நீர்க்காகங்கள்
நீராதாரங்களைத் தேடித்தேடி
களைத்துப் போய்விட்டன.
மீன்கள் துள்ளிக்குதித்த சுவடுகளற்று
அமைதி மயானம் கொண்டுள்ளது
குளக்கரை.

நாவறண்ட காகங்கள்
ஜாடி நீரில்
கல்லைப்போட்டு
தாகம் தீர்க்க முடியாமல் தடுமாறுகின்றன.
பேருந்து நிலையத்திலிருந்து
வீடுகள் வரை
இப்போது
எங்கும் பாட்டில் நீர் தான்.

வீடுகளில்
குடங்கள் இருந்த இடங்களில்
கேன்களின் தடங்கள்.
தெருக்களில்
காற்று வருவதற்காகவாவது
இருந்த குழாய்கள்
காலமாகி பல ஆண்டுகளாகி விட்டன.

முப்போகம் எப்போதும் விளையும்
வயல்கள்
வறண்டு கிடக்க - அதில்
ஏகமாய் வளர்ந்து நிற்கிறது
அடுக்குமாடி குடியிருப்புகள்.

வயல்களில் பசியாறிய
குருவிகள் கூட்டம்
புதிய வீடுகளின் முன்
வைக்கப்பட்டுள்ள
திருஷ்டிப் பொம்மைகளில் அமர்ந்து
தினைகளற்ற பிரதேசங்கள் குறித்து
தேம்பி தேம்பி சோகமிசைக்கின்றன.
 
ஆறுகள், குளங்கள், வயல்களை
தொலைத்த எங்கள் வாழ்க்கைகள்
வானத்தைப் பார்ப்பதில்லை.
வானம் பொய்த்து நாளாகி விட்டது.
பொங்கலோ பொங்கல்
குலவைச்சத்தமும் கேட்டு நாளாகிறது.
காட்டுச்செடிப்போல பூத்துக்கிடக்கும்
கூரைப்பூக்களைப் போல
கண்டுகொள்ளப்படாத
கூட்டமாய் மாறிவிட்டது
விவசாயக்கூட்டம்.

சேற்றில் கை வைத்தால் தான்
சோற்றில் கை வைக்க முடியுமென்ற
தத்துவத்தை தந்தவர்களின்
வயிற்றுப்பிரதேசம்
வறுமைப்பிரதேசமாகி விட்டது.
காய்ந்த வயல்களை
காமதேனுவாக்கி விட்டன
ரியல் எஸ்டேட் முதலைகள்.

நெல் மூடைகளைச் சுமந்து வரும்
மாட்டுவண்டிகளின் மணியோசைகள்
நெல்பேட்டைகளில் கேட்பதில்லை.
லாடம் கழண்டு போன
மாடுகளுக்கு
மேய்ச்சல் பூமியில்லை.
வாசல் தெளிக்க சாணமில்லை.
புள்ளி வைக்க கோலமுமில்லை.

எந்தச் செடியில்
அரிசி பூக்கிறதென்று
வினாவைத் தொடுக்கும்
இளையதலைமுறையிடம்
பதில் அளிப்பதற்கு முன்னால்
காணாமல் போகும்
கிராமங்களை காக்க
கட்டாயம் சட்டமியற்ற வேண்டும்.

உழவனின் பெருமையை
ஓலைச்சுவடிகள் தேடாத
அடுத்த தலைமுறையை
அவசியம் உருவாக்க வேண்டும்.

- ப.கவிதா குமார்

Pin It