வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் ஏரிக்கரைப் பக்க முள்ள தமக்குச் சொந்தமான காட்டை அழித்து விவசாயம் செய்யும் நோக்கில், பொழுது புலர்வதற்குமுன் முட்புதர் களையும், காசான் கட்டைகளையும் வெட்டி பெயர்த்துக் கொண்டிருந்தார்கள். இது மிதமான மழைக் காலம். இந்தக் காலத்தில் செய்தால்தான் ஆச்சு, இல்லையேல் மழைக் காலத்தில் ஏதும் செய்ய முடியாது என்பதை அறிந்த இந்த குடும்பம் வேலையில் ஈடுபட்டிருந்தது.

வெள்ளைச்சாமியின் மனைவி ஒரு மண்கலயத்தில் கேழ் வரகுக் கூழும், துவரம் பருப்புத் துவையலும் கொண்டு வந்திருந்தார். கலயத்தின் வாய்ப்பகுதியை பழைய துணி யால் வேடுகட்டி, வேடுகட்டிய துணியின் முனையில் உப்பையும் முடிச்சுப் போட்டு கட்டி ஒருசிறிய மரத்தடியில் வைத்துவிட்டு தன் கணவன் கழித்துப்போட்ட சுள்ளிகளை யும், வேர்க்கட்டைகளையும் தனித்தனியாகப் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தார். வெள்ளைச்சாமி ஏ புள்ள காலைப்பசி படபடன்னு வருது, பல்ல வேற வௌக்கிப் புட்டேன், பசி யாத்திப்புட்டு மத்த வேலயப் பாக்கலாம், பெரியவனைக் கூப்பிடு, என்றார். வேலய நிறுத்திவிட்டு பக்கத்திலிருந்த பனங்குட்டியில் ஒரு மட்டய வெட்டி கஞ்சிக் குடிப்பதற்கு ஏற்றாற்போல் அதை குழித்துக் கொண்டு வந்தான் குமரன். வேர்வை பட்டு, உடல் முழு வதும் செம்மண் ஒட்டியிருக்க துண்டால் உடலைச் சுத்தம் செய்துவிட்டு சாப்பிட அமர்ந்தான். சாப்பாடு முடிந்ததும் வெள்ளைச்சாமி சற்று தள்ளி அமர்ந்து வெத்திலை முடிச்சை அவிழ்த்தார். வாடி வதங்கிப் போயி ருந்த வெத்திலையைக் கிழித்து ஒருபகுதியை வாயில் போட்டு மென்றவாறே பாக்கையும் இரண்டாக உடைத்துப் போட்டுக்கொண்டு முட்புதர்களையும் காசான் கட்டை களையும் வெட்டப் புறப்பட்டார். காசான் கட்டைகளை விறகாச் சேத்தமுன்னா நம்ம அய்யரு காப்பி கிளப்புல வித்துப்புடலாம், மத்தத நம்ம அடுப்புக்கு வச்சிக்கிட லாம் என்று வெள்ளைச்சாமி கூறவும், அதுவும் சரிதான்யா என்றவாறே தனித்தனியாப் பிரித்துக்கட்டி வீடு கொண்டு சேர்த்தார்கள்.

ஏ தம்பி, இப்போ ஈரம் பதமா இருக்கு, நாளைக்கு வந்து இந்த மோடு பள்ளத்தச் சமப்படுத்திட்டோமுன்னா, மறுநா நம்மோ மோள குட்டைய வச்சி ரெண்டு ஓட்டு ஓட்டிப் போட்டுடுவோம்,அப்போதான் மண்ணு பொல பொலன்னு இருக்கும் என்றார் மகனிடம். மறுநாள் வெயிலின் கொடுமையை பொருட்படுத்தாமல் மேடுபள்ளங்களை அரும்பாடுபட்டு ஓரளவு சரி செய்தார் கள். இப்போதும் மகனின் தூண்டுதலே வெள்ளைச்சாமி காட்டை வேளாண்மை செய்வதற்கு பெரும் காரணம். சொந்த நிலம் என்பதால் அயர்வோ சோர்வோ இவர்களை ஆட்கொள்ள முடியவில்லை. வெள்ளச்சாமி தம்பி போதுண்டாப்பா, இதுல வௌயிற வெள்ளாமய வச்சே நம்ம குடும்ப கஷ்டப்பாடெல்லாம் போக்கிடலாம் என்று கூறினார். அன்றும் இருட்டும்வரை வேலை செய்தார்கள்.

