இப்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலராகிய ஆதித்தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமாயும் அவசரமாயும் வேண்டியது பொது நோக்குடைய ஒரு தமிழ் தினசரி பத்திரிகையே ஆகும். தமிழ்நாட்டில் தற்காலம் உலவிவரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மூன்று. அதாவது சுதேச மித்திரன், திராவிடன், சுயராஜ்யா ஆகிய இவைகளே. இவற்றில் சுதேச மித்திரன் முதலில் தோன்றியது.

இதன் முக்கியக்கொள்கை பழய காங்கிரஸ் கொள்கைகளைப் போல அரசாங்கத்தினிடம் இருந்து பதவிகளும் உத்தியோகமும் மக்கள் அடையக் கிளர்ச்சி செய்வதாயிருந்தது.இதின்படி பதவிகளும் உத்தியோகங்களும் கிடைக்க கிடைக்க அவையெல்லாம் தங்கள் சமூகமாகிய பிராமணர்களுக்கே கிடைக்கும்படியாகவும் பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் அறிவாளிகள் என்றும் மற்றும் பிராமண மதம் ஆக்கம் பெறவும் உழைத்து வந்தது.

இம்மட்டோடல்லாமல் வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும், பதவிகளும், அந்தஸ்துகளும், கீர்த்திகளும் உண்டாவதைக் கூற்றுவன் போல் நின்று தடுத்துக் கொண்டேயும் வந்தது.

இச்சூழ்ச்சி வெகுகாலமாய் பிராமணரல்லாதாருக்குத் தெரியாமல் இருந்துவிட்டதால் சகல பதவிகளும் அரசாங்க உத்தியோகங்களும், அந்தஸ்தும், கீர்த்தியும், பிராமணர்களுக்கே கிடைத்து, அரசாங்கமே பிராமணமயமாய் போய்விட்டதால், பிராமணரல்லாதார் நிலை தாழ்த்தப்பட்டது. அப்போது படித்திருந்த சில பிராமணரல்லாதார் சிலர் தாங்கள் எவ்வளவு கெட்டிக்காரராயும், யோக்கியர்களாயும், புத்திசாலிகளாயும், தேச பக்தி, பரோபகாரம் முதலிய அறுங்குணங்கள் நிறைந்தவர்களாயுமிருந்தும் தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டு கிடக்கின்றோம் என்று யோசனை செய்து பார்த்ததில் இப்பிராமண பத்திரிகைகளும், கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்துத் தாங்களும் மற்றவர்களைப்போல முன்னேறு வதற்குத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும், தங்களுக்கும் பிரசாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டுமென்றும் கருதி ஒரு சங்கத்தையும் திராவிடன், ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகைகளையும் ஏற்படுத்தினார்கள்.

இப்பத்திரிக்கையும், சங்கமும், சகலமும் சகல போக்கியங்களையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து வந்த சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைக்கும், அதன் கூட்டத்தாருக்கும், இவை போட்டியாய்க் கண்டதால் இவற்றைச் செல்வாக்கில்லாமலடித்து ஒழிக்க பல தந்திரங்களும் செய்ததினால் இத்தந்திரங்களுக்குத் தாக்கு பிடிக்க சுதேசமித்திரன் போலவும், அதன் கூட்டத்தார் போலவும் திராவிடனும் அதன் கூட்டத்தாரும் அரசாங்கத்தை தழுவ நேரிட்டது. என்ன செய்தும் சுதேசமித்திரன் கூட்டத்திற்குள்ள தந்திர சக்தி திராவிடன் கூட்டத்திற்கில்லாததாலும், பிராமணரல்லாதாரில் சிலருக்கு தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்கும், கீர்த்திக்கும் சுதேசமித்திரன் கூட்டம் இடங்கொடுத்ததால், இவர்களும் அதோடு சேர்ந்து எதிர்ப்பிரசாரம் செய்ததாலும், திராவிடனுக்குப் பாமர ஜனங்கள் உண்மையை உணரும்படிச் செய்யவும், பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெறவும் முடியாமல் போய்விட்டதால் இது தக்க பலனை தென்னிந்திய மக்களுக்கு அளிக்கக் கூடியதாய் இல்லாமலிருக்கிறது.

இதுதான் இப்படி என்றாலோ, மகாத்மா ஏழை மக்கள் விடுதலையின் பொருட்டுக் காங்கிரஸில் சேர்ந்து, ஒத்துழையாமை என்னும் கொள்கையை உண்டாக்கி நிர்மாணத் திட்டம் என சில திட்டங்களைக் கண்டு வேலை செய்த காலத்தில் ஒத்துழையாமையும், நிர்மாணத் திட்டமும் தங்கள் கூட்டத்தாருக்கும்,சுயநலப்புலிகளுக்கும் கஷ்டத்தைக் கொடுப்பதாய் இருந்ததால் ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டத்தையும் மகாத்மா செல்வாக்கையும் அழிக்க சுதேசமித்திரன் பிரசாரம் செய்து வந்த காலத்தில் ஒத்துழையாமை யிலும் நிர்மாணத் திட்டத்திலும் மகாத்மாவிடமும் ஈடுபட்டிருந்த சிலர் சுதேச மித்திரனால் தேசத்திற்கு ஏற்படும் கெடுதியைத் தடுக்க ஒரு தினசரி ஏற்படுத்த எண்ணினார்கள்.

