II

இனி "இஸ்ரேல்' (யிஸ்ரேயெல்' என்று யூதர்கள் அழைக்கின்றனர்) எவ்வாறு தோன்றியது என்பதைப் பார்ப்போம். பல்வேறு வரலாற்றுக் காரணங்களால், இன்று பாலஸ்தீனம் என வழங்கப்படும் பகுதியிலிருந்து வெளியேறி, ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுகளாக நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனம் முழுவதையும் தாயகமாக்க வேண்டும் என ஜியோனிஸ்டுகள் முடிவு செய்தனர். அப்போது, அந்தப் பாலஸ்தீன மண்ணில் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்துவந்த அய்ந்து லட்சம் அராபியர்களை, அவர்கள் உருவாக்கியிருந்த வாழ்க்கை முறையை, பண்பாட்டைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. யூதர்களுக்கு ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்க விரும்பிய ஜியோனிஸ்டுகள், மற்ற மக்களுக்கு அதை மறுத்தனர். துருக்கியைத் தலைமையகமாகக் கொண்டிருந்த ஓட்டோமன் பேரரசு, முதல் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ஜார் ரஷ்யா ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டது. அந்தப் பேரரசு, கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் சிலவற்றையும் அரபுப் பகுதிகள் சிலவற்றையும் உள்ளடக்கியிருந்தது. அது, தோற்கடிக்கப்பட்டதும், மத்தியக்கிழக்கில் ஓட்டோமன் பேரரசுக்கு இருந்த பகுதிகளை பிரான்சும் பிட்டனும் பங்கு போட்டுக் கொண்டன.

Yasar Arabat
1917 இல் பிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பால்போர், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தேசியத் தாயகம் உருவாக்கித் தரப்படும் எனக் கூறினார். ஆனால், அவர் 1925 இல் பிரதமராகியதும் பிரிட்டனுக்குள் யூதர்கள் வந்து குடியேறுவதை எதிர்த்தார். அவர் வெளியிட்ட பிரகடனம், அன்று பாலஸ்தீன மக்கள் தொகையில் 90 விழுக்காடாக இருந்த அரபு மக்களின் குடிமை உரிமைகளுக்கும், மத உரிமைகளுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் யூதர்கள் அங்கு குடியேறலாம் எனக் கூறியது. பிரெஞ்சுக் காலனிகளாக இருந்த சிரியா, லெபனான் ஆகியவையும் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த எகிப்து, ஈராக், (ட்ரான்ஸ்) ஜோர்டான் ஆகியனவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சுதந்திரம் பெற்றன. ஆனால் "பால்போர் பிரகடன'த்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, பாலஸ்தீனத்தை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டது. இதற்கிடையே ஜியோனிசத்தின் பொருளாதார, மத - பண்பாட்டு ஊக்குவிப்புகளின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினர்.

