அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
பதப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகள், இறந்த உயிரினங்களின் உள்ளீடற்ற உடல் எச்சங்கள் போன்றவற்றால் நிறைந்த வழக்கமான அருங்காட்சியகங்கள் அமைதியுடன்தான் காணப்படும். ஆனால் இங்கு கதையே வேறு. பயப்படவேண்டாம்! செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றத்தால் இறந்த உயிரினங்கள் இங்கு புது வாழ்வு பெற்றுள்ளன.
அழிந்த உயிரினங்கள் பேசினால்?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அழிந்த உயிரினங்கள் புவி வாழ்வை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றன. அவை இறப்பிற்கு பிந்தைய வாழ்வின் அனுபவங்களை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. யு கே கேம்ம்ரிட்ஜ் பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் மொபைல் போன் மூலம் குரல் மற்றும் எழுத்து வடிவில் தங்கள் கதைகளை சொல்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால அமெரிக்க கரப்பான் பூச்சி, வேட்டையாடியே மனிதன் அழித்த டோடோ (Dodo) பறவை, பதப்படுத்தப்பட்ட சிவப்பு பாண்டா, ஒரு துடுப்பு திமிங்கலத்தின் எலும்புக்கூடு போன்றவை உயிர் பெற்றுள்ளன. தனிநபர் ஆளுமை மற்றும் இயல்பான உச்சரிப்புடன் கூடிய பேசும் பாணியில் அமைந்துள்ள இந்த உயிரினங்கள் மற்றும் அவற்றின் மாதிரிகள் எழுத்து மற்றும் உரையாடல் வடிவில் வருகையாளர்களின் மொபைல் போன் மூலம் பேசும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் பூமியில் வாழ்ந்த காலம், அப்போது அவை எதிர்கொண்ட சவால்கள், மக்களுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது இன்று நிலவும் அக்கறையின்மையை அகற்ற வலியுறுத்த வருகையாளர்களிடம் இங்குள்ள மாதிரிகள் கலந்துரையாடுகின்றன. “அருங்காட்சியகங்கள் இன்று பல வழிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
ஆனால் பொருட்களின் நிலையில் இருந்துகொண்டு காட்சிப்படுத்துபவர்கள் மூலம் அழிந்து போன விலங்குகள் தம் கருத்துக்களை வருகையாளர்களுடன் பேசவைப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்.
இவ்வகையான முதல் முயற்சி இது. உலகில் இன்று உயிருடன் இல்லாத விலங்குகளை அவற்றின் சொந்தக் குரலில் பேசவைத்தால் அவை குறித்து மக்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணங்களை மாற்றி அவை பற்றி வித்தியாசமாக சிந்திப்பார்களா?
ஒரு கரப்பான் பூச்சிக்கு குரல் கொடுத்து பேசச் சொன்னால் பொதுமக்களின் கருத்து மாறுமா? இதை பரிசோதிப்பதே இந்த சோதனை முயற்சியின் நோக்கம்” என்று அருங்காட்சியகத்தின் துணை இயக்குனர் ஜாக் ஆஷ்பி (Jack Ashby) கூறுகிறார். மக்களுக்கும் இயற்கை உலகிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை வலுப்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்கும் நேச்சர் பெர்ஸ்பெக்டிவ்ஸ் (Nature Perspectives) என்ற நிறுவனம் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது.
கேள்வி கேட்பது எப்படி?
காட்சிக்கூடத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு மாதிரியும் அந்த குறிப்பிட்ட உயிரினம் பற்றி இதுவரை கிடைத்துள்ள அணைத்து தரவுகளுடன் அது எங்கு வாழ்ந்தது, அதன் இயற்கைச் சூழல், அது எவ்வாறு காட்சிக்கூட சேகரத்திற்கு வந்துசேர்ந்தது போன்றவை அடங்கிய எல்லா விவரங்களையும் அழிந்து போன அந்த உயிரினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பம் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. பேசுபவர்களின் வயதுக்கேற்ப காட்சிப் பொருட்கள் தங்கள் குரல் மற்றும் பேசும் பாணியை மாற்றிக் கொள்கின்றன.
