் தான் என்ன?

”X” வகை விந்தணுக்களை ”லேசர்” சல்லடை கொண்டு சலித்தெடுத்தல்:

இரண்டு வகை விந்தணுக்களான “X” மற்றும் “Y” விந்தணுக்கள் தங்களுக்கிடையே தலை வடிவம் (Head Shape), மொத்த எடை (Sperm weight), தலையில் சுமந்துள்ள மொத்த ‘குரோமோசோம்களின்’ அளவு (Quantity of Chromosome Content), மின்னூட்ட பண்பு (Charging Property) உள்ளிட்ட பண்புகளில் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு “X” மற்றும் “Y” விந்தணுக்களானது ”மிதந்தோடும் செல்லின் பண்புகளை ஆராயும் கருவி” (Flow Cytometer) மூலம் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

Separation of X and Y Bearing Sperm

இந்த முறையில் காளையிடமிருந்து லாவகமாக “கறக்கப்பட்ட” விந்துவானது ஒரு நுண்குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. அந்த நுண்குழாய் துளையின் அளவு (Diameter of the Hole) எப்படி இருக்கும் என்றால் அந்த குழாய் வழியாக கோடானுகோடி விந்தணுக்கள் அனைத்தும் ‘இரைபயணம்’ மேற்கொள்ளும் எறும்புகளை போல் ஒன்றன்பின் ஒன்றாக மட்டுமே செல்லமுடியும் எனும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியாக மேலிருந்து கீழிறங்கும் விந்தணுக்கள் ஒவ்வொன்றும் நுண்குழாயின் மூக்குத் துவாரத்தில் இருந்து செலுத்தப்படும் “லேசர்” ஒளியில் குளித்து ஒளியை பிரதிபலிக்கின்றது. அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளியின் அளவானது விந்தணு கொண்டுள்ள குரோமோசோமின் அளவை பொருத்து அமைகிறது. இவ்வாறு (பால்)’இனம்’ கண்டறியப்பட்ட விந்தணுக்களை தனித்தனியாக எளிதாக சேகரிப்பதற்காக அவை ஒவ்வொன்றும் மின்னூட்டம் பெறச்செய்யப்படுகிறது. அப்படி மின்னூட்டம் பெறச் செய்யும் போது “X” வகை விந்தணுக்கள் நேர் மின்னூட்டத்தையும் (Positive Charge), “Y” வகை விந்தணுக்கள் எதிர் மின்னூட்டத்தையும் (Negative Charge) பெறுகிறது. இவ்வாறு மின்னூட்டம் பெற்ற விந்தணுக்கள் தனித்தனியாக வெவ்வேறு குப்பிகளில் சேகரிக்கப் படுகிறது. ஆக இந்த தொழில்நுட்பத்தில் ”X” மற்றும் “Y” விந்தணு கலவையை கொண்ட விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் ”X” மற்றும் “Y” விந்தணுக்களானது தனித்தனியாக இரண்டு குப்பிகளில் பிரிக்கப்படுகிறது. சில சமயங்களில் ஏதொவொரு காரணத்தால் விந்தணுக்கள் சரிவர ‘இனம்’ கண்டறியப்படாமலும், அதனைத் தொடர்ந்து விந்தணுக்கள் எந்தவொரு மின்னூட்டத்தையும் பெறாமலும் வெளிவருவதுண்டு. இவ்வகை விந்தணுக்கள் மூன்றாவது குப்பியில் சேகரிக்கப்படுகிறது. இவற்றில் இறந்த விந்தணுக்களும் அடங்கும்.

தொழில்நுட்பத்தால் சோடைபோகும் விந்தணுக்கள்

இயற்கைமுறை கருவூட்டலில் (Natural Insemination) கோடானுகோடி விந்தணுக்கள் காளையின் ஆண்குறியிலிருந்து பசுவின் கருப்பை வாயில் (Os Cervix) பீச்சியடிகப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? 24 மணி நேரம் மட்டுமே! அந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் நுழைந்து சினை முட்டையை கண்டு ஹாய் சொல்லி கருத்தரித்து விட வேண்டும். நேரம் செல்ல செல்ல விந்தணுவின் ஆற்றல் குறைந்துக் கொண்டே வரும். ஒரு வேளை கருத்தரிப்பிற்கு முன்னரே முழு ஆற்றலையும் விந்தணு இழந்துவிடுமானால் அந்த கணமே அந்த விந்தணுவும் இறக்க நேரிடும். ஆக விதையிலிருந்து விடுப்பட்ட விந்தணுக்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானதாகும். “பசுவை காளைக்கு விடும்” போது இந்த விந்தணுக்கள் மனிதனின் பார்வைக்கு படுவதில்லை. சூரிய வெளிச்சமும் இவைகளின் மீது பாய்ச்சப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் கூடு விட்டு கூடு மட்டுமே பாய்கிறது. இந்த வகை விந்தணுக்களின் ஆற்றல் முழுவதும் சினை முட்டையை கருத்தரிப்பதை நோக்கி மட்டுமே செலவிடப்படுவதால் இயற்கைமுறை கருவூட்டலில் கருத்தரிக்கும் திறன் அதிகமாக இருக்கும்.  