உலகம் முழுவதிலுமிருந்த யூதர்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டிய ஜியோனிஸ்டுகள், தங்கள் சொந்த இனத்தையும் மதத்தையும் சேர்ந்த சாமானிய பாலஸ்தீன உழவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அவர்களிடம் குத்தகைப் பணத்தை வாங்கிக் கொண்டு, பாரிசிலும் பெய்ரூட்டிலும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்த நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களை வாங்கினர். அங்கு ஆயுதமேந்திய ஜியோனிசக் குழுக்களின் பாதுகாப்புடன் "கிப்புட்ஸ்கள்' (Kibbutzes) எனப்படும் கூட்டுப் பண்ணைகளை உருவாக்கினர். ஜியோனிஸ்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வந்ததால் (இந்தத் தாக்குதல்களில் தாவீது அரசர் ஓட்டல் மீதான தாக்குதலும் அடங்கும்), 1947 பிப்ரவரியில் பிரிட்டிஷ் அரசாங்கம் பாலஸ்தீனப் பிரச்சனையை அய்.நா. அவைக்குக் கொண்டு சென்றது. அய்.நா. அவை அமைத்த ஒரு சிறப்புக் குழு, பாலஸ்தீனத்தை அரபு மக்களுக்கும் யூதர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும், யூத, கிறித்துவ, இஸ்லாம் மதத்தினர் மூவரும் தமது புனித இடமாகக் கருதும் ஜெருசலேம் நகரம், சர்வதேச நிர்வாகத்திலிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இதற்கிடையே, பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ராணுவம் தொடர்ந்து இருப்பதைவிட, யூதர்களுக்கான ஒரு சுதந்திர தேசமாக இஸ்ரேல் உருவாவதையே சோவியத் யூனியன் விரும்பியது. சோவியத் யூனியன் மேற்கொண்ட நிலைப்பாடே "இஸ்ரேல்' தேச உருவாகத்தில் தீர்மானகரமானப் பங்கு வகித்தது. பிரிட்டனும் அமெரிக்காவும் பாலஸ்தீனத்தை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிப்பது சாத்தியமற்றது எனக் கூறின. அன்றைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் பார்ரெஸ்டல், பாலஸ்தீனப் பிரதேசத்தை அய்.நா.வின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவர அமெரிக்கா தனது படைகளை அனுப்ப வேண்டும் என அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஹா ட்ரூமனிடம் பரிந்துரை செய்தார்.

அய்.நா. அவை, பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 10 நாடுகள் நடுநிலை வகித்தன. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ஆயுதமேந்திய ஜியோனிசக் குழுக்கள் அதிரடியாகப் பெரு நகரங்களையும் சிறு நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டு, பாலஸ்தீன அரேபியர்களைக் கூண்டோடு வெளியேற்றத் தொடங்கின. அண்டையிலுள்ள அரபு நாட்டுப் படைகள் தாக்குதல் தொடுக்க ஆயத்தம் செய்து வருவதாலேயே தாங்கள் அவ்வாறு செய்வதாகப் புளுகின. நாம் மேலே குறிப்பிட்ட தீவிரவாத யூதக் குழுவான "இர்குன்', மெனாகெம் பெகின் தலைமையில் 1948 இல் டெய்ர் யாசின் என்னும் கிராமத்திலிருந்த அனைத்து அரேபியர்களையும் படுகொலை செய்தது. 1948 மே மாதம் பாலஸ்தீனத்திலிருந்து பிட்டிஷ் தூதர் வெளியேறியதும், ஜியோனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டேவிட் பென் குயொன் இவரும் பின்னாளில் இஸ்ரேலியப் பிரதமர் பதவியை வகித்தார் "இஸ்ரேல் அரசு' உருவாக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். இதனை சகித்துக் கொள்ளாத அரபு நாடுகளான ஜோர்டான், எகிப்து, ஈராக், லெபனான் ஆகியவற்றின் படைகள், "இஸ்ரேலிய அரசின்' மீது தாக்குதல் தொடுத்தன. பாலஸ்தீனர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அந்த அரபு தேச அரசாங்கங்கள் அறிவுரை கூறின.

இந்தப் போர் 1949 சனவரியில் முடிவடைந்து, அரபு நாடுகளும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் அய்.நா. தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்ததை விட, நாற்பது விழுக்காட்டிற்கும் கூடுதலான பிரதேசங்களை இஸ்ரேலுக்கு வழங்கியது! இந்தப் போல் ஜியோனிஸ்டுகள் வெற்றி பெறுவதில் தீர்மானகரமான அம்சமாக இருந்தது, அன்றைய கிழக்கு அய்ரோப்பிய "சோசலிச' நாடான செக்கோஸ்லோவேகியாவிலிருந்து அவர்கள் வாங்கிய சோவியத் நவீன ஆயுதங்களாகும். ஆனால், இஸ்ரேல் விரைவில் சோவியத் யூனியனை உதறித் தள்ளிவிட்டு, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டது. அமெரிக்க - இஸ்ரேலிய உறவு நாளடைவில் பலப்பட்டு, இஸ்ரேல் அமெரிக்காவின் புறக்காவல் நிலையமாகிவிட்டது. இது, அவ்வளவு எளிதாக ஏற்பட்ட மாற்றம் அல்ல.