இந்த காட்சிப்பொருட்கள் ஸ்பானிய மொழி, ஜப்பானிய மொழி உட்பட இருபது உலக மொழிகளில் பேசும் திறன் பெற்றவை. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு நீராளி ஆஸ்திரேலியாவில் மக்கள் பேசும் பாணியில் பேசுகிறது. சிவப்பு பாண்டா இமயமலை பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் பாணியில் உரையாடுகிறது. சிவப்பு தலை, கழுத்தைச் சுற்றி வளையத்துடன் நடுத்தர அல்லது பெரிய வடிவத்துடன் காணப்படும் மலார்டு (mallard) என்ற வாத்து பிரிட்டிஷ் மக்கள் பேசுவது போல பேசுகிறது.
இந்த உரையாடல்கள் உயிரோட்டத்துடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இவை பார்ப்பவர்களுக்கு வெறும் காட்சிப்பொருட்களாக தோன்றாது. வருகையாளர்கள் அவை பற்றி மேலும் ஆழமாக கற்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. விலங்கு மாதிரிகளுடன் பார்வையாளர்கள் நடத்தும் உரையாடல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் அவை பற்றி மக்கள் குறிப்பாக எதிர்பார்க்கும் விவரங்கள் சேர்க்கப்படும் என்று ஆஷ்பி கூறுகிறார்.
மாதிரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு துடுப்பு திமிங்கலத்திடம் “கரைக்கு அப்பால் உள்ள கடல்வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?” போன்ற வினாக்களை கேட்பதற்கு உதவும் வகையில் ஆலோசனை கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகையாளர்கள் காட்சிப் பொருட்களிடம் அவர்கள் விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்.
“இந்த விலங்குகளிடம் பேசும்போது நாம் ஒரு தனி நபர் ஆளுமையுடன் பேசுவது போன்ற வித்தியாசமான உணர்வும் அனுபவமும் ஏற்படும். “நீ எங்கு வாழ்ந்தாய்? எவ்வாறு அழிந்தாய்?” போன்ற கேள்விகளைக் கேட்கத் தொடங்கி ஆனால் கடைசியில் ஒரு மனிதனைப் போல வினாக்களை காட்சிப்பொருட்களிடம் கேட்க ஆரம்பித்தேன்” என்று ஆஷ்பி கூறுகிறார்.
டோடோவும் திமிங்கலமும் சொன்னது என்ன?
உலகில் உள்ள அழிந்த டோடோ பறவையின் ஒரு சில புதைபடிமங்களில் ஒன்று இந்த காட்சிக்கூடத்தில் உள்ளது. அதனிடம் “வழக்கமாக நீ என்ன சாப்பிடுவாய்?” என்று கேட்டபோது அது மொரீஷியஸில் கிடைக்கும் பழங்கள், வித்துகள் மற்றும் எப்போதேனும் சாப்பிடும் முதுகெலும்பற்ற இரைகள் பற்றி கூறியது.
டாம்பலாக்கோக் (tambalacoque) மரத்தின் கொட்டைகளை உடைக்கும் அளவிற்கு வலிமையுள்ள தன் கூர்மையான, வளைந்த அலகு பற்றி விவரித்தது. பார்வையாளர்களுக்கு க்ளோனிங் முறையில் அழிந்த உயிரினங்களை மனிதர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமா என்பது பற்றி கருத்து கூற உதவும் வகையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“டோடோ பறவையை மீட்க வேண்டுமென்றால் அதற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள், நம் டி என் ஏ ஆகியவை மட்டும் போதாது. இந்த உயிரினம் மொரீஷியஸில் வாழ்ந்த காலத்தில் நிலவிய சுற்றுப்புறச் சூழலும் அவசியம்” என்று தொழில்நுட்பம் பதில் கூறியது. மரபணு குறியீடுகளுக்கு அப்பால் எந்த ஒரு உயிரினத்தின் வாழ்வும் அதன் சிக்கலான இயற்கைச் சூழலுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற உறுதியான உண்மையையே இது வலியுறுத்துகிறது.
காட்சிக்கூடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள திமிங்கலத்தின் எலும்புக்கூட்டிடம், “வாழ்ந்த காலத்தில் நீ சந்தித்த மிகப் புகழ்பெற்ற மனிதர் யார்?” என்று கேட்டபோது “மனிதர்கள் பார்ப்பதைப் போல அப்போது நான் எவரையும் பார்க்கவில்லை. என்றாலும்” நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசிய அது “இங்கே எனக்கு கீழ் நிற்கும் எவர் ஒருவர் இயற்கையுலகின் மீது மதிப்பு மரியாதை அன்பை காட்டுகிறாரோ அவர் எனக்கு மிக நெருக்கமானவர்” என்று பதில் கூறியது!
