Modi 525

2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், நரேந்திர மோடி அவர்கள், “வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்ப்போம். அதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

தேர்தலில் வென்று, 2014 மே மாதத்தில் பிரதமராகப் பொறுப்பேற்றார். 2015 மே 26 ல், THE BLACK MONEY (UNDISCLOSED FOREIGN INCOME AND ASSETS) AND IMPOSITION OF TAX ACT, 2015 என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

2015 செப்டம்பர் வரை அச்சட்டத்தின் கீழ், 638 இந்தியர்களிடமிருந்து 6500 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில் 45 % வரிகள் போக சுமார் 3700 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வெள்ளைப்பணமாக மீட்கப்பட்டதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். (1)

கருப்புப்பண மீட்புப் பிரச்சனையில் பா.ஜ.க வும், மோடி அரசும் மக்களுக்கு எண்ணற்ற தவறான தகவல்களைக் கூறியுள்ளன. பல ஏமாற்று நடவடிக்கை களையும் மேற்கொள்கின்றன.

1.             வெளிநாடுகளில் 80 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கருப்புப்பணம் இருப்பதாகச் சொன்னதே பெரும் தவறு. அந்த அளவுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் அருண்குமார் தவே. கடந்த 20 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் இருந்த கருப்புப்பணத்தின் பெரும்பகுதி பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குத் திரும்ப வந்துவிட்டது என்றும் கூறுகிறார்.(2)

பல்வேறு விதங்களில் இந்தியாவுக்கு வந்துவிட்ட, கருப்புப்பணத்தை இனிமேல் மீட்போம் என்று மோடி அறிவித்தது மிகப்பெரும் மோசடி.

2. இந்தியா முழுவதும் 8.11.2016 இரவு 12 க்கு மணிக்கு மேல், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தப் போகிறோம் என அறிவித்தார். கருப்புப்பணத்துக்கு எதிரான துல்லிய நடிவடிக்கை இது என பா.ஜ.க வும், மோடி ஆதரவுப் பிரபலங்களும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இது அடுத்த மோசடி. இரண்டையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இரட்டை வரித்தவிர்ப்பு ஒப்பந்தம் - Double Taxation Avoidance Agreement – DTAA

இந்தியாவில் உலக மயமாக்கல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட 1991 க்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, 1965 லிருந்தே பல நாடுகளுடன் இரட்டை வரித் தவிர்ப்பு என்ற (Double Taxation Avoidance Agreement – DTAA) ஒப்பந்தத்தைச் செய்து வருகிறது. 1965 ல் ஆஸ்ட்ரியாவுடன் Agreement between the Republic of India and the Republic of Austria for the avoidance of Double Taxation with respect to taxes on income - Notification No. G.S.R.588,dtd 5.4.1965 என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.(3)

இதைத் தொடர்ந்து 90 களுக்கு முன்பே எகிப்து, மலேசியா, மொரீஷியஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்த இரட்டை வரித்தவிர்ப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இன்றைய நிலையில் 85 நாடுகளுடன் இந்த Double Taxation Avoidance Agreement – DTAA நடைமுறையில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு வெளிநாட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம் அல்லது ஒரு போலி நிறுவனம் மொரீஷியஸில் தனது தொழிலைப் பதிவு செய்து கொண்டு, அந்த நாட்டில் ஒரு அலுவலகத்தையும், வங்கிக்கணக்கையும் மட்டும் வைத்துக்கொண்டு, இந்தியாவில் தொழிலை நடத்தலாம். இந்தியாவில் அந்தத் தொழிலுக்குரிய எந்த வரியையும் செலுத்தத் தேவையில்லை.

