முரண்பாடுகளின் மூட்டையாக இந்தியா இருக்கிறது என்றால் மிகையில்லை. சாதி, மதம், நம்பிக்கைகள் எனப் பலவற்றில் முரண்பாடுகள் மலிந்து கிடக்கின்றன. கவிதைக்கு வேண்டுமெனில் முரண்பாடுகள் அழகையும், சுவையையும் சேர்க்கலாம்; வாழ்க்கையில் அப்படியில்லை!

தலித் அல்லாத ஆதிக்கச் சாதியை சார்ந்தவர்கள், தமது சாதி அடையாளத்தை எவ்வகையிலும் இழக்க விரும்புவதில்லை. அந்த அடையாளம் சில நேரங்களில் அவர்களுக்கு நேரடியான அனுகூலங்களை வழங்காமற் போனாலும், உளவியல் மகிழ்ச்சியையாகிலும் வழங்கிவிடுகிறது! தலித்துகளோ சாதிய அடையாளத்தை சில காரணங்களுக்காக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாலும், முற்றிலுமாக அதை இழக்கவே விரும்புகிறார்கள். சாதி முறையில் இந்தக் கருத்துநிலை ஒரு பெரும் முரண்பாடுதான். ஒருவர் இழக்க விரும்புவதும் இன்னொருவர் இருத்த விரும்புவதுமான இந்நிலையே சாதியத்தின் நீட்சிக்குக் காரணமாகவும் இருக்கின்றது!

நவீன இந்தியாவில் தற்பொழுது, தலித் அல்லாதோரின் இந்தக் கருத்து நிலையில் சில மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. தலித் மக்களுக்காக அரசு வழங்கும் சில உரிமைகளைப் பறித்துக் கொள்வதற்காக, அவர்கள் தன்னையும் "தலித்' என்று சொல்லி ஏமாற்ற முனைகின்றனர். இந்த செயலில், தம்மை இசுலாமியர்கள் போலவும், கிறித்துவர்கள் போலவும் வேடமிட்டுக் கொண்டு வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளையும்கூட அவர்கள் விஞ்சிவிடுகின்றனர்.

இந்த வகையான சாதிய ஏமாற்றில், சாதிய திருட்டில் தலித் அல்லாதவர்கள் இழக்கவோ, வெட்கப்படவோ எதுவும் இல்லை என்பதே உண்மை! ஏனெனில், சாதியம் வழங்கியிருக்கும் நிரந்தர "கவுரவம்' எப்போதும் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. தன்னை இழிவான சாதியை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதனால், அந்த சமூக அந்தஸ்துடன் லாபம் சேர்ந்து கொள்கிறது! கெட்ட குமாரனைப் போன்று சுற்றியலைந்து திரும்பினாலும், அவர்களை சேர்த்துக் கொள்ள சாதியெனும் தந்தை ஆவலாகவே இருக்கிறார். இதனால்தானே பார்ப்பனர்கள்கூட, வெளிநாட்டிலிருக்கும் இந்திய தூதரகங்களில் துப்புரவுப் பணியினை மேற்கொள்கிறார்கள்!

சாதியை மாற்றிச் சொல்லி சலுகைகளை அனுபவிக்க விரும்பும் இழிவான செயலுக்கு, தலித் அல்லாத சிலர் குற்ற உணர்வினை அடைவதாகவோ, வெட்கப்படுவதாகவோ தெரியவில்லை. அரசு இத்தகு செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளியினை வைக்க எண்ணியிருக்கிறது. போலி சாதி சான்றிதழைப் பெற்று, தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளைப் பறித்துக் கொள்வோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது, பாராட்டுக்குரியதும், வரவேற்க வேண்டியதும் ஆகும்.

கடந்த ஆண்டு எங்கள் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், இதுபோன்ற போலியான சாதி சான்றிதழ்களை தலித் அல்லாத சிலருக்கு வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மூலம் தலித் என்று சாதி சான்றிதழ் பெற்று, பல்வேறு அரசுப் பணிகளில் சேர்ந்த வேறு சாதியினர் சிலரும் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒன்றிரண்டு பேர், சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் இருந்தோர் ஆவர்!

