தஞ்சை ஜில்லா நன்னிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்தி பாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. அத்தீர்மானமாவது:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக என்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத் தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும்.
இதைப் பற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின்றோம். அது மாத்திரமல்லாமல் “இந்து மதப் புராண இதிகாசங்களை உண்மையாய் உணர வேண்டுமானால் - துளசிதாஸ் இராமாயணத்தை நன்றாய் அறிய வேண்டுமானால் ஹிந்தி படிக்க வேண்டும்” என்று சென்னை திருவாளர் கே. பாஷ்யம் அய்யங்கார் என்ற “ஒரு தேச பக்தர்” சென்ற வாரத்தில் கூட பேசி இருக்கின்றார். இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியின் இரகசியம் அறியலாம்.
அன்றியும் ஹிந்தி பாஷையைப் பொது பாஷையாக ஆக்குவது முடியாத காரியமென்றும், அது கூடாத காரியமென்றும் பார்ப்பனீயப் புராணக் கதைகளை பரப்பத்தான் முடியுமென்றும் வங்காளம் மாடர்ன் ரிவ்யூ பத்திராதிபரான பாபு ராமாநந்த சட்டர்ஜி அவர்கள் தமது பத்திரிகையில் எழுதி இருக்கிறார்கள்.
இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியானது பார்ப்பனப் பிரசார பாஷை என்றும், அரசியலுக்கு அது சாத்தியப்படாத பாஷை என்றும் விளங்கும்.
இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனீயங்களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன. உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும், அதற்கெனவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப்பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன. சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை, மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடைபெற்று வருகின்றன. இது இந்த நாட்டு மக்களின் சுயமரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும். இதை தட்டிப் பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை. போதாக்குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதை இல்லை என்பதற்கு ஒரு உதாரணமாகும்.
தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை. தேச பக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிரப்பப்பட்டு விட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர்களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீய மந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.
இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், மனிதத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம் பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை - வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ள தமிழ் மக்களால் சுட்டுப் பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும். தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகி விட்டது.
இன்றைய தினம் தமிழ் படித்து தமிழ் பாஷையில் பற்று கொண்டு தமிழைத் தாய் பாஷையாய்க் கொண்ட ஒருவனாவது தன்னுடைய தமிழ் தாய் வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டிருக்கின்றாளா? இல்லையா என்றும் பிள்ளைகளையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப் போலவே பெற்றுக் கொண்டுமிருக்கின்றாளா? இல்லையா என்றும், அப்படிச் சோரத்தனம் செய்ததில் முதல்தரப் பிள்ளைகளாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும் இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமை யடைவதன் மூலமே தமிழ் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா என்றும் கேட்கின்றோம்.
தமிழ்த்தாய் தானாகவே சமஸ்கிருதப் புருஷன் மீது ஆசைப்பட்டு “விபசாரம்” செய்வதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை. ஆனால் இந்தப் பண்டிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, தங்கள் சுயநலப் பெருமைக்கு தமிழ்த்தாயை கூட்டி விட்டுப் பிழைப்பதைத்தான் நாம் வெறுக்கின்றோம். அப்படிக் கூட்டி விடுவதாவது தமிழ்த்தாயின் மக்கள் சமூகத்திற்காவது அவர்களது சுயமரியாதைக்காவது ஆபத்தில்லாமல் இருக்குமானால் நமக்கு ஆnக்ஷபணையில்லை. அப்படிக்கின்றி இன்று நாட்டைப் பாழாக்கி விட்டது இந்த சமஸ்கிருதப் புருஷனிடம் தமிழ்த்தாயை சம்பந்தப்படுத்தியதே என்று தெரிந்து இருந்தும், மறுபடி இதையே ஆதரித்தால் இதற்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இது இப்படியிருக்க இப்பொழுது மற்றொரு புருஷனை (ஹிந்தி பாஷையை) தமிழ்த்தாயிக்கு நமது தேச பக்தர்கள் கண்டு பிடித்து இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. இனி தமிழ்த்தாயிக்கு தகுந்த புருஷன் வேண்டுமானால் மானத்துடனும் வீரத்துடனும் அறிவுடனும் பிள்ளைகளைப் பெற்று அவைகளை வைத்துக் காப்பாற்றும் புருஷன்தான் இருக்க வேண்டும். அதுவும் தகுந்தபடியான சுதந்திர காதல் மணமாகத்தான் செய்விக்க வேண்டுமேயொழிய இனியும் இம்மாதிரி வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் கருதிய சம்மந்தமாகவும், அதுவும் தமிழ்த்தாயிக்கு அல்லாமல் மற்றவர்களுடைய சுயநலத்திற்காகவும் இருக்கும் அடிமை மணமாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம்.
