Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் முழக்கம்

நன்மையின் உருவம் ‘இராமன்’; தீமையின் உருவம் ‘இராவணன்’ என்று கூறி, டெல்லி இராம் லீலா மைதானத்தில், இராவணன் உருவத்தை எரிக்கிறார்கள். இராமன் குறித்து பெரியார் எழுப்பும் இந்த கேள்விகள் இராமன் யோக்கியதையை உணர்த்தும்.

1.            கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுல்கமாக’க் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும்.

2.            நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.

3.            பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.

4.            இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்து விடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, ‘இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப் போகிறாய்’ என்று ‘தாஜா’ செய்கிறான்.

5.            பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.

6.            ‘நாடு உனக்கு இல்லை; நீ காட்டுக்குப் போக வேண்டும்’ என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படுகிறான்.

7.            ‘நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க வேண்டியவனாகி விட்டேனே’ என்று தாயாரிடம் சொல்லிச் கங்கடப்படுகிறான். (ஆனால், காட்டில் பெரிதும் மாமிசத்தையே சாப்பிடுகிறான்)

8.            ‘என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போனதோடல்லாமல் நான் காட்டுக்கும் போக வேண்டியதாயிற்றே’ என்று தாயிடத்தும் மனைவியிடத்தும் சொல்லித் துயரப்படுகிறான்.

9.            ‘எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப்பானா?’ என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறை சொல்லித் துயரப்படுகிறான்.

10.          இராமன் பல மனைவிகளை மணந்திருக்கிறான். (இதை மொழி பெயர்பாளர்களான தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாத் தத்தரும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக் கிறார்கள். இராமாயணத்தில் பல இடங்களில் ‘இராமன் மனைவியர்கள்’ என்றே வாசகங்கள் வருகின்றன)

11.          இராமனிடம் கைகேயி எப்பொழுதும், சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வருகிறான்.

12.          கைகேயி தீய குணமுடையவள்;

13.          அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்.

14.          ‘அவள் என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடுவாள்’ என்று சொல்லி இருக்கிறான்.

15.          காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கருதக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம, ‘கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்’ என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.

16.          தனக்கு ஆபத்து வரப்போவதாக நினைத்த மற்றொரு சமயத்தில், ‘இனி, பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்’ என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படிப் பேசியிருக்கிறான்.

17.          கைகேயி இராமனிடம், ‘இராமா! அரசர் நாட்டைப் பரதனுக்கு முடிசூட்டுவதாகவும்,  நீ காட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்’ என்று சொன்னபோது இராமன், ‘அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே’ என்று சொல்லுகிறான்.

18.          தந்தையை மடையன், புத்தி இல்லாதவன் என்று சொல் கிறான்.

19.          தந்தையை, ‘நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டிரு; நான் காட்டுக்குப் போய் வந்து விடுகிறேன்’ என்று சொல்லி, பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.

20.          ‘எனக்குக் கோபம் வந்தால் நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று, என்னை அயோத்திக்கு அரசனாக்கிக் கொள்வேன். உலகத்தார் பழிப்பார்களே என்றுதான் சும்மா இருக்கிறேன்’ என்கிறான். இதனால் இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ இலட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.

21.          தன் மனைவி சீதையைப் பார்த்து, ‘நீ பரதன் மனங் கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள்; அதனால் பின்னால் நமக்கு இலாபம் ஏற்படும்’ என்றான்.

22.          இராமன் காடு சென்ற சேதி கேட்டு மனம் வருந்தி, பரதன் இராமனைக் கூப்பிடக் காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது, ‘பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணிவிடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?’ என்று கேட்கிறான்.

23.          மற்றும் ‘உன் தாய், அவளது எண்ணம் நிறைவேறிச் சுகமாய் இருக்கிறாளா?’ என்றும் கேட்கிறான்.

24.          பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக் கொடுத்த பிறகே - தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே ‘சுல்க’மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான்.

25.          பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இராமனுடைய பாதரட்சையை வாங்கி வந்து சிம்மாசனத்தில் வைத்துத் தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராக இருப்பவனை, இராமன் சந்தேகப்பட்டு - அநுமனை விட்டு, ‘நான் படை களோடும் விபீடணன், சுக்ரீவன் ஆகியவர் களோடும் வருகிறேன் என்று சொல்! அப்போது அவன் முகம் எப்படி இருக்கிறது, இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான், என்பவைகளைக் கவனித்து வந்து சொல்! ஏனெனில், எல்லா வகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பி இருக்கும் நாட்டின்மது யாருக்குத்தான் ஆசை இருக்காது?’ என்று சொல்லிப் பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான்.

26.          மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருக்கிறான். மனைவி நெருப்பில் குளித்துவிட்டு வந்த பிறகும், பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு, அவள் கர்ப்பமானதைப் பற்றிச் சந்தேகப்பட்டு - அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் கண்ணைக் கட்டி விட்டுவிடச் செய்கிறான்.

27.          ‘சீதை கற்புடையவள்’ என்று வால்மீகி சத்தியம் செய்தும் இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாக வேண்டியதாயிற்று.