அழிந்த உயிரினங்களை மீட்கும் பெருமுயற்சியில் வின்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில் இது போன்ற அருங்காட்சியகங்கள் உயிரினங்களை காக்க மனிதர்களுக்கு தேவையான உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
சீரற்ற zigzag பாணியில் அமைந்த சுவர்கள் வெப்பமான கட்டிடங்களை குளிரச் செய்கிறது. இவ்வகை கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் zigzag சுவர்கள் கொண்ட அமைப்பு கொண்டவை. இவற்றின் மீது விழும் வெப்பம் உறிஞ்சப்பட்டு உமிழப்படுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலகளாவிய ஆற்றல் நுகர்வில் கட்டிடங்களின் பங்கு சுமார் 40%. இது உலக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானது. இந்த உமிழ்வில் குளிர் சாதன வசதிக்காக செலவிடப்படும் ஆற்றல் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் 2050ல் ஆற்றல் நுகர்வு இரு மடங்காகும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். தொடர்ந்தும் பூமி சூடாகிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டிடங்களை குளிரச் செய்வதற்கான தேவை அதிகரிக்கிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் இச்சவாலை சமாளிக்க ஆற்றல் நுகர்வற்ற மறைமுக குளிர்விக்கும் வழிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் கைலாங் செங் (Qilong Cheng) அவர்களின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் கட்டிடங்களில் இருந்து சூரிய ஒளியை திசை திருப்பி விட்டு ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க உதவும் வடிவில் அமைந்த கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர்.
இம்முறையில் Zigzag பாணியில் அமைந்த சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு கட்டிடத்தின் தரைப்பரப்பு வெப்பநிலையை (surface temperature) மூன்று டிகிரி செல்சியர்ஸ் அளவுக்குக் குறைக்கலாம்.
சமதளப் பரப்பாக அமைந்திருக்கும் சுவர்களுடன் ஒப்பிடும்போது இம்முறையில் ஆற்றல் நுகர்வு மிகக் குறைந்த அளவு.
“இது போன்ற வடிவமைப்புடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் குளிர்விக்க செலவாகும் ஆற்றலைக் குறைக்க முடியும்” என்று செங் கூறுகிறார். இவ்வகை கட்டிடத்தை பக்கவாட்டில் பார்க்கும்போது நீட்சியுடன் கூடிய சுவர்கள் zigzag வடிவமைப்புடன் உள்ளன. இந்த கட்டமைப்பு வெப்ப பரிமாற்ற முறையில் கட்டிடத்தைக் குளிர்விக்கிறது. வெப்ப பரிமாற்றத்தின் மூலம் நிகழும் குளிர்வித்தல் (radiative cooling) என்று இது அழைக்கப்படுகிறது.
இம்முறையில் சூரிய ஒளி பிரதிபலிக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலம் வழியாக நீண்ட அலை அகச்சிவப்பு கதிரியக்கம் வெளியிடப்படுகிறது. இது விண்வெளியின் வெளிப்புற அடுக்கில் உமிழப்படுகிறது. வெப்ப பரிமாற்ற குளிர்வித்தல் முறை கடந்த பத்தாண்டில் மிகச் சிறந்த ஆற்றல் மேலாண்மையுடன் கூடிய குளிரூட்டும் முறையாக பிரபலமடைந்துள்ளது.
சூரிய ஒளியைப் பிரதிபலிக்க பின்பற்றப்படும் வெள்ளை நிற வண்ணப்பூச்சுகளை பூசுவது போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள் பக்கவாட்டில் அமைந்த கட்டிடங்களில் மட்டுமே பயன் தருகிறது. செங்குத்து சுவர்கள் உள்ள கட்டிடங்களில் இது அதிக பயனைத் தருவதில்லை. செங்குத்தாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் நில வெப்பத்தையும் உறிஞ்சுகின்றன.