உழுவதற்கு ஏற்ற நிலையில் சரி செய்ததால் நாளையே ஏரு கட்டி உழுதுடலாம். நாளைக்கு நல்லநாதான், சனிமூலைய பாத்தாப்புல ஏரு கட்டி ஓட்டுய்யா என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றவர், திரும்பிவரும்போது சாமி கும்பிடும் சாமான்களோடு வந்தார்.

மறுநாள் காலையில் ஏர்கட்ட புறப்பட்டார்கள். ஏருமாட்ட கொல்லையில் கட்டி சூடம், சாம்பிராணி தீவார்த்தனை காட்டி ஏரைப் புடிப்பா என்றார் வெள்ளச்சாமி. இல்லப்பா, நீ ஏரைப் புடிச்சி ஒரு விலா ஓட்டிட்டுக் குடுப்பா என்றான் மகன். நீ வாழும் பிள்ள, வளரும் பிள்ள. நீயேதான் ஏரப் புடிக்கணும், நீ வளருற மாறி இந்த வெள்ளாமையும் வளரணும், ஒன் வாழ்வும் முன்னேற ணும் என்று கூறி மகனிடம் ஏரைத் தொட்டுக் கொடுத்தார். மகன், ஏரைப் பிடித்து ஓட்டும் பாங்கினைப் பார்த்து ரசித்தவாறு, மெய்மறந்து நின்றார்.

காரப்பத்தை வேர்களும் காசான்கட்டை வேர்களும் கலப் பையில் பட்டு மாடுகளைத் திணறடித்தது. ஏரை அமுக்கிப் பிடித்து ஓட்டியதால் குமரனுக்கு களைப்பாக இருந்தது. சாப் பாட்டுக்கு ஏரை நிறுத்தியதுமே ஒரு மாடு எப்படா ஓய்வு கிடைக்கும் என்பதுபோல் நுகத்தடியோடு படுத்துக் கொண்டது. ஒருமாடு நின்றவாறே அசை போட்டது. சாப்பிட்டு முடித்தபோது ஊரின் மிராசுதார் வேகமாக வந்தார். அய்யா ஏதோ வேலயா போறிய போலிருக்கு, போய்ட்டு வாங்க என்றார் வெள்ளைச்சாமி. ஏதோ வேலயா போவல, ஒங்களப் பாக்கத்தான் வந்தேன் என்ற தும், சொல்லுங்கய்யா ஊர்ல ஏதும் நடந்துருச்சா எனக் கேட்ட வெள்ளைச்சாமியிடம் ஊருக்குள்ள ஒன்னும் நடக் கலடா, யாரக்கேட்டு இந்த நெலத்த உழுகுறீங்க என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட வெள்ளைச்சாமி ஆடிப்போய் அய்யா என்னங்க சொல்றீங்க என்று பதறினார். இதையெல்லாம் காதில் வாங்காவன்போல் குமரன் ஏர் ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தான். ஏலே யாருடா அவன், ஏர அவுத்து உடுறியா, இல்ல ஒடம்பு தோலு உரி படணுமா என்றார் மிராசுதார். ஏன் நிறுத்தச் சொல்றீங்க, எங்கவூட்டு நெலத்துல நாங்க ஏரு ஓட்டுறோம் என்றான். மிராசுதார் என்னடா சொல்லிக்கிட்டே இருக்கேன், மீறி மீறி ஏர ஓட்டிக்கிட்டே இருக்கீயே என்று கூறியவாறு கொல்லையில் இறங்கி ஏரை மறித்தார். நீங்க செய்யுறது கொஞ்சங்கூட நல்லா இல்லிங்க, அஞ்சுநாளா நாங்க அடுகெடயா படுகெடயா கெடந்து பாடுபட்டுருக்கோம், இது எங்க பாட்டன் சொத்து, நீங்க செய்யறது சரியில்ல வெலகிப்போங்க என்றான் குமரன்.