            மாறாக, செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பத்தில் காளையிடமிருந்து விந்தணுக்களை சேகரிக்கும் போதும், பின்னர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படும் போதும் பகுதியளவு ஆற்றல் வீணாக செலவிடப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அதை தொடர்ந்து விந்தணுக்களின் தரம் உறுதி செய்யப்பட்டப் பின்னர் அவைகள் திரவ நைட்ரஜனில் (Liquid Nitrogen) உறை நிலையில் (Frozen Stage) பயன்பாட்டிற்காக பல வருடங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி செய்யும் போது விந்தணுக்களிலுள்ள பயன்படுத்தப்படாத மீதியுள்ள உள்ளார்ந்த ஆற்றலும் அப்படியே உறங்கிய (Hibernation) நிலையில் தேக்கி வைக்கப்படுகிறது. எப்போது இந்த உறை விந்தணுக்கள் (Frozen Semen) சினை ஊசி மூலம் ஆய்வகத்திலிருந்து பசுவின் கருப்பையை வந்தடைகிறதோ அப்போது அவைகள் இந்த மீதமுள்ள பகுதியளவு ஆற்றலை பயன்படுத்தி சினைமுட்டையை கருத்தரிக்க வேண்டியுள்ளது. இப்படி அரைகுறை ஆற்றலை மட்டுமே கருத்தரிப்புக்காக பயன்படுத்த வேண்டியிருப்பதால் செயற்கைமுறை கருவூட்டலில் விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் (Fertility) இயற்கைமுறை கருவூட்டலை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கூடு விட்டு கூடு மட்டுமே பாய்ந்து கருத்தரிக்க வேண்டிய விந்தணுக்களை மனிதன் கையாளும் போது அவற்றை வெளிச் சூழலுக்கு அம்பலப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு? விந்தணுக்களின் கரித்தரிக்கும் திறன் குறைந்து விடுகிறது. ’செயற்கைமுறை கருவூட்டலில் பசு சினை பிடிக்கவில்லை… பசுவை காளைக்கு விடும் போது உடனே சினை பிடிக்கிறது…’ என்றெல்லாம் புலம்புவது இதனால் தான்.

            இயற்கைமுறை கருவூட்டலிலும், செயற்கைமுறை கருவூட்டலிலும் பசுவின் கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்களும் கலந்திருக்கும். பசுவின் சினை முட்டை இவ்விரண்டு வகை விந்தணுக்களில் எந்த வகை ஒன்றாலும் கருத்தரிக்கப் படலாம். ஆகவே தான் பிறக்கப் போகும் கன்று ஆணாக (கிடா) இருப்பதற்கும் பெண்ணாக (கிடேரி) இருப்பதற்குமான சாத்தியக் கூறு சம அளவில் (50%:50%) உள்ளது. ஆனால் ”பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களை” பயன்படுத்தும் போது கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் பெரும்பாலும் “X” வகை விந்தணுக்கள் மட்டுமே இருப்பதால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட அதிகமாகவும், ஆணாக (கிடா) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட குறைவாகவும் இருக்கிறது.

இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக பிறப்பதற்கான சாத்தியக் கூறு 70 சதவீதமாகவும் இருக்கலாம். 80 சதவீதமாகவும் இருக்கலாம். 90 சதவீதமாகவும் இருக்கலாம். அதாவது 50 சதவீததிற்கு மேல் 100 சதவீதத்திற்கு கீழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டிப்பாக 100 சதவீதமாக இருக்காது. இதற்கு காரணம் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் “X” வகை விந்தணுக்கள் என்று பிரித்தெடுக்கப்படும் விந்தணுக்கள் அனைத்தும் “X” வகையாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக “Y” வகை விந்தணுக்களும் கணிசமாக கலந்து உள்ளது என்பதே கள நிலவரம். இதற்கு காரணம் “X” வகை விந்தணுக்களை துல்லியமாக பிரித்தெடுப்பதிலுள்ள ’தொழில்நுட்ப’ சவால்களும், சிக்கல்களுமே ஆகும். இவைகளனைத்தும் காலப்போக்கில் களையப் படலாம். கூடவே வேறு சில புதிய சவால்களும் முளை விடலாம். ஆக இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நிகழும் இந்த மல்யுத்தம் ஒரு தொடர்கதை என்பதில் ஐயமில்லை.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் “X” வகை விந்தணுக்களை காளையின் விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் பிரித்தெடுக்கும் போது விந்தணுக்கள் தங்களின் ஆற்றலை இழப்பதுடன் பல்வேறு வகையில் அயர்ச்சிக்கும் (Stress) உள்ளாகிறது. இத்துடன் நில்லாமல் பிரித்தெடுக்கப்பட்ட “X” வகை விந்தணுக்களை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வரை அவற்றை உறை விந்தாக மட்டுமே சேமித்து வைக்கப்பட வேண்டியிருக்கிறது. இது மேலும் மேலும் விந்தணுக்களுக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. இவ்வாறு காளையிலிருந்து பீறிட்ட விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் சினை முட்டையை முத்தமிடும் முன்பே சக்தியிழந்து கண்ணயர்வதால் இவைகளின் கருத்தரிக்கும் திறன் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. விளைவு? பிறக்கப்போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு கருத்தளவில் (Theoretically) 50 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும் கள அனுபவம் சொல்வதென்னவென்றால் பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் மிகவும் குறைந்து இருக்கிறது என்பதே ஆகும்.

“கிடேரி மோகத்திற்காக” மனிதன் காளையின் விந்துவை கையாள முற்படும் போது விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் குறைகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பெண் கன்றுக்கு ஆசைப்பட்டு சினை முட்டையின் கருத்தரிப்பிற்கே அல்லவா நாம் உலை வைக்கிறோம்? இப்படி விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விட்டு வேறென்ன சாதனையை நாம் சாதிக்க எத்தனிக்கிறோம்?

இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றி அடுத்த கட்டுரையில் அறிவோம்! விவாதிப்போம்!!

செந்தமிழ்ச் செல்வன்

Pin It