இந்த முறையைச் சரியாகச் செயல்படுத்திக் கருப்புப்பணத்தை மீண்டும் இந்தியாவிலேயே முதலீடு செய்வதற்கு வசதியாக - பனாமா நாட்டில் மொசாக் பொன்சேகா (MOSSAC FONSECA) என்ற நிறுவனம் இயங்குகிறது. கடந்த 04.04.2016 ல் Panama Leaks என்ற பெயரில் இந்த MOSSAC FONSECA நிறுவனத்தின் நாடுகடந்த ஊழல்கள் வெளிவந்தன. International Consortium of Investigative Journalists என்ற புலனாய்வுப் பத்திரிகை யாளர்கள் அமைப்பு இந்த கருப்புப்பண ஊழலை வெளிக்கொண்டு வந்தது.(4)

MOSSAC FONSECA வில் இந்தியாவிற்குச் சொந்தமான கருப்புப்பணத்தைச் செலுத்திவிட்டால், அந்நிறுவனம் Double Taxation Avoidance Agreement – DTAA ஒப்பந்தம் உள்ள 85 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஒரு போலி நிறுவனத்தைப் பதிவு செய்து, அதன் வழியாக இந்தியாவுக்குள்ளேயே சட்டரீதியாகவே கருப்புப்பணத்தை முதலீடு செய்யும். கருப்புப்பணம் வெள்ளையாகி விடும். 1977 லிருந்து 2015 வரை இந்த நிறுவனம் கருப்புப்பண மோசடிகளை நடத்திவருகிறது.

Double Taxation Avoidance Agreement – DTAA மற்றும் MOSSAC FONSECA மூலமாக பல இலட்சம் கோடி கருப்புப்பணம் சட்டப்பாதுகாப்புடன் வெள்ளைப் பணமாக்கப்பட்டு, பதுக்கல் காரர்களிடமே மீண்டும் சென்று, பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

பங்கேற்புப் பத்திரம் - Participatory Notes & Foreign institutional investors (FII)

செபி என்ற Securities and Exchange Board of India – SEBI இந்திய அரசு அமைப்பு இந்தியாவில் பங்குச்சந்தையை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் 1992 ஆம் ஆண்டில், இந்தியப் பங்குச்சந்தைகளில் அந்நியர் ஒருவர் நேரடியாக முதலீடு செய்து, இலாபம் சம்பாதிக்கலாம் என்ற விதியைக் கொண்டுவந்தது. Foreign institutional investors (FII) இந்த பங்கேற்புப் பத்திரம் மற்றும் FII மூலமாக முதலீடு செய்பவர்கள் தங்கள் பெயரையோ, தங்கள் நிறுவனத்தின் பெயரையோ, தங்கள் உண்மையான முகவரியையோ வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை. செபி அது குறித்துக் கேள்வி கேட்காது என்று அந்த விதி கூறுகிறது. இதன் வழியாக 1992 லிருந்தே கருப்புப்பணம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, கருப்புப்பணம் வெள்ளையாக்கப்படுகிறது. இந்தியாவிற்கு வந்துள்ள நேரடி அந்நிய முதலீட்டில் 48% இந்தப் பங்கேற்புப் பத்திரம் மற்றும் FII வழியிலேயே இயங்குகிறது.

இப்படிப் பல்வேறு வழிகளில் கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ளும் வசதியைக் கடந்த 1965 லிருந்தே செயல்படுத்தி வருகின்றன இந்திய அரசுகள். 1991 க்குப் பிறகு இவை அதிகமாகி, மோடி ஆட்சியில் உச்சத்தை அடைந்துள்ளன. உண்மை இவ்வாறு இருக்க, 80 இலட்சம் கோடி கருப்புப்பணம் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 இலட்சம் தரப்போவதாகவும் அறித்தது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

கருப்புப்பணப் பார்ப்பனரும், கருப்புப்பண மீட்பர்களும்

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) தலைவராக இருந்த, குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பனர் கேதான் தேசாய் ஊழல் வழக்கில் சி.பி.அய் யால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1800 கோடி ரூபாய் கருப்புப் பணமும், 1500 கிலோ கருப்புத் தங்கமும் கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவுக்கு அவரிடம் கருப்புப்பணம் இருக்கும் என்றும் சி.பி.அய் கூறியது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பதவியும் பறிக்கப்பட்டது. (5)

ஜாமீனில் விடுதலை ஆன அந்தப் பார்ப்பனக் கருப்புப்பண ஊழல்வாதி 2013 ஆம் ஆண்டே குஜராத் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகத் தேர்வு பெற்றார். குஜராத் பல்கலைக்கழக செனட்டில் புதிதாகப் பல உறுப்பினர்களைச் சேர்த்து, புதிய உறுப்பினர்களின் வாக்கு வழியாக செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது குஜராத்தின் முதல்அமைச்சர் நரேந்திர மோடி ஆவார். (6)

2014 ஆம் ஆண்டு நவம்பரில் கேதான் தேசாயின் மகள் திருமணம் குஜராத்தில் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, பா.ஜ.க வின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கற்றார்.

பனாமா லீக்ஸில் வெளியான கருப்புபணப் பணக்காரர்கள் பட்டியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரையும் தண்டித்தே தீருவோம் என இப்போது முழங்கும் பா.ஜ.க அரசின் நிதிஅமைச்சரான அருண் ஜேட்லி, 2015 ல் தனது மகளின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக, இந்தக் கருப்புப்பண முதலையை அழைத்துச் சிறப்பித்தார். (7)

இப்போது 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் அகில உலக மருத்துவக் கழகத்திற்குத் (WMA) தலைவராக பா.ஜ.க. ஆதரவு கருப்புப்பணக்காரர் கேதான் தேசாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (8) இவர்கள் தான் கருப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறார்களாம்.

500 க்குத் தடை என்ற நாடகம்

பனாமா லீக்ஸ் என்ற பெயரில் 04.04.2016 ல் ICIJ அமைப்பு வெளியிடப்பட்ட பெரும் கருப்புப்பணக்காரர்கள் பட்டியலில் மோடியின் நெருங்கிய நண்பர் குஜராத்தின் அதானி குடும்பம் இடம்பெற்றுள்ளது. கௌதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, இந்தியாபல்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சமீர் கேலாட், டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் குஷால் பால் சிங், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட பல இந்தியப் பெருங்கருப்புப் பணக்காரர்கள் பனாமா லீக்ஸில் அம்பலமாகியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர் மோடி. ஆனால், அவற்றை நோக்கி நமது கவனம் திரும்பக்கூடாது அதேசமயம் தனக்குக் கருப்புப்பண மீட்பர் என்ற பிம்பமும் தேவை என்று யோசித்த மோடி அரசு நடத்திய நாடகம் தான் 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு.

கருப்புப்பணம் என்றால் என்ன?

அரசின் வருமான வரிக்கணக்கில் வராத பணம் கருப்புப் பணம் எனப்படுகிறது. அரசிற்கும், மக்களுக்கும் பயன்படாத பணத்தையும் கருப்புப்பணம் என்றுதான் சொல்லமுடியும். அதன்படி, இந்தியாவில் கோவில்களில் கணக்கில் வராமல் உள்ள ஆயிரக்கணக்கான டன் தங்கம், வைரம், வைடூரியங்கள், உண்டியல் என்ற பெயரில் வரும் தினசரி வருமானம் என அனைத்துமே கருப்புப்பணம் தான்.

கோவில் தங்கத்தை நகைச்சந்தைக்குத் திருப்ப வேண்டும்

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் கேபினட் அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

“கடந்த சில ஆண்டுகளில் தொழிற்துறை மற்றும் வர்த்தகத்தில் பற்றாக்குறை நிலவுவதற்கு தங்க இறங்குமதி 30% காரணமாக உள்ளது”

என்று தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசாங்கம் மட்டுமல்ல கடந்தமுறை ஆட்சியில் இருந்த அரசும் இதையே கூறியது. காங்கிரஸ் ஆட்சியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 16.07.2013 அன்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம்,

