கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது. ‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை.

dvk protest against vinayaga rallyபுலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெற வேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், அதைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். அரச மரத்தடியில் இருந்த புத்தர் சிலைகளை அழித்து, அங்கே வேத மதக்காரர்கள் விநாயகன் சிலைகளை அமைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த மத அரசியல் பெரியார் மண்ணாகிய தமிழ்நாட்டில் மக்களைப் பிளவுபடுத்தவும் மதப் பகையை உருவாக்கவுமே திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டி, பெரியார் இயக்கம் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பெரியார் கைத்தடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்காக மாற்றாக மக்கள் சமத்துவத்தை உருவாக்க மார்க்கம் கண்ட புத்தர் சிலையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

‘இந்து முன்னணி’ விநாயகன் ஊர்வலம் நடத்தும் இறுதி நாளான செப்.8ஆம் தேதி, புத்தர் சிலை, புத்தர் படங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மாலை 4.30 மணியளவில் அய்ஸ்அவுஸ் பகுதியில் கழகக் கொடியுடன் திரண்டனர். விழுப்புரம், காஞ்சிபுரம், மாவட்ட கழகத் தோழர்களும், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களும், புதுச்சேரியிலிருந்து பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார், அம்பேத்கர் வேடத்துடனும் தோழர்கள் பங்கேற்றனர்.

“மதவாத அரசியலுக்கு மாற்றாக மக்கள் ஒற்றுமை பேசிய புரட்சியாளர் புத்தரை முன்னிறுத்துவோம்; காவல் துறையே, மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்களை தடை செய்! எங்கள் நெறி புத்தர் நெறி; எங்கள் மார்க்கம் புத்தர் மார்க்கம்! என்ற முழக்கங்களை எழுப்பினர். 150 தோழர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.