ஏலே நீங்க அடுப்பு எரிக்க வெறகு வெட்டிக்கிறீங்கன்னு தான் போனா போவட்டுமுன்னு சும்மா இருந்தேன். இப்ப என்னடான்னா நெலமே எங்க பாட்டன் சொத்துன்னு சொல்லுமளவுக்கு வந்துட்டியளா? ஏர அவுக்குறியா, இல்ல நான் வந்து அவுக்கட்டுமா என்றார். எங்க ஏருமாட்டு மேல கைய வய்யி பாப்போம் என்று வாலிபத் துடிப்போடு குமரன் பேசினான். ஏது ஒனக்கு அவ்வளவு திமுரா என்று கூறியவாறு மிராசுதார் அருகில் சென்றார். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்றுணர்ந்த வெள்ளைச்சாமி வேகமாக ஓடிவந்து அய்யா நீங்க கொஞ்ச வெவரமா சொல்லுங்க என்றார். ஏலே நா என்னடா வெவரம் சொல்றது? அங்கறே அங்க நிக்குதே ஒத்தப்பன அது யாரோடது? ஒங்களோடது தான் என்றார் வெள்ளைச்சாமி, அப்போ அதோ தெரியுதே பொலி யாரோடது?. அதுவும் உங்களோடது தான் என்றார் வெள்ளைச்சாமி. அப்போ அது என்னோடது தான்னா இந்த எல்லைவரையும் எம்பொலிதான், இது மட் டும் எப்படிடா ஒன்னோட சொந்தம்னு சொல்ற என்றார் மிராசுதார். வெள்ளைச்சாமி,அய்யா இந்த நெலம் எங்கப்ப னுக்குத் தொரைமாருங்க கொடுத்தது. நாங்க கொல்லைக் குண்டான வரிவாய்தா எல்லாம் கட்டிருக்கோம், எங்களுக்கு அரசாங்கம் கொடுத்த பீம்பு (பீ மெமோ) கூட இருக்கு. எம்மவன் பெரியாளா ஆனப்புறந்தான் இந்தக் காடுகரம்ப ஒழிச்சு ஏதோ வெள்ளாம உடலாம்னு இருந்தோம். அடுத்த வருசம் பாப்போம் அடுத்த வருசம் பாப்போம்னு தள்ளிக் கிட்டே போயிருச்சு. இந்த வாரமுச்சூடும் வேல பாத்து இன்னிக்குத்தான் ஏரு கட்டி உழுவுறோம், நீங்க வந்து தடுக்குறது ஞாயமில்லீங்க, இது எங்க நெலந்தான். இத நாங்க உடமாட்டோம் என்றார் வெள்ளைச்சாமி.

மிராசுதார் ஏற்கனவே பலநபர்களை வரச்சொல்லிவிட்டு, தனியாளாக வந்திருந்தார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக அந்த இடத்திற்கு பலபேர் வந்து சேர்ந்தனர். மிராசுதார் வந்தவர்களுக்கு விளக்கம் சொல்வது போல் இந்த நிலம் சம்பந்தமாக எல்லா விவரத்தையும் கூறி, இவனுவ ஏதோ அடுப்பெரிக்க வெட்டுறானுகன்னு பாத்தா ஏரே கட்டி உழ ஆரம்பிச்சிட்டானுக. இவன் எங்கப்பனுக்கு வெள்ளக்காரன் கொடுத்ததுன்னு சொல்றான். இவ மவன் எங்கப் பாட்டன் சொத்துங்குறான். வெள்ளக்காரன் போயி எம்புட்டு வருசமாச்சு, இப்பப்போயி வெள்ளக்காரன் கொடுத்தான், சொள்ளக்காரன் கொடுத்தான்னு சொல்லுறா னுவ. என்னான்னு நீங்களே கேளுங்கய்யா என்றார்.

அய்யா, எங்கப்பனுக்கு வெள்ளத்துரைங்க கொடுத்த துன்னு இரண்டு தலைமுறையா நாங்கதான் இதப் பாத்துக் கிட்டு வாறோம், எங்களுக்கு அரசாங்கம் கொடுத்த பீம்பு கூட வெச்சிருக்கோம், இதுக்கு வரிவாய்தாகூட நாங்க கட்டி ருக்கோம். இப்போ போயி தனக்கு சொந்தமுன்னு அய்யா சொல்றது என்ன ஞாயமுங்க? என்றார் வெள்ளைச்சாமி. உடனே மிராசுதார் ஏலே வெள்ளக்காரன் கொடுத்தான், பீம்பு வச்சிருக்கேன்னு சொல்லாத, அத வச்சு நீ நாக்கு வழிச் சிக்கோ, இதுநாள் வரையும் நான்தான் வரிவாய்தா கட்டிட்டு வர்றேன். அரசாங்கம் கொடுத்தா போயி அரசாங் கத்துட்ட கேட்டுக்க, ஒங்கொப்பன் உசரோட இருந்தான்னா அவன் சொல்லுவான் இந்தநெலம் யாருக்குச் சொந்தம்னு. அங்கற்றேர (அதோ) வடக்கே உள்ள பனைதான் எங்க பொலி. அதுலேயிருந்து தெக்கே உள்ள இந்த பொலி வரைக் கும் எங்க குடும்பச் சொத்து. மரியாதையா ஏருமாட்ட அவுத்துக்கிட்டு வூட்டப் பாக்க போங்க. இல்லேன்னா ஒடம்புத்தோலு உரிஞ்சுடும் என்று மிரட்டினார்.

