அய்யோ பாவம் பிராமணர்களை இதரர்கள் அவமரியாதையாகப் பேசுகிறார்களாம்!

சேலத்தில் 16.01.1945இல் பிரபல பார்ப்பனர்கள் ஒன்றுகூடி தமிழ்நாட்டில் சமீபகாலமாய்ப் பிராமணர் களை பிராமணரல்லாதார்கள் அவமரியாதையாகத் தாக்கிப் பேசுகிறார்கள், அகவுரவமாக நடத்துகிறார்கள், பிராமணர்களைத் தூஷிக்கும் முறையில் மேடைகளில் நாடகங்களும், கதைகளும் நடக்கின்றன, பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகள் பிராமணர்களைத் தூஷிப்பதும், தூஷித்து நாடகங்களில் நடிப்பதும் ஆன காரியங்கள் நடக்கின்றன. இவைகள் ஒழிக்கப்படப் பிராமணர்கள் பாடுபட வேண்டும், அதற்கு ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இப்படிப் பேசியவர்களில் முக்கியமான பார்ப்பனர் திவான்பகதூர், ஆர்.வி.கிருஷ்ணன் என்று இதுவரை அழைக்கப்பட்டு பெருத்த உத்தியோகத்தில் 30 வருஷம் இருந்து வந்து பென்ஷன் பெற்ற திவான் பகதூர் ஆர்.வி.கிருஷ்ணய்யர் என்று இப்போது அழைத்துக் கொள்ளப்படுகிறவர்களாவார்கள்.

அதாவது எப். ஜி. நடேசனாய், கிறிஸ்தவராய் இருந்து பெரிய உத்தியோகம் பெற்று பென்ஷன் வாங்கிய பின் இந்துவாகி எப். ஜி. நடேசய்யர் ஆனதுபோல் ஆனவர்.

மற்றும் அவர் அக்கூட்டத்தில் பேசியிருப்பது என்ன வென்றால், 100-க்கு 3 பேர்களுள்ள பிராமண சமுகத்திற்கு அவர்களது உரிமை கிடைக்கவில்லை, இஞ்சினீரிங், மெடிக்கல் முதலிய தொழில் காலேஜ்களில் பிராமணர்களுக்குப் பிரவேசனம் மறுக்கப்படுவது அநீதி என்றும், புத்திசாலிகளாக இருப்பவர்களை காலேஜில் சேர்க்காதது தேசத்துக்கு நஷ்டமான காரியம்.

என்றும் பேசி இருக்கிறார். ( இவை 20ஆம் தேதி, 23ஆம் தேதி மெயில், சுதேசமித்திரன் முதலிய தினசரிகளில் இருப்பவைகளாகும்)

இந்த மாதிரி பார்ப்பனர்கள் கூடிப்பேசவும், இதற்கு ஆகத் தங்களுக்கென ஒரு தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டு வேலை செய்ய முன் வரவும் ஆன நிலை இந்த 1945ஆம் ஆண்டிலாவது தோன்றியிருப்பது நாட்டிற்கு ஒரு பெரிய நல்ல காலமேயாகும். இவர்கள் சொல்லுவது உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி இப்படிப்பட்ட ஒரு காலம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு காதுகுளிர்ந்த சேதியாகவாவது இது இருக்கும் என்றே நாம் கருதுகிறோம்.

இந்தப் பார்ப்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வதும், வேத சாஸ்திர புராண இதிகாசங்களின்படியும், இந்துமத தத்துவத்தின்படியும் பிராமணர்களுக்கு உள்ள மரியாதை தங்களுக்கு இருக்க வேண்டும் என்பதும், அதுபோலவே பிராமணரல்லாத வர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்று சொல்லி வேத சாஸ்திரப் புராண இதிகாசப்படியும், இந்து மத தத்துவப் படியும் அவர்களுக்குள்ள மரியாதைதான் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதும், அதற்குத் தகுந்தபடி மாநாடுகள் சமுதாய சம்பந்தப்பட்ட முறைகள், சட்டங்கள், நடப்புகள், நாடகங்கள், சினிமாக்கள், கதைகள், பள்ளிக் கூடங்களில் பாட நடப்புகள் முதலியவைகள் இருந்து வருவதும் என்றால் இந்த இரண்டையும் ஒழித்து மக்கள் யாவரும் சமமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட இந்தக் காலத்து மக்கள் ஏதாவது ஒரு காரியம் செய்யத்தானே முயல்வார்கள். அதுவும் திவான் பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்ற படித்த கூட்டத்தார்கூடத் திருந்தாமல் தன்னைப் பிராமணன் என்று துணிவாய்ச் சொல்லிக் கொண்டு பிராமண உரிமையை சாஸ்திரப் புராணப்படி காப்பாற்றிக் கொள்ளவும் அமல் நடத்தவும் முயற்சித்தால் அவர் அந்தக் கூட்டத்தில் சொல்லிக் கொண்டு அழுதது போன்ற காரியங்கள் நடப்பது அதிசயமா? அல்லது இத்தனை நாள் அவை நடக்காமல் இருந்தது அதிசயமா என்று கேட்கிறோம்.