Zigzag சுவர்களுடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் வெப்பத்தை உமிழும் பரப்புகளை உருவாக்குகின்றன. இந்த வெப்பம் வாயு மண்டல வெளிப்படைத் தன்மை சாளரத்தின் (Atmospheric transparency window) மூலம் உமிழப்படுகிறது. இதனால் சூரியனிடம் இருந்து வரும் அகச்சிவப்பு வெப்பம் உறிஞ்சுவதற்குப் பதில் பிரதிபலிக்கப்படுகிறது. வெப்பமான காலநிலையுள்ள இடங்களில் இந்த கண்டுபிடிப்பு நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
ஆனால் இந்த முறை குளிர்காலத்தில் குளிர் மிகுந்த இடங்களில் வெப்பத்தின் தேவையை அதிகரிக்கும். இதை சமாளிக்க கீல் துடுப்புகள் (hinged fins) வசதியுடன் உள்ள கட்டிடங்கள் உதவும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். இதனால் குளிர்காலத்தில் சூரியனிடம் இருந்து வரும் வெப்பம் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு கட்டிடத்திற்குள் அனுப்பப்படும்.
கோடையில் வெப்பம் குறைவாக உறிஞ்சப்படும். இந்த கண்டுபிடிப்பு காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைப் பெருமளவில் குறைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஜப்பானின் மாஜிக் புல்லட். கடந்த அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஒரு தொழில்நுட்ப அதிசயம். 1964ல் ஒரு நாள். ஷிங்கன்சன் புல்லட் இரயில் சேவையின் தொடக்கம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பம். உலகில் ஒரு புதிய பொருளாதார சக்தியின்... ஜனநாயகத்தின் உயிர்த்தெழுதலை பறைசாற்றியது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
அக்டோபர் 1, 1964. காலை மணி ஆறு. இரண்டு இரயில்கள் எதிரெதிர் திசைகளில் உலகின் ஒரு துணிச்சலான கன்னிப் பயனத்தைத் தொடங்க தயாராக இருந்தன. இந்த புதிய போக்குவரத்து சேவையின் ஆரம்பம் இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்திருந்த ஜப்பான், இராணுவ சக்தி படைத்த ஒரு நாடு என்ற நிலையில் இருந்து அந்நாட்டை உலகளாவிய பொருளாதார வலிமை என்ற நிலைக்கு உயர்த்தியது. முன்னேற்றம் அதன் அடையாளமாக மாறியது.
அந்த கன்னிப் பயணத்தில் அழகான ஆடைகளை அணிந்திருந்த ஜப்பானிய ஆண், பெண், குழந்தைகள் அந்த இரயிலின் ஜன்னல் வழியாக சுழலும் ஓசையுடன் கிராமத்துக் காற்று உள்ளே வருவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இரயில் போக்குவரத்தில் அது வரை வரலாறு காணாத வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த இரயிலின் ஓட்டத்தினால் துடித்த தங்கள் மனதையும், நடுங்கிய நரம்புகளையும் அமைதிப்படுத்த பயணிகளில் சிலர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
பயணம் முடிந்து இரண்டு இரயில்களும் அவை சென்று சேர வேண்டிய டோக்கியோ மற்றும் ஒசாகா இரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததைப் பார்க்க மக்கள் கூடினர். அன்றும் இன்று போலவே இரயில்கள் துல்லியமான நேரத்தில் காலை பத்து மணிக்கு 320 மைல் பயணத்தை முடித்துக் கொண்டு உரிய இடங்களுக்கு வந்து சேர்ந்து பயணிகளை இறக்கி விட்டன. முன்பு இப்பயணத்திற்கு ஏழு மணி நேரமானது. ஆனால் புல்லட் இரயில்கள் இதே தூரத்தை நான்கே மணி நேரத்தில் கடந்தன.
இன்று இது நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவை என்னும் மகுடத்தில் ஒளிரும் அணிகலன்.
ஆனால் அன்று போரினால் அழிந்த, நாட்டின் மீட்கப்பட்ட செழுமைக்கு உதவும் விமான, சாலைப் போக்குவரத்து வளர்ச்சிக்கு இடையில் இந்த சேவை ஒரு அராஜகமான செலவு என்று கடும் விமரிசனங்கள் எழுந்தன. ஜப்பானுக்கு உள்ளே ஷிங்கன்சன் என்றும், வெளியில் புல்லட் இரயில் என்றும் அழைக்கப்படும் இந்த சேவை இப்போது நாட்டின் ஒரு வழக்குச் சொல்லாக மாறி விட்டது.