குமரன், இது பஞ்சமி நெலம், இது இங்குள்ள பள்ளுபறை சனங் களுக்குக் கொடுத்தது, இத எங்களத்தவிர வேறு யாரும் வாங்க முடியாது. எங்க தாத்தா எங்களுக்குத் தெரியாம ஏதா கிலும் மொச்சலிக்கை (உடன்பாடு- எழுத்து மூலம் பதிவு) போட்டு கைநாட்டு வச்சுக் கொடுத்திருக்கிறாரா? இருந்தா அதக் காட்டுங்க என்றான். மிராசுதாரர் ஏலே வெள்ளயன் மவனே, ஒன் தாத்தாக்கிட்ட இருந்திருந்தால்தானே நான் வாங்கறதுக்கு, எவன்டா சொன்னது பஞ்சமி நெலம், கிஞ் சமி நெலம்னு? இனி இங்க நின்னிங்க என்ன நடக்குன்னு தெரியாது என்று கூற, மற்றவர்களும் சேர்ந்து மிரட்டி நிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள். அப்போது வெள்ளைச்சாமி அய்யா தென்னண்ட பக்கம் ஒரு அம்பது குழி நெலங் கெடக்கு, அத நத்தம் பொறம் போக்குன்னு பட்டாமணியர் சொன்னாரு, அதுலயாவுது நாங்க பயிர் பச்ச செஞ்சிக்கிறோமுங்க என்றார்.

ஏலே வெள்ளய்யா அது எனக்கு பக்கப் பாத்தியமுள்ள நெலம். எனக்குத்தான் சேரணும். பட்டாமணியன் சொன் னான்னா அவன போயி கேளு என்று கோபமாகப் பேச, இனி எந்த சங்கதியும் நடக்காது என்று தெரிந்த வெள்ளயன் கஷ்டப்பட்டு சீர்படுத்திய நெலத்தை திரும்பவும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கரையேறினார்.

குமரன் இது சம்பந்தமாகப் பலநபர்களிடம் பேசிப் பார்த் தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. கடைசியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவுங்களாவது கேட் பாங்க என்ற நம்பிக்கையோடு புகார் கொடுத்தான். உதவி ஆய்வாளர் புகார் மனுவை வாங்கிப் பார்த்துவிட்டு, யோவ் இதுல நாங்க ஏதும் செய்ய முடியாது. ஏதோ ஊருல அடிதடி சண்டை, திருட்டு வழக்குன்னா வந்து பாப்போம். இது சிவில் வழக்கு. நேரா கோர்ட்டுக்குப் போயி பிராது கொடுய்யா என்று கூறிவிட்டார். தாசில்தாரிடம் மனு கொடுத்தால் என்ன என்று என்று தனப்பனிடம் கேட்டான் குமரன். வெள்ளைச்சாமி எப்பா வேண்டாம்பா இவ்வளவோ பெரிய பொல்லாப்பு, மனு கொடுத்தா அந்த அய்யா ஒன்ன வெச்சன்னா பாரு என்பாரு. ஏதோ கையி காலு நல்லா இருக்கு, வேல செஞ்சிப் பொழச்சிக்கிலாம். வௌக்கெண்ணெய தடவிக்கிட்டு வீதியிலே புரண்டாலும் ஒட்டுற மண்ணுதாய்யா ஒட்டும். உட்டுத் தொல, அந்த அய்யா மண்ணுக்குள்ள போகும்போது என்ன கொண்டு போவான் என்றார். இதில் கொஞ்சங்கூட சமாதானம் கொள்ளாத குமரன், ஒரு மனுவை தனது தந்தை பெயரில் தயாரித்து தாசில்தாரைப் பார்த்து கொடுத்து வந்தான்.

