வயலும் வயல்சார்ந்த

மருத நிலம்தான் அவன் வாழ்விடம்;

ஆத்தங்கரையோரம் மாமரத்தோப்பில்

மாட்டுக் கொட்டைகையோடு

இவனும் ஒட்டிக்கொள்ள ஒத்த

பனையோலைக் குடிசை!

நாலைந்து தென்னை மரமும்

ஒரு கிச்சிலி மரமும்

வளர்ந்திருந்த வாய்க் காலில்தான்

பம்புசெட் நீர் இறைக்கும்; வாய்க்காலே

குளம் மாதிரிதான் இருக்கும்;

மின்சாரம் தடைபடாமல் இருந்தால்

வற்றாமல் இறைக்கும் ஆற்று நீரூற்று;

சிலநேரம் எங்கள் பள்ளிக் கூடபயணம்

இங்கிருந்துதான் தொடங்கும்!

ஒரு பழைய வேட்டியும்

தோள் மீது ஒருதுண்டும்

மாடுகள் ஓட்டிச்செல்ல

துணையாக ஒரு மூங்கில் கொம்பும்

இவனின் ஒட்டு மொத்த சொத்து!

இவன் மனிதர்களோடு

பேசியதை விட இந்த மண்ணோடும்

அந்த மாடுகளோடும் பேசிய

நாட்களே அதிகம்; மாடுகளும் பேசுமா?

பேசும், எங்கள் செல்லக்கண்ணுவின்

முகத்தில் அவ்வப்போது முத்தமிட்டு!

இப்போதும் செல்லக்கண்ணு மீது

எனக்கு பொறாமைதான்;  நாங்கள் வாழ

நினைத்த வாழ்க்கையை இவன் மட்டுமே

ஒட்டுமொத்தமாய் வாழ்ந்ததை!

இவன் சண்டையிட்டும் இவனோடு

யாரும் சண்டையிட்டும்

ஒருநாளும் பார்த்ததில்லை;

மண்ணை நேசிப்பவனால் எப்படி

மானுடத்தை நேசிக்காமல் இருக்க முடியும்!

கரடுமுரடான பாதைகளிலும்

கருவேலங் காடுகளிலும்

மாடுகளைவிட வேகமாகவே பயணித்தது

இவன் கால்கள்; மேற்கால செங்காடு முதல்

கெழக்காலே நெருப்போடைவரை

அத்தனை ஒற்றையடிப் பாதையும்

இவனுக்கு அத்துப்படி!

மேய்ச்சலுக்கு போன மாடு

தொலைந்து விட்டது என்று

யாராவது தேடிவந்தால், "கோணாங்குட்டை

பக்கம் போய் பார்த்தியா, அங்க தான் ஆள்

ஒசரத்துக்கு கோரைப் புல்லு வளர்ந்திருக்கு, திக்குத் தெரியாம

கத்திக்கினு இருக்கும் போய்ப் பாருடாம்  பாரு"

நாங் கூட சில நேரம்மாடு மேய்க்க

போவதுண்டு, ஆத்தங்கரைத்தாண்டி தான்

ஓட்டிப்போவோம்; "ஊரோரமா

கழனிக்கரம்புலமேய்க்காம இவ்வளவு

தூரம் எதுக்குடா கொழந்தைங்க ஓட்டி

வர்றீங்கனு" கேப்பாரு "அப்பப்போ

ஆத்துல குளிக்கவும் மீன் பிடிக்கவும்னு

சொல்லுவோம் "அவர்கிட்ட!

கொல்லையில வெயிச்ச மொச்சக்காய

துண்டுல கட்டி எடுத்துட்டு வந்து

எங்க எல்லாத்துக்கும் குடுப்பாரு;

நாங்கூட கேட்டதுண்டு,  ஏம் பெரியப்பா

ஊர்ப்பக்கமே வர மாட்டேங்குறீங்க, இந்த

கழனி, ஆறு, ஏரி இப்படியே இருக்குறீங்க"

"இதாண்டாஎன்ஒலகம்,இதைத்தாண்டி

வேற என்ன இருக்குனு" சொல்லி

பொழுது சாயும்போது மாம்பிஞ்சுகளை

கையில் திணித்து அனுப்புவாரு

எங்களிடம்!

எப்பவாவது தெருக்கூத்து

நடக்குது என்று தெரிந்தால்

மட்டுமே அப்போது அவர்தலையை

ஊருக்குள் பார்க்க முடியும்; புழுதிப்பறக்கும்

ஆட்டத்தை கண்கொட்டாமல் பார்ப்பார்;

விடியலுக்கு முன்னே காடு திரும்பியிருப்பார்!

காலங்கள் கடந்தது

ஊருக்குள் பயணித்த ஓர் நாள்,

இளமைக்கால இரவுகளை

இரவல் வாங்கிய பாரதக் கொட்டாய்

எங்கள் செல்லக்கண்ணுவுக்கும் இன்று

அடைக்கலம் தந்திருந்தது;

மாடுகளை மேய்த்துத் திரும்பிய

ஒரு கறுக்கல் பொழுதில்

வழுக்கி விழுந்ததில் நடக்கமுடியாமல்

படுத்தபடுக்கையாய் இந்த பாரதக்கொட்டாயில் முடங்கிக்கிடந்தது

ஓடியாடித்திரிந்த ஓயாத அவரின்கால்கள்!

இதோ எங்கள் கண்களில்

நீர்த்தி வலைகள்;

சிலமனிதர்களை இப்படியாக

மட்டுமே பார்க்க வேண்டுமென

நினைத்திருப்போம்;

அப்படியான மனிதன்தான் செல்லக்கண்ணு;

எந்திரம் போல் உழைக்கக்கூடிய

கால்களை முடக்கிகாலம்

அவனுக்கு ஓய்வைத் தந்திருக்கிறது!

அந்தக் காடுகழனிகள்,

வாய்க் கால்வரப்புகள்,

ஆற்றங்கரை ஓலைக்குடிசை,

கொஞ்சித் தழுவியமாடுகள்

இவையனைத்தும்

ஏங்கித்தவித்து தான கிடக்கும்

இவன்குரலுக்காவும் இவன்வருகைக்காவும்!

இதோ உறங்கிக் கொண்டிருக்கிறான்

எங்கள் செல்லக்கண்ணு;

இனி விழித்துவிடாத தூரத்தில்

அவன் பயணம்!

தாலாட்டுகிறது

மாமரத்துத் தென்றல்;

கண்ணீர் சிந்து கிறதுவானம்!

Pin It