பூமியின் வளங்களைப் புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், பூமியைப் பற்றிய விவரங்களின் சேகரிப்பு, பூமியின் நில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டது போன்றவை பூமியைப் பற்றி மேலும் அறிய நமக்கு உதவின. செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டதும், நவீனக் கணினிகளில் ஏற்பட்ட மென்பொருள் வளர்ச்சி இத்துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

19ம் நூற்றாண்டில் வரைபடங்கள் வரைய ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தகவல் சேகரிப்புத் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பலூன்கள், விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உயரமான இடங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 1960ல் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி தகவல் சேகரிப்பு தொடங்கியது. கேமராக்களுடன் சேர்த்து தகவல்களைத் திரட்ட பலவிதமான ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்படி ஒரு பொருள் அல்லது ஒரு பிரதேசத்தைக் குறித்த விவரங்கள் கருவிகளின் உதவியுடன் சேகரிக்கப்படத் தொடங்கின. இத்தகைய தொடர்பின் மூலம் விவரங்களைச் சேகரிக்கும் முறைக்கு உணரிகள், கேமராக்கள், ஸ்கேனர்கள், மின்காந்த கதிரியக்கம் (electro magnetic radiation) பயன்பட்டன.

சூரிய ஒளியின் உதவியால் தொலைத்தகவல் சேகரித்தல் தொடங்கியது. விவரங்கள் சேகரிப்பதற்காக கேமராக்களும், உணரிகளும் பொருத்தப்பட்டுள்ள தளமே ப்ளாட்பார்ம் (platform) என்று அழைக்கப்படுகிறது. பலூன்கள், விமானங்கள், செயற்கைக் கோள்களில் உணரிகள் போல கருவிகளைப் பொருத்தலாம். இவற்றைக் கொண்டு தொலைத்தகவல் திரட்டுதலை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பூமியில் இருந்து குறைவான உயரத்தில் இருந்து எடுக்கப்படும் முறை, ஆகாயத்தில் இருந்து எடுக்கப்படும் முறை மற்றும் செயற்கைக் கோள்களில் எடுக்கப்படும் முறை என இது மூன்று வகைப்படும்.satellite 700 இத்தகையவற்றில் கேமராக்கள் மற்றும் உணரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருட்களின் மீது விழுந்து பிரதிபலிக்கும் ஒளியையே கேமரா படமாக எடுக்கிறது. இது தவிர மின்காந்தப் புலத்தை புகைப்படமாக ஸ்கேனர்கள் புகைப்படம் எடுக்கின்றன. பூமியில் இருந்து அல்லது பூமியின் உயரமான இடத்தில் இருந்து பூமியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கும் முறை இதில் முக்கியமானது. கேமராக்களைப் பயன்படுத்திப் புகைப்படங்களை எடுப்பது இதற்கு உதாரணம். பலூன்கள் அல்லது விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் ஆகாயத்தில் இருந்து பூமியின் புகைப்படங்களை எடுப்பது மற்றுமொரு முறை. சற்றேறக் குறைய பரப்பு குறைவாக உள்ள இடங்களின் புகைப்படங்களை எடுக்க இது பயன்படுகிறது. விமானம் கடந்து செல்லும் பிரதேசங்களின் தொடர்ச்சியான புகைப்படங்கள் இதன் மூலம் கிடைக்கிறது. எடுக்கப்படும் ஒவ்வொருப் புகைப்படத்திலும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளப் புகைப்படத்தின் 60%ம் சேர்த்தே எடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இருக்க நிறமாலைமானியின் (stereoscope) உதவியுடன் இறுதி செய்யப்படுகிறது. எடுக்கப்படும் புகைப்படங்களின் முப்பரிமான படங்கள் கிடைக்க இது உதவுகிறது. இது, இம்மாதிரி படங்களின் ஓவர்லேப் (over lap) என்று அழைக்கப்படுகிறது.

படங்களில் இருந்து முப்பரிமான வடிவம் கிடைக்க உதவும் உபகரணமே ஸ்டீரியோஸ்கோப். ஒரு பிரதேசத்தை ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கும், பூமியின் மேற்பரப்பில் மேடு பள்ளங்களைப் பிரித்து அறிவதற்கும் இந்தக் கருவி பெரிதும் பயன்படுகிறது.

