இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை (Aquamation/ water cremation) உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை (Boil in the bag) என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ (Archbishop Desmond Tutu) அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.aquamation facility in Pretoria

(An aquamation facility in Pretoria, South Africa)

என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை (Carbon footprint) விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.

சூழலிற்கு உகந்தது

சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது (gentler on the body & kinder on the environment) என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் (Julian Atkinson) என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் (Co-op Funeral care) என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் (Northumbrian) நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை. இங்கிலாந்து மக்களிடையில் இந்த முறை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவந்தது. ஆனால் இம்முறையின் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டபோது மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது 29% பேர் இதற்கு ஆதரவளித்தனர்.

பரவலாகும்போது இந்த முறையில் தங்கள் உடல் அடக்கத்தை நடத்த விரும்புவதாக பலர் கூறினர். இந்த முறை நீர் வழி உடல் அடக்கம் (resomation/ aquamation) அல்லது காரக்கரைசல் வழி நீராற்பகுப்பு முறை (alkaline hydrolysis) என்று அழைக்கப்படுகிறது. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். அதனால் இந்த முறை விரைவில் எல்லா இடங்களிலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் (CDS group) என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன.

ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் (bio pouch) வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இதில் டி என் ஏக்கள் எதுவுமில்லை என்பதும், கழிவுநீர் அகற்றும் இடங்களில் இதை கலப்பதால் பாதிப்பில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. பொட்டாசியம் கரைசல் இயற்கையான நீர்சுழற்சியுடன் கலக்கப்படுவதற்கு முன் அதன் பி ஹெச் (pH) சமநிலை மாற்றியமைக்கப்படுகிறது.

"சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் (Durham) பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் (Prof Douglas Davies) கூறுகிறார்.

1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் (Russell T Davies) “ஆண்டுகள் கணக்கில்” (Years and years) என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது.

வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/jul/02/boil-in-the-bag-environmentally-friendly-funerals-arrive-in-uk-resomation-acquamation?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It