அதிலும் அவர் அன்று பேசி இருப்பதில் குறும்புத்தனமான வார்த்தை என்னவென்றால் பிராமணர் களுக்குக் காலேஜுகளில் பிரவேசம் அளிக்காவிட்டால் புத்திசாலிகள் விலக்கப்பட்டதாக ஆகி தேசத்துக்கு நஷ்டமேற்படும் என்பது ஆகப் பேசி இருப்பதாகும்.

பிராமணர்கள் என்றால் புத்திசாலிகள் என்றும், மற்றவர்கள் என்றால் புத்தி இல்லாதவர்கள் என்றும் தனக்குள் கொண்டுள்ள அகம்பாவ உணர்ச்சியே அவரை அப்படிப் பேசச் செய்தது என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் இதற்குச் சொல்லமுடியும்? உண்மையில் இந்த நாட்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவாவது மான உணர்ச்சி வந்திருக்கிறது என்பதற்குக் கடுகளவாவது அறிகுறி வேண்டுமானால், எவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டு தான்தான் புத்திசாலி என்று கருதிக்கொண்டு பிராமண உரிமை வேண்டுகிறானோ அவனை, சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லப்படுகிறவன், கான்பூர் மாநாட்டில் போதானந்தகுரு சாமியார் சொன்ன படியும், இவர்கள் பேசியபடியும் அவமரியாதையாகவே நடத்தப் பழக வேண்டும். அதனால் வரும் பயனை அடைய முந்த வேண்டும். இந்தப்படி ஒரு பத்து வருஷகாலமாவது நடந்தால்தான் சூத்திரப்பட்டமும், பஞ்சம (சண்டாள)ப் பட்டமும், புத்தி இல்லாதவர்கள் என்கின்ற பட்டமும் திராவிட மக்களைவிட்டு நீங்க வழி பிறக்கும்.

திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்றவர்களே பிராமணர் என்றால் புத்திசாலி மற்றவன் என்றால் மடையன் என்பது ஆக பேசத் துணிந்த பிறகு இனி மற்ற பார்ப்பனனிடம் யோக்கியமான எண்ணத்தையோ, நடத்தையையோ காணமுடியுமா? என்று கேட்கின்றோம். உலகத்தில் பார்ப்பனர்கள் இல்லாத நாடெல்லாம் பாழடைந்துவிட்டதாக இவருடைய எண்ணமா? அல்லது தங்கள் இனத்தைத்தவிர மற்ற இனத்தார் இஞ்சினீர், வைத்தியர், வக்கீல் முதலிய கொள்ளை அடிக்கும் தொழிலுக்கு வரக்கூடாது என்பது இவரது எண்ணமா? என்பது விளங்கவில்லை.

இன்றைய தினம் இஞ்சினீர் இலாகாவை எடுத்துக் கொண்டால் அதில் பெரும் பதவியில் இருக்கும் ஆள்கள் கிருஷ்ணய்யர் ஜாதியாராகவே 100-க்கு 90 பேர்களுக்கு மேலாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன வென்று கேட்கிறோம். மற்றவர்கள் அந்த விகிதாச்சாரம் வரும்வரை அதிகமாக இருப்பவர்களை நிறுத்தித்தானே ஆகவேண்டும்? இதற்குச் சமாதானம் சொல்ல வேறுவகை இல்லாவிட்டால் மற்றவர்களுக்குப் புத்தி இல்லை; ஆதலால் அவர்கள் கூடாது என்று சொல்லுவது யோக்கியமான பேச்சாகுமா?