எகிப்திலிருந்த மேற்கு நாட்டு நிறுவனங்கள் மீது ஜியோனிஸ்டுகள் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்ததால், அமெரிக்கா இந்தத் தொல்லையைத் தவிர்க்க விரும்பியது. இதற்கிடையே கமால் அப்டெல் நாசர் தலைமையிலிருந்த எகிப்து அரசாங்கம் நிலச்சீர்திருத்தம், வெளிநாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டதால், அமெரிக்க அரசாங்கம் எகிப்திற்குக் கடனுதவிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக எகிப்து சோவியத் யூனியன் பக்கம் சாயத் தொடங்கியது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேலே இனி தனது நம்பகமான கூட்டாளி என்னும் முடிவுக்கு வந்தது. ஆயினும் அப்போதும்கூட அமெரிக்கா, இஸ்ரேலின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, 1956 இல் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கியதை எதிர்த்து எகிப்தின் மீது பிரிட்டிஷ், பிரெஞ்சு நாடுகள் ராணுவப் படையெடுப்பை நடத்தியபோது, அவற்றுடன் இஸ்ரேலியப் படைகளும் சேர்ந்து கொண்டன. ஆனால், வெவ்வேறு காரணங்களுக்காக, இந்தப் படையெடுப்பை அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய இரண்டுமே கண்டனம் செய்ததால், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொண்டது. அதே போல 1991 இல் நடந்த வளைகுடாப் போர், 2004 இல் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் ஆகிய இரண்டிலும் இஸ்ரேல் சம்பந்தப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அது, அரபு மக்களிடையே பலத்த எதிர்ப்பை உண்டாக்கிவிடும் என அமெரிக்கா கருதியதுதான் காரணம். இவையெல்லாம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் ஏற்பட்ட சிறு பிணக்குகளே தவிர, மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்தையும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் இரண்டுக்குமிடையே கருத்து வேறுபாடு இல்லை.

இஸ்ரேல் அரசால் தங்கள் தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பாலஸ்தீன அராபியர்கள் ஜோர்டன் ஆற்றின் மேற்குக் கரை, இஸ்ரேலிய அரசால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ள (அச்சமயம் எகிப்தின் நிர்வாகத்தின் கீழிருந்த) காசா பகுதி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். இவர்களது மறு வாழ்விற்காக அய்.நா. அவை ஒரு நிவாரண அமைப்பை 1949 இல் அமைத்தது.
அதாவது அய்.நா.வின் அன்றைய பார்வையின்படி, இந்தப் பாலஸ்தீனர்கள் ஒரு தேசத்தின் மக்களல்ல; மறுவாழ்வு தேவைப்படும் அகதிகள். அவ்வளவுதான். எனவே, பாலஸ்தீனர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் பொறுப்பு முற்றிலுமாக அரபு நாட்டு அரசாங்கங்களுக்கு விட்டுவைக்கப்பட்டு விட்டது. அரபு நாடுகளுக்கான அமைப்பான அரபு நாடுகள் கழகத்திற்கு (Arab League) பாலஸ்தீனப் பிரதிநிதியாக யாரை நியமிப்பது என்பதை அரபு நாட்டு அரசாங்கங்களே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

