periyar 381சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே!

முன் 16 - 10 - 30ம் தேதி குடி அரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு அந்த சாதிகளே தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம்.

அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் ³ சாதிக்கிரமத்தை அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தான் “பள்ளு பறை பதினெட்டு சாதிகள்” என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

(இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வட மொழிப்படி பார்த்தாலும் சரி, தென் மொழிப்படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4 வது சாதி என்பதை ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதிலிருந்து அறியக் கிடக்கின்றது.)

அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் “பணி செய்யும் பதினெண் வகைச் சாதியார்” என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சன் கல் தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)

ஆனால் இதே பதினெண் மக்களை அபிதானகோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள்களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதினெட்டு பெயர்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன.

அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் “கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்பவர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளாள் செட்டிகள். இவர்கள் சோழபுரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர் முதலிய பல திறப்பட்டவர்கள்.

இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார்காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாம்ச போசனம் செய்பவர்கள்) இவரிற் றாழ்ந்தோர் அகம்படியர், அவரிற்றாழ்ந்தோர் மறவர். அவரிற்றாழ்ந்தோர் கள்ளர். அவரிற்றாழ்ந்தோர் இடையர். இவர்கட்கடுத்த படியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்தப் படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எதிலும் “பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வுக் கிரமமும் சந்தேகமோ, ஆக்ஷபனையோ சொல்லுவதற்குச் சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தால் ஜாதியின் சூட்சித் தத்துவம் நன்றாய் விளங்கும்.

மற்றபடி க்ஷத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆக்ஷபனைகளும் க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங்களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவு படுத்திவருவதும் அநேக இடங்களில் பிரதிய க்ஷமாய் காண்கின்றோம்.

மற்றும் ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன் படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.

எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது “விபசாரம்” “கீழ் மேல் ஜாதி கலப்பு” என்று சொல்லும் படியான “இழிதன்மை”யில் பிறந்தவர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவமாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.

மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக்கும், ஜாதியை கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆக்ஷபனையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய்ச் சொல்லுவோம்.

இவை ஒருபுறமிருக்க இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும், உரிமைகளையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதிப் பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாதபடியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

அதாவது “நாலாவது ஜாதியார்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்கு பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது” என்று பார்த்தால் இப்போது “பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்” (அதாவது கிரிமினல்ட் ரைப்ஸ்) என்று சொல்லக் கூடியவர்களுக்கு சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்டதிட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரியாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரணமாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.

அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.

“ஸ்நாத மஸ்வம், கஜமத்தம்
ரிஷபம் காம மோஹிதம்
சூத்தரமக்ஷரசம்
யுக்தம் தூரதப்
பரிவர்ஜையேல்”

அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதங் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.

“ஜப, ஸ்தப, தீர்த்தயாத்திர,
பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம்
தேவதாரா தனம் சசய்வஸ்திரீ
சூத்திர பத தானிஷள்”

அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒரு போதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.

“நபடேல் சமஸ்கிருதம் வாணீம்”
(சூத்திரன்) சம்ஸ்கிருதம் படிக்கக் கூடாது என்பது கருத்தாகும்.

“நைவ சாஸ்திரம் படே நைவ
சுருணுயாத் வைதி காக்ஷரம்
நஸ்நாயாது தயால் பூர்வம்
தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்”

(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.

“இதிஹாச புராணானி
நபடேச்ரோது மர்ஹசி”

இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.

“சாதுர்வர்னியம்
மயாசிருஷ்டம்
பரிசரியாத் மகம்
கர்மம் சூத்ரஸ்ஸியாபி பாவனாம்” (கீதா ஸ்லோகம்)

நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்கு பிராம்மண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.

இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப் பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.

எந்த காரணத்தாலோ இந்து மத தர்மத்தை அனுஷ்டித்துத் தீர வேண்டியதல்லாத ஒரு ஆக்ஷி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது.

ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலை கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஏதோ “பொல்லாத விதிவசத்தினால்” இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணாசிரமத்தைக் கோரும் “தேசீய” தலைவர்களும் கேட்க்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம் மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒருக்காலமும் போகவே போகாது என்பதை கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

இன்றைய தினம் தேசியவாதிகளாய் இருக்கின்றவர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூர்ண சுயேச்சை அடைய வேண்டுமென்கின்ற உண்மையான ஆசையுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள்ளைக்கார ஆக்ஷியிருக்கும் போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியதுதான் அறிவுள்ள வேலையாகும்.

அதை விட்டு விட்டு முதலில் “நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளு கிறோம்” என்று சொன்னால் அது “தான் சாவதற்கு தானே மருந்து குடித்தது” போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது.

ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொருவரும் மேல்ஜாதி ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதும் தனக்கு கீழ் பல ஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள்கையும், ஜாதி ஆதிக்கத் திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆக்ஷியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதிக் கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும் என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆக்ஷிக்கோ அடிமைத் தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது.

ஆனால் “அம்பட்கார்களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார்களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து “எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவு படுத்தும் சமூகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம்.

இப்பொழுது நீங்கள் போங்கள்” என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைத்தனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.

ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்றும் அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்சஸ் ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும் மதத்தையும் தெரிவிக்காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 30.11.1930)

Pin It