ஈரோடு முனிசிபாலிட்டியின் பொது ஜனங்களின் வரிப்பணம் தாறுமாறாகச் செலவழிக்கப்பட்டு வருவதைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். போதுமான அளவு ஜலதாரை கட்டாததனாலும் ஓடையில் விழுந்து தேங்கும் கசுமாலத் தண்ணீரை ஒழுங்காய் வெளிப்படுத்தாத காரணத்தாலும், அதிலிருந்து கொசுக்களும், விஷக்காற்றுகளும் உண்டாகி, ஊரெங்கும் பரவி, வீடுகள் தோறும் மலைக்காய்ச்சலாலும், குளிர் காய்ச்சலாலும் ஜனங்கள் அவஸ்தைப்படுவதைக் கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல், நமது முனிசிபல் சேர்மன் அவர்கள் சிங்காரவனத்தின் பெயரால் வரிப்பணத்தைக் கண்டபடி வாரி இறைப்பதைப் பற்றியும், துர்விநியோகப்படுத்திக் கொள்வதைப் பற்றியும், இதற்கு முன் குறிப்பிட்டிருக்கிறோம்.

சென்ற 10-ந் தேதி ஈரோடு முனிசிபாலிட்டியில் சிங்காரவனத்திற்காக இது வரையில் கவுன்சிலர்களுடைய அநுமதி பெற்றும், அநுமதி பெறாமலும் செலவு செய்திருக்கும் பணத்தைப் பரிசீலனை செய்வதற்காகவும், சேர்மன் கேட்கிறபடியெல்லாம் மேற்கொண்டு பணம் கொடுக்கலாமாவென்பதைப் பற்றியும் யோசிக்கவும், 10-11-25-ல் சேர்மனால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருந்தது. அந்த மீட்டிங்குக்கு அதிகப்படியான கவுன்சிலர்கள் வந்து சேர்மனுக்கு விரோதமாய்த் தீர்மானங்கள் செய்து விடுவார்களோவென சேர்மன் பயந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தனக்கு வேண்டிய கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு வந்து தன் இஷ்டம்போலெல்லாம் காரியங்களை முடித்துக்கொள்ள, என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமோ அவற்றை இரகசியமாய் எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மற்ற கவுன்சிலர்களும் வந்துவிட் டார்கள்.

இதற்கு மேல் நடந்த விஷயத்தைப்பற்றி கவுன்சிலர்களான ஸ்ரீமான்கள். கே.ஏ.ஷேக்தாவுத் சாகிப், ஏ.பழனியப்ப செட்டியார், ஈ.ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆகிய மூன்று கனவான்களும் சேர்மன் மீது ஈரோடு முன்சீப் கோர்ட் டில் வழக்குத் தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றவொட்டாதபடி இஞ்சங்ஷன் பெற்று விட்டார்கள். அந்த பிராதின் சாராம்சத்தைக் கீழே குறிப்பிடுகிறோம்:-

1. வருஷாந்தர உத்தேச வரவு-செலவு திட்டமாகிய பட்ஜற்றில், சிங்கார வனத்திற்காக 3000 ரூபாயும், குழந்தைகள் விளையாடும் ஸ்தலத்திற்காக 2000 ரூபாயும் ஒதுக்கி வைக்கப்பட்டது.

2. இப்படி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் இதை நிறைவேற்றும் போது சேர்மன் ஒவ்வொரு அயிட்டங்களைப் பற்றியும் கவுன்சிலர்களுடைய சம்மதம் பெற்றுத்தான் செலவு செய்யவேண்டும்.

3. இப்படியிருக்க, சேர்மனால் இதற்கென்று இதுவரை 7000 ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது. இவற்றும் 633 ரூபாய் தவிர பாக்கியெல்லாம் கவுன்சில் சம்மதமில்லாமலே சேர்மென் தன் இஷ்டம் போல் செலவழித்திருக்கிறார்.

இப்படியிருக்க இதுவரை சேர்மனால் செலவு செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு அநுமதி கொடுக்கவும், மேற்கொண்டு 5000 ரூபாய் அநுமதிக்கவும், கவுன்சிலர்களுடைய சம்மதத்தைப் பெற 26.10.25-ல் சேர்மன் ஓர் மீட்டிங்கு போட்டிருந்தார். அந்த மீட்டிங்கை 2-11-25-க்கு தள்ளிவைத்து அதற்குள்ளாக, சேர்மன் செலவு செய்திருக்கும் தொகைகளைப் பரிசீலனை செய்ய ஓர் சப் கமிட்டி நியமிக்கப்பட்டது.

4. சப்கமிட்டி தன்னுடைய ரிப்போர்ட்டை அநுப்பிவிட்டது.

5. 10-11-25-ந்தேதி மீட்டிங்குக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு வாதிகளான கவுன்சிலர்களும் மற்ற சில கவுன்சிலர்களும் மீட்டிங்கு நடக்கும் ஸ்தலத்துக்கு வந்து பார்த்தபோது, சேர்மன் மினிட் புஸ்தகத்தில் என்னமோ எழுதிக் கொண்டேயிருந்தார். அந்த சமயம் சேர்மனைப் பார்த்து, நாங்கள் வந்திருக்கிறோம், நீங்கள் மினிட் புஸ்தகத்தில் என்னமோ எழுதிக்கொண்டிருக்கிறீர்களேயென்று கேட்டார்கள். இதை சேர்மன் கொஞ்சமும் கவனிக்காமல் எழுதிக் கொண்டேயிருந்தார். மறுபடியும் கவுன்சிலர்கள் கண்டித்து, அதென்னவென்று கேட்க பின்னால் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தனக்கு வேண்டி யதை எழுதிக்கொண்டார். கவுன்சிலர் ஸ்ரீமான் ஷேக்தாவுத் சாய்பு சப்கமிட்டி யினுடைய ரிப்போர்ட் என்னவென்பதைப் படிக்கும்படி கேட்டார். அதையும் படிக்கமுடியாதென்று சேர்மன் சொல்லிவிட்டார்.

6. பிறகு சேர்மன் அங்கிருந்த ரெவரெண்ட் ஏ. டப்ளியு பிரவ் என்னும் ஐரோப்பிய கவுண்சிலரை, மேல்கொண்டு வேலை செய்வதற்காக பல அயிட்டங்களுக்கு 2700 ரூபாய் அநுமதிப்பதாக ஓர் தீர்மானத்தை பிரேரேபிக்கும்படி அழைத்தார். அவர் அது போலவே பிரேரேபித்தார். மற்றொரு கவுன்சிலரான ஸ்ரீமான். வி.ஐ.டேவிட் அதை ஆமோதித்தார்.

7. ஸ்ரீமான். ஷேக்தாவூத் சாய்பு அவர்கள், பச்சைக் கொடி பந்தல் போடுவதற்கு 1000 ரூபாய் நீக்கி பாக்கித் தொகையை மாத்திரம் அநுமதிக்கலாமென்று ஒரு திருத்தப் பிரேரேபனை கொண்டு வந்தார். இதை ஸ்ரீமான் பழனியப்ப செட்டியார் ஆமோதித்தார். இதை சேர்மன் வோட்டுக்கு விட்டார். இத்திருத்தப் பிரேரேபனைக்கு 7 கவுன்சிலர்கள் அனுகூலமாக வோட் கொடுத்ததினால், திருத்தப் பிரேரேபனை நிறைவேறிற்று.

8. ஸ்ரீமான். வி.ஐ.டேவிட் என்பவர், சேர்மன் தூண்டுகோலின்பேரில் எழுந்து இத்திருத்தப் பிரேரேபனை ஒழுங்கானதல்லவென்றும் அசல் தீர்மானம் முன்னமே நிறைவேறிவிட்டதால், திருத்தப் பிரேரே பனையைப் பற்றிக் கவனிக்கவேண்டியதில்லையென்றும் சொல்லி விட்டார். ஸ்ரீமான் ஷேக்தாவூத் சாய்பு, உடனே எழுந்து ஸ்ரீமான். பிரவ் துரையின் அசல் தீர்மானம் வோட்டுக்கு விடப்படவில்லையென்றும், நிறைவேறவில்லை யென்றும் ஆக்ஷபித்தார். அசல் தீர்மானத்தைப் பிரேரேபித்த ஸ்ரீமான். பிரவ் துரை தம்முடைய தீர்மானம் வோட்டுக்கு விடப்படவில்லையென்றும், அது நிறைவேறவில்லையென்றும் சொல்லியும், சேர்மன் கேட்காமல் ஒழுங்குக்கு விரோதமாய், ஸ்ரீமான். பிரவ் துரையின் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும், திருத்தப் பிரேரேபனை ஒழுங்குத் தவறென்றும் தீர்மானித்துவிட்டார்.