அதுசமயம் ஆங்கில சுயராஜ்ய பத்திரிகை மக்கள் நம்பக் கூடியது போல் நடந்து வந்ததால்,பொது மக்கள் பணமாகிய 10000 ரூபாயை தூக்கி அதன் முக்கியஸ்தரான ஸ்ரீமான் பிரகாசத்தினிடம் கொடுத்து தினசரி ஆரம்பிக்கச் சொன்னார்கள். கடசியாய் சுதேசமித்திரன் திட்டமும், சுயராஜ்யா திட்டமும் வித்தியாசமற்றதாகி இரண்டும் ஒன்றுபடக் கலந்துவிட்டதால் - புதுத் திருடனைவிட பழய திருடனே மேல் என்னும் பழமொழிபோல் இரண்டும் ஒன்று சேர்ந்துக் கொண்டு, பிராமணர்கள் ஆக்கம் பெறவும் பிராமணரல்லாதாரின் அழிவுக்கும் ஒத்து வேலை செய்கின்றதுகள்.

இதில் ஒரு விஷேஷம் சுதேசமித்திரன் ஒரு விதத்தில் சுயராஜ்யாவை விட யோக்கியன் என்றே சொல்லலாம். எப்படி என்றால் சுதேசமித்திரன், “தான் ஒரு பிராமணனைத்தான் ஆசிரியராகக் கொண்டிருக்கிறேன்” என்று உண்மையே பேசுகிறான்.

சுயராஜ்யாவோ இரண்டு பிராமணரல்லாதாரை ஆசிரியராய் வைத்தி ருப்பதாய் பொய் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி தனது அட்டூழி யங்களை நடத்துகின்றது. பத்திரிகைகள் யோக்கியமாய் நடந்திருந்தால் தென்னிந்தியாவில் ஒத்துழையாமை ஒழிந்து சுயராஜ்யக் கட்சியின் சூழ்ச்சி நடந்தேறுமா?

இந்நிலையில், தென்னிந்தியாவுக்கு தென்னிந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையும் யோக்கியமுமுள்ள தமிழ் தினசரி பத்திரிகை வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்க வேண்டும். வேண்டுமென்றால் சுலபத்தில் நடத்திவிட முடியாது. சுதேசமித்திரனின் போட்டியையும், கெடுதியையும் சமாளிப்பது லேசான காரியமல்ல - அதற்கு பிராமணரல்லாதார் பொருள்களும் பிராமணரல்லாதார் சந்தாதாரர்களும் பிராமணரல்லாத சுயநலப்புலிகள் ஆதரவும், சாராய விற்பனை முதலிய விளம்பர வரும்படிகளும் மலிந்து கிடக்கிறது. ஆதலால் நாம் ஆரம்பிப்பதானால் தக்க மூலதனத்துடனும் தக்க ஏற்பாட்டுடனும்தான் ஆரம்பிக்க வேண்டும்.

குறைந்தது ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருஷத்தில் 10,000 சந்தாதாரர்கள் சேர வேண்டும். 50000 ரூபாயாவது இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெறத்தக்கதாகாது. குறைந்த அளவு 5 வருஷ காலத்துக்குக் குறையாமல் பத்திரிகை நடத்தக்கூடிய முஸ்தீபுகளை கையில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தாலல்லாது எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

ஆதலால் இவைகளைப் பற்றி சில கனவான்களோடு யோசனை செய்து பார்த்ததில் அடியில் கண்ட விஷயங்கள் புலப்பட்டன. அதாவது, பங்கு 1- க்கு 5 ரூபாய் வீதம் 20000 பங்கு கொண்ட ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். 50000 ரூ. வசூலித்த பிறகுதான் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களும், ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூ. வீதம் முன்பணம் வசூலித்துக் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு ஜில்லாவிலும் 1000 ரூ. கொடுக்கக்கூடிய இரண்டு பேர்கள் அவசியம் முன் வருவதோடு பாக்கி மூவாயிரம் ரூபாயையும் வசூலித்துக் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயிரம் கொடுப்பவர்களும், ஊதியமில்லாமல் உழைக்க வருபவர்களும், நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.

பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும் தீண்டாதாருடையவும்,சமத்துவமும் முன்னேற்றமுமே முக்கியமானதாயிருக்க வேண்டும். பத்திரிகையின் நேரான நிர்வாகமும் பதிப்பும் யோக்கியமான ஒரு சிறு போர்டினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இப்போர்டில் உள்ளவர்கள் பத்திரிகை நிர்வாகம் பதிப்பு இவைகளைத்தவிர, வேறு எந்தப் பொதுக் காரியங்களிலும் சம்பந்தப்படாதவர்களாயிருக்க வேண்டும்.

குறைந்தது 5 வருஷத்திற்கு ஒரு தரம் இந்த போர்டை புதுப்பிக்கத் தக்கதாயிருக்க வேண்டும். இக்கொள்கைக்கு இதுவரை சில செல்வாக்குள்ள கனவான்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.ஆகையால் இதைப்பற்றித் தமிழ் மக்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால் தமிழ்மக்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டாகலாம் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.11.1925)

 

Pin It