சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இராமன், இந்து கடவுளர்கள் நிர்வாணமாக செருப்பு மாலையோடு எடுத்து வரப்பட்டார்கள் என்று ‘ராஜகுரு’க்கள் ஆலோசனையால் பேட்டி அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் நடந்தது என்ன என்பதை அதில் பங்கேற்ற தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி விளக்குகிறார்.

 “இப்போதும்கூட, ‘ஊர்வலத்தில் ராமர் படத்துக்குச் செருப்பு மாலையிட்டிருந்த காட்சி’ என்று துக்ளக் பத்திரிகை, ஒரு தெளிவில்லாத படத்தைத்தான் பிரசுரித்திருக்கிறது.துக்ளக் விழாவில், தான் பேசிய பேச்சுக்கு, ‘அவுட்லுக்’-கில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் காண்பித்து ‘மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்! இதைத்தொடர்ந்து, ‘ரஜினிகாந்த் தன் போரை, பெரியாரிடமிருந்து ஆரம்பித்திருக்கிறார்’ என்று ஆதரவுக் குரல்களும் ‘பா.ஜ.க-வின் பினாமி முகம்தான் ரஜினி என்பது உறுதியாகிவிட்டது’ என்று எதிர்ப்புக்குரல்களுமாகத் தமிழகமே கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், 1971-ல் சேலத்தில் நடைபெற்ற ‘மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு - பேரணி’யில் பங்கேற்ற ‘திராவிடர் விடுதலை கழக’த் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினேன்...

 ‘`துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’’

“புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூடநம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா...’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை!

ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி - சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது’ என்று சொல்லியிருக்கிறார். ராமர் - சீதை உருவங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்படவில்லை என்பதை தற்போது வெளியாகியுள்ள துக்ளக் பத்திரிகையிலுள்ள படங்களே சொல்கின்றன. எனவே, ரஜினிகாந்த் சொல்லியதும் பொய்; அவுட்லுக் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையும் பொய் என்று தெரிகிறது. அன்றைக்கு முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதிக்கும் கூட, மாநாட்டைப் பற்றிய பொய்யான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அரசுப் பொறுப்பில் இருந்த அவரும் அதற்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம்.’’

“1967-லேயே இதேபோன்றதொரு நிகழ்வு ஒன்றில், ‘தி.க-வினர் செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை அன்றைய முதல்வர் காமராஜர் கண்டிக்கவில்லை. அதுபோல் நான் இருக்கமாட்டேன்’ என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறாரே?’’

“இப்போதும்கூட, ‘ஊர்வலத்தில் ராமர் படத்துக்குச் செருப்பு மாலையிட்டிருந்த காட்சி’ என்று துக்ளக் பத்திரிகை, ஒரு தெளிவில்லாத படத்தைத்தான் பிரசுரித்திருக்கிறது. தெளிவற்ற அந்தப் படத்தை உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏற்கெனவே சொன்னதுபோல், ஆளுங்கட்சியாக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. அவருக்குச் சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசியல்ரீதியான பதில் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட அன்றைய பேரணிக்கு எதிராக, ஜனசங்கத்தினர் கறுப்புக்கொடி காட்ட அனுமதி கேட்டிருந்த சூழலில், முதல்வராக இருந்த கருணாநிதியும் ஜனநாயகத்தை மதித்து அனுமதி வழங்கியிருந்தார். ஆனால், அவர்களோ அந்த ஜனநாயகத்தை அத்துமீறித்தான் பேரணியினர் மீது செருப்பை வீசியிருக்கிறார்கள். வீசப்பட்ட அந்தச் செருப்பை எடுத்து எங்கள் தொண்டர்களும் படங்களின்மீது கூடுதலாகவேகூட அடித்திருக்கலாம். ஆனால், இதுகுறித்துப் பேசுகிற அனைவருமே முதல்வினை குறித்துப் பேசாமல், எதிர்வினையை மட்டுமே பேசுவதைத்தான் அரசியல் என்கிறோம்.’’

‘`இந்து மதத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கை, ஆபாசங்களை இதுபோல் விமர்சிப்பதில்லையே... பயமா?’’