தலித் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு என்று வழங்கப்பட்டு வரும் உரிமையான இடஒதுக்கீடே, இங்கு முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. இடையிலே இதுபோன்ற சில திருடர்களால் தலித்துகளுக்கான வேலைவாய்ப்புகள் நயவஞ்சகத்துடன் பறிக்கப்படுகின்றன.

"சான்றிதழ் கோருபவன் பழக்க வழக்கங்கள், பாரம்பரியம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை' அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த யோசனை நல்லதாக இருந்தாலும் இதை செயல்படுத்தப் போகிற கிராம நிர்வாக அலுவலர்கள், அவருக்கு உதவியாக இருக்கும் சிப்பந்திகள், சான்றிதழ் வழங்கும் வட்டாட்சியர்கள் ஆகியோர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அரசின் ஆணை முழுமையான பலனை அளிக்கும். சாதி சான்றிதழ் வழங்குவதில் தற்போது இருக்கும் விதிமுறைகளேகூட முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
சாதி சான்றிதழ் கோருபவன் ஊரிலும், "மேட்டுக்குடியினர்' என்கிற அவ்வூரினை சேர்ந்த தலித் அல்லாதவரிடம் தெளிவான விசாரணைக்குப் பிறகுதான் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கிராம அலுவலரால் இப்படி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அவன் சிப்பந்திகள் இதற்கு துணை போகின்றனர். மேலும், இப்போதைய நிலைப்படி ஒவ்வொரு கிராமச் சாவடியிலும் அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்களின் நெருக்குதலும் அதிகமாகி இருக்கிறது. கையூட்டு தந்தால்தான் சான்றிதழ் என்கிற நிலைமையும் பல இடங்களில் நிலவுகிறது. இந்த வகை காரணங்களால் பிறப்பால் தலித்தாக இருப்பவருக்குகூட தலித் என்ற சான்றிதழ் கிடைக்காமல் போகிறது. உண்மையான பழங்குடி மக்கள் பலருக்கு பழங்குடி சான்றிதழ் கிடைப்பதில்லை. ஆனால், தலித் மற்றும் பழங்குடியினர் அல்லாதார் எளிதாக தலித் என்றும், பழங்குடி என்றும் சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றனர்.

சாதி சான்றிதழ்களை வழங்கும்போது சந்தேகத்துக்கு இடமின்றி, திருமண அழைப்பிதழ்கள், வீட்டுமனை ஆவணங்கள், நீத்தார் நினைவஞ்சலி அழைப்பிதழ்கள், உணவுப் பழக்கம், திருமணப் பழக்கம், குடியிருக்கும் இடம், குடும்ப வரலாறு, வழிபாட்டுமுறைகளும் பழக்கங்களும் உள்ளிட்ட பலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி ஆராய்ந்து வழங்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கு எளிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசின் மிகக் கடுமையான விதிமுறைகள், எப்போதும் எளியவர்களின் மீது மட்டுமே உக்கிரடன் திணிக்கப்படுகின்றன.

பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ்களுக்கு ஆதாரமாக நிலப்பட்டாக்கள் கோரப்படுவதாலேயே, பல பழங்குடியினர் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலமற்ற தலித்துகளிடம், பழங்குடியினரிடம் நில ஆவணங்களைக் கேட்பது, அம்மக்களை கேலி செய்வதற்கு சமமானதாகும். இத்தகு பொருந்தாத விதிமுறைகள் நீக்கப்பட்டு, வழிபாட்டு முறைகளையும், உணவு மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, உரிய சாதிச் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்குவதே சரியான நடைமுறையாய் இருக்கும்.

Satya Paul
போலி சாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, தலித் மற்றும் பழங்குடியினரின் பணியிடங்களில் முறைகேடாகப் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, கணிசமான அளவுக்கு இருக்கும் என உறுதியாக நம்பலாம். இதைக் கண்டறிய ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ஒவ்வோர் அரசுத் துறையிலும் ஓர் ஆய்வை மேற்கொண்டு, பிடிபடுகிறவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதோடு, அவர்களைப் பணி நீக்கம் செய்து உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்படி காலியாகும் பணியிடங்களில் உடனடியாக தலித் மற்றும் பழங்குடியினரைப் பணியில் அமர்த்த வேண்டும்.

