agri 350

இரைத்துப் பாய்ச்சிவிட

கிணற்றுப் பால்

கசியவில்லை

தோகை உச்சியில்

கால்வைத்து விளையாட

மழையும் வரவில்லை

அடித்தூரில் வாய்வைய்க்க

அருங் குளத்து நீரில்லை

இறந்தவனின் மக்காச் சோள வயல்

ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை

அறுத்து மாட்டுக்குப் போட

யாரும் முன்வரவில்லை

ஆடு பத்திவிட

ஆட்டுக்காரர்கள்

துணியவில்லை

பட்டுப்போன பயிரென்றால்

பத்திவிட்டு விடலாம்

எப்படி மேய்ப்பது

இறந்தவனின் புஞ்சையை

வெம்பரப்பு பூமியில்

பிணத்தின் வாசனை பரவப் பரவ

அடைபட்ட காட்டில்

ஆநிரைகள் விக்கி நிற்கின்றன

இறந்தவனின் மக்காச்சோள வயல்

ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை

காட்டு முயல்கள்

காலெடுத்து

ஒடித்து ஒடித்து

விளையாடுகின்றன

ஒன்றும் புரியாமல்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.