solar apartmentஉலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது.

பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change), அக்டோபர் 2018 இல் வெளியிட்ட உலக வெப்பமயமாதல் பற்றிய சிறப்பு அறிக்கையில், உலக வெப்பமயமாதல், உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த அளவுகளை விட 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயர்ந்திருக்கின்றது என கணிக்கிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி (Paris Agreement) தேசங்கள் அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Commitments) என்று சொல்லப்படும் மிகக் கடுமையான சவால் நிறைந்த நடவடிக்கைகள் எடுத்தும் கூட 2030 க்கு பிறகு உலக வெப்பமயமாதல் நிகழ்வு 1.5 டிகிரி சென்டிகிரேடு அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமயமாதலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, 2050ஆம் வருட வாக்கில், எந்த கார்பன்–டை-ஆக்சைடு வெளியீட்டையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதேபோல கார்பன்-டை-ஆக்சைடு தவிர்த்த மற்ற பசுமை வாயுக்களின் வெளியீட்டையும், குறிப்பாக மீத்தேனையும் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியது இருக்கும்.

உலக வெப்பமயமாதலின் உயர்வு இரண்டு டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது இருப்பதைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது வரும் ஆபத்துகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியா தனது பசுமை வாயுக்கள் வெளியீட்டு அளவினை, 2005 அளவுகளில் இருந்ததைவிட 2030 ஆம் ஆண்டு வாக்கில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கில் 33 லிருந்து 35 சதவீதம் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது.

இது 2030 ஆம் ஆண்டு வாக்கில் புதை படிவம் சாராத எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி நிறுவப்படும் மின்சக்தி திறன்களை 40% அதிகரிப்பதன் மூலமாகவும், மேலதிகமாக காடுகள் மற்றும் மரங்களின் பரவலால் 2.5 இலிருந்து 3 பில்லியன் வரையிலான கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கான (GtCO2e) கார்பன் மூழ்கிகளை (carbon sinks) கூடுதலாக உருவாக்குவதன் மூலமும் மட்டுமே அடைய முடியும்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்சார திறன் சக்தியை நிறுவ இலக்கு ஏற்படுத்தியுள்ளது. அதில் 40% மேற்கூரை மற்றும் சிறிய அளவிலான சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களும் அடங்கும்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை (Ministry of New and Renewable Energy), தமிழ்நாட்டிற்கு 2022 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தியின் இலக்காக 9 ஆயிரம் மெகாவாட் திறனை முன்வைப்பு செய்திருக்கிறது. தமிழக அரசும் தனது சூரிய ஒளி சக்திக்கான கொள்கையினை (Solar Energy Policy) 2012 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது.

தனிநபர்களின் பங்களிப்பாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வுப் போக்கில் சிறிய அளவுகளில் நமது இல்லங்களிலோ, வணிக நிறுவனங்களிலோ மேற்கூரை சூரிய மின்நிலையங்கள் (Solar Rooftop Power Plant) அமைத்து அதில் கலந்து கொள்வது மிகவும் எளிதான விடயமே.

மேற்கூரை சூரிய மின் நிலையம்

சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெருமளவில் அதாவது அதன் மின்திறன் கணக்கில், மெகா வாட்டுகள் அளவில், பரந்த நிலப்பரப்பில் நிறுவப்படுவது. பெரும்பாலும் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், அவற்றை நிறுவிய நிறுவனங்களின் சொந்த உபயோகத்திற்கோ, அல்லது மின்சார நிறுவனங்களுக்கு விற்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது, சிறிய மின்சக்தி திறன் அளவில் வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்கூரையின்மீது நிறுவப்பட்டு சொந்த உபயோகத்திற்கு பயன்படுபவை. இதில், மின் நிறுவனத்தின் மின் இணைப்போடு பொருத்தப்பட்டு இயக்குவது; மாறாக மின் இணைப்போடு பொருந்தியில்லாமல் தனிப்பட்ட முறையில் இயக்குவது என இரண்டு வகைகள் உண்டு. மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்குவதில் பல சிரமங்கள் உள்ளன. முதலில் அதற்கு மின்கலம் வேண்டும்.

மின்கலத்தை பராமரிப்பதற்கு உண்டான செலவுகளும் ஒரு பிரச்சனை. அது தவிர ஒருவேளை நாம் பயன்படுத்தும் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகும் போது, மின்கலமும் கொள்ளளவு நிறைந்துவிட்ட போது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வீணாகத்தான் போகும். இது தவிர, மின்சாரம் மின் கலன்களில் சேமித்து வைத்து மறுபடி உபயோகப்படுத்துவதன் காரணமாக 15 லிருந்து 20 சதவீதம் வரை எரிசக்தி விரயமாக வாய்ப்பிருக்கிறது.

