தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவீடு குறித்த கணக்காய்வு, கிராமப்புறத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறுமையின் அளவு 2011-12 முதல் 2017-18 வரை மிகவும் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. நுகர்வோர் செலவு அறிக்கையில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒருவர் செலவு செய்யும் அளவு 3.7 சதவீதம் சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஒருவர் மாதத்துக்கு ரூ. 1,501 செலவு செய்த நிலையில், 2017-18 ஆம் ஆண்டு ரூ. 1,446 மட்டுமே செலவு செய்கிறார். நுகர்வோர் உணவுக்குச் செலவிடும் தொகையே குறைந்து விட்டது. கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் நிலை மிகவும் குறைந்துள்ளதையே இது குறிக்கிறது. தங்கள் ஆட்சியில் இந்தியாவில் அதிக வளர்ச்கியைத் உருவாக்கியதாக பாஜக அரசு தம்பட்டம் அடிக்கின்ற போது வளர்ந்ததென்னவோ வறுமை தான்.

modi and nirmala sitharamanமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, கல்வி, உடல்நிலை குறித்து இவ்வாய்வில் பெறப்பட்டத் தரவுகள் பாஜக அரசு ஏற்படுத்தியதாகக் கூறும் தன்னிகரற்ற சாதனைகளைப் பொய்யென தெளிவுபடுத்தியதுள்ளது. நாட்டில் 95% மக்கள் கழிப்பறை வசதிகளுடன் இருப்பதாக பாஜக அரசு கூறிவரும் நிலையில், 71.3% மக்களிடமே கழிப்பறை வசதியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் தரவுகள் பாஜக அரசின் நிர்வாக முடிவுகளிலிருந்து பெருமளவு வேறுபட்டால் அது எதைக் குறிக்கும்? அரசின் நிர்வாக முறைகேடுகளையோ, ஊழல் மோசடிகளையோ, பொறுப்பற்றத் தன்மையையோ சுட்டிக்காட்டும் குறியீடுகளாக அல்லவா அதை ஒரு மக்கள் நல அரசு கருத வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் அதில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதே அரசு செய்ய வேண்டியது. தனது ஆட்சித் திறனை மதிப்பீடு செய்யும் அளவுகோல் தானே இவை.

இதை நாம் பாஜக அரசிடம் எதிர்பார்க்க முடியாது தான். ஆய்வின் மூலம் இவ்வுண்மைகளை வெளியிட்டதால் அதிருப்தியுற்ற பாஜக அரசு, தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையையே, நம்பகத் தன்மையையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. நுகர்வோர் தங்களின் நிலை குறித்த உண்மைகளை அளித்ததால், மக்களின் தேசப்பற்று குறைந்து விட்டது எனக் கூறுமளவிற்கு மக்களின் தேசப்பற்று கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உண்மைகளை சொல்பவர்கள் தேசவிரோதிகள், மக்கள் பொய்யர்களாக இருக்க வேண்டுமெனவே பாஜக அரசு விரும்புகிறது.

ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்விலும் வேலை உருவாக்கம், விலைவாசி, பொருளாதார நிலைமைகள் குறித்து நுகர்வோரின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டின் 2வது காலாண்டில் உண்மையான மொத்தப் பொருளுற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 6.6 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்தப் பொருளுற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 5 சதவீதமாகக் குறைந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் மேலும் குறைந்து 4.5 சதவீதமாக சரிவடைந்து, மோடி அரசின் 5 டிரில்லியன் வெற்றுரைகள் தகர்க்கப் பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவீதமாக இருந்த நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டு (சிபிஐ) அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக அதிகரித்து நவம்பரில் 5.52% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 3.38 சதவீதமாக இருந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் அக்டோபரில் 7.89% ஆக அதிகரித்து, நவம்பரில் 10% ஆக உயர்ந்ததே இதற்கு முதன்மைக் காரணம். என்ன தான் விவசாய விளைபொருட்களின் விலை உயர்ந்த போதும், அதனால் விவசாயிகள் பலனடையவில்லை, இடைத்தரகர்கள், பெருவணிகர்களே பெருமளவு பயனடைந்துள்ளனர்.

விவசாயத் துறை உற்பத்தி தொடர்ந்து தேக்கமடைந்துள்ளது. இந்தியத் தொழில்துறை உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. நிலக்கரி, உருக்கு, மின்னுற்பத்தி ஆகியவை தேக்க நிலையில் உள்ளந. உற்பத்தித் துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மையப் பணவீக்கம் 3.46% ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பரில் -1.1 ஆக இருந்த மொத்த மையப் பணவீக்கம் அக்டோபரில் -1.6 ஆக வீழ்ந்துள்ளது.

பொருளாதார மந்த நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களை, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மேலும் பாதிக்கும் வகையில் புதிய சட்ட வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது, அவர்கள் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும், விடுமுறை எடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் தங்கள் விருப்பம் போல் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் உரிமையையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் பெயரளவிற்கு மட்டுமே தொழிற்சங்கங்கள் இருக்குமேயொழிய தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் செயல்படும் உரிமை, நியாயமான கூலிக்காகப் போராடும் உரிமை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேரம் பேசும் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மேலும் அடிமைப்படுத்துவதாகவே இச்சட்டம் அமைந்துள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் மட்டும் 35 லட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. கட்டுமானத் துறையிலும் 34 லட்சம் அளவில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புதிதாக பத்திலிருந்து, பன்னிரெண்டு மில்லியன் அளவில் வேலை தேடும் இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் இணைகிறார்கள். ஆனால், இந்தியாவில் 2004லிருந்து எந்தப் புதிய வேலையையும் உருவாக்கவில்லை என்கிறது தேசியப் புள்ளியியல் அலுவலகம்.

