மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று அரசே விளம்பரம் செய்துவிட்டு இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட இவ்வளவு கூடுதல் விற்பனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு, உழைப்பாளியின் வருவாயை குறைந்த விலைக்கு வாங்கி 100 சதவீதம் அதிகம் வைத்து விற்பனை வரியும் சேர்த்து விற்றுப் பிடுங்கிக் கொள்கின்றனர். மதுவை அருந்திவிட்டு மயங்கியே கிடக்கும் குடிமகனால் முன்னேறதான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற நல்ல கல்விதரவேண்டும், மருத்துவம் செய்ய வேண்டும். தனக்கு வருவாய்க்கு வழிவேண்டும் என்று கேட்க முடியவில்லை. மதுக்கடை இல்லை என்றால் அரசாங்கத்திற்கு வருவாய் இருக்காது; அதனால்தான் அரசு மதுக்கடையை நடத்துகின்றது என்று கூறும் இவர்களை நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? வழி என்ன?
விவசாயம் செய்ய நீர்தான் முதன்மையானது. நிலத்தடி நீரை சேமிக்கும் வழிகளான ஏரி, குளம், குட்டைகள், நீர்வரும் வழிவாய்க்கால்கள், இவற்றைத் தூர் எடுத்துச் சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இலவச மின்சாரம் தொடர்ந்து கொடுத்தால் நாடு முன்னேறும். ஆனால் நம்மை ஆட்சி செய்யும் இவர்கள் கட்சித் தொண்டர்களைவிட்டு ஆக்கிரமிப்புச் செய்துவிட்ட னர். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியாமல் இடைத் தரகர்கள் மூலம் விலைவைத்து விவசாயிகளை நட்டப் படுத்தும், இவர்களை என்ன செய்யப் போகின்றீர்கள்? என்ன வழி?
தமிழ்நாட்டில் காவல்துறையும் நீதித்துறையும் நல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது காவல்துறையும் தன் துறை மரியாதையை காப்பாற்ற முடியாமல் கேடான ஆட்சியர்களின் அடிமைகளாகி விட்டதால்தான் ஒரு குற்றவாளி நூறு முறை கைது செய்யப்படுகின்றான். இதுபோன்ற குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது நியமிக்கப்பட்ட நீதிபதிகளைக் கொண்டு குற்றவாளிகளை விடுவிக்கின்றனர். இப்பொழுதெல்லாம் காவல்துறையி னர் நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம் மற்றவைகளை நீதிதுறைதான் பார்த்துக் கொள்கின்றது என்கின்றனர்.
நீதித்துறையினர் ஆட்சியாகளர்கள் தலையிட்டு எங்களைக் கட்டுப்படுத்திவிடுகின்றனர்; நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் நீதிமன்றம் காப்பாற்றப்படும் என்கின்றனர், இப்படிப்பட்ட இவர்களை என்ன செய்யப் போகின்றீர்கள்? என்ன வழி?
உழைக்காமல் இரு உனக்கு அனைத்தும் இலவசமாக (இறுதிச் சடங்கு உட்பட) தருகின்றோம். வாக்கு மட்டும் போடுங்கள் என்று கூறுகின்றனர், அரசியல்வாதிகள். தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, தரமான மருத்துவம் இருக்க ஒரு நல்ல இருப்பிடம், தேவையான வருவாய் கிடைக்க வேண்டும் என நாம் கனவு காண நமக்கு உரிமை உண்டு; ஆனால் அனுபவிக்க இல்லை! வசதியானவர்கள் பெறும் கல்வியை-சமச்சீர் கல்வியை நமக்குக் கிடைக்க வழி செய்யாத இவர்களை என்ன செய்யக் போகின்றீர்கள்? என்ன வழி?
அரசியல்வாதிகள் நல்ல நடிகர்கள். வாக்குக் கேட்க வரும்பொழுது, ‘இதைச் செய்வோம் அதைத் செய்வோம்’ என்று இனிக்கப் பேசி, வெற்றி பெற்றபின் அவர்களைத் தேடிப் போனால் சந்திக்க முடியவில்லை. காரணம் தேர்தலில் செலவிட்ட பணத்தைவிட ஆயிரம் மடங்கு சேரிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்களை வாக்குக் கேட்கவரும்பொழுதே-பணம் கொடுத்துக் கேட்கும் பொழுதே தெரிந்து நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்கவேண்டும். வாக்குப் போடுமுன் சிந்திக்காமல், கறிசோற்றுக்கும் சாராயத்திற்கும் ஆசைப் பட்டு ஒரேநாளில் அய்ந்தாண்டுக்கு சொரணை கெட்ட வர்களாகிவிடும் நீங்கள் மாறிட என்ன செய்யலாம்? என்ன வழி?
குறிப்பு : வழிகண்ட வாசர்களின் வழிகள் வரவேற்கப்படும்.