விசிறியுடன் கூடிய ஆடைகள் (the fan jacket) என்ற ஜப்பானிய கண்டுபிடிப்பு வெயில் காலத்தில் மக்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில், பாரம்பரிய ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டு உடற்சூட்டை அதிகப்படுத்தும்போது, வெளியில் வேலை செய்பவர்கள் ஃபேன் ஜாக்கிட்டோ (Fan-jakketo) என்று அழைக்கப்படும் இந்த குளிரூட்டும் ஆடைகளை நாடுகின்றனர்.

இந்த ஆண்டு வெளிவந்துள்ள டெரிகூர் ஜாக்கெட் (De rigueur jacket) உடலின் பின் பகுதியில் இரண்டு மின்விசிறிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே ஜப்பானில் கோடையில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆடைகள், அணிந்து கொள்பவர்களின் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. கோடையின் கொடுமையில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

குளிர்ச்சியான காற்று ஆடைக்குள் வீசியபடி இந்த விசிறிகள் அணிபவருக்கென்று ஒரு நுண் சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் அணிபவர்கள் வெளிப்புறத்தில் கடுமையான வெப்பமும் மோசமான ஈரப்பதமும் நிலவும்போது உள்ளுக்குள் குளிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். சோனி நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளர் ஹிரோசி இக்கிகயா (Hiroshi Ichigaya) 1988ல் தென்கிழக்கு ஆசியா வழியாக பயணம் செய்தபோது மனதில் உருவான கருத்தின் அடிப்படையில் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற பின் இந்த ஆடைகளைக் கண்டுபிடித்து உருவாக்கத் தொடங்கினார்.fan jacketஒவ்வொரு பிரதேசத்திலும் நகரங்கள் துரிதமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் குளிர்சாதன வசதிகள் எல்லா புதிய கட்டிடங்களிலும் பொருத்தப்படுகின்றன. இது மிகப் பிரம்மாண்டமான ஆற்றல் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இதனால் புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதை அவர் உணர்ந்தார். இதற்குத் தீர்வாக ஆற்றல் திறனுள்ள குளிரூட்டும் ஆடைகளை உருவாக்கினார்.

இவற்றை 2004ல் அவர் புதிதாகத் தோற்றுவித்த குளிரூட்டப்பட்ட ஆடைகள் (air conditioning clothes) என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும் கூச்சஹூக்கூ (Kuchofuku) என்ற நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தத் தொடங்கினார். வியர்வை பெருக்கெடுத்து ஓடும் கோடையில், இதற்கு முன்பு வந்த இதே வசதியுடைய ஆடைகளில் பொருத்தப்பட்ட மின்கலங்கள் (battery) நீண்ட நேரத்திற்கு ஆற்றலை சேமித்து வைக்க முடியவில்லை. வேறு சில குறைபாடுகளும் அதில் இருந்தன.

மேம்படுத்தப்பட்ட ஆடைகள் மீண்டும் 2009ல் வெளிவந்தபோது பெரும்பாலோரின் வரவேற்பைப் பெற்றது. 2015ல் மக்கீட்டா (Makita) என்ற நிறுவனம் இதே போன்ற புதிய வசதிகளுடன் கூடிய குளிரூட்டும் ஆடைகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் கட்டிட வேலை செய்பவர்கள், விவசாயிகள், வெளிப்புற வெய்யிலில் வேறு பல வேலைகளைச் செய்பவர்களே.

இவர்களுக்கு இந்த ஆடைகள் பேருதவியாக அமைந்திருக்கின்றன என்று கருவிகளை உருவாக்குவதில் அனுபவம் மிக்க இந்நிறுவனத்தின் பொதுவிவகாரங்கள் பிரிவு மேலாளர் டெசூக் சேக்கி (Daisuke Seiki) கூறுகிறார். தனிப்பட்ட கருவிகளின் விற்பனை பற்றிய விவரங்களை இந்த நிறுவனம் வெளியிடுவதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அதிக வெப்பம் நிலவுவதால் இந்த வகை ஆடைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்று சேக்கி கூறுகிறார்.

குளிரூட்டும் ஆடைகள் பலவிதம்

சந்தையில் இந்த நிறுவனம் இப்போது பல மாடல் ஆடைகளை விற்பனை செய்கிறது. இவற்றில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுடைய சிறப்பு வடிவமைப்புடன் கூடிய 60 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மின் கலங்கள் பொருத்தப்பட்ட ஆடைகளும் அடங்கும்.

உயர் வடிவமைப்புடன் கூடிய (hivis jacket), ஃபேன் வெஸ்ட் (fan vest) ஆடைகள், தலையைச் சுற்றி காற்று வரும் வசதியுடையவை (hooded jacket), கால்சட்டையில் விசிறிகள் பொருத்தப்பட்ட முழு உடலையும் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், வேலைக்குச் செல்லாதபோது அணியும் நாகரீக ஆடைகள் போன்றவை இவற்றில் சில.