தமிழ்த்தாயிக்கு யோக்கியதை இருந்து அவள் தகுந்த மானமுள்ள மக்களைப் பெற்று இருந்தால் நாட்டு நலனுக்கு ஏற்ற சகல விஷயத்தையும் தமிழிலேயே ஆக்கியிருக்க வேண்டும். நாட்டிற்கு தமிழே போதுமானதாயிருக்க வேண்டும். அப்படி இல்லையானால் தமிழ்த் தாயின் தகுதிக்கும் அவசியத்திற்கும் ஏற்றது எதுவோ அதைக் கொள்ள வேண்டும். இன்றைய தினம் நாட்டிற்கு கவியழகு, கற்பனையழகு, புராண அழகு, மோட்ச அழகு, பகவான் வாக்கு அழகு. அவதாரப் பெருமை அழகு அல்ல வேண்டியிருப்பது. இவை சோம்பேரிகளுக்கும் மக்கள் கஷ்டத்தை உணராதவன் நெஞ்சகர்களுக்கும் ஊரான் உழைப்பில் வயிறு வளர்க்கும் அயோக்கியர்களுக்கும் அவசியம் உணர முடியாத அறிவிலிகளுக்குமே இவை வேண்டியதாகும். மற்றபடி மானமுள்ள மக்களுக்கு - பக்ஷாதாபமுள்ள மக்களுக்கு - யோக்கியர்களுக்கு அறிவாளிகளுக்கு இந்தியாவின் 35 கோடி மக்கள் சமத்துவ உணர்ச்சியுடன் இருக்கவும் வயிற்றுப் பிழைப்புக்கு மானத்தை விற்காமல் வாழவும், பணக்காரன், படித்தவன், மேல்ஜாதிக்காரன் என்கின்ற வஞ்சகர்களால் மிதிபட்டு நசுக்கப்படாமல் இருப்பதற்கும் குழந்தைகளுக்கு பூச்சாண்டியையும், காக்கையையும் பிராக்கு காட்டி கையில் இருப்பதை தட்டிப் பிடிங்கிக் கொள்வது போல் மோட்சத்தையும், காவியத்தையும், கவியழகையும், கடவுளையும், கலைகளையும் காட்டித் தட்டிப் பிடுங்கிக் கொள்ளாமல் அவரவர்கள் பாடுபட்டது அவரவர்களுக்காவது உதவவும், “நீ வீதியில் நடக்க வேண்டாம். அருகில் வர வேண்டாம், கண்களில் தென்பட வேண்டாம், படிக்க வேண்டாம் 'சர்வ தயாபரனும் சர்வ கருணாமூர்த்தியும் சர்வ சக்தனும்' ஆகிய 'கடவுளிடம்' கூட பக்கத்தில் நெருங்க வேண்டாம்” என்கின்ற அயோக்கியத்தனம் நீங்கவும் வேண்டியது முக்கியமாய் இருக்கின்றபடியால் அதற்கு எந்த பாஷை வேண்டும்? எந்த பாஷை படித்தால் இந்த மாதிரியான அற்ப புத்தி நீங்கும்? என்பதுதான் நமது கேள்வி.