மாதங்கள் பல உருண்டோடின. ஒருநாள் தண்டோரா போட்டு ஒரு தேதியும் கூறி தாசில்தார் வந்து இந்த தலித் மக்களுக்குப் பட்டா வழங்கப்போவதாக செய்தி அறிவிக்கப் பட்டது. இதில் வெள்ளைச்சாமியின் பெயரும் உள்ளதென அறிந்ததும், அவர் குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டனர். தாசில்தாரும் வந்து அனைவருக்கும் பட்டா வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார். வெள்ளைச்சாமி பட்டா வாங்கியதும் தனது தகப்பன் சொத்து கிடைத்துவிட்டதே என்ற சந்தோசம் மேலோங்க குலதெய்வத்தின் முன்வைத்து பூசை செய்து ஒரு பழையதுணியில் கட்டிவைத்தார். கொஞ்சநாள் சென்றதும், மிராசுதாரைப் பார்த்து எனக்கு அரசாங்கம் கொடுத்த நெலப்பட்டா, இதோ பாருங்கய்யா என்று காட்டினார். மிராசுதார் ஏலே, அத கொண்டாந்து யாண்டா என்கிட்ட காட்டுற, அரசாங்கம் இந்த கடுதாசியத் தானே கொடுத்திச்சி, அத நீயே கொண்டு போயி நாக்கு வழிச்சுக்க, நிலம் கெலமுன்னு பேசிக்கிட்டு என்கிட்ட வந்த இனிநான் சும்மா உடமாட்டேன் ஒன்ன என்று கோபமாகக் கூறி அனுப்பிவிட்டார்.

வெள்ளச்சாமி சோர்ந்துபோன முகத்தோடு வீடு திரும்பி னார். மகனிடம் விவரத்தைச் சொன்னார். குமரன் ஆவேச மாய் சரி கச்சேரிக்குப் (கோர்ட்) போயி ஒரு பிராது கொடுப் போம் என்றான். அதெல்லாம் வேண்டாமுடா, அந்த அய்யா நம்மள ஊருல வக்கமாட்டாரு. நாம கச்சேரிக்குப் போனமுன்னா வக்கில புடிக்கணும், வக்கிலு, கச்சேரிக்குப் பணம் கட்டணும், அம்புட்டு காசுபணம் கட்ட நம்மகிட்ட ஏது தோது? போனாப்போவுது, பின்னால பொறவால பாத்துக்கலாம் என்றார். குமரன் நீ எதுக்கெடுத்தாலும் தடங்கலே செய்யுற, நான் போயி ஒம்பேருல கலெக்டருக் கிட்ட ஒரு மனுவாவது கொடுக்கிறேன் என்றான். ஓம் பிரியம் எப்படியோ அப்படியே செய். ஆனா அந்த அய்யா பகைம நமக்கு வேண்டாமய்யா என்று கூறினார்.

இரண்டொரு வருடங்கள் கழிந்தன. பட்டாமணியரும், கணக்கப்பிள்ளையும் புதுசா வந்த கலெக்டரும் ஊரில் முகாம் போடப் போவதாகவும், நிலமில்லாத ஏழை விவ சாயத் தொழிலாளிகளுக்கு பட்டா வழங்கப்போவதாகவும் பேசிக்கொண்டனர். ஊரில் பொதுஇடத்தில் தோரணங் கட்டி பந்தல் போட்டு ஏக தடபுடலாக வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த வேலைகளையும், இந்த தலித்துகள் தான் செய்ய வேண்டும். வெள்ளைச்சாமியோ அவரது மகனோ இதில் கொஞ்சம்கூட நாட்டம் காட்டவில்லை. கூட்டம் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் பேசி முடித்ததும் பட்டா கொடுக்கும் வேலை ஆரம்பமானது. முதல் பெயரே வெள்ளைச்சாமி பெயர்தான். ஆனால், வெள்ளைச்சாமி அங்கு இல்லை. கலெக்டர் எங்கே அந்த ஆளு, முன்னமே அவருக்குத் தகவல் தரவில்லையா? என்றார். பட்டாமணி யரும், கர்ணமும் பதறிப்போய் அய்யா இதோ வந்துடுவான் என்று கூறிக்கொண்டு ஒரு சிப்பந்தியைப் (தலையாரி) பிடித்து அவன் எங்கிருந்தாலும், ஒரு அரைநாழியில இங்க கொண்டாடா என்று உத்தரவு போட்டார்கள். சிப்பந்தி ஓட் டமும் நடையுமாய் சென்று நாற்றங்காலிலிருந்த வெள்ளை யனை ஏய் வெள்ளயண்ணே, நான் காலயிலேயே சொன் னேன் நீ கேக்காம நாத்துப் பறிக்க வந்துட்ட, வாய்யா சீக்கிரம் ஒன்ன கலெக்டர் கூட்டிவரச் சொன்னார் என்றார்.

