மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது 5 சதவீதமாக குறைந்துள்ளது.

நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் போன்ற எட்டு முக்கிய தொழில் துறைகளில் 7.3 சதவீதம் இருந்த வளர்ச்சி இன்று 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டுமானத் துறை வளர்ச்சி விகிதம் ஒன்றரை ஆண்டுகளில் காணாத சரிவை சந்தித் துள்ளது.

ஒரே ஆண்டில் (2018லிருந்து 2019 க்குள்) வங்கி மோசடி நாற்பதாயிரம் கோடி ரூபாயிலிருந்து எழுபதாயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது (இது 2013இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்தது). சென்ற 5 ஆண்டுகளில் 5.56 இலட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. அதன் பிறகும் பெரிய தொகையில் கடன் பெற்று திருப்பித் தர முடியாதோர் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. வாகன உற்பத்தித் துறை மிகவும் சரிவை கண்டுள்ளது. விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. எப்.எம்.சி.ஜி. எனப்படும் விரைவாக விற்பனையாகும் பொருள்களின் துறையில் (பேஸ்ட், பல்ப், பிஸ்கெட் போன்ற பொருள்கள்) கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் விற்பனை வளர்ச்சி, நகரங்களைவிட குறைவாக உள்ளது.

15 கோடி மக்கள் வேலை பார்க்கும் விவசாய கூலித் துறையில் ஊதிய அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 3.8 சதவீதம் தான் உயர்ந்துள்ளது - விலைவாசி உயர்வே இதை விட அதிகமாக 4 சதவீதமாக இருந்தது.

விவசாயத்தை எடுத்துக் கொண்டால், நெல் உற்பத்தி, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 13 சதவீதம் சரிந்துள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதாய விலையை அரசாங்கம் வெறும் 4 சதவீதமாக மட்டுமே உயர்த்தியுள்ளது.

2011இல், உள்நாட்டு உற்பத்தியில் 34.3 சதவீதம் குடும்ப சேமிப்பாகும். ஆனால் அது 28.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் வேலை இழப்புகள் அதிகரித்துள்ளன. வேலைமையின்மை விகிதம் 2017இல் 4.5 சதவீதமாக இருந்தது. இன்று 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்னும் 10 இலட்சம் வேலைகள் போகலாம் என அச்சுறுத்துகிறார்கள்.

வேலை இழப்பு, அய்.டி. துறையையும் பாதிக்கத் துவங்கியுள்ளது - முக்கியமாக காக்னிசன்ட் கம்பெனி சமீபத்தில் 800 பணியாட்களை வேலையிலிருந்து விடுவித்துள்ளது.

பன்னாட்டு அளவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2014இல் 60.25ஆக இருந்தது, இன்று 72.33 ஆக சரிந்துள்ளது. இதன் விளைவாக, பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான முதலீட்டு வளர்ச்சி, சென்ற ஆண்டு 12 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு வெறும் 5 சதவீதமாக குறைந்துள்ளது.

டாலர் உயர்ந்தால் ஏற்றுமதித் துறை இலாபம் அடையும் என்கின்றனர். அதுவும் உண்மையல்ல. 2011இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.5 சதவீதமாக இருந்த ஏற்றுமதி இன்று 19.6 சதவீதமாக குறைத்துள்ளது.

நூல், தறி ஏற்றுமதி கடுமையாக சரிந்து, துணி உற்பத்தித் துறையிலும் கடும் வேலையிழப்பு ஏற்படும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் பெரிதும் பாதிக்கப்பட்ட, பெருவாரி மக்கள் வேலை பார்க்கும் சிறு/குறு தொழில் துறைகள் வாங்கும் கடன் அளவும் குறைந்துள்ளதால், அங்கும் கடும் வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Pin It