வகுப்பு விகிதாச்சாரத்தின் கோரிக்கைப்படி டிபுடி கலெக்டர், டிபுடி சூப்ரண்டுகள், ஜில்லா முன்சீப்புகள், ஜட்ஜுகள் முதலாகியவர்கள் பார்ப்பனரல்லாதவர்களில் நியமிக்கப்பட்டு வருகின்றார்களே, இதனால் இதுவரை ஏற்பட்ட கெடுதி என்ன என்று கேட்கிறோம். சுயராஜ்ஜியத்தின் பேரால், எஞ்சினீர் காலேஜில் மழைக்குக் கூட ஒதுங்கி இருந்திருக்காத யாகூப் உசேன்சேட் அவர்கள் அந்த இலாகா மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தாரே அப்போது தேசத்துக்கு வந்த நஷ்டமென்ன?

பார்ப்பனர் இல்லாத ரஷ்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் எஞ்சினீர் வேலை, வைத்திய வேலை சரியாக நடக்கின்றதா இல்லையா? என்றும் கேட்கிறோம். நிற்க, ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் தன்னை அவனிலும் உயர்ந்த ஜாதிப் பிறவி என்று சொல்லிக் கொள்வானானால் கேட்டுக்கொண்டிருக்கிற மனிதன் முன்னவனை, அவமானப்படுத்தாமல், அவன் மனம் நோகும்படி பேசாமல் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் என்று திவான் பகதூர் கருதினார் என்பது நமக்கு விளங்கவில்லை.

பிராமணர்களைத் தாக்கும் நாடகம் நடத்தியதற்கு ஆகத் திவான்பகதூர் மனவருத்தப்படுவது போல், மற்றவர்களைப் பிராமணர்கள் தாக்குவதுபோன்ற நாடகங்களைக் கண்டால் மற்றவர்களுக்கு மனம் புண்படும் என்கின்ற எண்ணம் ஏன் திவான் பகதூருக்குக் தோன்றவில்லை. நவீன நந்தனாரில் பிராமணர்களைத் தாக்கிப் பேசப்படுவது உண்மையென்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் புராதன நந்தனாரில் (பக்த நந்தனாரில்) பிராமணரல்லாதாரைத் தாக்கிப் பேசப்படுவதும், இழித்து, பழித்து, பறையா - மாடுதின்னும் புலையா - தீண்டப்படாத சண்டாளா - ஈன ஜாதியானே என்றெல்லாம் பேசப்படு வதும், இன்னும் அவன் கோவிலுக்குள் அனுமதிக்கப் படாதவன் என்று சொல்லப்படுவதும் ஆன பேச்சுக்கள் பறையருக்கு திவான்பகதூர் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியாய் இருக்கும் என்று கிருஷ்ணய்யர் அவர்கள் கருதுகிறாரா? என்று கேட்கிறோம். அப்படி இவர் இதுவரை கருதாதவராய் இருந்திருப்பாரானால் பார்ப்பனருடைய நலத்தையும், மரியாதையையும் காப்பாற்றப் பாடுபடுவது போல் அவர்களுடைய நலத்தையும், மரியாதையையும், கவுரவத்தையும் காப்பதற்கு ஆக இவர் என்ன பாடுபட்டார் என்று கேட்கின்றோம்.

இந்த நாடு யாருடையது? இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் யார்? திவான் பகதூர் கிருஷ்ணய்யருக்கோ அவருடைய இனத்தாருக்கோ இந்த நாட்டில் சொந்த மென்ன? அவருக்கு இந்த, நாட்டில் அந்தஸ்து என்ன? அவர் இந்த நாட்டாரானால் அவர் எப்படி பிராமணராவார்? பறையனைவிடச் சூத்திரனை விட இவர் எப்படி உயர்ந்த பிறவி ஆவார்? இவர் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், புத்திசாலி ஜாதி என்றும் சொல்லிக் கொள்ள அவருக்கு உரிமை எப்படி வந்தது? இவைகளை யோசித்துப் பார்ப்பாரேயானால் இதுவரை இல்லாவிட்டாலும் இனி மேலாவது அவரும் அவரது கூட்டமும் அவமரியாதை யும், அகவுரவமும் அடையாமல் எப்படி இருக்க முடியும்? கிருஷ்ணய்யருக்கு அவமரியாதைக்கும், அகவுரவத்திற்கும் உண்மையான அருத்தம் தெரியுமானால் இவருடைய வேதத்தில் சாஸ்திரத்தில், தஸ்யூக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதற்கு அருத்தம் என்ன? அப்படிக் குறிப்பிட்டிருப்பது யாரை? அவர்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று யோசித்துப் பார்க்கட்டும், தேவாரங்களில் ஞானசம்பந்தய்யர் என்பவர் 9 பாட்டுகளுக்கு ஒரு பாட்டாக குண்டர்,மடையர், கயவர், ஈனப் பிறப்பர், முதலியன 100 வார்த்தைகள் சொல்லி வைதிருப்பதும், பெண்களைக் கற்பழிக்க வேண்டும் என்று சொல்லிப்பாடி இருப்பதுமான வார்த்தைகள் யாரைப் பற்றிச் சொல்லப்பட்டவைகள்? அவைகள் எல்லாம் கவுரவமான மரியாதையான வார்த்தைகளா? என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கட்டும்.