“இந்திய மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். 3 இலட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பாகக் கிடைக்கும்”

என்று அறிவித்தார். எனவே முதலில் கோவில்களில் வீணாக முடங்கியுள்ள கருப்புத் தங்கத்தை மக்களின் பயன்பாட்டுக்குத் திருப்பவேண்டும். அணிகலன் களுக்காகத் தங்கத்தை இறக்குமதி செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டுக்குக் கொட்டிக் கொடுப்பதைவிட, கோவில்களில் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை வெளிக்கொணர்ந்து நகைச்சந்தையில் விற்பனைக்கு விடலாம்.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் பராமரிப்பில் இருந்த திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்திபோது அக்கோவிலில் உள்ள இரகசியப் பெட்டகங்களில் 1 இலட்சம் கோடிக்கும் அதிகமான தங்க, வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மநாபசாமி கோவில் போன்ற ஒரு கோவிலிலேயே 1 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலுள்ள தங்க, வைரங்கள் இருக்குமானால், குருவாயூர் கிருஷ்ணன் ஆலயம், திருப்பதி வெங்கடேசுவரர் கோவில், பழனி முருகன் கோவில், சீரடி சாய்பாபா கோவில், மும்பை சித்திவிநாயகர் கோவில், காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில், அமர்நாத் கோவில், உத்ரகாண்ட் கேதார்நாத் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூரி ஜெகந்நாதர் கோவில், மதுரா கிருஷ்ணன் கோவில் போன்ற பெருங்கோடீசுவரக் கோவில்களில் முடங்கியுள்ள தங்கங்களின் மதிப்பை நம்மால் கணக்குப் போட்டுக்கூடப் பார்க்கத் முடியாது. கருப்புப்பணத்தை ஒழிக்க நினைப்பவர்கள் கோவில்களில் கைவைத்தால், அந்நியச்செலாவணியும் மிஞ்சம். கருப்புப்பணமும் மீட்கப்படும்.

தங்க, வைர நகைகள் செல்லாது

பிரதமர் மோடி கடந்த 06.11.15 ல்,

“தங்கம் தொடர்பான ஆக்கபூர்வமான, புதுமையான திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம். இது ஒரு மிகப்பெரிய தொடக்கம் ஆகும். இந்தியாவில் 20 ஆயிரம் டன் தங்கம் எந்தப் பயன்பாடும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. அதனால்தான் இந்தியா ஏழை நாடாக இருக்கிறது. சில சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இந்தியா ஏழை நாடாக இருக்க வேண்டிய நிலைமாறும்.” என்று உரையாற்றினார்.

தங்க நகைகளை திருமணங்களின்போது பெண்ணுக்கு வரதட்சணையாக அளிப்பது என்பது இந்துப் பார்ப்பனப் பண்பாட்டின் அடையாளம். சமுதாயத்தின் அடித்தட்டில், கடைசி நிலையில் வாழும் குடும்பமாக இருந்தாலும், திருமணத்தின்போது பெண்ணுக்கு சுமாராக 10 பவுன் ( 80 கிராம்) தங்கம் வரதட்சணையாகக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. நடுத்தர மக்கள் சராசரியாக 200 கிராமிலிருந்து 8 கிலோ வரை நகைகளைப் போடுகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக இந்தத் தங்கம் கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா, மகள், பேத்தி என பல தலைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இவை பெரும்பாலும் கணக்கில் வராத கருப்புத்தங்கங்களே ஆகும்.

கருப்புப்பணத்தை ஒழிக்க வேண்டுமானால், முதலில், இந்தத் தங்க, வைர நகைகள் செல்லாது. அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் மட்டுமே தங்கம் இருக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். தங்கத்தை அரசுக்குத் திருப்பிக் கொடுக்கும் பெண்ணுக்கு உயர்கல்வி வரை அரசு பொறுப்பேற்கும் என அறிவிக்க வேண்டும். தங்க, வைர நகைகள் அணிவதை கடும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவித்தால், கோவில் தங்கங்களை நகைச்சந்தைக்குப் பதிலாக, நேரடியாக ரிசர்வ் வங்கிக்கே அனுப்பிவிடலாம். மக்களிடம் நகைகளாக நடமாடும் சுமார் 20 ஆயிரம் டன் தங்கமும் அரசிடம் சேரும்.

