சுயராஜ்யக் கட்சியின் பொதுக்காரியதரிசியாகிய ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் இந்திய சட்டசபையின் மெம்பராயிருப்பதன் பயனாய் இந்தியா கவர்ன்மெண்டின் தயவைப் பெற்று தப்பான வழியில் தன் மகனுக்கு ஓர் பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டதையும், அரசாங்க கமிட்டிகளில்தான் மெம்பர் உத்தியோகம் பெற்றுக் கொண்டதையும் இதற்கு முன்பே “குடி அரசில்” குறிப்பிட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

சுயராஜ்யக் கட்சியின் பெருந்தலைவரான ஸ்ரீமான் பண்டித நேரு அவர்களும் இதே மாதிரியே சர்க்காரின் ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றிருப்பதையும், அதற்காகச் சர்க்காருக்கு யோசனை சொல்ல பல விஷயங்களை அறிந்து வர என்கிற சாக்கின் பேரில் சர்க்கார் செலவிலேயே சீமைக்கு போகப் போகிறாரென்பதும் வாசகர்கள் அறிந்ததே.

இவை மாத்திரமல்லாமல் இன்னொரு ரகசியத்தையும் ஸ்ரீமான் விபின சந்திர பாலரவர்கள் வெளியாக்கி விட்டார். அதாவது பண்டித நேரு அவர்கள் சட்டசபை உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தவரும் அவருக்கு நெருங்கின கட்டுப்பட்ட பந்துவுமான ஒருவர் ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரைப் போலவே தனது பதவியின் செல்வாக்கால் சர்க்காரின் தயவுபெற்றுத் தன்னுடைய மகனுக்கு ராணுவ உத்தியோகத்தில் ஒரு பெரிய பதவி பெற்றி ருப்பதாகவும், இதை ஸ்ரீமான் ஷாம்லால் நேரு அவர்களே என்னிடம் சொன்னாரென்றும், இது ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரின் நடத்தைக்குக் கொஞ்சமும் இளைத்ததல்லவென்றும், ஸ்ரீமான் விபின சந்திரபாலரவர்கள் “இங்கிலீஸ்மென்” பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

இதைப்பற்றி ஸ்ரீமான் ரங்கசாமி ஐயங்காராவது, பண்டிதராவது தங்களுக்காகவாகிலும், கட்சிக்காகவாகிலும் இவ்வித நடவடிக்கைக்கு இது வரையில் எவ்வித மறுப்பாவது, சமாதானமாவது எழுதினவர்களுமல்ல.

ஸ்ரீமான் தம்பே சுயராஜ்யக் கட்சி மெம்பராயிருந்து மத்திய மாகாண நிருவாகசபை அங்கத்தினர் பதவி பெற்ற துரோகத்தைக் கண்டித்த சுயராஜ்யக் கட்சியின் மற்ற அங்கத்தினராவது ஸ்ரீமான் ஐயங்காரையும் பண்டித நேருக்களையும் கண்டித்தவர்களுமல்ல.

ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டையாடுகிறது. மிதவாதக் கட்சி உத்தியோக வேட்டையாடுகிறது. சுயராஜ்யக் கட்சியார் ஆகிய நாங்கள் பதிவிரதைகள். சர்க்கார் சம்பந்தமான எந்த உத்தியோகத்திற்கும் ஆசைப்படமாட்டோம். அது ரொம்பவும் தேசத்துரோகமானது. காங்கிரஸ் ஒத்துழையாமையை விட்டு விட்ட போதிலும் சுயராஜ்யக் கட்சியார் ஒத்துழையாமையை கைவிடப் போவதில்லையென்றும், எங்களைத் தெரிந்தெடுத்தால் சட்டசபைக்குள்ளே போய் சர்க்காரை எவ்வித நடவடிக் கையையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டுத் தடுத்துவிடுவோமென்றும், சர்க்கார் காக்காய் கருப்பென்றால் கூட நாங்கள் வெள்ளையென்றேதான் சொல்லுவோம் என்றும், எங்கள் காரியம் பலிக்காவிட்டால் உடனே வெளியே வந்து விடுவோம்,

வெளியில் வந்தவுடன் சட்டமறுப்பு ஆரம்பித்து நாங்களெல்லோரும் ஜெயிலுக்குப் போவோம், எங்களுடைய போக்குவரத்து வழிச் செலவுகூட சர்க்காரிடமிருந்து பெற மாட்டோம் என்றும், பாமர ஜனங்களான ஓட்டர்களிடம் பொய்யையும் புளுகையும் வண்டி வண்டியாய் அளந்து ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குச் சென்று “அநித்திரானி சரீரானி அந்தரு சொம்மு மனக்கே ரானி” என்பதுபோல் சகல உத்தியோகமும் சகல பதவிகளும் மிகவும் பாவமானது, ஆனால் அதுகள் முழுதும் எங்களுக்கே கிடைக்க வேண்டும்.