தலையில் கட்டியிருந்த முண்டாசோடும் இடையில் கட்டி யிருந்த துண்டோடும் நாற்றங்காலின் சேற்றுநீர் சொட்ட சொட்ட ஓடிவந்து பந்தல் முகப்பில் வெள்ளைச்சாமி நின் றதைப் பார்த்த கர்ணம், தாசில்தார் காதில் ஏதோ முணு முணுத்தார். உடன் வெள்ளைச்சாமி மேடைக்கு அழைக்கப் பட்டார். பந்தலுக்குள் நுழைந்து சென்ற வெள்ளைச் சாமியைப் பார்த்து பலபேர் ஏதேதோ கூறியதை, அவர் காதில் வாங்கவே இல்லை. இவரின் கவனமெல்லாம் கலெக்டர் பக்கமே இருந்தது. சிலர் முண்டாசை அவிழ்த்து இடையில் கட்டச் சொன்னதை இவர் பொருட்படுத்தவே யில்லை. வெள்ளைச்சாமி கலெக்டர் முன்பு நிறுத்தப்பட் டார். நாற்றாங்காலின் சேற்றுச்சேடை அவரது உடல் முழு வதும் திட்டுத்திட்டாக இருந்தது. ஒரு விவசாய தொழிலாளி எப்படி இருப்பார் என்பதை தற்போதுதான் கலெக்டரால் உணர முடிந்தது என்பதை அவரின் முகத்தோற்றம் அறி வித்துக்கொண்டிருந்தது. நீதான் வெள்ளைச் சாமியா என்றார் கலெக்டர். ஆமாங்கய்யா. உடனே தாசில்தார் எடுத்துக் கொடுத்த பட்டாவை வெள்ளைச்சாமி கையில் கொடுத்தார் கலெக்டர்.

வெள்ளைச்சாமி வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு சாமி இது என்னாங்க என்று கேட்டார். இதாம்பா பட்டா. வெள்ளைச்சாமி நாலாப்புறமும் கலெக்டரையும் ஒரு முறைப் பார்த்தார். பிறகு வெறிகொண்டவர்போல் பட் டாவைத் தாறுமாறாகக் கிழித்துத் தூக்கியெறிந்தார். போலி சும், மற்ற அதிகாரிகளும் ஏய், ஏய் என்று கூறிக் கொண்டே அவரை அடிக்க ஓடிவந்தனர். கலெக்டர் அவர்களைத் தடுத்து அவரை ஒன்றும் செய்ய வேண்டாமெனக் கட்டளை யிட்டார். வெள்ளைச்சாமியிடம் பட்டாவை ஏம்பா இப்படி கிழிச்சுப்போட்ட என்று பரி தாபமாகக் கேட்டார். இந்த பட்டாவ போல பல கடுதாசி இதுக்கு முன்னயும் கொடுத்திருக்காங்க. இதக் கொண்டு போயி என் நெலத்த வச்சிருக்கிற மிராசுதாரர்கிட்ட காட்டி பட்டாவுல உள்ள எடத்தக் கேட்டா, எல்லாம் தனக்குச் சொந்தம் தனக்குச் சொந்தமுன்னு சொல்றாரு. இத வெச்சி நீ நாக்கு வழிச்சிக் கன்னு திருப்பி அனுப்பிடுவாரு. இத அரசாங்கந்தான கொடுத்திச்சின்னு சொன்னா, பட்டா கொடுத்த அரசாங்கத் துக்கிட்டப் போயி நெலத்த கேளுடான்னு சொல்லிடுவாரு. எனக்கு இந்த பட்டாவெல்லாம் வேணாமுங்க சாமி, எனக்கு என் நெலம் எங்கிருக்குன்னு காட்டுங்க. அது இல்லாம நான் இந்த கடுதாசிய வெச்சி என்னங்க பன்றது? என் நெலத்த வந்து எனக்குக் காட்டுங்க என்று சிறு பிள்ளையைப்போல் கதறியழ ஆரம்பித்தார்.

இவருக்குரிய நிலம் மிராசுதாரரால் அபகரிக்கப்பட்டிருப் பதை அறிந்துகொண்ட கலெக்டர் கவலைப்படாதய்யா, ஒனக்குரிய நிலம் கிடைப்பதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி கூட்டத்தைவிட்டு வெளியேறினார், இதெல்லாம் ஆவுற சங்கதியாங்கிற யோசனையோட...

தகவல்: தோழர் சசிமைந்தன்

Pin It