இந்நிறுவனம் ஆடையில் காற்றோட்ட வசதியை அதிகப்படுத்துவதற்காக துணியின் வடிவமைப்பில் lining) குளிரூட்டும் பைகளை (cold packs) பொருத்தி தைத்து வெளியிடுகிறது. பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த வகை ஆடைகள் போதுமான அளவிற்கு சந்தையில் கிடைக்கிறது என்று யாஹு ஜப்பான் நிறுவனம் கூறுகிறது. ரியான் பாக்கெட் (Reon pocket) என்பது மிக உயர்ந்த வெப்பத்தை முறியடிக்க ஜப்பான் கண்டுபிடித்துள்ள கையில் எடுத்துச் செல்லக்கூடிய குளிர்சாதன வசதியுடைய மற்றொரு தொழில்நுட்பம்.

அணிந்து கொண்டிருக்கும் ஆடைக்குள் கழுத்தைச் சுற்றி பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இந்த ஆடையின் முதல் மாதிரி 2019ல் வெளிவந்தது. ரியான் பாக்கெட்4 என்பது இதன் மிகப்புதிய மாதிரி. ஜப்பானில் இப்போது இவை மிக அதிக அளவில் விற்பனையாகின்றன.

இதில் சிறிய உணரியுடன் கூடிய குளிரூட்டும் வசதியை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் (cool mode) உள்ளது. இந்த உணரிகள் பொருத்திக் கொண்டுள்ளவர்களின் நடத்தல் போன்ற செயல்பாடுகளை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் குளிரூட்டும் நிலையை (cooling leval) தானியங்கி முறையில் மாற்றிக் கொள்கின்றன. இது அணிபவருக்கு மேம்பட்ட சௌகரியத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் மின் கலத்தின் ஆயுள் கூடுகிறது.

இந்த நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, வெயிலை சமாளிக்க ஜப்பானியர்களுக்கு கோடையில் பேய்க்கதைகள் சொல்லிக் கேட்கும் வழக்கம் இருந்து. இது வெப்பத்தில் இருந்து தப்ப உதவும். பேய்க் கதைகளைக் கேட்கும்போது பயம் தோன்றினால் இரத்தத்தை உடல் உள்ளுறுப்புகளுக்கு வேகமாக செலுத்தும்.

இந்த இரத்தம் அதிக அளவுக்கு தோலுக்கு அருகில் இருக்கும் இரத்தக்குழாய்களில் பாயும். இதனால் உடல் முழுவதும் வியர்வை பெருகும். இது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று ஆய்வாளரும் விரிவுரையாளரும் பல்வேறு பருவநிலைகளில் ஜப்பான் மக்களின் கலாசாரம் பற்றி எழுதும் நிபுணருமான யசூகோ மியுரா (Yasuko Miura) கூறுகிறார்.

ஆபன் (Obon) என்ற கோடைகால புத்த மதத் திருவிழாவின்போது இரத்தத்தை உறைய வைக்கும் பேய்க் கதைகள் சொல்லப்படுவது வழக்கம். அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப இத்திருவிழா ஜூலை அல்லது ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஜப்பான் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு வருவதாகக் கருதப்படும் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஈடோ வம்ச ஆட்சியில் தொடங்கிய பாரம்பரியம்

பல கதைகள் நிம்மதியில்லாமல் அலையும் ஆவிகளைப் பற்றியே கூறுகிறது. வரவேற்க, உபசரிக்க இந்த ஆவிகளுக்கு சொந்தபந்தங்களோ குடும்பமோ கிடையாது என்பதால் இத்திருவிழாவின்போது அவை வரவேற்கப்படுகின்றன, உபசரிக்கப்படுகின்றன. 1603-1867 காலகட்டத்தில் ஜப்பானை ஆண்ட ஈடோ (Edo) வம்ச ஆட்சியின்போது கோடையில் பேய்க் கதை சொல்லும் இந்த பாரம்பரிய விழா தொடங்கி இப்போதும் நடைபெறுகிறது.

இன்றும் பல இளம் வயதினர் இதன்படி இத்திருவிழாவை கடைபிடிக்கின்றனர். தங்கள் துணிச்சலை சுயமாக பரிசோதிப்பதற்காக சிலர் வெப்பம் மிகுந்த கோடைகால இரவில் கல்லறைகளுக்கு விஜயம் செய்கின்றனர்.

ஒரு பக்கம் கதை கேட்கும் விழா நடந்தாலும் உயர்ந்துவரும் வெப்பநிலையை சமாளிக்க நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவும் என்பதற்கு இந்த குளிரூட்டும் ஆடைகள் சிறந்த எடுத்துக்காட்டு.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It