பேச்சுக் கலையின் மீதும், பேசுகிறவர்களின் மீதும் எப்போதுமே எனக்கு தனிக் கவனம் உண்டு. அதிலும் மக்களின் விடுதலைக்காகப் பேசுகிறவர்களின் மீது தனி மரியாதைதான். தமிழக மக்களும்கூட பேச்சாளர்களை உயர்வாக மதிக்கிறவர்களாகவும், ஆதக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பல நேரங்களில் வார்த்தை வணிகர்களையும், மக்களுக்காகப் பேசுகிறவர்களையும் அவர்களால் பிரித்தறிய முடியாமல் போய்விடுகிறது.
எனக்கு நன்கு பழக்கமான பேச்சாளர் ஒருவர் உண்டு. மக்கள் மொழியில் மணிக் கணக்கில் பேசுவார். தலித்துகளுக்கு புத்திமதிகளை அடுக்குவதும், தன்னைப் பெரும் அறிஞராக முன்னிறுத்த விரும்புவதும், பல நேரங்களில் தவறான தகவல்களைத் தருவதும் அவரின் வாடிக்கை. தலித் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டு பட்டிதொட்டிகளுக்கெல்லாம் அழைக்கிறார்கள். அவரும் கணிசமான தொகையை பேச்சுக் கூலியாகப் பெற்றுக் கொண்டு, நல்மனதுடன் "வார்த்தைப் புரட்சி'யை நிகழ்த்தி வருகிறார்.

இப்படியான பேச்சாளர்களின் நடுவிலே ஓர் உண்மையான பேச்சாளரை அண்மையில் சந்தித்தேன். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் விடுதலைக்கு எதையாவது செய்ய விரும்பும் பெருவிருப்பம், எளிய, அழகான, சிற்றோடையை நிகர்த்த ஆங்கிலம், குன்றாத உற்சாகம், விரல் நுனியில் வந்து நிற்கும் புள்ளி விவரங்கள், வரலாற்று நோக்கு, கருத்துத் தெளிவு இப்படியான பல்வேறு அம்சங்களுடன் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த பலரையும் கவர்ந்தவர் பேராசியர் சத்யபால்.

ஆகஸ்ட் 20 அன்று வேலூரில் "பாம்செப்' அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு அவர் வந்திருந்தார். ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை பேராசியரான இவர், கூட்டங்களுக்கு வந்து போக கட்டணமாக எதையும் பெறுவதில்லை. இப்பணியை தன் சமூகக் கடமையாகக் கருதுகிறார் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது. அன்றைய கூட்டத்தில் எளிய ஆங்கிலத்தில், சற்றும் களைப்பின்றி, குன்றாத உற்சாகத்துடன், தொய்வில்லாமல் சுமார் எட்டு மணிநேரம் பேசினார் சத்யபால்!

ஜோதிபா புலே தொடங்கி, அம்பேத்கர் வரையிலான மாமனிதர்களின் உழைப்பினை இன்று அனுபவிக்கின்றவர்கள் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சமூகங்களில் இருக்கும் அரசு ஊழியர்களே; அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால், அவர்களோ தமது கடமையை உணராமல் இருக்கிறார்கள். அவர்களை கருத்தியல் ரீதியாகத் தெளிவுபடுத்தி, சமூக மாற்றத்துக்கென்று மடை மாற்றம் செய்கிறபோதுதான் ஓர் உண்மையான சமூக மாற்றம் நிகழும் என்கிறார் சத்யபால். இது, அவரின் கருத்து மட்டுமல்ல "பாம்செப்'பின் (BAMCEF) கருத்தாகவும்கூட இருக்கிறது.

சத்யபால் அவர்களின் உரை மூன்று வினாக்களின் அடிப்படையில் அமைந்து, பல்வேறு தகவல்களுடன் கிளை கிளையாக விரிகிறது. நாம் யார், நம் சமூக நிலை என்ன? இந்த நிலையிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் ஆகிய வினாக்களே அவை. "நாம்' என்கிறபோது சத்யபால் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரை இணைத்து இம்மண்ணின் தொல்குடி மக்கள் எனக் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தால் பழிவாங்கப்பட்டவர்களாகவும், சிதறுண்டவர்களாகவும், ஒன்றிணைய முடியாதவர்களாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்கின்றவர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றிணைவதும், சமூக மாற்றத்துக்குப் பாடுபடுவதும் இன்றியமையாததாகிறது. பார்ப்பனியம் இந்நாட்டின் தொல்குடி மக்களைப் பல்வேறு கூறுகளாகப் பிரிக்கிறது. எனவே, பார்ப்பனியத்தால் பிளவுபடுத்தப்பட்ட அனைவரையும் இணைப்பதே அம்பேத்கரியம் என்பதே சத்யபாலின் வாதமாகும்.

