அமெரிக்கா தேசத்தை இந்திய மக்கள் குபேர பட்டணமென்று சொல்வதுண்டு. குபேர பட்டணமென்றால் செல்வம் தாண்டவமாடும் பட்டணமென்று பெயர். உண்மையிலேயே அங்கு மற்ற நாடுகளைவிட செல்வம் அதிகந்தான்.

உலகில் பல பாகங்களிலுள்ள செல்வங்களும் பல வழிகளில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேருகின்றன. அமெரிக்கா செல்வம் மற்ற நாடுகளுக்கு வியாபார மூலமாகவும், லேவாதேவி மூலமாகவும் முதலாக அனுப்பப்பட்டு வட்டியும் லாபமும் ஏராளமாய் அடைகின்றது.

மகா யுத்தத்திற்காக மற்ற தேசங்கள் பட்ட கடன்களில் பெரும்பகுதி இன்னமும் கட்டுவளியாகாமல் எல்லா தேசமும் அமெரிக்காவுக்குக் கடனாளி யாகவேயிருக்கின்றது.

இது மாத்திரமா, அமெரிக்கா என்றால் அது ஒரு பெரிய பழமையான “குடியரசு நாடு” சக்கிரவர்த்தியில்லாமல், அரசன் இல்லாமல் “பிரஜைகளால் பிரஜைகளுக்காக” ஆளப்படும் “ஜனநாயக” ஆட்சியுள்ள நாடு என்றும் சொல்லப்படுவதாகும்.

periyar 414அதன் (குடியரசு - ஜனநாயக) தலைவர் தேர்தலுக்கு பத்து லட்சக்கணக்கான நபர்கள் ஏழைகள், தொழிலாளிகள் ஆகிய மக்கள் ஓட்டுச் செய்துதான் தலைவர் (தேர்தல் நடந்து) நியமிக்கப்படுவது “கண்டிப்பான” சட்ட முறையாகும்.

இப்படியெல்லாம் இருந்தும் என்ன பயன்? இன்று அந்நாட்டில் ஒன்றரை ( 1 1/2 ) கோடி மக்களுக்கு - அமெரிக்கக் குடி மக்களுக்கு - ஓட்டுச்செய்ய உரிமை உள்ள மக்களுக்கு - கஞ்சியுமில்லாமல் வேலையுமில்லாமல் தெருவில் திண்டாடித் திரிகிறார்கள் என்றால், இது அக் குபேர பட்டணத்துக்கு சிறப்பா? அல்லது சிரிப்புக்கிடமானதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அமெரிக்கத் தொழிலாள மக்களின் உதவியால் தான் - அவர்களது ரத்தவேர்வை வெளிப்படும்படியான உழைப்பினால் தான் அமெரிக்கா நாடு “குபேர பட்டணம்” என்கின்ற பெயரை அடைந்ததும், அது மற்ற தேசத்திய செல்வங்களை இழுத்துக் கொண்டதுமாகும்.

இன்று உலகத்திலுள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகள் என்பனவைகள் பலது அமெரிக்காவில்தான் இருக்கின்றன.

உலக மார்க்கட்டுகளுக்குப் பல தேசங்கள் அனுப்பப்படும் சாமான்களின் கணக்குகளில் அமெரிக்கா தேசம் அனுப்பப்படும் சாமான்கள்தான் அதிகமான அளவுடையது. இருந்தும் என்ன பிரயோஜனம், இன்று உலகில் எங்குமில்லாத அளவு அங்கு(15000000) ஒன்றைக் கோடி மக்களுக்கு தொழிலில்லை யென்றால் இந்த குபேர பட்டணம் குடி அரசு தேசம் என்பதின் அருத்தம் என்ன என்று கேட்கின்றோம். ஒன்றறைக்கோடி மக்களுக்கு வேலை இல்லை என்றால் இந்த ஒன்றறைக்கோடி மக்களின் பெண்டு பிள்ளைகள், குழந்தை குட்டிகளையும் சேர்த்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எத்தனை கோடி மக்கள் பட்டினியாய்க் கிடக்கின்றார்கள் என்று பாருங்கள்.