மிதவாதிகளே! உங்களுக்கும் கொடுக்க மாட்டோம். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களே! உங்களுக்கும் கொடுக்க மாட்டோம். உங்களுக்கேதாவது கண்டிப்பாய் உத்தியோகம் பெற்றுத்தான் ஆகவேண்டுமென்கிற ஆசையிருக்குமானால் எங்கள் கட்சியில் வந்து சேருங்கள்.

“அதாவது, வரும்போது நீங்கள் அரிசி கொண்டுவாருங்கள் எங்களிடத்தில் உமியிருக்கிறது இரண்டையும் கலந்து ஊதி ஊதி இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லும் சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதையைப் பொது ஜனங்கள் இப்பொழுதாவது தெரிந்து கொண்டிருப்பார்களென்று எண்ணுகிறோம்.

போதாக்குறைக்கு இந்த தடவையும் ஓட்டர்களை ஏமாற்றி சட்ட சபைக்குப்போய் உத்தியோகம் பெறுவதற்காக தைரியமாய்ப் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதென்னவென்றால் பண்டித நேரு அவர்கள் சட்டமறுப்பு ஆரம்பிக்கப் போகிறோம், எங்களை மறுபடியும் சட்டசபைக்கு அனுப்புங்களென்ற பழைய மந்திரத்தையே இப்பொழுதும் ஜெபிக்கத் தொடங்கி விட்டதுதான். சட்ட மறுப்பு தொடங்குவதாயிருந்தால் இவர்களை யார் வேண்டாமென்று சொன்னார்கள்.

இதற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா? மகாத்மா சட்ட மறுப்பு ஆரம்பித்த காலத்தில் ஸ்ரீமான்களான ஸ்ரீனிவாசய்யங்காரும், ரெங்கசாமி ஐயங்காரும், சத்தியமூர்த்தியும், எம்.கே. ஆச்சாரியாரும் எந்த உலகத்தலிருந்தார்கள்?

வங்காளத்தில் மந்திரி பதவியெடுபட்டவுடன் அவ்விலாக்காக்களை சர்க்காரார் எடுத்துக்கொண்டு ஏகபோகமாய் நடத்த ஆரம்பித்தார்களே அப் பொழுது இவர்கள் எங்கே போய் விட்டார்கள். சட்டசபையில் கொண்டுபோய் நிறைவேற்றிய தீர்மானங்களை வைசிராய்ப் பிரபு குப்பைத் தொட்டியில் போட்டாரே அப்பொழுது எங்கே போய்விட்டார்கள்?

பர்க்கென் எட் பிரபு எவ்வித சீர்திருத்தத்துக்கும் இனிமேல் நீங்கள் லாயக்கில்லையென்று சொல்லிவிட்டாரே அப்பொழுது என்ன செய்துகொண்டிருந்தார்கள். வங்காளத்தில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து அநேக நிரபராதிகளை ஜெயிலில் பிடித்தடைத்தார்களே அப்பொழுது சட்டமறுப்பு எங்கே போய்விட்டது. சட்டசபைத் தேர்தல்கள் நடக்கிற சமயத்தில் மாத்திரம் சட்டமறுப்பு, சட்டமறுப்பு என்று சொல்லிக்கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி, சட்டசபைக்குப் போனவுடன் தாங்களும், தங்கள் பிள்ளை குட்டிகளும், தங்கள் பந்துக்களும், உத்தியோகம் சம்பாதிப்பதுதான் சட்டசபை மறுப்பாய் போய்விடுகிறது. இதை இன்னமும் பொது ஜனங்கள் உணரவில்லை என்பது பெருத்த ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

“சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தில் நமக்கு நம்பிக்கையில்லை. அக்கட்சியாரும் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை. ஆனாலும் அதொன்றுதான் தீவிர அரசியல் கொள்கையுடைத்தாயிருக்கிறது. அதனால் அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை” என்று சொல்வோரின் கூற்று அதை விட நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. நம்பிக்கை இல்லாத திட்டத்தை உடைய கட்சியும் யோக்கியமாய் நடந்து கொள்ளாதவர்களால் நடத்தும் கட்சியும் எப்படி அதி தீவிரக்கட்சியாய் விடுமோ! எதை உத்தேசித்து - அதை ஆதரிக்க வேண்டியது இவர்கள் கடமையோ! இது கடவுளுக்குத்தான் தெரிய வேண்டும். இவர்களையுடைய தேசம் சுயராஜ்யமடையுமென்று நினைப்பது அமாவாசையன்று பூரணச் சந்திரனைப் பார்க்கலாம் என்பது போலத்தான் முடியுமென்று சொல்ல நாம் வருந்துகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.11.1925)

Pin It