அறிவே ஆயுதம் என்கிற நிலை மாறி இன்று தகவல்களே ஆயுதம் எனும் நிலை வந்துவிட்டது. இது, கணினி யுகத்தின் மாற்றம். இதற்கொப்பவே சத்யபாலின் உரையில் எண்ணிலடங்காத தகவல்கள் அருவிபோல் வந்து விழுகின்றன. இந்தச் செய்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ளுங்கள் என கோரிக்கையுடனே அவை அவரால் சொல்லப்படுகின்றன. அவரின் தகவல்களிலிருந்து ஒன்றிரண்டை சான்றாக இங்கே தரலாம்.

 இசுலாம் சமூகத்தில் "பட் முஸ்லிம்கள்' எனப்படும் ஒரு சாரர் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். முகலாய மன்னர்களுக்கு அமைச்சர்களாய் இருந்து தமது பெண்களை அரசர்களுக்குத் தந்து, காலப்போக்கில் இசுலாக்கே சென்றுவிட்ட பார்ப்பன இசுலாமியர்கள்தான் இந்த "பட் முஸ்லிம்கள்'! ஷேக் அப்துல்லா தொடங்கி பா.ஜ.க. வின் செய்தித் தொடர்பாளர் நக்வி, நஜ்மா எப்துல்லா வரை இவர்கள்தான்.

 சில பல்கலைக் கழகங்களின் துணையுடன் அவருடைய மானுடவியல் துறையும் இணைந்து நடத்திய டி.என்.ஏ. ஆய்வில், சுமார் 30 சதவிகிதம் ஆதிக்கச் சாதியினரின் ஜீன்கள், அய்ரோப்பியர்களின் ஜீனாக்கத்துடன் ஒத்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆதிக்க சாதி ஆண்களிடம் இந்த ஒற்றுமை அதிகமாக இருக்கிறது. தலித் மற்றும் பழங்குடியினரின் "ஜீனாக்கங்கள்' பெரும்பாலும் கிழக்காசியாவினருடன் பொருந்தியிருக்கிறது. ஆயர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வேதி உயியல் ஆதாரம் இது.

 1975 லிருந்து 2000 வரைக்குமான 25 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலிருந்த தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின்போது, சுமார் 6 1/2 மணி நேரத்தையே பேசுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நான்குமணி நேரம்கூட, அவர்களால் தலித் மக்களின் சிக்கல்களுக்காகப் பயன் படுத்தப்படவில்லை!

இவ்வாறு சத்யபால் தருகின்ற செய்திகளை நாம் மேலும் நுணுக்கமாகத் தேடிப் பெறுவதற்கான முனைப்புடன் கவனமாக குறிப்பெடுக்க வேண்டியிருக்கிறது. அவர் குறிப்பிடுகின்ற பல்வேறு தகவல்கள் ஒன்றின்படி இன்று நடந்து வரும் பலவகையான டி.என். ஏ. ஆய்வுகள், புரட்சிகரமான உண்மைகளை வழங்குவதாகவே உள்ளன. மனித மரபணுக்கள் 30 சதம் வரை வளை தசை புழுக்களின் மரபணு தொடர்புகளை கொண்டிருக்கின்றன. சுமார் 98.5 சதம் சிம்பன்சி மரபணு நமது மரபணுவுடன் பொருந்துகின்றன. இவை பரிணாமத்துக்கான புதிய ஆதாரங்களாக இன்று கிடைத்துள்ளன. சத்யபால் அவர்களின் வரலாற்றுப் பார்வை செம்மையானதாகும். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி தற்காலம் வரையிலான காலத்தை ஆதாரங்களுடன் அறுதியிட்டு ஆராய்கிறார்
அவர். சாதியின் தோற்றம், பவுத்தத்தின் வீழ்ச்சியும், தற்கால சாதிய சமூகத்தின் அடிப்படையும் வரலாற்று நோக்கில் அவரால் விளக்கப்படுகின்றன. அவரின் நீண்ட உரையின் முடிவில், மனம் சில விளக்கங்களைப் பெற்றதாக நிறைவு கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரத்துக்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மறுபமுடியும் பேசத் தயாராகி விடுகிறார் அவர்!

