face detectionஇன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வெளியே நாம் எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் சரி, CCTV camera -கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். பெருவாரியாக மக்கள் கூடும் இடங்கள் தொடங்கி வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இப்படி CCTV camera பொருத்தப் பட்டிருக்கும் இடங்களை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் இதுபோல் கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். அதேவேளையில் காவல் துறையினரின் ஆடையிலும் body camera பொருத்தப்பட்டிருக்கும் நிலை அங்கு இருக்கிறது. இது தொடர்ச்சியாக மக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இதில் பதிவாகும் தகவல்கள் DVR -ல் (digital video recorder) சேமித்து வைக்கப்படும். இது அவர்களின் அலுவலகத்தில் இருக்கலாம் அல்லது 'கிளவுட்' -ல் பல ஆயிரம் மைல்கள் கடந்து எங்கோ ஓரிடத்தில் சேமிக்கப்படலாம்.

ஏதாவது சந்தேகத்திற்குரிய குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் பதியப்பட்ட தகவல்களை எடுத்து, எந்த நேரத்தில்? எந்த இடத்தில்? யார் வந்தது? என்பதை அவர்களிடம் இருக்கும் tool -களை வைத்து ஆய்வுகள் செய்வார்கள். இந்த ஆய்வுகளை மேற்கொள்ள கால நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சற்று தெளிவாக இல்லாத படங்கள் வரும் சமயத்தில் ஒரு முடிவினை எடுப்பதற்கு இன்னும் இது அதிகமாகும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே 'facial recognition' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.

CCTV -கள் மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தையும் facial recognition தொழில் நுட்பத்துடன் இணைத்து விட்டால். கேமராக்களில் பதியப்பட்ட காட்சியில் தெரியும் நபரின் கண், மூக்கு, காது, தாடை, உயரம் எல்லாவற்றையும் அளவிட்டு இவர் இன்னார்தான் என்று நொடிப் பொழுதில் காட்டிவிடும். ஏனெனில் அவர்களுடைய database -ல் மில்லியன் கணக்கில் புகைப்படங்கள் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் algorithm கணக்கீடுகள் மூலம் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

இது 100% சரியான முடிவைத் தரும் என்று கூற முடியாது. இதிலும் பிழைகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஒருபுறம் இதன் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் இதில் தனிநபர் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருக்கிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 7.7 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?

Facial recognition தொழில்நுட்பத்திற்கு CCTV camera மட்டும் தான் என்றில்லை. நமது கையில் இருக்கும் கைபேசியின் கேமராவே போதுமானது. சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு எங்கோ நம்மால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாம், எங்கோ ஓரிடத்தில் டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு அதில் டிஜிட்டல் தகவல்களாக மாற்றப்பட்டு இருக்கும்.

உதாரணத்திற்கு பிரபல சமூக வலைத்தளம் பேஸ்புக்-ஐ எடுத்துக் கொள்வோம். 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'tag suggestions' மூலம் புகைப்படங்களை பதிவேற்றுவது பெரும் வரவேற்பைப் பெற்றது. நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தைப் பார்த்து, படத்தில் இருப்பவர்கள் யார்? என்பதைப் பெயருடன் வரும் சேவையை facial recognition தொழில்நுட்பத்துடன் ஆரம்பித்தது. இந்தத் தொழில்நுட்பம் நமது புகைப்படத்தையோ அல்லது காணொலிக் கட்சிகளையோ பதிவேற்றம் செய்யும்போது, நாம் இருக்கும் இடத்தையும் டேக் செய்து பதிவேற்றும். இப்போது அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் facial recognition நமது படத்தின் மேலிருந்து கீழ் வரை (algorithm) கணிதச் சமன்பாடுகள் மூலம் இவர் இப்படி தான் இருக்கிறார், இவரின் நீளம், உயரம், நிறம், எல்லாவற்றையும் துல்லியமாகப் பதிவு செய்து விடும். இதே போல் நமது நண்பர்களும் செய்திருக்கலாம். இப்போது நண்பரின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது நண்பரின் நண்பர் அந்த புகைப்படங்களைப் பார்க்கிறார். இவர் இன்னார் தான் என்று அதிலுள்ள (மென்பொருள்) செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து புகைப்படத்தின் கீழே நமது பெயரும் வந்துவிடும். நாமும் அதை‌ விரும்பி 'லைக்ஸ்' செய்வோம். இதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆகஸ்ட் 8, 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று பேஸ்புக்கின் 'facial recognition' தொழில்நுட்பத்திற்கு எதிராக, தனிநபர் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் அதன் பயனாளிகள் வழக்கு தொடரலாம் என்றது. (நன்றி: npr news).

அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சில பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் check in செய்யும் போது, பயணம் செய்யும் நபரின் முகத்தை வைத்து நுழைவுச் சீட்டை தந்துவிடும் அங்கிருக்கும் தானியங்கி இயந்திரங்கள். எப்படி? நமது பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருக்கிறது. இதனை விமானங்கள் இயக்கும் நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. Facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் இயந்திரங்கள் முகத்தைப் பார்த்து இவர் இன்னார் தான் என்று திரையில் காண்பிக்கிறது. இது எல்லா பயணிகளுக்கும் கட்டாயம் இல்லை. யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். வரிசையில் நிற்கும் நேர்த்தைக் குறைப்பதற்கு இந்த சேவை இருக்கிறது. சில நாடுகளில் இந்த சேவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், இதனால் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.

இன்றைய நவீன மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்களும் கூட இந்த தொழில்நுட்பத்தில் தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இல்லாமல், நமது முகத்தை வைத்து செல்போனில் உள்ளே நுழையும் பாதுகாப்பு வழிமுறைகள் வந்து விட்டன.

இதுவே சில டேட்டா சென்டர்களில் (தகவல்கள் சேமிக்கும் நிலையங்கள்) அதன் பணியாளர்கள் உள்ளே நுழைவதற்கு பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும், தற்போது முகம் அறிந்து செயல்படும் facial recognition தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பணியாளர்களின் புகைப்படம் ஏற்கனவே தொழில்நுட்பத்துடன் பதியப்பட்டிருக்கும். பணியாளர்கள் கேமராவுக்கு முன்பு நிற்கும்போது, அவரின் முக அடையாளங்களை வைத்து உள்ளே நுழைவதற்கான அனுமதி தருகிறது.

மனித உரிமைகள் அமைப்பின் கோரிக்கையும் மென்பொருள் நிறுவனங்களின் மனமாற்றமும்:

கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த facial recognition தொழில்நுட்பத்தை, தற்போது காவல் துறையினர் பயன்படுத்துவதற்கு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது மென்பொருள் நிறுவனமான அமேசான். அமேசானின் வெப் சர்வீஸில் உள்ள Rekognition என்ற பிரிவு, பிரத்தியேகமாக facial recognition என்ற தொழில் நுட்ப சேவையை பல வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அமெரிக்க காவல்துறை இவர்களின் தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பயன்படுத்தி வந்தார்கள். ஜுன் 10ஆம் தேதி அமேசான் வெப் சர்வீஸ் தளத்தின் blog -ல் "தங்களது தொழில் நுட்பம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான ஒழுங்கு, வழிமுறைகள் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் வரை ஓராண்டு காலத்திற்கு இந்த சேவையை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் மனிதர்களை வதை செய்வது போன்ற செயல்களுக்கு எதிராக தொடர்ந்து இச்சேவை வழங்கப்படும்" என்று தங்களது அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.

பொது மக்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்கள். அமேசானின் இந்த நடவடிக்கையை ALCU (American Civil Liberties Union) என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள தொழில்நுட்ப தலைவர் Nicole Ozer, "முகம் அறியும் தொழில்நுட்பத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். அமேசான் நிறுவனம் தற்போது தான் இந்த தொழில்நுட்பத்தின் மற்றொரு முகத்தைக் கண்டறிந்துள்ளது. முகம் அறியும் தொழில்நுட்பம் வழக்கத்திற்கு மாறான அதிகாரத்தை அரசாங்கத்திற்குத் தருகிறது. இதனைப் பயன்படுத்தி சாதாரண குடிமக்களைக் கூட அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் பின்னாடியே சென்று உளவு பார்ப்பது போல் பார்க்கிறது" என்றார். (தரவு: https://www.npr.org/2020/06/10/874418013/amazon-halts-police-use-of-its-facial-recognition-technology)

கடந்த சில ஆண்டுகளாக இதில் ஆராய்ச்சி செய்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுவதும், 'இது தவறான முறையில் பயன்படுத்தப் படுகிறது' என்பதுதான். இந்த தொழில்நுட்பம் கருப்பு நிறமுடைய மக்களை அடையாளப்படுத்துவதில் பெரும்பாலும் தவறான முடிவையே வெளியிட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் ஓர் ஆய்வினை மேற்கொண்ட MIT (Massachusetts Institute of technology) இலகுவான தோல் உடைய ஆண்களை எப்போதாவது ஒருமுறை சரியான முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது. அதே வேளையில் இலகுவான தோல் உடைய 7% பெண்களை தவறான முறையில் அடையாளப்படுத்தி இருக்கின்றது. இதையே கறுப்பின மக்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டதில் 35% பெண்களை தவறாக அடையாளப்படுத்தி இருக்கிறது.

அமேசான் நிறுவனம் இந்த முடிவை எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானான ஐபிஎம் நிறுவனம் 'காவல்துறைக்கு தமது சேவைகளை அளிப்பதில்லை' என்று முடிவெடுத்திருந்தார்கள்.

ஜூன் 8 ஆம் தேதி ஐபிஎம் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். "ஐபிஎம் நிறுவனத்தின் பொது பயன்பாடு facial recognition தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறைக்கு அளிப்பதில்லை. பெருவாரியான மக்களைக் கண்காணிப்பது, நிறப் பாகுபாடு, வன்முறைகள், மனித உரிமைகளை மீறும் செயல்களுக்கு பயன்படுத்த விடமாட்டோம். செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் வலிமையான சாதனம். மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம். ஆனால், இது அவ்வாறு பயன்படுத்தப் படவில்லை" என்று கடிதம் ஒன்றை எழுதினார். (தரவுகள்: https://www.ibm.com/blogs/policy/facial-recognition-susset-racial-justice-reforms/)

உலகில் பல்வேறு நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் 300 மில்லியன் CCTV camera -களை வெவ்வேறு நகரங்களில் அரசு செலவில் பொருத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. தோராயமாக நான்கு நபர்களுக்கு ஒரு கேமரா என்ற விகிதத்தில் கண்காணிக்கப் படுகிறது. அமெரிக்காவில் 70 மில்லியன் கேமராக்கள் கண்காணிப்புக்காக உபயோகிக்கப் படுகிறது.

இதனால் குற்றச்செயல் குறைந்திருக்கிறது என்று அரசாங்கம் கூறினாலும், மனித உரிமை மீறல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித உரிமைகளை, உயிர்களை, மாண்புகளைக் காக்க வேண்டுமே தவிர மரணத்தை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு இருப்பின் அவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து இத்தகைய சேவைகளை வழங்க மாட்டோம் என்று கூறி இருப்பது வரவேற்கத் தக்கது. இன்னும் சில முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் facial recognition தொழில்நுட்ப பயன்பாடு குறித்து தங்களது முடிவினை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பாண்டி

Pin It