1964 இல் நடந்த அரபு நாடுகளின் உச்சி மாநாட்டில் எகிப்திய அதிபர் கமால் அப்டெல் நாசர், ஒன்றுபட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பொன்றை உருவாக்கப் பாடுபடும்படி அரபு நாடுகளை வற்புறுத்தினார். 1964 மே மாதம் ஜெருசலேம் நகரில் கூடிய பல்வேறு பாலஸ்தீன அமைப்புகளின் பிரதிநிதிகளும் தனிநபர்களும் விவாதித்து, "பாஸ்தீன விடுதலை இயக்கத்தை' (Palaestine Liberation Organisation - PLO) தோற்றுவித்தனர். இந்த அமைப்பு பல்வேறு விடுதலைப் போராளிக் குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு "குடை அமைப்பு'. இதில் இணைந்த "அல்பட்டா' என்னும் குழுவைத் தோற்றுவித்தவர் எகிப்தில் பிறந்த யாசர் அராபத். இவரது குழுவைச் சேர்ந்தவர்களும் பி.எல்.ஓ.விலிருந்த பெரும்பான்மையினரும், பாலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க அரபு நாடுகள் கையாளும் ராசதந்திர முயற்சிகளால் பயனேதும் விளையாது, ஆயுதப் போராட்டத்தின் மூலமே தாம் இழந்த தாயகத்தை மீட்க முடியும் என்னும் முடிவுக்கு வந்தனர்.

1965 இல் இஸ்ரேலில் பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் தமது முதல் ஆயுதமேந்திய தாக்குதலைத் தொடுத்தனர். அடுத்த சில மாதங்கள் வரை இந்தத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது. 1967 சூன் மாதம் இஸ்ரேல், அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்களுடன் மின்னல் வேகத்தில் எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகியவற்றின் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரைப்பகுதி (பாலஸ்தீனத்திற்குச் சொந்தமானது), சிரியாவின் கோலான் குன்றுகள், எகிப்தின் சினாய் பாலைவனப் பகுதி ஆகியவற்றையும் ஜெருசலேம் நகரம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறினர்.

1967 நவம்பர் 22 இல் அய்.நா. பாதுகாப்பு அவை நிறைவேற்றிய தீர்மானம், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வற்புறுத்தியது. ஆனால், தனது இருப்பையே அரபு நாடுகள் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பான எல்லைகள் வேண்டும் எனக் கூறி இஸ்ரேல் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. 1948 முதல் இன்றுவரை இஸ்ரேல் அய்.நா. அவையின் ஒரு தீர்மானத்தைக்கூட ஏற்று கொண்டதில்லை. அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என எந்த ஒரு மேற்கு நாட்டு அரசாங்கம் வற்புறுத்தியதுமில்லை. அரபு நாடுகளின் நிலையான ராணுவங்களின் தோல்வி பாலஸ்தீனியர்களை மட்டுமல்ல, அராபியர்கள் அனைவரையுமே வெட்கித் தலை குனிய வைத்தது. இனி, கெரில்லாப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்னும் முடிவுக்கு பி.எல்.ஓ. வந்து சேர்ந்தது.

1968 மார்ச்சில் பாலஸ்தீனக் கிராமமான அல்கரமே (Al-karameh) என்னுமிடத்தில் நடந்த சண்டையில் பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், இஸ்ரேலியப் படைகளை அங்கிருந்து ஓடும்படி செய்தனர். பாலஸ்தீனப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி இதுதான். போராளிகளின் புகழ் ஓங்கியது. பல்வேறு போராளிக் குழுக்கள் பி.எல்.ஓ.வில் இணைந்தன. அரபு நாடுகளின் ஆதரவும் ஓரளவு கிட்டியது. 1969 பிப்ரவரியில் யாசர் அராபத், பி.எல்.ஓ.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், பி.எல்.ஓ.வின் புகழ் அரபு நாடுகள் முழுவதிலும் பரவி வந்ததைக் கண்டஞ்சிய அரபு ஆளும் வர்க்கங்களின் முக்கியப் பிரதிநிதிகளிலொருவரான ஜோர்டான் மன்னர் ஹுஸ்ஸெய்ன், 1970 செப்டம்பரில் தனது துருப்புகளை பி.எல்.ஓ. போராளிகள் மீது ஏவினார். "கருப்பு செப்டம்பர்' என அழைக்கப்படும் அந்த மாதத்தில் எண்ணற்ற பாலஸ்தீனப் போராளிகள் தங்கள் சக அராபியர்களாலேயே கொல்லப்பட்டனர். அதன் பிறகு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பி.எல்.ஓ., லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் தனது தலைமையகத்தை நிறுவி செயல்பட்டு வந்தது. விருந்தாளி நாடான லெபனானிலிருந்து கொண்டு இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து வந்தன.

