இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்பது போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்பவர்கள் “நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர்.
பெரியாரிய உணர்வாளர்கள் பலர், பெரியார் முத்துராமலிங்க தேவரை இப்படிப் பாராட்டியதாக வரலாறு இல்லை எனவும், குடி அரசு இதழிலும், பெரியாரைப் பற்றிய திறனாய்வு நூல்களிலும் இதற்கான சான்றுகள் இல்லை எனவும் வாதிட்டனர்.
பெரியாரியவாதிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு “நாம் தமிழர்'' அமைப்பினர் இதுவரை பதில் தரவில்லை. சரி, அந்த சுவரொட்டியில் அப்படி என்ன இருந்தது என்று பார்ப்போமா? மூக்கையா தேவரின் சமூகப் பணிகளை பாராட்டியும், முத்துராமலிங்கத் தேவரைப் போலவே மூக்கையத் தேவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பெரியார் மூக்கையாத் தேவரையும், முத்துராமலிங்கத் தேவரையும் மாறி மாறிப் பாராட்டியுள்ளார். இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? நடந்திருக்காதா? என்ற வரலாற்று ஆய்வுக்குள் நான் போகவிரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் நம் நண்பர் சீமானுக்குத் தேவரையும், பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர் மட்டும் ஏன் இதுவரை எந்த அரசியல் ஆளுமையும் சிந்திக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்? என்று நான் சிந்திக்கும்போதுதான் அவருடைய அரசியல் பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.
முத்துராமலிங்கத் தேவரை சீமான் துதிபாடுவது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவரது முதல் படமான "பாஞ்சாலங் குறிஞ்சி'யில் “மன்னாதி மன்னருங்க மறவர் குல மாணிக்கமுங்க, முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க'' என்று பாடல் வரிகளை அமைத்துத் தனது தேவரின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
'தம்பி' படத்தில் தமிழ் உணர்வாளரான கதாநாயகன் வீட்டில் முத்துராமலிங்க தேவரின் படம் தொடங்கவிடப்பட்டிருக்கும். அதன் அருகிலேயே பெரியார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும். (இதுபோன்ற நகைச்சுவை காட்சிகள் அத்திரைப்படத்தில் அதிகம் இருப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்). எனவே, சீமான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவரைத் தலைவராக வணங்கி வருகிறார். இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் தென்மாவட்டங்களில் அதிகமுள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு, சராசரி வாக்கு வங்கி அரசியல்வாதிகளைப் போலவே, (வை.கோ.வில் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரை அனைவரும் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்கள்) சீமானும் ஆயுத்தமாகி விட்டார். குறிப்பாக அவருடைய இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மறவர்களின் வாக்கும், ஆதரவும் சீமானுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். (அப்படியானால் தமிழ்த் தேசிய அடையாளம்(!) என்ன ஆனது?). இவர் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கொள்கைக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை என்பது கற்றறிந்த தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும்.
“தேசியமும் தெய்வீகமும்'' தனது இரு கண்கள் என முழங்கியவர் தேவர். தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய தேசியத்தையும், தமிழர்களை “வேசி மகன்'' என்று அழைத்த இந்து மதத்தையும் போற்றி பாதுகாத்தவர். முத்துராமலிங்கத் தேவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்து மத வெறியர் “கோலால்கரை'' (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவர்) அழைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, இந்துமதப் பாசிசத்தை தமிழகத்தில் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகமான மறவர் சமூகத்தை, பெரியாரின் இனஉணர்வுச் சிந்தனையிலிருந்தும், பகுத்தறிவு உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு சாதி உணர்வுக்கும், இந்திய தேசியத்திற்கும் அச்சமூகத்தைப் பலியாக்கியதில் முத்துராமலிங்கத்திற்கு முகாமையான பங்கு உண்டு.
பெரியாரின் சமூகநீதி கருத்துகளால் உந்தப்பட்டு எழுச்சி பெற்ற வன்னியர், நாடார், தலித் போன்ற சமூகங்கள் இன்று கல்வி அளவிலும், மாற்றத்தை நோக்கிச் சிந்திக்கும் முறையிலும் வியத்தகு பரிணாம வளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. ஆனால், பெரியாரின் இந்தச் சமூகநீதி அரசியலைத் தேவர் சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாவண்ணம் இந்து மத அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் அவர்கள் மீது திணித்து அந்த மக்களை, தமிழ்த்தேசிய அரசியலில் பின்னோக்கி இருக்கச் செய்ததில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு அதிகம். ஒருவருக்கொருவர் முரண் அரசியல் பார்வை கொண்ட பெரியாரையும், தேவரையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று நேர்கோட்டு பாதையில் இருவரையும் நிறுத்துகிறார் சீமான்.
அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் என்று நகைச்சுவை நடிகர் பாணியில் நம்மவர்கள் இதற்கு பதில் சொல்லலாம். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை நாம் உணர வேண்டும். சமீபகாலமாக, பெங்களூர் குணா அவர்களின் கருத்தாக்கப்படி, “பெரியார் ஒரு கன்னடர், அவர் உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மரபுதான் தமிழ்த் தேசியத்தை எழுச்சி பெறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கருத்தியலை உள்வாங்கிக் கொண்டார் சீமான். ஆகையால், தனது தலைவர்கள் பட்டியலில் இருந்து பெரியாரை நீக்கிவிட்டேன் என்று அறிவித்தார். அவரது “நாம் தமிழர்'' அமைப்புச் சுவரொட்டிகளில், பெரியாரோ, திராவிட இயக்க முன்னோடிகளோ இதுவரை இடம் பெற்றதில்லை. பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தாமல், திராவிட அரசியலை விமர்சிக்கும் சீமான், மும்பை சென்றபோது பால்தாக்கரே போன்ற இந்துத்துவ சிந்தனைவாதியை மரியாதைக்குரிய தலைவர் என்று விளித்தார்.
சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
ஒரு வாழ்நாள் முழுவதும் இன மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு தலைவரை, இந்தியத் தேசியத்திற்கும், மத அடிப்படைவாத சிந்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்த ஒருவருடன் ஒப்பிட்டதன் மூலம், தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஒரு சட்டசபை தேர்தலைக் கூட சந்திக்காத சீமான், பழம்பெரும் அரசியல்வாதியைப் போல் தேர்தல் நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். எது எப்படியோ, பெரியார் படத்திற்குப் பூசை புனஸ்காரம் செய்து நானும் 'திராவிடன்' என்று சொல்லிக் கொள்ளும் புது அரசியல்வாதி நடிகர் விஜயகாந்தை போலவே, நமது சீமானும் தமிழ்த்தேசிய போராளி(!) என்று சொல்லிக்கொண்டு திரையுலகத்திலிருந்து அரசியலுக்குக் குதித்திருக்கிறார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.
- ஜீவசகாப்தன் (