செயற்கைக் கோள்கள் வர ஆரம்பித்தபின் இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. செயற்கைக் கோள்கள் நடைதளங்களாக (platform) பயன்படத் தொடங்கியதுடன் தொலைத்தகவல் மேலும் திறம்பட்டது. செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள உணரிகளின் மூலம் தகவல்களை சேகரித்துப் பரிமாறும் முறை வந்தது.

செயற்கைக் கோள்களை புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோள்கள், சூரிய சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். பூமியின் சுழற்சியுடன் சுழலும் செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள். இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியில் இருந்து ஏறக்குறைய 36,000 கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும். இவை பூமியின் மூன்றின் ஒரு பகுதியைக் கண்காணித்து, தகவல்களை அனுப்பும் திறன் பெற்றது. புவி சுழற்சியின் வேகத்துடன் சம வேகத்தில் சுற்றுவதால் இவை எல்லா சமயங்களிலும் பூமியின் ஒரே பிரதேசத்தை நோக்கி நிலைநிறுத்தப்படுகின்றன. ஒரு பிரதேசத்தின் நிலையான தகவல்களைத் திரட்ட இவை பெரிதும் பயன்படுகின்றன. இவை தகவல் தொடர்பு, அன்றாடப் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

துருவங்களுக்கு மேற்பகுதியில் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களே சூரிய வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள். இவை புவி வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை விடக் குறைவான உயரத்திலேயே சுற்றுகின்றன. இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியின் மேற்பரப்பில் இருந்து ஏறக்குறைய 1000 கி.மீக்கும் குறைவாகவே இருக்கும். புவி வட்டப் பாதையில் சுழலும் செயற்கைக் கோள்களைக் காட்டிலும் குறைவான பரப்பையே இவை கண்காணிக்கின்றன. ஒரு சிறிய பகுதியைப் பற்றிய தகவல்களுக்கு இவை உதவுகின்றன. இயற்கை வளங்கள், நிலப்பரப்பு, இதர வளங்கள், நிலத்தடி நீர் போன்றவை பற்றி தகவல்களைச் சேகரிக்க இவை உதவுகின்றன.

இந்தியா ஏவிய இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்களாகும். ஐ. ஆர்.என்.எஸ் வரிசை செயற்கைக் கோள்கள் சூரிய வட்டப்பாதை செயற்கைக் கோள்கள்.

பொருட்கள் வெளியிடும் அல்லது பிரதிபலிக்கும் மின்காந்தக் கதிர்கள் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பொருளும் பிரதிபலிக்கும் ஆற்றலின் அளவே அப்பொருளின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் (spectral signature) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு மண்ணின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் தாவரங்களின் கையொப்பத்தில் இருந்து வேறுபட்டது. மின்காந்த நிறமாலையில் வெவ்வேறு அம்சங்களைப் பிரித்தறிய உதவும் வெவ்வேறு வகையான ஸ்கேனர்கள் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு பொருட்களை ஸ்பெக்ட்ரல் கையொப்பத்தின் அடிப்படையில் பகுத்தறிந்து விவரங்களை சமிஞ்ஞைகள் வடிவத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு எண்களாக அனுப்புகின்றன. இவை கணினிகளின் உதவியுடன் விரிவாக ஆராயப்பட்டு படங்கள் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. இவையே செயற்கைக்கோள் படங்கள் (satellite pictures).

செயற்கைக் கோள்களில் உள்ள உணரிகளால் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் பகுத்தது அறிய முடிவதில்லை. ஓர் உணரியால் பிரித்து அடையாளம் காணக்கூடிய பூமியின் மேற்பரப்பில் உள்ள மிக மிகச் சிறிய பொருளே அதன் சிறப்பு நேர்வுகள் (special resolution). காலநிலை கணிப்பு, கடல் வானிலை அறிவிப்பு, நில வளங்களைப் புரிதல், வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டறிதல், அடர்ந்த உட் காடுகளில் காட்டுத் தீயைக் கண்டுபிடிக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, பயிர்களின் பரப்பு, பூச்சிகள் தாக்குதல் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் சேகரிக்க, எண்ணெய், நிலத்தடி நீர் வளம் உள்ள பகுதிகளின் கண்டுபிடிப்பு போன்ற பல வகைகளில் இவை பயன்படுகின்றன.