நாட்டின் முதன்மையான நான்கு தீவுகளை இணைக்கும் இந்த சேவை 1,800 மைல் நீண்ட வலையமைப்பை உடையது. மணிக்கு 200 மைல் வேகத்தில் ஓடுகிறது. 1965ல் 18வது வயதில் டோக்கியோவில் இருந்து கயோட்டோவிற்கு தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் சென்ற, முதல் புல்லட் இரயில் பயணத்தை “அது மிக மென்மையான ஒரு பயணம். இரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகளை வைத்தே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது” என்று நீண்ட கால ஜப்பான்வாசி மார்க் ஷ்ரய்பர் (Mark Schreiber) மகிழ்வுடன் நினைவுகூர்கிறார்.
இந்த இரயில் சேவையின் 25வது ஆண்டு நிறைவின்போது மார்க் இதன் வரலாற்றை ஒரு ஜப்பானிய இதழில் “ஜப்பான் அதன் இரயில்களை எப்போதும் நேசிக்கும் ஒரு நாடு. இது பற்றிய பெருமிதமும் உற்சாகமும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றக் கூடியது” என்று எழுதினார்.
ஒரு அதி வேக இரயில் சேவையை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பதற்கு ஜப்பானின் புல்லட் இரயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. டக்கேடோ சேவை (Tokaido line) என்று அழைக்கப்படும் டோக்கியோ-நகோயா-ஒசாகா (Tokyo-Nagoya-Osaka) சேவை மூலம் மட்டும் 6.4 பில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய ஜப்பான் இரயில்வே கூறுகிறது. இது வரை இந்த சேவையில் விபத்தால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
இதன் சராசரி காலதாமதம் என்பது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இந்த புல்லட் இரயில் திட்டம் முடிக்கப்பட்டது.
“புல்லட் சேவையின் தொடக்கம் மற்றும் 1964 ஒலிம்பிக் போட்டி - ஜப்பான் மீண்டெழுந்து உலகின் முன்னணி நாடாக மாறுகிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது” என்று கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழக ஜப்பானிய பிரிவின் இருக்கை இல்லாத பேராசிரியரும், ஷிங்கன்சன் புல்லட் இரயில் முதல் நவீன ஜப்பான் (Shinkansen: From Bullet Train to Symbol of Modern Japan.) என்ற நூலின் ஆசிரியருமான கிறிஸ்டோபர் ஹுட் (Christopher Hood) கூறுகிறார்.
குவிந்த பாராட்டுகளுடன் புல்லட் இரயில் நிர்வாகம் அதன் செயல்களை நிறுத்தி விடவில்லை. டோக்கியோ-ஒசாகா பயண நேரம் மணிக்கு 178 மைல் வேகத்துடன் 2 மணி 22 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. 1964ல் சராசரி 60,000 பேர் பயணம் செய்த இத்திட்டத்தில் 2013ல் 4,24,000 பேர் பயணம் செய்தனர். சூழல் கவலைகள், மலிவான விமானப் பயண வசதிகளின் வருகையால் இதன் அடுத்த தலைமுறை இரயில் திட்டங்கள் தாமதமாகியுள்ளன.
புதிய திட்டங்கள்
சூவோ ஷிங்கன்சன் (Chuo Shinkansen) என்று அழைக்கப்படும் புதிய சேவை 2027ல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. டோக்கியோவை நகோயா என்ற மத்திய நகரத்துடன் இணைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது உள்ள ஒரு மணி 34 நிமிட நேரப் பயணம் 40 நிமிடமாகக் குறையும். இந்த தடத்தில் ஓடும் இரயில்களின் வேகம் அதிகபட்சம் மணிக்கு 300 மைல்கள்.
முன் மொழியப்பட்டுள்ள பாதையில் உள்ள மென்மையாண நில அமைப்பு மற்றும் மண்ணின் தன்மை காரணமாக வழியில் கட்டப்படும் ஒரு குகையின் கட்டுமானப் பணிகளால் இத்திட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தாமதமாகும். அதனால் இதன் வணிகப் பயன்பாடு 2034ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சம், நம்பகத் தன்மை, முக்கிய நகரங்களை இணைக்கும் வசதி போன்றவையே புல்லட் இரயில்களின் வெற்றிக்குக் காரணம்.