ஆனால், ஜோர்டானில் நடந்த படுகொலைகளால் ஆத்திரற்றிருந்த போராளிகள் "கருப்பு செப்டம்பர்' என்பன போன்ற அமைப்புகளை உருவாக்கி, அய்ரோப்பாவிலும் எகிப்திலுமிருந்த இஸ்ரேலிய அரசு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக, பி.எல்.ஓ. என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்னும் சித்திரத்தை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உலக மக்களின் மனதில் தீட்டத் தொடங்கின. எனவே, பி.எல்.ஓ. தலைமை, தனது தந்திரவுத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையை உணர்ந்தது. ஆயுதமேந்திய போராட்டம் என்பதைக் கைவிடாமல் உலக அளவில் ராசதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. பாலஸ்தீன மக்களின் ஒற்றுமையையும் அடையாளத்தையும் வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது.

1973 இல் அல்ஜீயத் தலைநகர் அல்ஜியர்சில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாடு, மத்தியக் கிழக்கிலுள்ள நெருக்கடிகளுக்குக் காரணமாக இருப்பது, பாலஸ்தீனப் பிரச்சனைதானேயன்றி அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குள்ள மோதலல்ல என்பதை முதன் முதலாக அறிவித்தது. 1974 இல் நடந்த அரபு நாடுகளின் கழகத்தின் உச்சி மாநாடு, பாலஸ்தீன மக்களின் நியாயமான, சட்டப்பூர்வமான ஒரே பிரதிநிதி பி.எல்.ஓ.தான் என்பதை ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு அக்டோபரில் அய்.நா. பொது அவை, பி.எல்.ஓ.விற்கு அந்த அவையின் நடவடிக்கைகளைப் பார்வையிடும் "பார்வையாளர்' தகுதியை வழங்கியது.

பாலஸ்தீன மக்களின் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்த அய்.நா. பொது அவை, ஜியோனிசம் என்பது இனவாதத்தின் ஒரு வடிவம் எனக் கூறும் தீர்மானத்தை இயற்றியது. இவையெல்லாம் யாசர் அராபத்தின் தலைமைக்குக் கிடைத்த வெற்றிகள். ஒரே மாதிரியான உரிமைகளை அனுபவிக்கின்ற, கடமைகளை ஆற்றுகிற, முஸ்லிம்கள், கிறித்துவர்கள், யூதர்கள் ஆகியோரடங்கிய ஒரு மதச்சார்பற்ற, சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்படும் என பி.எல்.ஓ. உருவாக்கிய செயல்திட்டம் கூறியது. இஸ்ரேல் அரசு நீடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இத்திட்டம் குறிப்பால் உணர்த்தியது. ஆனால், அதே சமயம், எதார்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட ஒரு பிரதேசத்திலோ அல்லது இஸ்ரேல் அரசு தானாக விட்டு வெளியேறிய பிரதேசத்திலோ, தற்காலிகமான ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் சாத்தியப்பாட்டையும் கருத்தில் கொண்டது.