ஆகவே இன்றைய இந்தத் தேவைக்கு - இன்று இந்த நாட்டிற்கு ஹிந்தி வேண்டுமா? இங்கிலீஷ் வேண்டுமா? என்பதை மானத்துடன் உள்ளவர்கள் நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சொல்லட்டும் என்றே வேண்டுகின்றோம். ஹிந்தி பாஷையை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தை காங்கிரசில் கொண்டு வந்து புகுத்தியதே வருணாச்சிரமத்தை நிலை நிறுத்தவும் அதைக் கட்டாயப்படுத்தி மக்களுக் குள் புகுத்தவுமே செய்த சூக்ஷியான காரியமாகும். இந்த அயோக்கியத் தனத்திற்கு திரு. காந்தி அவர்கள் கண்டிப்பாய் உளவாளி என்றே சொல்லுவோம். இதனால் வாய் வெந்து போவதானாலும் சரி, தலையில் இடி விழுவதானாலும் சரி, முன் காலத்து ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எவ்வளவு கொடுமையை விளைவித்தவர்கள் என்பதாக இப்போதைய மானமுள்ள மக்கள் எப்படிக் கருதுகின்றார்களோ அதற்கு ஒரு முந்திரி கூட குறைவல்ல இன்றைய மகாத்மாக்களால் நமக்கு வரும் ஆபத்தும் இழிவும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. யாருக்காவது சந்தேகம் இருந்தால் சென்ற வாரம் திரு. காந்தியவர்கள் யங்இந்தியாவில் “வர்ணாச்சிரம தர்மம்” என்கின்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தை உற்று கவனியுங்கள்.
“வர்ணாச்சிரம தர்மங்களில் குறிப்பிட்ட நான்கு தர்மங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தப் பாகுபாடுகள் பரம்பரைத் தொழில் சம்பந்தமாக ஏற்பட்டது.”
“பிராமணன் வித்தை கற்றுக் கொடுக்கவும், க்ஷத்திரியன் சக்தியற்றவர்களைப் பகைவரிடமிருந்து காக்கவும், வைசியன் உழவுத்தொழில் செய்யவும், சூத்திரன் உடலால் உழைத்து வேலை செய்யவும் என்று ஏற்பட்டவைகளாகும்.”
“இந்து மதம் இவற்றை ஜனசமூக வாழ்வில் அங்கீகரித்து கிரமமாக நடத்தையிலும் அனுஷ்டித்து வருகின்றது”.
“இந்தப்படியான அவரவருக்கு உரிய காரியத்தை அவரவர் செய்யத் தவறியதால்தான் இப்போது வருண தருமம் அழிந்து பல ஜாதிகள் தோன்றின”.
“வகுப்பு ஒற்றுமைக்கும் கலப்பு விவாகம், சமபந்தி போஜனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது எனது திடமான அபிப்பிராயம்.”
“கலப்பு விவாகங்களால் நாட்டில் வகுப்பு ஒற்றுமை ஏற்பட்டு விடுமென்று நான் நம்பவில்லை.”
“மனிதர் யாவருமே சமம். ஆனால் இந்த சமம் என்பது ஆத்மாவைப் பொறுத்த வரையில் தானேயொழிய சரீரத்தை பொறுத்தவரை சமமல்ல.”
என்ற குறிப்புகளை அதில் எழுதி இருக்கிறார். இந்த மாதிரியான வருண தர்மத்தை நிலை நாட்ட வந்த புருஷனை ‘பிராமணர்கள்’ மகாத்மா என்று கூறுவதிலும், அவரைப் பின்பற்றுவதிலும், அவர் சொல்லுகிறபடி எல்லாம் ஹிந்தி படிப்பதிலும், கீதை படிப்பதிலும், ராமராஜ்ஜியம் ஸ்தாபிப்பதற்காக கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் செய்வதிலும் யாதொரு அதிசயமும் கொள்ள இடமில்லை. ஆனால் “நாங்களும் சுயமரியாதைக்காரர்கள்தான்” தமிழ் மக்கள் இந்த மாதிரியான வருணாச்சிரமத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல... என்று சொல்லுகின்ற மக்கள் இந்த மகாத்மாவையும், அவர்களை மகாத்மாவாக்கின பார்ப்பனர்களின் வால்களையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு திரிவதில்தான் நமக்கு அதிசயம் காணப்படுகின்றது.
இதைப் பார்க்கின்றபோது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்று சொன்ன வார்த்தை மிகவும் பொருத்தமும், அருத்தமும் கொண்ட வார்த்தை என்றே தோன்றுகின்றது.
(குடி அரசு - தலையங்கம் - 14.06.1931)