புல்லட் இரயில்களை ஜப்பான் இயக்காமல் இருந்திருந்தால் இது போன்ற சேவைகள் உலகில் வேறெங்கும் தொடங்கப்பட்டிருக்காது. “புல்லட் இரயில்கள் நகரங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தியுள்ளது. அந்த காலத்தில் பட்டுப் பாதை மற்றும் ரோமானியர்களின் சாலைக் கட்டுமானம், பொருளாதாரம், கலாச்சாரம், நாகரீகத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்தது. இதுபோல இப்போது இந்த புல்லட் இரயில்கள், செல்லும் வழியில் உள்ள நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது” என்று இந்த சேவைகளை ஆண்டிற்கு பத்து முறை பயன்படுத்தும் போக்குவரத்து கொள்கை நிபுணரும் டோக்கியோ பல்கலைக்கழக தேசிய பட்டப் படிப்பு கழகத்தின்இமெரெட்டிஸ் (emeritus) பேராசிரியருமான ஷைஜ்ரு மொரிச்சி (Shigeru Morichi) கூறுகிறார்.
இமெரெட்டிஸ் பேராசிரியர் பதவி என்பது ஓய்வு பெற்ற பின் அந்த கல்வி நிறுவனத்திற்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதை பட்டம். “இந்த இரயில்கள் ஜப்பானை நேசிக்கும் மக்களின் சுருக்கமான வடிவம். செய்யும் பணியில் பெருமை கொள்வது, மற்றவர்களுக்கு சேவை செய்வது, திறமையைச் சார்ந்திருப்பது போன்ற பண்புகளின் வெளிப்பாடு” என்று இருபது ஆண்டுகளாக இபுல்லட் இரயில்களில் ஆங்கில மொழி அறிவிப்புகளை வெளியிடும் டோன பர்க் (Donna Burke) கூறுகிறார்.
உழைப்பிற்கும் உயர் தொழில்நுட்பத் திறனுக்கும் உலகிற்கே முன் மாதிரியாக உள்ள ஜப்பான் என்ற நாட்டின் சாதனைகளின் கிரீடத்தில் இந்த புல்லட் இரயில் ஒரு பொன்னிறகு!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
மனித செயல்திறனை அதிகரிக்க விரைவில் இயந்திர உறுப்புகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெருவிரல் முதல் இயந்திரக் கை வரை இத்தகைய உறுப்புகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு கைக்குழந்தையைக் கவனிக்கும் நேரத்தில் அல்லது ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அல்லது வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை விருந்து தயாராகும் வேளையில் அல்லது இதுபோன்ற பல சமயங்களில் கூடுதல் உறுப்புகள் மனிதர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
(Dani Clode’s 3D-printed thumb. Photograph: Tom Stewart)
திறனை அதிகரிக்க உதவும் உறுப்புகள்
இந்தக் கண்டுபிடிப்பு பல துறைகளில் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்று கேம்பிரிட்ஜ் எம் ஆர் சி மூளை நரம்பியல் பிரிவின் பேராசிரியர் டாமர் மாக்கின் (Prof Tamar Makin) கூறுகிறார். சமைத்துக் கொண்டிருக்கும்போது செயற்கைக் கையின் உதவியுடன் ஒருவர் ஒரு பக்கம் காய்களை நறுக்கியபடியே மற்றொரு பக்கம் சூப் தயாரிக்கலாம். விரும்பும் நேரத்தில் செயற்கைக் கையைப் பொருத்தி அதைத் தனியாக இயக்க முடியும்.
எவருடைய கையிலும் பொருத்திப் பயன்படுத்தக் கூடிய முப்பரிமாண வடிவமைப்புடன் கூடிய செயற்கைப் பெருவிரலை (3D thump) இதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு நரம்பியல் பேராசிரியர் டானி குளோட் (Prof Dani Clode) கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய கருவி பற்றி சமீபத்தில் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க மேம்பாடடைந்த அறிவியல் சங்கத்தின் (American Association of Advanced Sciences AAAS) வருடாந்திரக் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது.
உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் சாப்பாட்டுத் தட்டுகளைக் கையாள, மின் வேலை செய்பவர் வேலையின்போது மின்கம்பிகளைப் பற்ற வைக்க செயற்கைப் பெருவிரல் உதவும். மரவேலை செய்பவர் சுத்தியலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு பக்கம் ஆணி அடிக்க செயற்கைக் கை உதவும்.
வேலை பார்க்கும் இடங்களில் தேவைப்படும் தொழிலிற்கு ஏற்றமாதிரி இது போன்ற இயந்திர உறுப்புகளை உருவாக்க முடியும்.