கருப்புப்பணம் மிக எளிமையாக வெள்ளையாக மாற்றப்படுவதற்கு Double Taxation Avoidance Agreement – DTAA, Participatory Notes & Foreign institutional investors (FII), போன்ற வாய்ப்புகளை உருவாக்கி வைத்துவிட்டது இந்திய அரசு. MOSSAC FONSECA போன்ற நிறுவனங்களின் கருப்புப்பண ஊழல் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மீது மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே கேதான் தேசாய் போன்ற கருப்புப்பணப் பதுக்கல்காரர்களைக் காப்பாற்றியவர்கள் தான் பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும்.

வர்ணாசிரமம் ஒழிய வேண்டும்

“இந்த நாட்டுச் செல்வம் வெளியில் போகின்றதென்பதை அடியோடு நிறுத்தப்பட்டுப் போவதுடன் வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் நமது நாட்டுக்கே வருவதாக வைத்துக்கொண்டாலும், இன்றைய வருணாச்சிரம முறையும், மத சம்பந்தமான கடவுள் சடங்குகளின் முறையும் இப்படியே இருக்கும் வரை மேற்கண்ட, அதாவது பாடுபடாமல் சோம்பேறியாய் வாழ உரிமையுள்ளவனும், பணக்காரனாக உரிமையுள்ளவனும், உத்தியோகம் பார்க்க உரிமையுள்ளவனும், பொதுஜனப் பிரதிநிதியாக உரிமையுள்ளவனும் தான் இப்போதையைவிட இன்னும் அதிகமாகக் கொள்ளையடிக்கவும், போக போக்கியங்கள் அனுபவிக்கவும், கஷ்டப்படுபவர்களை பட்டினி கிடப்பவர்களை இன்னும் அதிகமாய்க் கொடுமை செய்யவும் அருகதை உடையவர்களாவார்களே தவிர, ஒரு நாளும் இந்தியாவிலின்று பொருளாதாரத்தால் கஷ்டப்படும் ஏழைமக்கள், பட்டினி கிடப்பவர்கள் என்கின்றவர்கள் யாதொரு விதத்திலும் சீர்பட முடியவே முடியாதென்பதை உணருங்கள்.”(8)

- தோழர் பெரியார்

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்கள் – இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பாபா ராம்தேவ், ரவிசங்கர் போன்ற சுதேசித் தொழில் அதிபர்கள் - பார்ப்பனக் கருப்புப்பணத் திமிங்கிலங்கள் – பன்னாட்டு வணிக நிறுவனங்கள் – பன்னாட்டு நிறுவனங்களின் பார்ப்பன நிர்வாகிகள் – இந்துமத அரசியல்வாதிகள் என்ற கூட்டுக்கொள்ளை அணி இந்தியாவில் கருப்புப்பணத்தை ஒழிக்காது. இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டி, அவற்றைக் காவிப் பணமாக மாற்றி, தமது ஆதிக்கங்களைத் தொடர எதையும் செய்யும்.

சான்றுகள்:

1.02.10.2015 Indian Express

2.BBC 05.10.15

3.http://www.incometaxindia.gov.in/DTAA/Old%20Treaties/108690000000000129.htm

4.https://panamapapers.icij.org

5.http://m.deccanherald.com 9.11.2016

6. Times of india 18.02.2013

7. PBT INDIA on 14.12. 2015 / http://www.pbtindia.com/archives/2775

8. News18, Dinamani 22.10.2016

9.குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931

- அதிஅசுரன்

Pin It