இப்படி எல்லாம் சொல்லுவதற்கு, மதம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கின்றன என்று கிருஷ்ணய்யர் சொல்வாரானால் தயவுசெய்து அவர் பாகவதத்தைப் பார்க்கட்டும். இன்று மக்கள் பிராமணர்களைத் தாக்குவது போலவும், அதைவிட எண்மடங்காகவும் இரணியன் பிராமணர்களைத் தாக்கி பிராமணியம் மாத்திரம் அல்லாமல் பிராமணப் பூண்டையே அழித்துவிட்டு வாருங்கள் என்று தனது ஆள்களை கோடரி, மண்வெட்டி, கடப்பாரையுடன் அனுப்பி இருப்பதைக் காணலாம். அந்தப் பாகவதமும் ஒரு பிராமணரால் வெளியிடப்பட்டதேயாகும். பாகவதத்தில் உள்ளதைச் சொல்லி நாடகம் நடத்தினால் இவர்களுக்கு ஏன் மனவருத்தம் வரவேண்டும் என்று மற்றவர்கள் கேட்கமாட்டார்களா?

கிருஷ்ணய்யர் போன்ற பார்ப்பனர்கள் தமது சமுதாயத்திற்கு ஏதாவது யோக்கியமான தொண்டு செய்யவேண்டு மானால் முதலாவதாகப் பார்ப்பனரால் எந்த எந்தச் சமுதாயத்திற்கு இழிவு, தொல்லை, முன்னேற்றத்தடை, சுரண்டப்படும் தன்மை ஆகியவை இருக்கின்றனவோ அவை முதலியவைகள் ஒழிக்கப்பட பாடுபட்டால் பார்ப்பனரின் சாதாரண வாழ்வு இனி இந்த நாட்டில் இருக்க இடமேற்படும். அதை விட்டு விட்டு ராமராஜ்ஜிய சுயராஜ்ஜியமும், வருணாசிரம சுயராஜ்ஜியமும், மனுதர்ம ராஜ்ஜியமும், கீதை ராஜ்ஜியமும், தேவார, பிரபந்த பெரிய புராண ராஜ்ஜியமும், பெறவும் காப்பாற்றப்படவும் முயற்சி செய்வதனாலும், 1000 பார்ப்பனியப் பாதுகாப்புச் சங்கங்கள் ஏற்படுத்துவதனாலும், ஆயிரம் ஆர். வி. கிருஷ்ணய்யர்கள், ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சிவசாமி அய்யர்கள், ராமசாமி சாஸ்திரிகள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், ராஜகோபாலாச்சாரிகள் நரசிம்ம ஸ்வாமிகள், ரமண ரிஷிகள், காந்தி மகாத் மாக்கள் பாடுபட்டாலும் தாக்குதல்களை, அவமரியாதை களை அடக்கி விட முடியும் என்று எண்ணுவது அறியாமையேயாகும்.