சூரிய மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும், மின்சார நிறுவன மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும் தனித்தனியாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இந்த மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்கும் முறை பிரபலமடையவில்லை. மேலும் அரசினால் ஊக்கப்படுத்தப்படுவதும் இல்லை.

மேற்கூரை சூரிய மின் அமைப்பிற்கு மிகவும் அவசியமானது பேனல்கள் (solar panel) அமைக்க திறந்த மாடியில் நல்ல சூரிய ஒளி விழும் தேவையான இடம். ஒரு கிலோ வாட் மின்சக்தி திறன் கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 8 முதல் 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் தேவை.

முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம்

தமிழக அரசு, முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்ற பெயரில் ஒரு சூரிய ஒளி மின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வாட் திறன்சக்தி கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 20 ஆயிரம் ரூபாயை மானியமாக தருகிறது. இது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அளிக்கும் 30 சதவீத மானியத்திற்கும் கூடுதலாக கிடைக்கும்.

தனிப்பட்ட வீடுகளுக்கு அல்லது தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிப்பட்ட ஒருவருக்கு சூரிய ஒளி மின் அமைப்பின் திறன் அளவு ஒரு கிலோ வாட் அளவிலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சேர்ந்து 10 கிலோவாட் அல்லது அதன் மடங்குகளிலும் இதை நிறுவிக் கொள்ளலாம். தனிப்பட்ட வீடுகளில் நிறுவும் போது 1 கிலோ வாட்டிற்கு அதிக அளவிலான மின்திறனிலும் நிறுவிக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு கிலோவாட்டுக்கு மட்டும்தான் மானியம் உண்டு. மின்சார நிறுவனத்தின் மின் இணைப்புடன் செயல்படும் சூரிய மின்சார அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

நிறுவுதலுக்கான வழிமுறைகள்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் (Tamil Nadu Energy Development Agency - TEDA) விண்ணப்பித்து அனுமதி பெற்று நிறுவ வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1, 2, 5 அல்லது 10 கிலோ வாட் மின்சக்திக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ஒரு வீட்டிற்கு அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு, ஒரு கிலோவாட் அளவிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணைய தளத்தின் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (இணைய தள முகவரி: http://www.teda.in/CIS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி, பின்னர் அதில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தினை பிரிண்ட் செய்து, கையொப்பமிட்டு, தமிழ்நாடு எரிசக்தி முகமையின் சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபாலில் விண்ணப்பிக்க, குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். இரண்டு முறைகளிலும் விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணம் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறகுதான் ஆஃப்லைனில் உள்ள விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள், முன்னுரிமை மற்றும் அவற்றின் சரித்தன்மையினை உறுதி செய்த பின்னர், பதிவு செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட விவரம் மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அந்த வார இறுதியில் அனுப்பப்படும்.

பதிவுபெற்ற விண்ணப்பங்களின் பதிவு எண்கள் அதனுடைய ஒப்புதல் விவரங்களுடன் இணையதளத்திலும் வெளியிடப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும், மற்ற படிவங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பதிவு செய்யப்பட்ட நிறுவனர்கள் மூலமாக மட்டுமே நாம் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வாங்கி நிறுவ முடியும். இந்த நிறுவனங்களின் பட்டியல் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.

நமது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் அந்த நிறுவனங்களுடன் நாம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி இதில் 22 நிறுவனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

அதோடு அவர்களின் சூரிய மின் நிலையத்தினை அமைத்துத் தருவதற்கான விலை, கிலோ வாட்டுக்கு எவ்வளவு என்ற விவரங்களும், மற்ற தொடர்பு விவரங்களும் அதில் தரப்பட்டிருக்கும். பட்டியலின்படி தற்போதைய விலை ஒரு கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாயிலிருந்து 70,000 ருபாய் வரை இருக்கின்றது.

மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தவிர்த்த நிகர விலைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். நிறுவனர்கள் நமக்கு இந்த சூரிய மின்சார அடுக்குகளை நிறுவிய பின் அவர்கள் நேரடியாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அந்த மானியத்தை பெற்றுக் கொள்வார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அனுமதிகள்

அடுத்ததாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து நீங்கள் அமைக்கப்போகும் சூரிய மின் அமைப்பினை அவர்களது மின் இணைப்போடு இணைப்பதற்கும், நெட் மீட்டர் இணைப்பு பெறுவதற்காகவும் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

முதலாவதாக, உங்கள் பகுதியில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டியிருக்கும். பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டியிருக்கும். உயரழுத்த மின் இணைப்பு வேண்டுவதாக இருந்தால் உங்கள் பகுதி TANGEDCO மேற்பார்வை பொறியாளரிடம் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.

இரண்டாவதாக, TANGEDCO உங்களது சூரிய மேற்கூரை மின் அமைப்பினை அதன் விநியோக வலைப்பின்னலில் (Distribution Network) இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்வது; இதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது நீங்கள் பொருத்தப் போகும் மேற்கூரை சூரிய மின் அமைப்பின் மின்சக்தி திறனின் அளவு, உங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின்மாற்றியின் சக்தியில், 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

அதுமட்டுமன்றி, நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கியிருக்கும் மின் இணைப்பிற்கான அனுமதிக்கப்பட்ட மின்சக்தியை விடவும் அதிகமாகவும் இருக்கக் கூடாது. அப்படி ஒருவேளை அதிகமாக இருக்க நேர்ந்தால் முதலில் உங்களுக்கான மின்சக்தி அளவினை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பின்னரே சூரிய மின் அமைப்பின் இணைப்பிற்கும், நெட் மீட்டர் இணைப்பிற்குமான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

TANGEDCO உங்களது சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை தனது விநியோக வலைப்பின்னலில் இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடு இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கடிதம் தரும். நீங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் இந்த கடிதம் அனுப்பப்படும்.

மூன்றாவதாக, சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை நிறுவுவதும், அது தயார் நிலையில் உள்ளது என TANGEDCO விற்கு அறிவிப்பதும்; இப்போது நீங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நீங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கி நிறுவிக் கொள்ளலாம்.

உங்களுக்கு தொழில்நுட்ப சாத்தியப்பாடு அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள் இதை நிறுவ வேண்டும். தேவைப்படுமேயானால், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இந்த நிறுவுதல் பணி முடிந்தவுடன், TANGEDCO செயற்பொறியாளரிடம், உங்களது சூரிய மின் அமைப்பு தயார் நிலையில் உள்ளது என்ற கடிதத்தினை கொடுக்க வேண்டும்.

நான்காவதாக, பாதுகாப்பு ஆய்வு; நீங்கள் தயார்நிலை கடிதத்தை கொடுத்த பத்து நாட்களுக்குள் உங்களது சூரிய மின் அமைப்பின் பாதுகாப்பினை சோதனையிடுவார்கள். 10 கிலோ வாட்டுக்கும் குறைந்த மின்சக்தி திறனானால் TANGEDCO இந்த ஆய்வினை மேற்கொள்ளும்.

10 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சக்தி திறனாக இருந்தால் உங்கள் பகுதியின் மின் ஆய்வாளர் இந்த பணியினை மேற்கொள்வார். ஆய்வு முடிந்த தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

ஐந்தாவதாக, மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதும், சூரிய மின் அமைப்பினை செயல்படுத்துவதும்; TANGEDCO உங்களது தற்போதைய மின் இணைப்பின் மீட்டரை மாற்றியமைத்து ஒரு இருபுறமும் செல்லும் (Bi-directional, அதாவது மின் நிறுவனத்திடமிருந்து உங்கள் வீட்டிற்கும், மற்றும் உங்கள் சூரிய மின் அமைப்பிலிருந்து மின் நிறுவனத்திற்கும்), மின்சாரத்தை அளக்கும் மீட்டரை பொருத்துவார்கள்.

இந்த மீட்டர் மாற்றுவதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது நாமே கூட இந்த மீட்டரை வாங்கிக்கொடுத்து பொருத்தித் தரச் சொல்லலாம். இதற்காக TANGEDCO அனுமதிக்கப்பட்ட மீட்டர் வகைகளையும் அவர்களது இணையதளத்தில் பட்டியலிட்டு இருப்பார்கள்.

பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரு மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் அமைப்பில் இருக்க வேண்டும். சூரிய மின்சாரத்தினை நமது மின் இணைப்போடு இணைக்கும் கருவியான சோலார் இன்வெர்டரில், ஆன்டி-ஐலான்டிங் (Anti-islanding) பாதுகாப்பு இருக்க வேண்டும்.