1973 இல் இஸ்ரேலுக்கும் எகிப்து மற்றும் சிரியா ஆகியவற்றுக்குமிடையே மீண்டும் போர் மூண்டது. சூயஸ் கால்வாயைக் கடந்து எகிப்து படைகள் முன்னேறி தமது ராணுவ வல்லமையைக் காட்டியபோதிலும், அதன் பிறகு ஏற்பட்ட போர் ஒப்பந்தம் 1967 ஆம் ஆண்டுப் போரில் எகிப்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவில்லை. இஸ்ரேலுக்குள்ளேயே ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, நாம் மேலே குறிப்பிட்ட, "இர்குன்' அமைப்பின் தூண்களிலொருவரான மெனாகெம் பெகின் இஸ்ரேலியப் பிரதமரானார். பாலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முற்றாக நிராகரித்த அவர், அப்போது அமெரிக்க சார்பாளராக இருந்த எகிப்தியப் பிரதமர் அன்வர் சதாத்துடன் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் 1980 இல் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார். இதன்படி சினாய் பாலைவனப் பகுதி எகிப்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதே சமயம், ஜெருசலேம் நகரின் அரபுப் பகுதியை மெனாகம் பெகின் இஸ்ரேலுடன் இணைத்துக் கொண்டு, அதுதான் இஸ்ரேலின் ஒரே தலைநகரம் என அறிவித்தார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவோ அல்லது அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவோ அய்.நா. அவையில் அடுத்தடுத்துக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், அமெரிக்காவின் "வீட்டோ' அதிகாரத்தால் நிறைவேற்றப்படாமல் போய் விட்டன. உலக மக்களின் கவனம் இஸ்ரேலின் எல்லைப் பிரச்சனையிலிருந்த பாலஸ்தீன மக்களின் பிரச்சனைக்குத் திரும்பியது. தனது போராட்ட உத்திகளை மாற்றிக்கொண்ட பி.எல்.ஓ. விற்கு, உலக மக்களின் ஆதரவு பெருகி வந்தது. ஜெருசலேம் நகரைத் தனது தலைநகராக ஆக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்தபோது, அதனுடைய நட்பு நாடுகள் சிலவும்கூட அதனைக் கண்டனம் செய்யுமளவிற்கு பி.எல்.ஓ.வின் நியாயங்கள், உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

பாலஸ்தீனப் பிரச்சனைதான் லெபனான் மீது இஸ்ரேல் அடுத்தடுத்த ராணுவத் தாக்குதல்களைச் செய்வதற்கான உடனடிக் காரணமாக இருந்தது. இஸ்ரேலியப் போர் விமானங்கள், 1968 இல் பெய்ரூட் விமான நிலையத்தைத் தரைமட்டமாக்கின. 1967 இல் லெபனானின் ஷீபா பண்ணைகள் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது. 1978 இல் லெபனானின் கணிசமான பகுதிகள் இஸ்ரேலின் ராணுவப் படையெடுப்புகளுக்கு ஆளாயின. 1982 இல் லெபனான் நாட்டின் சபாதிப் பகுதி இஸ்ரேலின் ராணுவப் படையெடுப்புக்கு உட்பட்டது; பின்னர் அந்த நாட்டின் தென்பகுதியில் கணிசமான பகுதியை 2000 வரை இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தது; 1967இல் அது கைப்பற்றிய சிறு பகுதிகளை அது ஒருபோதும் திருப்பித் தரவில்லை. தான் நடத்திய ஒவ்வொரு தாக்குதலையும் நியாயப்படுத்த, ஏதேனுமொரு காரணத்தைச் சொல்வது இஸ்ரேலின் வழக்கம். சென்ற சூலை ஆகஸ்டில் நடந்த போருக்குக் காரணம், லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா போராளிகள் இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவரைக் கடத்திக் கொண்டு போனதுதான் என இஸ்ரேல் கூறியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அதனுடைய உண்மையான நோக்கம், நீண்டகாலத் திட்டம், லெபனான் முழுவதையும் தன்னுடன் இணைத்துக் கொள்வதுதான்.