சென்னை மாகாணத்தில் இன்று நடக்கும் பார்ப்பனத் தாக்குதல் மிக மிகக் கொஞ்சமாகும். பூனா, நாசிக், கான்பூர், லக்னௌ, லாகூர் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் சென்னை மாகாணத்தில் ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

சேலத்தில் கிருஷ்ணய்யர் அவர்கள் இந்தக் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயேதான் பம்பாய் மாகாண பூனா நகரத்தில் நடந்த இந்துமகா சபைக் கூட்டத்தில் புராதன நந்தனைச் சேர்ந்த நவீன நந்தன் மக்கள் புகுந்து, கூட்டம் நடக்காமல் கலவரம் செய்ததாகவும், நாங்கள் இந்துக்களல்ல எங்களுக்கும் இந்து (சங்கராந்தி) பண்டிகைக்கும் சம்பந்தமில்லை என்றும் ஆட்சேபித்துக் குழப்பம் விளைவித்தனர் என்றும் கலவரத்துக்குப் பின்பு கூட்டம் நடந்தது என்றும் (25.01.1945) விடுதலை பத்திரிகை அ.பி. யில் காணப்படுகிறது.

மற்றும் அதே பத்திரிகையில் அய்க்கிய மாகாணத் தில் அதாவது, இளவரசு காந்தியாரான பண்டித ஜவஹர்லால் நேரு வசிக்கும் ஊராகிய அலஹாபாத்தில் ஏறக்குறைய அதேசமயத்தில் தோழர் ஹரிகால் அய்ஸ்வர் அவர்கள் தலைமையில் ஒரு கூட்ட மக்கள் கூடி தாழ்த்தப்பட்ட வகுப்பு, உயர்ந்த ஜாதி வகுப்பு, முஸ்லிம்கள் என மூன்று பிரிவாக மக்கள் பிரிக்கப்பட்டு தொகுதி வழங்கும்படியான அரசியலமைப்பு ஏற்பட்டால்தான் தங்களால் அங்கீகரிக்க முடியும் என்று தீர்மானித்திருப்பதாக ஒரு சேதி காணப் படுகிறது.

இந்தப்படியே கான்பூர் எல்லா இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பார் மாநாட்டிலும் துவிஜார்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்கிற மூவர் கள்) சம்பந்தமற்ற தனித்தொகுதியும் தனிப் பிரதிநிதித் துவமும் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

40 லட்சம் மக்களான மலையாள நாட்டுத் தீயர் (ஈழவர்) சமுதாய மாநாட்டிலும் தாங்கள் இந்துக்களல்ல என்றும், தங்களுக்கும் இந்துமத சாஸ்திர புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி இன்னமும் எத்தனையோ கண்டனங்களும், வெறுப்புகளும், கலவரங்களும், குழப்பங்களும், அவமரியாதைகளும், அகவுரவங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. இதைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்துவிடுவதால் அதிகம் தெரிவதில்லையே ஒழிய, எங்கும் ஒன்றுபோல் நடக்காமல் இருப்பதில்லை.

ஆதலால், கிருஷ்ணய்யர் அவர்கள் இதற்காக ஆத்திரப்படுவதன் மூலம் ஒருபலனும் அடைந்து விட முடியாது. ஆனால் புத்திசாலித்தனமாக தாங்கள் ஆரியர்கள் என்றும், தங்கள் மதம் கலை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்பவைகளுக்கும் , திராவிடர் களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் தாங்கள் தவிர்த்த மற்றவர்கள் சூத்திரர்கள் அல்ல வென்றும், பறையர் (சண்டாளர்) அல்லவென்றும் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மற்ற ஜாதிகளின் தாக்குதல் இல்லாமல் வாழ முடியும், இல்லாவிட்டால் தங்களைக் கடவுளிடம் (இயற்கைக்கு) ஒப்படைக்க வேண்டியதுதான்.

இன்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இந்துக்களைக் காளர்கள் என்று அழைக்கிறார்கள். இந்தப்படியே தங்கள் ஆதாரங்களையும் செய்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களது கூட்டங்களிலும் நன்றாய் வெளுத்து வாங்குகிறார்கள். அவர்களை இதுவரை யாரால் என்ன செய்ய முடிந்தது? அவர்கள் அகவுரவப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் மற்றவர்கள்தான் திருத்திக் கொள்ள முடிந்தது. அந்தப் புத்தி இந்தக் கூட்டத்திற்கு வந்தால்தான் தாக்குதல் குறையும், மற்றபடி கூட்டம் கூட்டி அழுவதால், ஸ்தாபனம் ஏற்படுத்துவதால் பயனில்லை என்பதையும் புது வருஷ, பொங்கல் வாழ்த்துச் சேதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

----------
தந்தை பெரியார் - “குடிஅரசு” - தலையங்கம் - 27.01.1945

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா