proctoring

கொரோனா பாதிப்பினால் கல்விக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவதற்கான காலம் நெருங்கி விட்டது. இப்போது தேர்வுகளை நடத்துவதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளது. சில நாடுகளில் பள்ளிகளுக்கான இறுதித் தேர்வை நடத்தாமல் அவர்களுக்கு ஒரு பொதுவான 'கிரேட்' என்பதைக் கொடுத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். அதே வேளையில் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் இருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த சில பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வு முறையைக் கையாண்டு வருகின்றனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்களைக் கண்காணிக்க, தேர்வினை நடத்தும் ஆசிரியர்கள் இருப்பார்கள். அதெல்லாம் ஆன்லைன் தேர்வுகளில் இருக்காது. தேர்வுகளை எழுத கல்லூரி வளாகத்திற்குச் செல்லாமல், மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தேர்வு எழுதுவார்கள்.

இந்த ஆன்லைன் தேர்வுகளை எழுதுவதற்குத் தான் Proctoring சேவைகள் வழங்கும் மென்பொருள் பல்கலைக் கழகங்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதிலிருக்கும் பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் போன்ற குறைகளை சுட்டிக்காட்டி ஆங்காங்கே கேள்விகளும், இதனைத் தடை செய்யக் கோரி புகார்களும் எழுந்துள்ளன.

இந்தியாவில் இந்த மென்பொருள் சேவை அதிகளவில் இல்லை என்றாலும். தற்சமயம் Indian Institute of Management Kasikpur -ல் முதன் முதலாக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் சில சிறிய பல்கலைக் கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை இதனடிப்படையில் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெருவாரியான பல்கலைக் கழகங்களில் இதன் சேவைகளைப் பயன்படுத்தற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

எப்படி இயங்குகிறது Proctoring மென்பொருள்?

இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் மற்றும் முகம் கண்டறிதல் மூலம் (Artificial intelligence, Mechine language, and facial recognition) வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இதில் பரிமாற்றம் செய்யும் தகவல்கள் 'Zero - knowledge encryption' என்ற வடிவமைப்பில் இருக்கிறது. அதாவது, இதனைப் பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இதனை வடிவமைத்த நிறுவனத்திற்குத் தெரியாது என்கிறது.

பல்கலைக் கழகங்களால் வடிவமைக்கப்பட்ட தேர்வுத்தாள் இந்த மென்பொருளுடன் பதிவேற்றம் செய்யப்படும். இதனுடைய ஒரு link தேர்வெழுதும் மாணவருக்கு அனுப்பப்படும். தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரும் இதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களது சொந்த மடிக்கணினியில்‌ அல்லது வீட்டுக் கணினியில் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் USB cable வழியே Speaking and recording device மற்றும் webcam இவைகளை மடிக்கணினியில்/கணினியில் இணைக்க வேண்டும். இவைகளை இணைத்து விட்டு மாணவர்கள் வீட்டில் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டால், நீங்கள் தேர்வு எழுத ஆயத்தமாகி விட்டீர்கள்.

மாணவர்களின் முகத்தைப் பார்த்து இந்த மாணவர் தான் தேர்வு எழுதுகிறார் என்பதை முதலில் இது உறுதி செய்யும். தேர்வு எழுதி முடிக்கும் வரையில் உங்களை Proctoring மென்பொருள் கண்காணித்துக் கொண்டு இருக்கும். இது தேர்வு எழுதும் மாணவர்களின் கண்களுக்குத் தெரியாத எந்திரன்.

இந்த நவீன மென்பொருளைப் பயன்படுத்தி தேர்வு எழுதத் தொடங்கியவுடன், தேர்வு எழுதும் நேரம் முடியும் வரையில் மாணவர்கள் பேசுவது, அசைவது, சுவற்றில் இருக்கும் கடிகாரத்தைப் பார்ப்பது - எல்லாவற்றையும் இதில் பொருத்தியிருக்கும் வெப்கேமரா பதிவு செய்து கொண்டே வரும். ஒரு நிமிடத்திற்கு மேல் மாணவர் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தால் கூட கணினியில் 'red flag' தோன்றி விடும்.

கணினியின் திரையில் மாணவர்கள் வேறு ஏதாவது கூகிளில் தேடினால் கூட 'red flag' வந்துவிடும். தேர்வு எழுதும் மாணவரின் குரலைத் தவிர வேறு யாராவது குரலைக் கேட்டாலும் 'red flag' வந்துவிடும். 'red flag' என்பதன் பொருள் மாணவர்களுக்கு வேற யாரோ உதவுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படும். அதாவது காப்பி அடிக்கிறார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்து விடும் (Suspected). இன்னும் இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் தடைப்பட்டால் அந்தத் தேர்வு ஏற்றுக் கொள்ளப்படாது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் University of Queensland மற்றும் University of Sydney இந்த இரண்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வுகளை எழுத Proctoria, ProctorU என்ற இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்தார்கள். தேர்வுகளை எழுதிய மாணவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு, அவ்விரு நிறுவனங்களுக்கு எதிராக 4000க்கும் மேற்பட்ட மக்கள், புகார் கடிதத்தில் கையொப்பமிட்டு இருக்கிறார்கள். அதாவது மாணவர்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறினார்கள்.

மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்றும். 'பல்கலைக்கழகங்கள் இது போன்ற ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் கையாளும் மென்பொருள் குறித்து நாட்டின் 'privacy commission' அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே தேர்வெழுத அனுமதித்திருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்கள் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பினர்.