“நடைமுறையில், நாங்கள் நாத்திகர்களாக இருந்தாலும் ‘சட்டப்படி நாங்களும் இந்துக்கள்’ தான். அந்த இந்து மதம்தான் எங்களை ‘தாசி புத்திரர்’ என்று பொருள்படும்படியாக ‘சூத்திரர்’ என்று சொல்லி இழிவுபடுத்துகிறது. அந்த இந்து மதம்தான், நாங்கள் இந்துக்களாக, பக்தியாளர் களாக இருந்தாலும்கூட ‘நீங்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது’ என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து எங்களை யெல்லாம் வெளியே நிறுத்திவைத்திருக்கிறது. அந்த இந்து மதம்தான், பக்தியோடு நாங்கள் ஆகமம் கற்றிருந்தாலும் வழிபாட்டுப் பயிற்சி பெற்றிருந்தாலும் ‘நீங்களெல்லாம் அர்ச்சகர்களாக முடியாது’ என்று சொல்லிக் கேவலப் படுத்துகிறது. அந்த இந்து மதத்தின் யோக்கியதையை விளக்குவதுதான் பெரியாரிய இயக்கங்களின் நோக்கங்கள். எங்களை சமமாகப் பாவிக்கிற ஏனைய மதங்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவையே எழவில்லை. அதே சமயம் பகுத்தறிவு அடிப்படையில் எல்லா மதக் கடவுளர்களையும்தான் நாங்கள் மறுக்கிறோம்.

‘ஞாயிறு மையக் கோட்பாட்டை’ வலியுறுத்தியதற்காகவே கிறித்துவர்களால் சிறையிலடைக்கப்பட்டு இறந்தும்போனார் கலிலியோ. 350 வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த இந்தத் தவற்றுக்கு (1919) போப் ஃபிரான்சிஸ் வருத்தம் தெரிவிக்கிறார்; மன்னிப்பு கேட்கிறார். காலம் கடந்தாவது தங்களது தவற்றை உணர்ந்து திருத்திக்கொள்கிற திறந்த மனப்பான்மையுள்ள அவர்களோடு, ‘தாசி புத்திரர்கள்’ என்று எங்களை இழிவுபடுத்துகிற சொல்லைக் கூடத் திரும்பப் பெற முடியாதவர்களை எப்படி ஒப்பிட முடியும்?”

‘`தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் தி.மு.க-வை வீழ்த்த, ‘பெரியார் எதிர்ப்பு அரசியலை’ முன்னெடுக்கிறார்கள் வலதுசாரிகள்’ என்ற விமர்சனத்தை உணர்ந்திருக்கிறீர்களா?’’

“பெரியார் பற்றி அவதூறாக, இல்லாததை இட்டுக்கட்டுகிறார் என்று ஆரம்பத்தில் ரஜினி காந்துக்கு கண்டனம் மட்டுமே தெரிவித்தோம். ஆனால், இப்போது பா.ஜ.க-வின் கட்டளையை ஏற்று, ‘மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என்று ரஜினிகாந்த் சொல்கிறபோதுதான் அவரை எதிர்த்து நாங்கள் போராடுகிற நிலைக்கு வந்திருக்கிறோம். இதனால், தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை.

எங்கள் தத்துவத் தலைவரைப் பற்றித் திட்டமிட்டுப் பொய்யாகப் பேசுகிறபோது, அதைக் கண்டிக்க வேண்டியதும், ஆணவமாக நடக்கிறபோது அதை எதிர்த்துப் போராடுவதுமான தேவையும் வந்துவிடுகிறது. அதேநேரம் தி.மு.க பற்றி எங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் போதாமை பற்றி கருத்து கொண்டிருந்தாலும் இந்துத்துவா ஆபத்திலிருந்து மக்களைக் காக்கக்கூடிய ஒரே அரசியல் கட்சியாக நாங்கள் தி.மு.க-வை மட்டும்தான் பார்க்கிறோம்.’’

“தமிழகத்தில் பா.ஜ.க. காலுhன்ற முடியாது; அரசியலில் ரஜினிகாந்த் வெற்றிபெற முடியாது என்றெல்லாம் விமர்சிக்கிற நீங்களே, ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு எதிராகப் பதறுவது உங்கள் பயத்தைத்தானே காட்டுகிறது?”

“தமிழ்நாட்டில், பா.ஜ.க காலூன்றிவிடும்; ஆட்சியைப் பிடித்துவிடும், தாமரை மலரும் என்பதையெல்லாம் துக்ளக் படிக்கிற அறிவாளியான ரஜினிகாந்த்தே நம்ப மாட்டார்.”

“பெரியாரின் இனக்கொள்கை, மொழிக் கொள்கையை விமர்சிக்கும் பெ.மணியரசன், ‘கடவுள் பக்தியை மறுக்கிற இவர்கள் பெரியார் பக்தியை மட்டும் தொடரலாமா...’ என்று கேள்வி கேட்கிறாரே?”

“சீமானைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போதுதான் நான் தோழர் பெ.மணியரசனைப் பற்றியும் பேசவேண்டிவந்தது. அதாவது, ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழ் அறிஞர்கள் தொடங்கினார்கள்; பெரியார் வந்து சேர்ந்துகொண்டார். சுயமரியாதைத் திருமணங்களைத் தமிழ் அறிஞர்கள் அறிமுகப்படுத்தினார்கள்; பெரியார் வந்து சேர்ந்துகொண்டார். தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழ் அறிஞர்கள்தான் முதலில் சொன்னார்கள்; பின்னர்தான் பெரியாரும் சொன்னார்’ என்று எப்போதுமே திசை திருப்பல் வாதங்களை வைத்துக்கொண்டிருப்பார் தோழர் மணியரசன்.

அவரது மூன்று விமர்சனங்களுக்கும் விளக்கமாக ‘பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்’ என்ற தலைப்பில், தொடர் ஒன்றை எழுதி அதைப் புத்தகமாகவும் வெளியிட்டோம். ஆனால், இந்தப் புத்தகம் வெளிவந்த பின்னரும்கூட அதை உள்வாங்கிக் கொள்ளாமல், மீண்டும் பழைய விமர்சனத்தையே அவர் வைத்தபோதுதான் ‘சீமான் பாவம் விவரம் தெரியாதவர், விட்டுவிடலாம்; ஆனால், அரசியல் தெரிந்த தோழர் பெ.மணியரசன் பேசுவதுதான் ஆபத்தானது’ என்று நான் பேசினேன். அவர் வைத்த விமர்சனங்களுக்கு அறிவுபூர்வமான விவாதத்தை விடையாக முன்வைத்த பிறகும்கூட, அதற்கான அறிவுபூர்வமான பதிலைப் பேசாமல், அதே பழைய வாதங்களையே பேசிக் கொண்டிருந்தால், அவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இதில் பெரியார் பக்தி எங்கிருந்து வந்தது?’’

“பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான கீழடி நாகரிகத்தைக்கூட ‘திராவிட நாகரிகம்’ என்று கட்டமைக்க முயல்வது சரிதானா?”

‘`கீழடியைப் பொறுத்தவரை, ‘தமிழர் நாகரிகம்’ என்றுதான் நாங்கள் குறிப்பிட்டு வருகிறோம். அதேசமயம், அதை ‘திராவிடர் நாகரிகம்’ என்று குறிப்பிட்டாலும் தவறு இல்லை. ஏனெனில், எந்த ஒரு சொல்லுக்கும் இரண்டு சொற்கள் வரலாற்று ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும். ஒன்று எண்டோனிம் (Endonym), இன்னொன்று எக்ஸோனிம் (Exonym). இதில் என்டோனிம் என்பது, அந்தந்த மக்கள் தங்களைப் பற்றிக் குறிப்பிடும் சொல். எக்ஸோனிம் என்பது அந்த மொழிக்கு அப்பால் உள்ளவர்களால் குறிக்கப்படும் சொல்.

உதாரணமாக, கிரேக்கர்களை நம் தமிழ் இலக்கியங்கள் ‘யவனர்கள்’ என்றுதான் குறிப்பிடு கின்றன. அதுவே, கிரேக்கர்களிடம் போய், ‘நீங்கள் யவனர்கள்தான்’ என்று சொன்னால், ‘இல்லை, இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்’ என்று அவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில், ‘இயோனியன் (ionian)’ என்பதுதான் அவர்களது பெயர்களில் ஒன்று. அதைத்தான் தமிழ்ப்படுத்தி நாம் ‘யவனர்’ என்று பயன்படுத்தி வருகிறோம். இந்தவகையில் பார்க்கும்போது, தமிழர் அல்லாத வரலாற்றாசிரியர்கள் அனைவருமே ‘திராவிடன்’ என்றே நம்மை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்ததாக, கீழடி நாகரிகம் என்பது தமிழ் மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல. இப்போது வேறு மொழி பேசிப் பிரிந்துபோனவர் களின் அப்போதைய மூதாதையரும் இங்கிருந்தவர்கள்தானே... எனவே, பிரிந்துபோன அந்த மக்களுக்குமான நாகரிகம்தான் கீழடி நாகரிகம்!

