தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் இந்த ஆய்வானது 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தரவுகள் 2018ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலைவாய்ப்பு தொடர்பான இந்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிரவைத்துள்ளது.

1993-94ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் முதன்முறையாக வேலை செய்யும் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந் துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை (Periodic Labour Force Survey) குறித்த தரவுகளை‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் ஆய்வு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம்.

2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடியாகக் குறைந்து விட்டது. இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான சரிவாகும். 1993-94ஆம் ஆண்டில் நாட்டில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 21.09 கோடியாக இருந்தது. அதன்பிறகு வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. இறுதியாக 2011-12ஆம் ஆண்டில் வெளியான ஆய்வறிக்கையில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 30.4 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதன்பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்தது. 2017-18ஆம் ஆண்டில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 1.8 கோடி ஆண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த ஆண்களை விட இப்போது குறைந்த ஆண்கள்தான் வேலை செய்வதாக இந்த புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

1993ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இருபகுதிகளிலும் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. 2011-12ஆம் ஆண்டில் வேலை செய்த ஆண்களின் எண்ணிக்கையில் இந்திய நகர்ப்புறங் களில் 8.9 கோடி பேரும், கிராமப்புறங்களில் 21.4 கோடி பேரும் இருந்தனர். ஆனால் 2017-18ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 8.4 கோடியாக வும், கிராமப்புறங்களில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 20.1 கோடியாகவும் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு சரிவு கிராமப்புறங்களில் 6.4 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 4.7 விழுக்காடாகவும் உள்ளது.

2011-12ஆம் ஆண்டிலிருந்து 2017-18 வரையிலான காலகட்டத்தில் ஆண்-பெண் என இருபாலரில் மொத்தமாகக் கிராமப்புறங்களில் 4.3 கோடி பேரும், நகர்ப்புறங்களில் 0.4 கோடி பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 4.7 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். இது சவுதி அரேபியாவின் மக்கள் தொகையை விடக் கூடுதலாகும். இதில் கிராமப்புறங்களில் 68 விழுக்காடு பெண்களும், நகர்ப்புறங்களில் 96 விழுக்காடு ஆண்களும் வேலையை இழந்திருக்கிறார்கள். இத்தகைய இழப்புகளின் மூலம் நாட்டின் வேலையின்மை விகிதம் 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு கூறுகிறது. இது 2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 விழுக்காடு கூடுதலாகும்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் இந்த ஆய்வானது 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தரவுகள் 2018ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலைவாய்ப்பு தொடர்பான இந்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதாகக் கூறி தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி.சி.மோகனன் மற்றும் மற்றொரு உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஜனவரி மாத இறுதியில் பதவி விலகினர். இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. தரவுகள் வெளியீட்டில் அரசியல் அழுத்தங்கள் இருப்பது கவலையளிக்கக் கூடிய செய்தி என்று உலக நாடுகளைச் சேர்ந்த பொருளியல் அறிஞர்கள் 108 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை அரசுக்கு அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பொருளாதார அறிஞர்கள் பலரும் கணித்ததைப் போலவே பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் வேலைவாய்ப்பு மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சுருங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் உள்ளன என்பதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளிப்படுத்தியுள்ளது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் நடத்தியுள்ள இந்த ஆய்வுக்கான தரவுகளை யார் அளித்தார்கள் என்று பெயரை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெருமளவில் வேலைவாய்ப்பு இழக்கப்பட் டுள்ளது என்பதையும், குறைந்த எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த தரவுகள் வெளிக்காட்டுகின்றன என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

Pin It