இத்தகைய சேவைகளை வழங்கும் மென்பொருள் நிறுவனத்தினர் கூறும் செய்தி என்னவென்றால். 'ஏற்கனவே பல்கலைக் கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற பின்தான் எங்களது மென்பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வீட்டிலிருந்து தேர்வு எழுதும் போது மாணவர்கள் ஏமாற்றி தேர்வு எழுதலாம் (காப்பி அடித்து) என்பதற்காகவே இவ்வாறு வடிவமைத்திருக்கிறோம். தேர்வெழுதும் மாணவர்களின் தகவல்களை நாங்களே பார்க்க முடியாது, அது எல்லாம் கிளவுட் சர்வீசில் சேமித்து வைக்கப்படுகிறது. மூன்றாவது நிறுவனம் இதில் புகுந்து எந்த தகவல்களையும் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் எந்தெந்த நாடுகளில் எங்களது மென்பொருள் பயன்படுத்தப் படுகிறதோ அந்தந்த நாடுகளிலுள்ள 'தனிநபர் கட்டுப்பாடுகள்' போன்ற அனுமதிகள் வாங்கிய பின்னரே பயன்பாட்டுக்கு வருகிறது' என்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பெருவாரியான பல்கலைக் கழகங்கள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இங்கும் தேர்வெழுதிய மாணவர்கள் சிலர் இந்த மென்பொருள்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். பல்கலைக் கழகங்களும் சரி, இதனை வடிவமைத்திருக்கும் நிறுவனங்களும் சரி மாணவர்கள் தேர்வினை ஏமாற்றாமல் இருப்பதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 58% மாணவர்கள் 'plagiarism' செய்கிறார்கள் (அதாவது, இணையதளத்தில் இருந்து மற்றொருவர் எழுதிய பதிலை அப்படியே ஒரு வரி விடாமல் காப்பி செய்து, தனது தேர்வுத் தாளில் தானே எழுதியதாக மாற்றுவது. இது பத்திரிகை/எழுத்துத் துறைக்கும் பொருந்தும்) என்றும், இதையே 36% கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செய்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற தரவுகளை வைத்து, மாணவர்கள் 'Manipulation' செய்யக்கூடாது என்பதற்காக தங்களது மென்பொருள்களை அதற்கேற்ப வடிவமைப்பு செய்கிறார்கள்.

ஆண்டு இறுதித் தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்றவற்றைத் தவிர்க்க இந்த மென்பொருள்கள் பயன்பட்டு வந்தாலும். தனிநபர் சுதந்திரம் குறித்து அதிக கேள்விகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. அதே வேளையில் சரியான இணையத்தளக் கட்டமைப்பு இல்லாத நாடுகளில் இதனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம். குறிப்பாக வசதி வாய்ப்புகள் அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு இத்தகைய வடிவமைப்பில் தேர்வுகள் எழுத பல்கலைக் கழகங்கள் நிர்பந்தம் செய்யும் பட்சத்தில், அது, மேலும் தேர்ச்சி விழுக்காட்டை குறைக்கத் தான் செய்யும்.

ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் நாடுகளுக்கு கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லும்போது 'TOEFL' (Test of English as a foreign language) என்ற தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வகையான தேர்வுகளும் biometric centre-களில் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கு செல்லும்போது நாம் அவர்களது தேர்வு நிலையங்களுக்குச் சென்று அவர்களிடம் இருக்கும் கணினியில் எழுதுவது, பேசுவது, கேட்பது போன்ற தேர்வுகளைக் கொடுப்போம். இதில் கணினியில் இருக்கும் கேமரா நம்மை கண்காணிக்காது. அவர்கள் அறையில் இருக்கும் கேமரா தான் நம்மை கண்காணிக்கும். இந்த வகையான தேர்வுகளுக்கும் ஆன்லைன் proctoring தேர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எந்திரன் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் படிக்காமல் தேர்வெழுதச் சென்றிருப்பார். சிட்டி ரோபோ கட்டிடத்தின் மேலே ஏறி அவரது கண்களின் வழியாகப் பதிலை ஐஸ்வர்யா ராய்க்கு காட்டிக் கொண்டிருப்பார். ஐஸ்வர்யா ராயும் அதைப் பார்த்து தேர்வினை எழுதி தேர்ச்சியும் பெற்று விடுவார். ஒருவேளை இத்தகைய சம்பவங்கள் கூட மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒரு சான்றாக இருந்திருக்கலாம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், தேர்வு எழுதும் போது (இறுதித் தேர்வு அல்ல) எங்கள் துறையின் தலைவர் வேடிக்கையாக ஒன்றைக் கூறுவார் "புக்க பார்த்தாவது பேப்பர்ல எழுதுங்கப்பா, அப்பவாவது நீங்க எழுதுறது மனசுல பதியும்" என்பார். அவர் கூறியது காப்பி அடிப்பதற்காக அல்ல... மாறாக எழுதும் போது மனதில் பதிய வேண்டும் என்பதற்காக.

எது எப்படியோ மாணவர்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுடன் கண்களுக்குத் தெரியாத எந்திரன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தனிநபரின் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் இவை ஆபத்தானவை.

(மூலம்:https://www.pri.org/file/2020-05-22/students-protest-remote-proctoring-technology-over-privacy-concerns)

- பாண்டி

Pin It