9. சேர்மன் ஸ்ரீமான்.பிரவ் துரையின் தீர்மானத்தை வோட்டுக்கு விடாமல் நிறைவேறி விட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்யும், ஒழுங்கீனமானதுமாகும். ஆதலால் ³ தீர்மானம் ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. சேர்மனானவர் திருத்தப் பிரேரேபனையை வோட்டுக்கு விட்டதையும், மெஜாரிட்டி கவுன்சிலர்களால் தீர்மானிக்கப்பட்டதையும் பதிவு செய்துகொண்டு அதை அமுலில் கொண்டு வரக் கடமைப் பட்டவர்.

10. இந்தக் காரணங்களால் சேர்மன் ஸ்ரீமான்.ஸ்ரீனிவாச முதலியாரவர்களுடைய காரியம், கெட்ட எண்ணமுள்ளதும், அயோக்கியத் தனமுள்ளதும், அதிகாரத்திற்கு மேற்பட்டதும், அக்கிரமமானதும், தனது யோக்கிதைக்குப் பொருந்தாததுமாகும்.

11. ஆகையால் வரிகொடுக்கும் பொது ஜனங்களின் நன்மையைக் கோரி ஸ்ரீமான்.பிரவ் துரையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டு வராமலிருக்கவும், வரிப்பணத்தை எடுத்து இதற்காக ஒரு சைசா வேனும் செலவு செய்யாமலிருக்கவும் ஸ்ரீமான்.ஷேக்தாவூத் சாய்பின் தீர்மானத்தை ஒழுங்குப்படி நிறைவேறினதாகக் குறிப்புப் புஸ்தகத்தில் எழுதித் தீர்மானித்து, அதை அமுலுக்குக் கொண்டுவரவும் வேண்டியது மிகவும் அவசியமான தாயிருக்கிறது.

12. அல்லாமலும், நீதியையும் கிரமத்தையும் அநுசரித்து, பச்சைக் கொடிப் பந்தலுக்கென்று சேர்மன் வரிகொடுப்போர் பணத்தை எடுத்துச் செலவு செய்யாமலிருக்கும்படி சேர்மன் மீது ஓர் இஞ்சங்ஷன் கட்டளையும் பிறப்பிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.

என்று இம்மாதிரி ஓர் பிராது கொடுத்ததின்பேரில் கோர்ட்டாரவர்கள் இதை ஏற்றுக்கொண்டு தற்கால சாந்தியாய் ஓர் இஞ்சங்ஷன் கட்டளையும் பிறப்பித்திருக்கிறார். இதைப்பற்றி வரிகொடுப்போருக்கு அதிகம் ஒன்றும் சொல்லவேண்டியதில்லையென்றே நினைக்கிறோம். பொது ஜனங்களுடைய பணத்தை இம்மாதிரி தப்பான வழியில் செலவழிக்கக்கூடாது என்கிற கக்ஷிக்கு அம்மீட்டிங்கில் அநுகூலமாயிருந்தவர்கள், ஸ்ரீமான்கள். கே.ஏ.ஷேக்தாவூத் சாய்பு, மு.ச.முத்துக்கருப்பன் செட்டியார், மு.ச.பழனியப் பன் செட்டியார், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், ஈ.ஜி.சுப்பிரமணிய ஐயர், ஈர்ஜி. காளிதாஸ் சேட், ஆர்.சதாசிவம் செட்டியார் முதலியவர்கள்.

சேர்மனுக்கு அநுகூலமாயிருந்து சேர்மனுக்கு அநுகூலமாய் வோட் கொடுத்தவர்கள் ஸ்ரீமான்கள். ஸ்ரீனிவாச முதலியார், டேவிட் பிரவ் துரை, பார்க்கர், மை.மைதீன் சாய்பு, காதர் சாய்பு இவர்களில் முதல் நால்வரும் உள்ளூர்வாசிகளல்ல. அதற்கடுத்தவர் சேர்மன் தயவால் நியமனம் பெற்றவர். கடைசியாகக் குறிப்பிட்ட ஸ்ரீமான்.காதர் சாய்பு உள்ளூர்வாசியும், பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவருமாவார். உயர்ந்தவரென்றும் மக்களுக்கு மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவரென்றும், யேசுநாதரின் உண்மைக் கொள்கைகளைப் பரப்புபவரென்றும், ஐரோப்பிய மேன்மகனென்றும் சொல்லிக் கொள்ளும் ரெவரெண்ட் பிரவ் துரையவர்கள் இவ்வக்கிரமங்களில் எப்படிக் கலந்திருக்கிறாரென்பதைப் பொது ஜனங்கள் யோசிக்க வேண்டுமாய்க் கோருகிறோம். மற்றவை பின்னால்.

(குடி அரசு - கட்டுரை - 15.11.1925 )

Pin It