இன்னும் சரியாகச் சொல்லப் போனால், ஜியோனிசத்தின் தந்தை தியோடோர் ஹெர்செலின் திட்டத்தை நிறைவேற்றுவதுதான். "எகிப்தின் ஓடைக்கும் (Brook of Egypt) யூப்ரடிஸ் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை' யூதர்களின் தாயகம் என ஹெர்செல் வரையறுத்திருந்தார். அதாவது அந்தப் பகுதி லெபனான், ஜோர்டான் முழுவதையும் சவூதி அரேபியாவின் மூன்றிலொரு பகுதியையும், சிரியாவின் மூன்றிரண்டு பகுதிகளையும், குவைத்தின் சபாதியையும், எகிப்தின் சினாய் மலைப் பகுதிகள், அலெக்சாண்ட்யாத் துறைமுகம், சைது துறைமுகம், கெய்ரோ நகரம் ஆகியவற்றையும் மட்டுமின்றி, துருக்கியின் ஒரு சிறு பகுதியையும் உள்ளடக்கியிருக்கும். இஸ்ரேலின் பிரதமர்களிலொருவராக இருந்த மோஷெ ஷெர்ரெட் (Moshe Sherret) என்பாரின் "நாட்குறிப்புகள்' இஸ்ரேலிய அரசின் திட்டத்தை வெளிப்படுத்தின : “பாலஸ்தீனர்களை உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் துரத்தியடித்து, பாலஸ்தீனத்திற்கு அவர்கள் எந்த உரிமையையும் கொண்டாடாமல் இருக்கச் செய்வதும்’, “அரபு நாடுகளைத் துண்டாடி, அரபு தேசியத்தை முறியடித்து, அங்கு இஸ்ரேலிய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட பொம்மை அரசாங்கங்களை உருவாக்குவதும்’ இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

இந்த ஜியோனிசக் குறிக்கோளின் ஒரு பகுதியாக லெபனானை ஆக்கிரமித்து, அதை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை 1954 ஆம் ஆண்டிலேயே, பின்னாளில் இஸ்ரேலியப் பிரதமர்களாகப் பதவி வகித்தவர்களும் ஜியோனிச ராணுவத் தளபதிகளுமான டேவிட் பென் குரியொன், மோஷே தயான் ஆகியோர் தீட்டினர். இத்திட்டம் கீழ்வருமாறு : லெபனானிலுள்ள முஸ்லிம்களின் ஒடுக்குமுறையிலிருந்து மரோனைட் கிறித்துவர்களைக் காப்பாற்றும்படி இஸ்ரேலை உதவிக்கு அழைக்கும் ஒரு கிறித்துவ ராணுவத் தளபதியைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு இஸ்ரேலிய ராணுவம் அங்கு நுழைந்து தனது நாட்டுக்கு விசுவாசமாக உள்ள ஒரு கிறித்துவ அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தும். லெபனானில் உள்ள லிட்டானி ஆற்றுக்குத் தெற்கே இருந்து இஸ்ரேல் எல்லை வரை உள்ள பகுதிகளை இஸ்ரேல் பறித்துக் கொள்ளும். இவ்விதமாக "மகா இஸ்ரேல்' திட்டம் சிறிது சிறிதாக நிறைவேற்றப்படும்.

தனது நாட்டிற்குள் ஊடுறுவத் திட்டமிடும் பாலஸ்தீன கெல்லாக்கள், லெபனானிலுள்ள பாலஸ்தீன அகதி முகாம்களில் இருப்பதால்தான் அந்த நாட்டின் மீது படையெடுப்பதாகக் கூறியது இஸ்ரேல் 1982 இல். ஆனால், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ.) என்பது 1954 இல் உருவாகவேயில்லை. லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேலிய ஜியோனிஸ்டுகளுக்கு ஒரு சாக்கு எப்போதும் கிடைத்து வந்தது என்பதுதான் இதன் பொருள். இந்த லிட்டானி ஆற்றைக் கடந்து கணிசமான நிலப்பகுதியைக் கைப்பற்றி, ஹிஸ்பொல்லா இயக்கப் போராளிகள் இஸ்ரேலை அண்டவிடாதபடி செய்வதுதான் இந்த ஆண்டு சூலை - ஆகஸ்ட் மாதங்களின் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான முப்படைத் தாக்குதல்களில் குறுகிய காலத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இஸ்ரேலியப் படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன், லெபனான் நாட்டைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

- அடுத்த இதழிலும்
Pin It