தொலைத்தகவல் செய்திகள் மற்றும் இதர ஆய்வுகளை ஒன்றிணைத்து நில வரைபடங்கள் தயாரிக்க, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்த, அவற்றின் விரிவாக்கத்திற்கு மென்பொருட்கள் பயன்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கே உரிய அமைவிடம் (position) உள்ளது. அதனால் ஒரு பிரதேசத்தின் நில வரைபடம் இந்த அடிப்படையில் தயாரிக்கப்படும்போது அது அமைந்திருக்கும் சரியான அட்சரேகை, கடகரேகை போன்ற விவரங்களையும் எடுத்துக்கூறவேண்டும். இந்தத் தகவல்களை மென்பொருட்கள் உதவியுடன் பெறலாம். ரயில்வே, நதிகள் போன்றவை தொடர்பான திட்டங்களுக்கு இவை பயன்படுகின்றன. இதன் மூலம் மிகக் குறைவாக உள்ள பயணப்பாதை, சுங்கச்சாவடி இல்லாத பாதை, போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள பாதை, உணவகம், மருத்துவமனை போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்தப் படங்கள் உதவுகின்றன. ஒரு பிரதேசத்தில் உள்ள பொருட்களுக்கு இடையில் உள்ள தொடர்புகள் பற்றி, காலம்காலமாக அவற்றுக்கு இடையே இருந்துவரும் தொடர்பு பற்றியும் இந்தப் படங்கள் மூலம் அறியலாம். பயிர்களின் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாற்றங்களுக்கேற்ப பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி அறிய இவை உதவுகின்றன.

பல இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் விவரங்கள் ஒன்று சேர்க்கப்பட, விரிவாக்கப்பட, இவற்றின் விளக்கப் படங்களை உருவாக்க, இவற்றின் விளைவுகள் பற்றிய மாதிரிப் படங்களைத் தயாரிக்க, நில வரைபடங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் போன்றவை தயாரிக்க இவை பெரிதும் பயன்படுகின்றன.

இருப்பிடம் அறியும் தொழில்நுட்பத்திற்கு இச்செயற்கைக் கோள்களின் படங்கள் உதவுகின்றன. நில அமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கு இந்த இருப்பிடமறியும் வசதி அவசியம். அமெரிக்காவில் இதற்காக ‘உலக இருப்பிடமறியும் வசதி’ Global Positioning System GPS உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்களின் அட்சரேகை, தீர்க்கரேகை இடங்கள், உயரம், நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்த வசதியே இத்தகையவற்றில் மிக முக்கியமானது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 20,000 முதல் 20,200 கி.மீ உயரம் வரை உள்ள சுற்றுவட்டப் பாதைகளில் 6 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றி வரும் 24 செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பே இது. இவற்றின் மூலமே இருப்பிடம் அறியும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் நம் கையில் உள்ள ஏற்பியில் கிடைத்தால் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். மிகக் குறைந்த அளவில் குறைந்தபட்சம் 4 செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் கிடைக்கும்போது இந்த வசதியில் இருந்து நமக்கு விவரங்கள் கிடைக்கின்றன. இருப்பிடத்தை மேலும் துல்லியமாக அறிய உதவியாக இந்த செயற்கைக்கோள்களின் கட்டமைப்பில் இப்போது மேலும் கூடுதலாக செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இராணுவத் தேவைகளுக்காகத் அமெரிக்கா இந்த கட்டமைப்பைத் தொடங்கியது என்றாலும், 1980 முதல் இது மக்களுக்கு கிடைக்கிறது. இந்திய இருப்பிடம் அறியும் செயற்கைக்கோள் கட்டமைப்பு (Indian Regional Navigation Satellite System – IRNSS) அமெரிக்காவின் இருப்பிடம் அறியும் வசதிக்குப் பதிலாக இந்தியா சுயசார்புடன் நிறுவிய ஒன்று. இந்தியா தவிர பாகிஸ்தான், சீனா, இந்தியப் பெருங்கடல் உட்பட 1500 கி.மீ சுற்றளவு வரை இதன் கண்காணிப்பு உள்ளது. ரஷ்யாவின் க்ளாஸ்மாஸ், ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் கலிலியோ போன்றவை மற்ற நாடுகளின் இருப்பிடம் அறிய உதவும் இவ்வகைக் கட்டமைப்புகள்.

மனிதனின் அடங்காத தேடல் ஆர்வத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமே இதற்கு அடிப்படை. புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்வை மேம்படுத்தியுள்ளது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It