பாஜக அரசு பெருமுதலாளிகளின் ரூ. 5.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. பெருமுதலாளிகளுக்கு 1.45 லட்சம் கோடி சலுகை அளித்துள்ளது, நாட்டி நிதி நெருக்கடியை அதிகப்படுத்தும் விதமாகக் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்துள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க 50000 கோடி ஒதுக்கியுள்ளது, நிலத்தரகை ஊக்குவிக்க 25000 கோடி ஒதுக்கியுள்ளது, ஆனால் கல்விக்கு ஒதுக்க மட்டும் அரசிடம் நிதியே இல்லையென கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 3000 கோடியை வெட்டியுள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெறுவது வெட்கக்கேடு இல்லையா? பிறகு கல்வியுரிமை அடிப்படை உரிமை (RTE?) என வாயளப்பதில் அர்த்தம் ஏதும் உள்ளதா?

நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1.03 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருந்த ஜிஎஸ்டி வரி வருவாயைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். ஆனால் தமிழ்நாடு பெற வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டுத் தொகை 5000 கோடிக்கு மேல் இன்னும் கொடுக்கப்படாமல் நிலுவையிலுள்ள நிலையில், மாநிலங்களின் கடும் போராட்டங்களுக்குப் பிறகு தற்பொழுது தான் அக்டோபர் மாத இழப்பீடாக 1400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி 5 முறை வங்கி வீதத்தை (ரெபோ) குறைத்தும், வங்கிகள் பாதி அளவிற்குக் கூட அதன் பயன்பாட்டை நுகர்வோருக்கு வழங்கவில்லை என்ற போதும், தபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பிஎஃப், சிறு சேமிப்பு வட்டியை பொதுத்துறை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தற்பொழுது அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் சேமிப்பு வட்டி குறைக்கப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஏன் அக்கறை பட வேண்டும்? சேமிப்பு வட்டி குறையாவிடில் தனியார் வங்கிகள் பாதிக்கப்படும் என்பதே ரிசர்வ் வங்கியின் கவலையாக உள்ளது.

இந்தியாவின் 42 பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2018-19ல் 2.12 டிரில்லியன் அளவிலான கடன்களை தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து நீக்கியுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 42% அதிகம் மற்றும் மொத்த வாராக் கடன்களில் இது 20%. 2014-15 லிருந்து மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மொத்தம் 5.7 டிரில்லியன் ரூபாய் அளவிலான மோசமான கடன்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இக்கடன்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தாமல் தனியார் வங்கிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவது தான் ரிசர்வ் வங்கியின் வேலையா?

மேக் இந்தியாவின் மூலம் தொழிழக உற்பத்தியும், வேலைவாய்ப்பும் பன்மடங்காகப் பெருகும் என்று வாய்ச்சவடால் அடித்த பாஜக அரசு உண்மையில் என்ன செய்துள்ளது, வரலாறு காணாத அளவில் வேலை வாய்ப்பின்மையையும், வறுமையையும் அதிகரித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ. 1.05 லட்சம் கோடி நிதி திரட்டுவதே பாஜக அரசின் இலக்காக உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதிலே குறியாய் உள்ளதே தவிர, பொருளாதாரச் சரிவை சரி செய்ய எந்த உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இந்தப் பொருளாதார சரிவிற்கான தீர்வாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயத் துறைய மேம்படுத்த வேண்டும், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி, அதை பரவலாக்கி செயல்படுத்த வேண்டும், அதன் மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்றே பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். ஆனால் பா.ஜ.க அரசு வழக்கம் போலவே மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மக்களின் வாங்கும் திறனும் / தேவையும் குறைந்துள்ளதால், முதலீடு செய்ய மாட்டோம் என்று கூறிய பெருமுதலாளிகளை அழைத்து சலுகைகளை அளிக்கிறது.

இதற்கிடையில் அடுத்த நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும், அதே நேரத்தில் நேரடி வரி வருவாயும் குறைக்கப்படும் என்கின்ற குரல்களும் கேட்காமல் இல்லை. வெங்காயத்தின் விலை 400% உயர்ந்துள்ள நிலையில் அதைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நாடாளுமன்றத்தில் கேட்கும் பொழுது, வெங்காயம், பூண்டு தின்று பாவம் செய்யாத ஒரு ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்ததால் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்ற போக்கில் பதில் சொல்லி, தன்னை, தன் குடும்பத்தை, தம் ஆசாரக் குலநலன்களையே முதன்மைப்படுத்தும் ஒரு சுயநலம் வாய்ந்த நிதியமைச்சரிடமும், அவர் சார்ந்த பாஜக அரசிடமும் எளிய மக்களாகிய நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?!

- சமந்தா

Pin It