28.          தமையனைக் கொல்லச் செய்து இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதித் துரோகச் சிந்தனையோடு வந்த சுக்கிரீவன், விபீடணன் ஆகிய அயோக்கியர்களை அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்கிறான்.

29.          தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதர துரோகிக்காக வேண்டி மறைந்து இருந்து திடீரென்று கொல்லுகிறான்.

30.          விபீடணனை ஏற்கும்போது தன்னை அறியாமலே தனது கெட்ட எண்ணத்தையும் வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்திவிடுகிறான். அதாவது - ‘தனக்கு மூத்தவன் தீயவனாக இருந்தாலும் அவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் என்கின்ற அறத்தை, எல்லோரும் கைக் கொள்ள மாட்டார்கள்; உடன்பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?’ என்கிறான். இதில், தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்ளுகிறான்.

31.          வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, ‘மிருகங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டியதில்லை’ என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்றிருக்கிறான். வாலிமீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்றிருக்கிறான்.

32.          இராமன் பல பெண்களை மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து அங்க ஈனமாக்கிக் கொடுமை செய்திருக்கிறான்.

33.          பல பெண்களைக் கொன்றிருக்கிறான்.

34.          பெண்களிடம் பொய் பேசியிருக்கிறான்.

35.          பெண்களைக் கேவலமாய் மதித்திருக்கிறான்; ‘பெண்களை நம்பக் கூடாது’ என்கிறான்; ‘மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக் கூடாது’ என்கிறான்.

36.          அதிக காமாந்தகாரனாக இருக்கிறான்.

37.          அனாவசியமாக உயிர்களைக் கொன்றும் தின்றும் இருக்கிறான்.

38.          தான் அரக்கர்களைக் கொல்வதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத்தான் யாருக்கோ வாக்குக் கொடுத்துவிட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லியிருக்கிறான்.

39.          அரக்கர்களோடு வலிய சண்டைக்குப் போகவேண்டும் என்கிற ஏற்பாட்டுடனே, சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்றிருக்கிறான்.

40.          கரனோடு போர்புரியும்போது, ‘உங்களை யெல்லாம் கொல்லுவதற்கு நான் காட்டிற்கு அனுப்பப்பட்டேன்’ என்கிறான்.

41.          ஒருவித யோக்கியதையும் இல்லாத - துரோகியாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணமடைகிறான். ‘என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்ட வேண்டும்’ என்கிறான்.

42.          இலங்கையை விபீடணனுக்குப் பட்டம் கட்டி விட்டு, சீதையை விட்டுவிட்டால் இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுவதாக அங்கதனிடம் இராமன் சொல்லியனுப்புகிறான். இதிலிருந்து இராவணன் மீது வேறு குற்றமில்லை என்று தெரிகிறது.

43.          பரதனும், கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும் ‘சத்தியாகிரகம்’ செய்தும் அழைத்த போது, ‘தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய வேறு யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன்’ என்று சொல்லி நாட்டுக்கு வர மறுத்துவிட்ட இராமன் - அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய், அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் எப்படிச் சம்மதிக்கிறான்?

44.          சம்மதித்து மாத்திரமல்லாமல், தந்தை இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல் திரும்பி அயோத்திக்கு வந்து முடிசூட்டிக் கொள்ளுகிறவரை - அதே கவனமாக, ஆசையாக, நம்பிக்கையாக இருக்கிறான்.

45.          தபசு செய்ததற்காகச் சூத்திர வாலிபனைக் கொன்றிருக்கிறான்.

46.          கடைசியாக, சாதாரண மனிதர்களைப்போலவே, இராமன், இலட்சுமணனையும்,தள்ளிவிட்டுத் தானும் ஆற்றில் விழுந்து சாகிறான். பிறகு, உப இந்திரனாக ஆகிறான். (தோழர் சி.ஆர். சீனிவாய்யங்கார் மொழி பெயர்ப்பு அயோத்தியா காண்டம் சருக்கம் 8, பக்கம் 28, 36)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Manikandan 2016-11-04 10:13
ஊருக்கு இளிச்சவாயர்கள் ஹிந்துக்கள் அவர்களின் கடவுளை எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவமதிக்கலாம்... கேட்டால் கருத்து சுதந்திரம் என்பார்கள், ஆனால் அதே கருத்து சுதந்திரம் மற்ற மாதங்களுக்கு எல்லாம் செல்லாது.
Report to administrator
0 #2 manoharan 2016-11-05 22:35
Manikantan could not give reply to even one among 46 accusations made against Raman by Periyar.If he cannot answer even one accusation,he should be ashamed.
Report to administrator
0 #3 jayakumar 2016-11-06 19:20
மூடம்நம்பிக்கைக ளின் மூலமும், ஜாதி வித்தியாசம் சொல்லியும் இன்னும் பல நூதன வழிகளில் பல இத்துக்களைச் சில இந்துக்களே தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.
இந்த மோசடிகளை எதிர்க்கவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல்; இதை அம்பலப்படுத்துக ிற முற்போக்களார்கள ைப் பார்த்து,
கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ‘நீ முஸ்லீம கேப்பியா?’ என்கிறார்கள்.
இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம்?
Report to administrator

Add comment


Security code
Refresh