நமது வீட்டுக்கு வரும் மின் இணைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் கம்பிகளில் வேலை செய்யும் மின் பணியாளர்களை, நமது சூரிய மின் அமைப்பிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு.

இதில் அறிந்து கொள்ள வேண்டியது, மின் நிறுவனத்தால் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் போது சூரிய மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்பதுதான். இது தவிர, மற்ற மின் உபகரணங்கள் போல இதற்கும் தரை இணைப்பு (earthing) கொடுக்கப்பட வேண்டும்.

சூரிய மின் அமைப்பிலிருந்து வரும் ஒரு திசை மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்றும் சோலர் இன்வெர்டரின் (solar inverter) இரண்டு புறங்களிலும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் (surge protection devices), அவை கட்டாயமாகவில்லையென்றாலும், இணைக்கப்படலாம். நமது வீட்டு மின் இணைப்பின் முக்கிய விசை (main switch) அருகிலும், மீட்டர் அருகிலும் 10 செமீ க்கு 7 செமீ அளவில் Solar PV System என்ற அறிவிப்பு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.

என்ன பலன் கிடைக்கும்

ஒவ்வொரு கிலோவாட் மின் திறனுள்ள சூரிய ஒளி மீன் அமைப்பும் வருடத்திற்கு 1500 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். மின் உற்பத்தியானது சூரிய சக்தியின் அளவினையும், அந்த சூரிய மின் அமைப்பு பேனல்கள் நிறுவப்பட்டிருக்கும் கோணத்தையும், காலச் சூழ்நிலையையும், மின் நிறுவனத்தின் மின் இணைப்பு தொடர்ந்து கிடைப்பதைப் பொறுத்தும், சூரிய மின் அமைப்பு பேனல்களின் சுத்தத்தை பொருத்தும் மாறுபட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏறக்குறைய 6 இலிருந்து 8 யூனிட்டுகள் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வீடுகளுக்கு தற்போதைய கட்டணக் காலம் இருமாதங்களாய் இருப்பதால், நெட் மீட்டரில் பதிவான TANGEDCO விலிருந்து நாம் எடுத்துக் கொண்ட மின்சாரமும், TANGEDCO விற்கு நாம் செலுத்திய மின்சாரமும் தனித்தனியாக கணக்கிடப்படும்.  நாம் எடுத்துக் கொண்ட மின்சாரத்திற்கு ஏற்கெனவே உள்ள மின்கட்டண அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். நமது சூரியமின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு நாம் உபயோகித்தது போக TANGEDCO விற்கு செலுத்தப்பட்ட மின் அளவிற்கு தமிழ்நாடு மின்சார ஆணையம் நிர்ணயித்த விலைப்படி கணக்கிடப்பட்டு பில்லில் சரி செய்யப்படும்.

தற்போது அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட விலையானது யூனிட்டிற்கு ரூபாய் 2.28 ஆக இருக்கிறது.  அப்படி சரிசெய்யப்பட்டதற்கும் அதிமாக நாம் செலுத்திய மின்சார அளவு இருந்தால், அந்த வித்தியாசம் அடுத்த மின் கட்டண கால நுகர்வோடு சரி செய்ய எடுத்துச் செல்லப்படும். இப்படியாக 12 மாதங்களுக்கு (ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்த மார்ச் மாதம் வரை) சரி செய்வதற்காக, அதிகம் செலுத்திய மின் அளவு எடுத்துச் செல்லப்படும். ஆனால் நாம் இந்த 12 மாத காலத்தில் நுகர்வு செய்த மின்சாரத்தின் அளவில் 90 சதவீதம் வரை மட்டுமே சரிசெய்யப்படும்.

இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டில், 1 கிலோ வாட் திறனுள்ள சூரிய மின் அமைப்பு நிறுவுவதாகக் கொள்வோம். அது தினமும் 5 யூனிட்டுகள் உற்பத்தி செய்வதாகக் கொண்டால், இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் மின்சாரத்தினை உற்பத்தி செய்திருக்கும்.

இந்த 300 யூனிட்டுகளுக்கு மின்நிறுவனம் விதிக்கும் ரூ.4.60 கட்டணத்திலிருந்து சேமிப்பை பெற முடியும். இதன் ஒரு ஆண்டு பலன் ரூ.8,260/- எனக் கொண்டால், 7 வருடங்களில் சூரிய மின் அமைப்பு நிறுவிய செலவினத்தை மீட்டுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வில் பங்களிக்கிறோம் என்ற மன திருப்தியைப் பெறலாம்.

- இரா.ஆறுமுகம்

Pin It