ஆரியர் வருகைக்கு முன், இந்தியா முழுக்கவே தமிழர்கள்தான் பரவிக்கிடந்தோம். ஆனாலும் தமிழர்களாக இப்போது நாம் ஒதுங்கி வந்துவிட்ட பின்னால், சிந்துவெளி நாகரிகத்தை `தமிழர் நாகரிகம்’ என்று சொல்லமுடியாது. அந்தக் காலகட்டத்தில் சிந்துவெளியில் இருந்த மக்கள் தமிழ் போன்றதொரு மொழியை உச்சரித்துப் பேசிவந்திருக்கலாம், அவ்வளவுதான்!”

“சமீபகாலமாக ஈழத் தமிழ்த் தலைவர்கள் இந்துத்துவ சக்திகளோடு தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முயலும் முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தங்களால் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தவர்கள், தனியொருவர் யாரையும் சார்ந்திருக்கவில்லை; அதேசமயம் எல்லோரையும் அனுசரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ‘தங்களால் முடியுமா, முடியாதா’ என்ற சந்தேகத்துக்கு உட்பட்ட தன்னம்பிக்கையற்றவர்கள் தான் ‘எங்கேயாவது சார்ந்து கொண்டு, சாய்ந்து கொண்டு இதை வெற்றிபெற முடியுமா’ என்று இப்போதைய ஆட்சியாளர் களைத் திருப்திப்படுத்துவதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம்.”

“ஈழத்தில், ‘இறுதிப் போரின்போது காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை’ என்று கோத்தபய ராஜபக்சே சொல்கிறார்... பிரபாகரன், அவர் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மற்றும் பொட்டு அம்மான் நிலை என்ன?”

“நான் பகுத்தறிவுவாதி; ஆதாரம் இல்லாமல் எதையும் பேச முடியாது. ‘பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்’ என்று விரும்புகிறேன். ஆனால், ‘இருக்கிறாரா’ என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில், காலம் தள்ளிப்போகப் போக, இவ்வளவு நெருக்கடிகளைத் தமிழ் மக்கள் சந்தித்துவருகிற சூழலிலும்கூட, ‘பிரபாகரன், பொட்டு அம்மான் உயிரோடு இருந்திருந்தால், வராமல் இருந்திருப்பார்களா...’ என்று அவர்களது இருப்பைப் பற்றிய ஐயம் எனக்குள் கேள்வியாக எழுகிறது.”

“ராஜீவ் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ‘எழுவருக்கும் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை விடுதலை சாத்தியமில்லை’ என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?”

“மத்திய அரசின் பங்கு இல்லாமலேயே எழுவரையும் தமிழக அரசால் விடுதலை செய்ய முடியும். ஏனெனில், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 72-க்கு என்ன மரியாதை உண்டோ அதே மரியாதை பிரிவு 161-க்கும் உண்டு. இரண்டும் சம வலிமை உடைய சட்டப்பிரிவுகள்தான். மாநில அமைச்சரவையின் சொல்லைக் கேட்டுச் செயல்பட வேண்டியதுதான் ஆளுநரின் வேலையே தவிர, அவராகவே சுயமாகச் செயல்பட முடியாது. ஆனால், அரசியல் சட்டம் காலக்கெடு விதிக்கவில்லை என்ற அம்சத்தை சாதகமாக்கிக்கொண்டு இந்தக் காலதாமதத்தைச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர்.

தமிழக அரசு, இரண்டாவது முறை தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், அவர்கள் எழு வரையும் விடுதலை செய்வதைத்தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆனால், இரண்டாவது தீர்மானம் இயற்றுவதற்குத் துணிச்சல் இல்லாத மாநில அரசும் தனக்குக் கொடுக்கப்பட்ட வரையறைகளைக் கணக்கில் கொண்டு ஏமாற்றுகிற வஞ்சகம் நிறைந்த ஆளுநரின் போக்கும்தான் இன்றைய நிலைக்குக் காரணம்.

இவற்றுக்கு மாறாக ஒரு நாணயமான, நேர்மையான, சட்ட உணர்வுள்ள ஆளுநர் இருந்தாலோ அல்லது இரண்டாம் முறை தீர்மானம் நிறைவேற்றக்கூடிய துணிச்சலான மாநில அரசு இருந்தாலோ எழுவர் விடுதலை சாத்தியப்பட்டுவிடும். எனவே, எப்போதுமே இல்லை என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை!”

- 'ஆனந்த விகடன்’ ஏட்டுக்கு அளித்த பேட்டி