இருபதாம் நூற்றாண்டில் தலித்துகளின் பதிப்புப் பணிகள்' என்கிற சிறு நூல் ஒன்று கவனத்தைக் கவர்ந்துள்ளது. தலித் வரலாறு மற்றும் சமகால அரசியல் துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்ற ஸ்டாலின் ராஜாங்கம், தனது முனைப்பானப் பங்களிப்பின் தொடக்கமாக இந்த நூலை எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிப்பு முயற்சிகளைப் பற்றிய பதிவுகள் முழுக்கவும் மேட்டுக்குடியினரின் பார்வையிலேயே இருக்கின்றன. அச்சு வசதி ஏற்பட்ட பிறகு பழந்தமிழ் நூல்களையும், தாம் புனைந்தவற்றையும் பதிப்பித்தவர்கள் என ஆதிக்கச் சாதியினரையே பட்டியலிடுகின்றனர். மழவை மகாலிங்க (அய்யர்), ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் (பிள்ளை), உ.வே. சாமிநாத (அய்யர்), சுப்பராயச் (செட்டியார்) என்று அப்பட்டியல் நீள்கின்றது. 1850 தொடங்கி 1920 வரையில் செய்யப்பட்ட பதிப்பு முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த வரலாற்றிலே தலித்துகளுக்கும், இசுலாமியர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதில் முரண்நகை எதுவெனில், தலித் கிறித்துவர்கள் வெள்ளையர்களுக்கு நெருக்கமாய் இருந்ததாலும், இசுலாமியர்கள் ஆளும் நிலை பெற்றிருந்ததாலும் இவ்விரு பிரிவினர்க்குமே அச்சுத்தொழில் சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதே.

அப்படியெனில், தலித்துகள் பதிப்பு முயற்சியில் ஈடுபடவில்லையா? ஆம் எனில், பதிவுகள் எங்கே என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கு ஸ்டாலின் விடைகாண முயன்றிருக்கிறார். தாம் பெற்ற குறைந்த அளவிலான தரவுகளைக் கொண்டே சில ஆய்வுகளை முன்வைக்கிறார். 1785 இல் எல்லீஸ் துரையிடம் அயோத்திதாசன் பாட்டனார் கந்தப்பன் அவர்கள் திருக்குறள், நாலடி நானூறு, அறநெறிதீபம் போன்ற சுவடிகளை கையளித்திருக்கிறார். அவை அச்சில் கொண்டு வரப்பட்டுள்ளன. தலித் மக்கள் தம் குடும்பங்களிலே ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நெறி நூல்களை வைத்திருந்திருக்கிறார்கள். பண்டிதரின் ஆசிரியரான வல்லகாளத்தி வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதர் அவர்களும் பல நூல்களை அச்சிட்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இந்தப் பதிப்பு மற்றும் அச்சு முயற்சிகள் யாவுமே தலித் மக்களின் சொந்த முயற்சியால், சொந்த அச்சகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் 1900 தொடங்கி 1940 வரையிலான தலித்துகளின் பதிப்பு முயற்சிகள், வெளியான நூல்கள் ஆகியவற்றின் பட்டியலை ஸ்டாலின் தருகிறார். செட்டியார்களும், பார்ப்பனர்களும் பதிப்பு முயற்சியை லாபம் தரும் தொழிலாக மாற்றிக் கொண்டிருந்தபோது, தலித்துகள் இம்முயற்சிகளை மானுட மாற்றத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, பெருமிதம் கொள்ள முடிகிறது. தலித் இலக்கிய எழுத்து முயற்சி மட்டுமல்லாது, அவர்களின் பதிப்பு முயற்சிகளைப் பற்றிய வரலாற்றை மீட்டெடுப்பதிலும் அதிக அக்கறை தேவை என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.


Pin It