உழவனே உழைப்பாளியே உடலுழைப்பாளியே
உன் உழைப்புத்தான் விளைச்சல் உணவுப் பொருள்கள்
உயிர்களே, உலகமே வளங்களெல்லாம்
உழவனுக்குப் பிழைப்புக்குக் கூட வழி இல்லையே
பின் எங்கு வாழ்வு வளமையெல்லாம்?

உடையோரே, கற்றோரே, மற்றோரே
உங்கள் உயர்களிப்பு வாழ்வுக்கு
உழவர்களைக் காவு கொடுத்துவிட்டீர்களே
உறுத்தலில்லை உங்களுக்கு
உங்கள் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விட்டீர்களே!

உழைப்பை மறைமுகமாய் உறிஞ்சுகின்றீர்
உரிய உயர்விலை மறுக்கின்றீர் விளைச்சலுக்கு!
உணவுக்கு எஞ்சிய கொஞ்ச வருவாயைக்
கொள்ளை கொள்கின்றீர் மறைமுகவரியாய்
மருத்துவமாய், கல்வியாய்.

பல்லாயிரம் கோடிகளில் ஆலைகள்
அவர்க்களிப்பீர் ஆயிரம் கோடிகளில் வரிச்சலுகை
அலுங்காமல் குலுங்காமல் அடிக்கின்றார் கொள்ளை
உழவன் உழைப்பின் விழுமியங்கள்
உடைமை ஆகின்றதே உழைப்பை மறுப்போர்க்கு.

உயர் பணிகளாம், உயர் அறம்கூறும் அவையாம் என பிறவாம்
அவர் பெறுவார் ஊதியம் இலக்கங்களில்
அதுவன்று கிடைக்கும் பிற இனங்களாய்
அரசியல் பிழைப்பாய்ப்போன அரைவேக்காடெல்லாம்
அடிக்கின்றார் கொள்ளை கொள்ளையாய்.

தலைமைச் செயலகமாம் செயலற்ற தாளுக்கும் மைக்கும்
அத்தன்மைத்தே தலைமைத் துறைகளாம் மாநில அளவில்
அஃதே மாவட்டங்களிலும்
இவர்க்கெல்லாம் உயர் ஊதியமாம் உயர் ஓய்வூதியமாம்
உழைப்பாளி உழவனுக்குப் பிச்சைக் கூலி பிச்சை முதியோர் ஊதியம்

இவ்விழிநிலை கண்டு யாருக்கும் வெட்கமில்லை
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்நீச நிலைகண்டு,
வேண்டாம் வேண்டாம் வெற்றுப் புகழுரைகள்
வேண்டும் வேண்டும் நல்லூதியம் உடலுழைப்புக்கு
உழவனுக்கு வேண்டும்!

இவ்வவலங்கள் அகல வேண்டும்
வேண்டும் எல்லார்க்கும் எல்லாம்
கடிதே வேண்டும்; கழியும் காலமெனில்
வெகுண்டெழுவார் உழவர், உழைப்போரெல்லாம்
உலகை உலுக்கிடுவர், உணர்வீர்.

Pin It