எவ்வளவோ சூறையாடி விட்டீர்கள்
எவ்வளவோ கொள்ளையிட்டு விட்டீர்கள்
விதைகள் முளைப்பாரி வரும் -எமது
நிலத்தை மட்டுமாவது விட்டுவிடுங்கள்
நிலத்தை விட்டுத் தூரச்செல்லுங்கள்
வரப்பில் கூட நிற்கக் கூடாது
ஆளில்லாத களத்து மேட்டில்
தானியங்களை அள்ளிச் செல்லும்
உங்களை விட்டுவிட மாட்டோம்
நாங்கள் வந்து விட்டோம்
நாங்கள் வழி மறிப்போம்
எங்கள் மலைகளைத்
துளையிட வேண்டாம்
அளவு கருவிகளை
சுருட்டிக் கொள்ளுங்கள்
எல்லைக் கற்களை
எடுத்துச் சென்று விடுங்கள்
எங்கள் ஈரக்குலையை தோண்டியெடுத்து
யாருக்குக் கொண்டு செல்கிறீர்கள் ?
இலைகளின் இதயம் படபடக்க
பச்சை மரத்தை அறுக்காதே
அன்னையைப் போன்ற தென்னையை
வெட்டிக் கொன்றுவிட்டு
என்ன தரப்போகிறாய் இழப்பீடு ?
தென்னஞ் சில்லாடைக்குக் கூட
தேறாது உன் நிவாரணத் தொகை
உழுது கொண்டு போகும்போது
மண்ணுக்குள் செல்லும் மரத்தின் வேர் தட்டி
விழுந்த நிலத்தின் பிள்ளைகள் நாங்கள்
தங்கக் கட்டிகளின் மீது - எட்டுவழி
தார்ச் சாலையை விடமாட்டோம்!