ஒரு நிபுணர் நோயாளிக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யும்போது அதற்கு உதவும் கேமராவை செயற்கைக் கையின் உதவியுடன் அவரே பிடித்துக் கொண்டு சிகிச்சையை வெற்றிகரமாக செய்யலாம். உதவியாளர் கேமராவை பிடித்துக் கொண்டிருப்பதை விட மருத்துவரே அதைக் கையாள்வதால் கூடுதல் துல்லியத் தன்மையுடன் சிகிச்சை செய்ய முடியும். தன் இரு கைகளாலும் அவர் மற்ற கருவிகளைப் பயன்படுத்தும்போது இந்த கூடுதல் கை கேமராவை சுதந்திரமாக இயக்க அவருக்கு உதவியாக அமையும்.
தனிக்கருவி ஒன்றை விட இது போன்ற செயற்கை உறுப்புகள் அதைக் கையாள்பவருக்கு அதன் மீது முழுக்கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. உடலின் இயற்கையான இயக்கங்களுடன் செயற்கை உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் இவற்றைக் கையாள்பவரின் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. இயக்குபவரின் முழு விருப்பப்படி செயற்கை உறுப்பை கூடுதல் துல்லியத் தன்மையுடன் இயக்க முடியும். இதனால் செயல்திறன் மேம்படுகிறது. குறிப்பிட்ட தனிநபரின் செயல்திறனுக்கு ஏற்ப கூடுதல் உறுப்புகளைப் பொருத்திக் கொள்ள முடியும். இழக்கப்பட்ட கைக்கு பதில் ஒருவருக்கு செயற்கைக் கையைப் பொருத்த முடியும்.
பயன்படுத்துபவரின் இயல்பான திறன்களை இத்தகைய செயற்கை உறுப்புகள் பாதிப்பதில்லை என்பது இவற்றின் தனிச்சிறப்பு என்று டானி கூறுகிறார். இந்த உறுப்புகள் நமது உடலில் ஒரு மேலடுக்கு போலவே இருந்து செயல்படுகின்றன. இதனால் இவை உடலின் இயல்பான உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 98% பேர் பொருத்தப்பட்ட முதல் நிமிடத்திற்குள் செயற்கைப் பெருவிரலை பயன்படுத்தினர்.
பலருடைய மேற்கையில் செயற்கைப் பெருவிரல் இணைக்கப்பட்டு காலுறைகள் அல்லது கணுக்கால் முட்டிகளில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நுண் கட்டுப்பாட்டுக் கருவிகள் (micro processors) பொருத்தப்பட்டு மின்கலன் மூலம் இயங்கும் சவால் நிறைந்த இரண்டு மோட்டார்களை இயக்குமாறு கோரப்பட்டது. இவர்கள் பாதத்தில் அழுத்த உணரிகள் இணைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதில் பெரும்பாலோனோரும் மோட்டார்களை சுலபமாக இயக்கியது கண்டறியப்பட்டது.
மூளை அல்லது முதுகுத் தண்டில் மின் தண்டுகளைப் பொருத்தி செயற்கை உறுப்புகளை உடலில் இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துவது பற்றி சில ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆரோக்கியமான மனித உடலில் இது போல மின்தண்டுகளைப் பொருத்துவது தார்மீகரீதியாக கேள்விகளை எழுப்பும் என்று மாக்கின் கூறுகிறார். இலண்டன் ராயல் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் நடந்த கோடை அறிவியல் கண்காட்சியில் இயந்திரப் பெருவிரல் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அதை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.
3 முதல் 97 வயது வரையிலான 600 பேரில் 98% பேர் விரலை முதல் நிமிடத்திற்குள்ளேயே இயக்கினர். மனித மூளையில் பொருத்தப்படும் ஒரு சில்லியால் (chip) கூட இதைச் செய்ய முடியாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விரைவில் மனித வாழ்வில் இந்த செயற்கை உறுப்புகள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- செயற்கை நுண்ணறிவு தேடும் அணுஉலை மின்சாரம்
- இயற்கையை அறிய உதவும் செயலிகள்
- ஆய்வக மீன் இறைச்சி
- அண்டார்டிகாவை ஆராயும் ஆளில்லா விமானங்கள்
- குளிரூட்டும் ஆடைகள்
- வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
- மரணத்திற்குப் பிறகும் சூழல் பாதுகாப்பு
- சீன சிப் தொழிற்துறையின் வேகம்: அமெரிக்கா சமாளிக்குமா?
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
- பீங்கான் தொழில்நுட்பம்
- ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்
- சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.