இது மாத்திரமா? அமெரிக்கா தேசமானது 10 அடுக்கு, 20 அடுக்கு, 50 அடுக்கு, 100 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடங்கள் வானமளாவ இருக்கின்றன வென்றும், சிங்கார நந்தவனங்கள், ஜலக்கிரீடை நிலபாவிகள், கால் பந்து, கைப்பந்து, விளையாட்டுகள் விளையாடும் மைதானங்கள் முதலியவைகள் எல்லாம்கூட மேற்படி வானமளாவிய மண்டபங்களில் இருக்கின்றனவென்றும் சொல்லப்பட்டதும் “இந்திரலோக” மென்றும், “பொன்னுலக” மென்றும் மாறுபெயர் கொடுத்தழைக்கப்படுவதுமான அமெரிக்காவிலுள்ள மக்களில் லட்சக்கணக்காண பேர்களாகிய மேற்படி வானமளாவிய மண்டபங்களையும் கூட கோபுரங்களையும் கட்டிய மக்கள் இன்று அங்கு குடியிருக்க, குடியிருக்கக்கூட அல்ல, பகலெல்லாம் தெருத் தெருவாய் திரிந்து விட்டு இரவில் போய் சிறிது நேரம் படுத்தோ உட்கார்ந்தோ கண் அயர்ந்து தூங்கக்கூட இடமில்லாமல் முனிசிபாலிடியார் தெருக்களில் ரிப்பேர் செய்வதற்காக போட்டிருக்கும் குழாய்களுக்குள் போய்ப் படுத்துக் கொள்வதும் பெரிய ஜலதாரைகளுக்குள் இறங்கிப் படுத்துக் கொள்வதுமா யிருக்கிறார்கள் என்றால், வானமளாவிய கட்டடம் இருப்பதின் இரகசியம் என்ன என்று பாருங்கள்.

இந்த அமெரிக்கா தேசமானது ஒரு காலத்தில் அன்னிய அரசர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுயராஜ்யம் பெறவும், முடி அரசிலிருந்து விடுதலை பெற்று குடிஅரசு பெறவும் எத்தனை லட்சக்கணக்கான மக்களைப் பறிகொடுத்துத் துப்பாக்கி பீரங்கிக் குண்டுகளுக்கு இறையாக்கி பாலா கத்தி ஈட்டிகளுக்கு இலக்காக்கி கையொடிந்து, கால் முறிந்து, கண் போய், மூக்குப் போய், காது போய் உயிர் விட்டு இருக்க வேண்டும் என்பதையும், அப்படி உயிர் விட்டவர்கள் எல்லாம் யாராயிருப்பார்கள் என்பதையும் கவனித்துப் பாருங்கள்.

அது மாத்திரமல்லாமல் இன்று வானமளாவிய மண்டபத்தில் “இந்திரன்”கள் போல் “குபேரன்”கள் போல இருக்கின்றவர்கள் யார்? கஞ்சிக்கு வகையில்லாமல் பெண்டு பிள்ளைகளுடன் தெருவில் திரிந்து ஒண்டவும், ஒதுங்கவும் இடமில்லாமல் தியங்கிப் பரிதவிப்பவர்கள் யார்? என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இப்படியே இன்று அதாவது அமெரிக்காபோல் அவ்வளவு இல்லை யானாலும் (4500000) நாற்பத்தி ஐந்து லட்சம் பெயர்கள் இங்கிலாந்தில் ஏழை மக்கள் தொழில் இல்லாமல் வாடி வதைகின்றார்கள். சுயாட்சி குடி அரசு ஆட்சி பெற்ற நாடுகளாகிய ஜர்மனியிலும் அப்படியே, ஸ்பெயினிலும் அப்படியே, கிரீசிலும் அப்படியே (ரஷியா தவிர) மற்ற நாடுகளிலும் அப்படியே தான். வேண்டுமானால் எண்ணிக்கையில் சிறிது வித்தியாசமிருக்கலாம். ஆகவே சுயாட்சி, குடிஆட்சி, சுயராஜ்ஜியம் குடி அரசு ஆட்சி என்பவைகளின் புரட்டுகளை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய அரசர்களும், குடி ஆட்சி தலைவர்களும் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்று மாத்திரம் சொன்னால் போராது முதலாளிகளேயாவார்கள்.

அவர்களுக்கு எதிர்ப்புக்காரர்களாய் எதிர் கட்சியில் இருப்பவர்களாய் இருந்துகொண்டு ஜனங்களின் - ஏழைகளின் - தரித்திர நாராயணர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு சுயராஜ்ஜியத்திற்கும் குடி அரசுக்கும் கிளர்ச்சி செய்யும் “வீரர்கள் ஏழைப்பங்காளர்”களாக இருப்பவர்கள் இந்த முதலாளிகளும், ஜமீன்தாரர்களும், மற்றும் இவர்களுடைய பிரதிநிதிகளுமே யாவார்கள். இதில் யாருக்கும் எவ்விதத்திலும், சந்தேகம் வேண்டியதில்லை என்று வற்புறுத்திக் கூறுவோம். சந்தேகமிருந்தால் மேல்கண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜர்மன் ஆகிய தேசத்தை இன்று பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அப்பொழுதும் உங்களுக்கு உண்மை விளங்கவில்லையானால் நீங்கள் இந்த “இம்பர்” நாட்டில் (இந்த உலகத்தில்) இருப்பதைவிட “உம்பர்” நாட்டில் (இங்கு இல்லாமல்) இருப்பதே மேலான காரியமாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.03.1933)

Pin It