இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2, கடைசி நொடியில் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. ‘சந்திரயான்-2’இல் கலன், லேண்டர், ஆய்வு ஊர்தி என்ற மூன்று முக்கிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட லேண்டரின் தொடர்பு கடைசி நேரத்தில் துண்டித்துப் போனது. இப்போது அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். “திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை; வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம்; விரைவில் லேண்டர் தொடர்பு மீட்கப்படும்” என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அறிவியலுக்கு பின்னடைவுகள் தற்காலிகம்தான்; அது எப்போதும் முன்னேறிச் செல்லும். ‘சந்திரனை’ கடவுள்கள் பட்டியலில் சேர்த்துள்ள நாடு இது. சந்திரனைப் பாம்பு விழுங்குவதுதான் சந்திர கிரகணம் என்று நம்பி அன்று முழுக்குப் போட்டு ‘பாவத்தை’க் கழிக்கும் மூட நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் இந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தவே செய்கிறார்கள்.

‘சந்திரயான்-2’ திட்டத்தை ஏழுமலையானிடமும், உடுப்பி மட பார்ப்பன சங்கராச்சாரியிடமும் கொண்டு போய் ‘ஆசி’ பெற்றார்கள். அதற்குப் பிறகும் பின்னடைவு இருக்கவே செய்தது. மூடநம்பிக்கைகளை அறிவியலோடு இணைப்பது சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பெரும் தடையாகிவிடும். எனவேதான் அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதை குடிமக்களின் கடமையாக வலியுறுத்துகிறது.

ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதர் முதலில் நிலவில் கால் பதித்தபோது ‘அது உண்மையல்ல; புரளி’ என்று தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இப்போது ‘சந்திரன்’ ஒரு கடவுள். அதை நெருங்கவே முடியாது என்றெல்லாம் பார்ப்பனர்கள் முன்புபோல பேச முடியாது; மக்கள் எள்ளி நகையாடுவார்கள். அறிவியல் சிந்தனை முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Pin It